புதன், 30 மார்ச், 2011
அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிற்றல் என்பது அகத்துறைகளுள் ஒன்று. தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.
பகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில்
‘அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.
தலைவன், தலைவியைச் சந்திக்க வரும் (காட்டு) வழி ஆபத்து மிகுந்தது என்று தலைவி அஞ்சுதல் ; அன்புகொண்ட தலைவனை விடுத்து வேறு ஒருவனுக்குத் தலைவியை மணம் முடிக்கப் பெற்றோர் முயலுதல் ; தலைவி தலைவனைச் சந்திக்க இயலாதவாறு வீட்டுக் காவல் அதிகமாதல் முதலான காரணங்களால் அறத்தொடுநிற்றல்
நிகழும்.
தலைவி - தோழிக்கும்,
தோழி - செவிலிக்கும்,
செவிலி - நற்றாய்க்கும்,
நற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை
உணர்த்தி அறத்தொடு நிற்பர். (நற்றாய் = பெற்ற தாய்)
என அறத்தொடு நிற்றல் அமையும்.
முதலில் தலைவி தன் காதலை தன் உயிர்த்தோழிக்கு வெளிப்படுத்துவாள்,பின் தோழி, செவிலித்தாய்க்கும்,செவிலித்தாய் நற்றாய்க்கும்,நற்றாய் தந்தை மற்றும் தமையன்மாருக்கும் தலைவியின் காதலைத் தெரிவிப்பாள்....
இதுதான் சங்ககாலத்தில் காதலை வெளிப்படுத்தும் முறை...
இதற்குச் சான்றாக எட்டுத்தொகையில்,குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்.....
குறிஞ்சி..(நிலம்)
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே -அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
-ஒளவையார். (குறுந்தொகை – 23)
மேலும் படிக்க பாடலின் மீது சொடுக்கவும்.
படம் “பண்டைத் தமிழர் வாழ்க்கை“ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.இந்நூலில் “ஒருவன் ஒருத்தியை மணந்து கூடி இல்லறம் நடத்தி இன்பமடைதல் முடியவுள்ள வாழ்வியல் குறிப்புகளைச் சுருக்கிப் பன்னிரண்டு தலைப்புகளில் தரும் இனிய நூலாகத் தந்துள்ளார் திருவாளர் இளவழகனார்.
பொருளடக்கம்.
இயற்கைப் புணர்ச்சி
பாங்கற் கூட்டம்
மதியுடம்பாடு
மடல்திறம்
சேட்படை
பகற்குறி
இரவுக்குறி
ஒருவழித்தனத்தல்
அறத்தொடு நிற்றல்
திருப்பொன்னூசல்
பொருள்வயிற் பிரிவு
இல்லற வாழ்க்கை
பதிப்பு - திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி.
வெளியான ஆண்டு - 1945
சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கும். பழந்தமிழரின் அகவாழ்வியலை அறிந்துகொள்ள முயல்வோருக்கும் தக்கதொரு வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.
திங்கள், 28 மார்ச், 2011
கணம் கணமாக வாழ (சென் கதை)
கண் பார்வையற்றவர்கள் கூட இன்றைய சூழலில் புதிய கண்டுபிடிப்புகள் வழி காட்சிகளைக் காண முயல்கின்றனர். ஆனால் கண்பார்வையுடைய நாமோ...
கண்ணுக்கு முன்னால் துடித்துக்கொண்டிருக்கும் “நிகழ்காலத்தைக் காணும் சக்தியற்று” இருக்கிறோமே என பல முறை நான் வருந்தியதுண்டு..
புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.
இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.
சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.
பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!
“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.
கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும் என்பது சென் தத்துவம்.
சனி, 26 மார்ச், 2011
தேர்தல்(நறுக்கு)
தேர்தல் வந்தால் தான் இந்த அரசியல்(வியா)வாதிகளுக்குக் குடிமக்கள் நினைவுக்கு வருகிறார்கள்...
இன்றைய அரசியல் நாடகங்களைப் பார்த்தவுடன் என் நினைவுக்குவந்த.......
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு...
மாலை
வளையல்
மூக்குத்தி
பொன்னான
எதுவுமே
இல்லை
எங்கள்
குடிசையில்
அவன்
சொல்கிறான்
இருக்கிறதாம்
எங்களிடம்
“பொன்னான
வாக்குகள்”
வியாழன், 24 மார்ச், 2011
தத்துவக் கதை
பதறாத காரியம் சிதறாது!
கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!
என்பது நம் முன்னோர் அனுபவமொழி. இதே கருத்தை எடுத்துரைக்கும் தத்துவக் கதையொன்று....
“ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.
வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள்.
இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.
“குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்?
என்று கேட்டான்.
“பத்து ஆண்டுகள் பிடிக்கும்“ என்றார் ஆசான்.
“என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கே தங்கியிருக்கமுடியாது. நான் சீக்கிரம் ஊர்திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும். மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்? என்று கேட்டான் இளைஞன்.
அநேகமாக முப்பது ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அவர்.
என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்..? முதலில் பத்து ஆண்டுகள் என்றுதானே சொன்னீர்கள். கடுமையாகப் பயிற்சி எடுத்தால் சீக்கிரம் முடிக்கமுடியுமல்லவா..? என்றான் அவன்.
“அப்படியா? அப்படிச் சீக்கிரம் கற்க வேண்டுமானால் சுமார் எழுபது வருடங்கள் என்கூட நீ இருக்க வேண்டிவரும்“ என்றார் குரு.
அவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“
(நன்றி-மீண்டும் ஜென் கதைகள்-கவிஞர் புவியரசு)
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
*போட்டிக்கான நெறிமுறைகள்:
1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.00
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.
தொடர்பு எண்கள் : 0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்
முனைவர் க.தமிழமல்லன்
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
*போட்டிக்கான நெறிமுறைகள்:
1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.00
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.
தொடர்பு எண்கள் : 0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்
முனைவர் க.தமிழமல்லன்
செவ்வாய், 22 மார்ச், 2011
உலக தண்ணீர் தினம் (சிறப்புஇடுகை)
மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தித்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. என்றும்.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
என்பதை,
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. என்றும் உரைப்பார் வள்ளுவர்.
இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.
வீடு தேடி வந்தவரை தண்ணீருடன் வரவேற்பது தமிழர் பண்பாடு.
எனக்குத் தெரிந்து வீடுகளின் வெளியே திண்ணையும், ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த காலம் என்று ஒன்று உண்டு. தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகம் தீர்த்த காலமும் உண்டு.
எங்கள் ஊரில் உள்ள குளங்களில் சிறுவயதில் குளித்து நாங்களே நீச்சல் கற்றது முற்றிலும் உண்மையே!!
இன்றோ குளிக்க குளமில்லை!!
ஆறில்லை!! ஆற்றில் நீரில்லை!!
பெருமழையில் ஆற்று நீர் வந்தாலும் நேரே சென்று கடலில் கலந்துவிடுகிறது!!
நீச்சல் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது!!!
குடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலையில் நாமுள்ளோம்..
நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.
பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.
“ கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான்.”அந்த சேரன் இன்று இருந்திருந்தால்…………………. விலை கொடுத்து நீர்வாங்கிக் குடித்து வாழ்வதை விட வடக்கிருந்து உயிர்நீத்துக்கொள்வதே மேல் என எண்ணியிருப்பான்.
நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!
நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!
இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!
உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.
மன்னனே..
பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.
நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல!
நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார் ஒரு சங்கப்புலவர்.
இன்றைய (மன்னராட்சியில்)மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு(மன்னர்களுக்கு)நீர்வளத்தின் தேவையை எடுத்துச்சொல்ல புலவர்கள்(அமைச்சர்கள்) இல்லையே!!!!!!
(மன்னர்களும்!!!) அரசியல் தலைவர்களும்..
(புலவர்களும்!!!) அமைச்சர்களும் சிந்திக்கவேண்டும்!!
நாமும்...
உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால்
ஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து...
உலக தண்ணீர் தினமான இந் நாளில்,
தண்ணீரின் தேவையை உணர்வோம்!!
நிலத்தடி நீர்மட்டம் உயர பாடுபடுவோம்!!
நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!!
தண்ணீர் மாசுபடுதலைத் தவிர்ப்போம்!!
தண்ணீர் வீணாகப் போவதைத் தடுப்போம்!!
என்ற உறுதிமொழியை ஏற்போம்.
சனி, 19 மார்ச், 2011
What She Said.....(குறுந்தொகை)
0 ஆங்கிலம் தெரிந்தவர்களும் சங்க இலக்கியத்தின் சிறப்பை உணரவேண்டும்.
0 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கிலத்துக்கு வாயையும் வயிற்றையும் விற்றுவிட்ட அறிவாளிகளும் சங்கஇலக்கியத்தின் பெருமையை அறிந்துகொள்ளவேண்டும்..
என்ற நோக்கிலேயே கீழ்க்காணும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்பை வெளியிட்டுள்ளேன்.
