பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஐந்துநாக்கு மனிதர்



ஒரு நாக்குகொண்ட மனிதர்களையே இப்போது காண்பது அரிதாகவுள்ளது. ஏனென்றால் காணும் மனிதர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று, நான்கு என பல்வேறு நாக்குகள் உள்ளன.

நாக்கு என்பது சுவையை உணர்வதற்கு மட்டுமல்ல!!
நம் தாய்மொழியைச் சுமப்பதற்கும் தான்!!

விலங்குகள் கூட தம் நாவில் அவைதம் தாய்மொழியைத்தான் சுமக்கின்றன.

ஆனால் நாம்........?

இதோ ஒவ்வொரும் காண வேண்டிய காட்சி...!

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கண்களாலே கள்வனானேன்..!



நம் சமூகம் காலகாலமாகவே ஆண்களை மையப்படுத்தி வந்திருக்கிறது. காலந்தோறும் பல போராட்டங்களைக் கடந்து பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக வளர்ந்துள்ளார்கள்.
 மூவாசைகளுள் ஒன்றாக “பெண்ணாசை” கூறப்படுகிறது.
 சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே!! என்றெல்லாம் ஆண்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
 பட்டினத்தாரோ பெண்ணாசையால் வாழ்வைத் தொலைக்கும் ஆண்களுக்காகப் பெண்களைச் சாடுகிறார்.

வள்ளுவரோ....

o கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
o கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
o ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
o யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
o கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

என பெண்களைப் பற்றியும் அவர்களின் கண்களைப் பற்றியும் நிறைய கூறிச் சென்றிருக்கிறார்.


இன்றைய திரைப்படப் பாடல்களோ...

o ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
வெந்ததும் பெண்ணாலே
அன்று விளையாட்டு சிறுபிள்ளை
வீர சிவாஜியானதும் பெண்ணாலே
நில் என்று சொன்னதும்
சுள் என்று சூரியன்
நின்றது பெண்ணாலே
சின்ன தாலிக்கயிற்றுக்கு
பாசக்கயிறு அன்று
தோற்றதும் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே
மனம் கெட்டு தசரதன்
செத்து செத்து விட்டு
உயிர் விட்டதும் பெண்ணாலே
அட பத்து தலையிலும்
பித்தம் கொண்டு மன்னன்
கெட்டதும் பெண்ணாலே
பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
மஜ்னு போனதும் பெண்ணாலே
அந்த ரோமாபுரி அன்று
ரத்தகுளம் என்று
ஆனதும் பெண்ணாலே
இந்தக்கால கட்சிகளும்
இரண்டாச்சு பெண்ணாலே
பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
கொடி நட்டதும் பெண்ணாலே
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
கொள்ளை கொள்ளும்
ஒரு வெள்ளை தாஜ்மஹால்
வந்ததும் பெண்ணாலே
பாண்டிய மன்னன் அரண்மனை
மண்ணோடு மண்ணாகி
போனதும் பெண்ணாலே
நல்லதும் கெட்டதும் இங்கே
நடப்பதெல்லாம் பெண்ணாலே
முழுசா பாட்டில் சொல்ல
முடியாது என்னாலே
ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
( படம் - திருமதி ஒரு வெகுமதி. )


என காலந்தோறும் பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்றன.

ஏன்? ஏன்? ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?

பெண்கள் தான் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் காரணமா..?
அவர்களும் ஆண்களைப் போன்ற பிறவிகள் தானே..?
ஆண்களை ஆக்கவும், அழிக்கவும் தானா? பெண்ணினம் தோன்றியது..?

என பல வினாக்கள் தோன்றினாலும்...
மனித இனம் தோன்றிய காலம் முதலாகவே இந்த நிலை பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது..

சான்றாக..
ஓர் பழந்தமிழ் நற்றிணைப் பாடலில்....

பாங்கன் தலைவனிடம் “ ஒரு பெண்ணால் உன் உள்ளம் அழிந்தது. உன்னிடத்து நயனும், நண்பும் , நாணும், பயனும் , பண்பும் பிறவும் இல்லையா..? எனக் கேட்டான். அதற்குத் தலைவன்....

என் நெஞ்சில் உள்ள அப்பெண்ணை நோக்கும் முன்னர் அவையெல்லாம் என்னிடத்து இருந்தன என்று கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

அழகிய வயிற்றின் மேல் மேலும் அழகுசேர்க்கும் விதமாகத் தோன்றிய தேமலையும், அழகுவாய்ந்த மார்பினையும், ஐந்து வகையாகப் பிரித்துக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்ட என்னவளின் குவளை மலர் போன்ற அழகிய கண்களைக் காணும் முன்பு வரை…..
நான் யாருடனும் நெருங்கிப் பழகும் பண்பும்,
சுற்றம் தழுவலும்,
நட்பும்,
நாணமுடைமையும்,
பிறருக்கு உதவும் பண்பும்,
உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பும் கொண்டவனாகத் தான் இருந்தேன்.
இப்போது அப்பண்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. அதற்காக வருந்துவதால் யாது பயன்…?



“நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் 
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் 


நும்மினும் அறிகுவென்மன்னே – கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வனமுலை
விதிர்த்து விட்டன்ன அந்நுண் சுணங்கின் 
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மாலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக்கண் காணா ஊங்கே.”

