பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 4 மார்ச், 2011
சங்க இலக்கியப் பொன்மொழி..
நான் மட்டும் அப்போது அங்கு இருந்திருந்தால்....
அந்த நேரம் பார்த்து நான் அங்கு இல்லாமப் போயிட்டேனே....
என நடந்து முடிந்த ஏதோ ஒரு நிகழ்வைப் பற்றி உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருப்போம்.
நடந்து முடிந்ததைப் பேசுவதால் யாது பயன்..?
இருந்தாலும் நாம் ஏன் நடந்து முடிந்தவொரு நிகழ்வை அதாவது கடந்த காலத்தைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
“பானை உடைந்து போனால் அதை ஒட்ட வைக்க முடியாது
இருந்தாலும் அது எப்படி உடைந்தது என்ற அனுபவம் அந்தப் பானை மீண்டும் உடையாமல் பாதுகாக்கத் துணை நிற்கும்“
இது போலத்தான் கடந்த காலம் பற்றிய உரையாடல்கள்..
ஒரு அழகான அகச்சூழல்.
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
என்பது இப்பாடலுக்கான துறைக்குறிப்பு.
தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்பதை எங்கள் தலைவி முன்பே அறிந்திருந்தால் இன்று உன்னை எண்ணி வருந்தாமல் இருந்திருப்பாள் என்கிறாள் தோழி .
“படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர்வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
“நன்றி விளைவும் தீதொடு வரும்” என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள் மன்னே.“
188 – நற்றிணை (குறிஞ்சி)
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
நடந்தவை
நடப்பவை
நடக்க இருப்பவை என முக்காலத்தையும் அறிந்து வைத்திருக்க நாமென்ன தீர்க்கதரிசிகளா..?
உங்கள் நண்பனிடம் அளவாக அன்பு வையுங்கள்!!
ஏனென்றால் அவனே நாளை உங்கள் எதிரியாகலாம்!!!
உங்கள் எதிரியின் மீதும் அளவாகவே கோபம் கொள்ளுங்கள்!!
ஏனென்றால் நாளையே அவன் உன் நண்பனாகலாம்!!!
என்பது இன்றைய வாழ்வியல் அனுபவமொழி.
சங்க கால அனுபவ மொழி...
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்பதாகும்.
பாடலின் பொருள்..
ஆழமான சுனையி்ல் நீரையுடைய மலையிடத்தே முளைத்த வாழையின் வளைந்த மடலிலிருந்து தோன்றிய கூரிய நுனியைக் கொண்ட குவிந்த மொட்டு, ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட பெண்களின் விரலில் அணிந்த விரலணி போலச் செங்காந்தளின் வளமையான இதழில் தோயும். வானில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!!
எங்கள் தலைவி,
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்” என்று உன்னோடு நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின் கண் நன்றாக அறிந்திருப்பின் இப்போது வருத்தமின்றி இருந்திருப்பாள்.
இனி நடந்து முடிந்தபின் அதனைக் கூறுவதால் என்ன பயன்...?
பாடலின் வழியே .....
1. “ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்னும் சங்ககால மக்களின் அனுபவமிக்க பொன்மொழி பின்பற்றத்தக்கத்தாகவுள்ளது.
மனதைத் திடப்படுத்தும் பொன்மொழியாக இதனைக் கருதமுடிகிறது.
2. பகற்குறி மறுத்து வரைவு கடாயது என்ற அகத்துறை,
தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
என விளக்கம் பெறுகிறது.
அருமையான பகிர்வும் விளக்கங்களும்.
பதிலளிநீக்குஅற்புதமாக இருக்கிறது ஐயா..
பதிலளிநீக்குஇலக்கியச்சுவை அருமை.யதார்த்த உண்மையும் கூட.ஒரே விஷயம் எல்லா நேரமும் நன்மையாகவோ தீ்மையாகவோ அமைந்துவிடாது !
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா
பதிலளிநீக்கு@amuthamthamizh.blogspot.com தங்கள் கருத்துரைக்கு நன்றி சதீஷ்
பதிலளிநீக்கு@ஹேமா உண்மைதான் ஹேமா...
பதிலளிநீக்குஎதிர்கொள்பவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுபடும்..
காலம் கருதலின் அவசியம் கூறிய இலக்கிய நயம் சுவை.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி நன்றி இராஜேஸ்வரி.
பதிலளிநீக்கு