Bigger than earth, certainly,
higher than sky,
more unfathomable than the waters
is this love for this man
of the mountain slopes
where bees make rich honey
from the flowers of the kurinchi
that has such black stalks
மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.
காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.
வாய்மொழிப் பாடல்கள்,மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.
காதலை வடிவப்படுத்த முடியுமா?
காதல் என்ன பொருளா? என்றெல்லாம் வினா எழலாம்.
அழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,
இப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள பாடலின் மீது சொடுக்கவும்.
சனி, 12 மார்ச், 2011
வயசு.. இளவயசு…!!
வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள்
அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!!
என்பது முன்னோர் அனுபவ மொழி.
எத்தனை வயது வரை வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே பயனுள்ள வாழ்க்கையின் அளவுகோளாகவுள்ளது.
தமிழிலே பேசவும், எழுதவும் பலர் இருக்கலாம் . இருந்தாலும் ஒரு சிலரின் எழுத்துக்களிலும் , பேச்சிலும் மட்டும் ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதுண்டு.
அப்படியொரு ஈர்ப்புள்ள..
உயிர்ப்புள்ள ஒரு கவிதையை எங்கள் கல்லூரி மாணவர் எழுதித்தந்தார்.
அறிவியல் துறைசார்ந்த அம்மாணவரின் தமிழ்ப்பற்றும், ஆர்வமும்
வரவேற்பிற்குரியதாகவும், தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் கொள்ளத்தக்கது.
வாழ்த்துவோம் வளரட்டும்.
வயசு.. இளவயசு…!!
பெத்தவங்க திட்டிப்புட்டா
கோபம் வரும் வயசு!
மத்தவங்க சொல்லிப்புட்டா
ரோசம் வரும் வயசு!
அறிவுரையக் கேட்டுப்புட்டா
காதடைக்கும் வயசு!
அங்க இங்க சுத்த நினைக்கும்
இளங்காற்று வயசு!
கல்விச் சாலைக்குப் போயிட்டு
கட்டடிக்கும் வயசு!
புத்தகத்தைப் பார்த்துப்புட்டா
எட்டி நிற்கும் வயசு!
நண்பர்களைப் பார்த்துவிட்டால்
கிண்டலடிக்கும் வயசு!
எண்ணமெல்லாம் எங்கெங்கோ
ஏணியேறும் வயசு!
கொட்டுகின்ற மழையோடு
ஆற்றில் குளிக்கும் வயசு!
சுட்டெரிக்கும் பரிதியோடு
பந்தாடும் வயசு!
அர்த்தமில்லாப் பேச்செடுத்து
தினம் உரையாடும் வயசு!
உணவெண்ணம் வாராது
ஊரைச்சுற்றும் வயசு!
வாகனங்கள் அனல் பறக்க
விரைந்தோட்டும் வயசு!
இளங்கன்று போலத் துள்ளி
ஓடியாடும் வயசு!
பலவழியில் குணமிழந்து
போகவைக்கும் வயசு!
வாழ்வுக்கும் வீழ்வுக்கும்
பாதை காட்டும் வயசு!!!!
கண் சிமிட்ட்ட்டும் நேரத்தில்
கரைந்தோடும் வயசு!!!!
அதனால் சீக்கிரமாய்
சிகரமேறி கொடி நாட்டு வயசே!!!!!!!
ச.கேசவன்
இளங்கலை இயற்பியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.
சனி, 5 மார்ச், 2011
வெள்ளி, 4 மார்ச், 2011
சங்க இலக்கியப் பொன்மொழி..
நான் மட்டும் அப்போது அங்கு இருந்திருந்தால்....
அந்த நேரம் பார்த்து நான் அங்கு இல்லாமப் போயிட்டேனே....
என நடந்து முடிந்த ஏதோ ஒரு நிகழ்வைப் பற்றி உணர்ச்சிபொங்க பேசிக்கொண்டிருப்போம்.
நடந்து முடிந்ததைப் பேசுவதால் யாது பயன்..?
இருந்தாலும் நாம் ஏன் நடந்து முடிந்தவொரு நிகழ்வை அதாவது கடந்த காலத்தைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
“பானை உடைந்து போனால் அதை ஒட்ட வைக்க முடியாது
இருந்தாலும் அது எப்படி உடைந்தது என்ற அனுபவம் அந்தப் பானை மீண்டும் உடையாமல் பாதுகாக்கத் துணை நிற்கும்“
இது போலத்தான் கடந்த காலம் பற்றிய உரையாடல்கள்..
ஒரு அழகான அகச்சூழல்.
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
என்பது இப்பாடலுக்கான துறைக்குறிப்பு.
தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்பதை எங்கள் தலைவி முன்பே அறிந்திருந்தால் இன்று உன்னை எண்ணி வருந்தாமல் இருந்திருப்பாள் என்கிறாள் தோழி .
“படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர்வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
“நன்றி விளைவும் தீதொடு வரும்” என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள் மன்னே.“
188 – நற்றிணை (குறிஞ்சி)
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
நடந்தவை
நடப்பவை
நடக்க இருப்பவை என முக்காலத்தையும் அறிந்து வைத்திருக்க நாமென்ன தீர்க்கதரிசிகளா..?
உங்கள் நண்பனிடம் அளவாக அன்பு வையுங்கள்!!
ஏனென்றால் அவனே நாளை உங்கள் எதிரியாகலாம்!!!
உங்கள் எதிரியின் மீதும் அளவாகவே கோபம் கொள்ளுங்கள்!!
ஏனென்றால் நாளையே அவன் உன் நண்பனாகலாம்!!!
என்பது இன்றைய வாழ்வியல் அனுபவமொழி.
சங்க கால அனுபவ மொழி...
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்பதாகும்.
பாடலின் பொருள்..
ஆழமான சுனையி்ல் நீரையுடைய மலையிடத்தே முளைத்த வாழையின் வளைந்த மடலிலிருந்து தோன்றிய கூரிய நுனியைக் கொண்ட குவிந்த மொட்டு, ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட பெண்களின் விரலில் அணிந்த விரலணி போலச் செங்காந்தளின் வளமையான இதழில் தோயும். வானில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!!
எங்கள் தலைவி,
“ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்” என்று உன்னோடு நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின் கண் நன்றாக அறிந்திருப்பின் இப்போது வருத்தமின்றி இருந்திருப்பாள்.
இனி நடந்து முடிந்தபின் அதனைக் கூறுவதால் என்ன பயன்...?
பாடலின் வழியே .....
1. “ஒரு காலத்தில் நன்றாக முடிகின்ற செயலும் மற்றொரு காலத்தில் தீதாக வரும்”
என்னும் சங்ககால மக்களின் அனுபவமிக்க பொன்மொழி பின்பற்றத்தக்கத்தாகவுள்ளது.
மனதைத் திடப்படுத்தும் பொன்மொழியாக இதனைக் கருதமுடிகிறது.
2. பகற்குறி மறுத்து வரைவு கடாயது என்ற அகத்துறை,
தலைவன் தலைவியைப் பகலில் சந்திக்கத் துணை செய்யுமாறு தோழியிடம் வேண்டுகிறான். தோழியோ தலைவியின் நிலையைக் கூறி அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
என விளக்கம் பெறுகிறது.
செவ்வாய், 1 மார்ச், 2011
பாடத்திட்டம் 80 சிபி (GB)
இன்றைய கல்வி மாணாக்கர்களைச் சிந்திக்கச் செய்கிறதா..?
இயந்திரமாக்குகிறதா..?
என்ற சிந்தனையைத் தூண்டிய குறுந்தகவல்..
பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
மாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
தேர்வு முடிவு – 00, 01
-----------------------------------
-----------------------------------
கற்பித்தல் என்பது என்ன?
மாணவர்கள் மதிப்பெண் பெறுவது ? புரிந்துகொள்வது? இரண்டில் எது முதன்மையானது என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும்...
கல்விஅம்மா – இன்று பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்..?
பையன் – இன்று எப்படி எழுதுவது என்று சொல்லித்தந்தார்கள்.
அம்மா – சரி! என்ன எழுதியிருக்க......?
பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!
---------------------------------
---------------------------------
துன்பம் பெரிதா..? அனுபவம் பெரிதா ? என்னும் கேள்வியை எழுப்பிய...
அனுபவம்.
நீ பட்ட துன்பத்தைவிட...
அதில் நீ பட் ட அனுபவம் பெரிது...!!!
---------------------------------------
---------------------------------------
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற கருத்தை அறிவுறுத்தும்..
பெருந்துன்பம்.
துன்பங்களை எண்ணிப் பார்ப்பது
இரண்டு முறை துன்பப்படுவதற்குச் சமமானது!
---------------------------------------
---------------------------------------
நாமெல்லாம் மனிதம் உடையவர்களா என்று தன்மதிப்பீடு செய்யச் சொல்லகிறது இந்தக் குறுந்தகவல்.
அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
ஆனால் அந்த அன்பே இங்கு பொய்யானால்
உலகத்தில் அதைவிட கொடிய நோய் எதுவுமில்லை!!
அன்னை தெரசா.
---------------------------------------
---------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)