துறை – கழற்றெதிர் மறை.
நற்றிணை -160 .


பாடல் வழி அறியாகும் மரபுகள்.

• பெண்கள் தம் கூந்தலை ஐந்து வகையாகப் பிரித்து அழகாக (சடை) பிணைத்துக் கட்டும் பழக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
• பாங்கன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் “கழற்றெதிர் மறை” என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
நெருங்கிப் பழகும் பண்பும், சுற்றம் தழுவலும், நட்பும், நாணமுடைமையும், பிறருக்கு உதவும் பண்பும், உலக நடைமுறைகளை அறிந்து நடக்கும் பண்பு ஆகிய சிறந்த பண்புகள் சிறந்த வாழ்வுக்கான அடிப்படைப் பண்புகள் என்பது புலப்படுத்தப்படுகிறது.

இப்பாடலிலும் பெண்ணால் தன் இயல்பு நிலை மாறிய தலைவனின் நிலை அறிவுறுத்தப்படுகிறது.

காலக் கண்ணாடியில் எனக்குத் தெரியும் பிம்பம்.

காலந்தோறும் பெண்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசினாலும் நானறிந்தவரை உணர்ந்த உண்மை.

பெண்களும் ஆண்களைப் போலத்தான்.
 நம் வாழ்வை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்.
 பெண் மோகத்தால் ஆண்கள் தம் வாழ்வை, இலக்கைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் தான் இதுபோன்ற பெண்கள் பற்றிய சிந்தனைகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன.
 பெண்களின் நோக்கம் ஆண்களைத் துன்பறுத்துவதோ, தொல்லை செய்வதோ அல்ல..
இயல்பான உடலில் வேதிமாற்றமே ஆண்கள், பெண்கள் மீது மோகம் கொள்வதற்குக் காரணம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

நீங்கள் விழித்துக்கொண்டே தூங்கியதுண்டா?



விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு என்ன தெரியுமா..?

மனிதன் தான் விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு!!

மாவீரன் நெப்போலியன் குதிரையில் செல்லும்போதே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது.

வகுப்பறையில் மாணவர்கள் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவதுண்டு. சாப்பாட்டு நேரமும், சாப்பாட்டுக்குப் பின்னான மாலை நேரமும் மாணவர்கள் தூக்கத்துடன் போராடும் காலங்களாகும். இவ்வேளையில் விழித்துக்கொண்டே தூங்குபவர்களைக் கண்டறிய நான் சில உளவியல் முறைகளைக் கையாள்வதுண்டு.

வழிமுறை – 1

மாணாக்கர்களே நான் இப்போது 1,2,3 என எண்ணியவுடன் கைதட்டுவேன் நீங்களும் என்னுடன் 3 முறை கைதட்டவேண்டும் என்பேன். அவர்களும் சரி என காத்திருப்பார்கள். நான்............ 1, 2 எண்ணிவுடனேயே கைதட்டிவிடுவேன். என்னுடன் சேர்ந்து விழித்துக்கொண்டே தூங்கும் சில மாணாக்கர்களும் சேர்ந்து தட்டிவிடுவார்கள்..

இதிலிருந்து நான் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். பாவம் இவர்கள் செவி மட்டுமே கேட்கிறது. அந்தச் செய்தி அவர்களின் மூளைக்குச் சென்று சேரவில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைப்பேன்.
வழிமுறை – 2
நான் கேட்கும் எளிமையான கேள்விக்குப் பதிலளியுங்கள் என்பேன்.. (என்ன கேள்வி என்பார்கள்)

நான் 100 ரூபாய்க்கு நூல் வாங்கி நூற்றைம்பது (150) ரூபாய்க்கு விற்றால் எனக்கு இலாபமா? நட்டமா? என்பேன்..

சிலர் இலாபம் என்றும் சிலர் நட்டம் என்றும் சிலர் துயில்நிலையிலிருந்து வெளிவரவும் இதுபோன்ற எளிய வினா அடிப்படையாக இருக்கும்.

பின்..
100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.
100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம் என்றும் அவர்களை விழிப்பு நிலைக்குக் கொண்டுவருவேன்.

(எனக்கு மின்னஞ்சலில் நல்ல எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் வந்த நகைச்சுவை)

இங்கும் ஒரு மருத்துவர் தம் மாணாக்கர்களுக்கு மருத்துவம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

உற்றுநோக்கல், புரிந்துகொள்தலின் இன்றியமையாமையை மாணவர்களுக்குப் புரியவைக்க எண்ணிய மருத்துவர்....

மாணவர்களே நன்றாகப் பாருங்கள்...

நான் நம் முன் மேசையில் உள்ள இந்த இறந்த நாயின் வாயில் விரலை வைக்கிறேன். பின் என் விரலை எடுத்து என் வாயில் வைத்துக்கொள்கிறேன்...

எங்கே நீங்களும் என்னைப் போலச் செய்யுங்கள் பார்க்கலாம் என்கிறார்..

மாணவர்களும் அவ்வாறே இறந்த நாயின் வாயில் தம் விரலை வைத்து அதே விரலை எடுத்து தம் வாயிலும் வைத்துக்கொள்கிறார்கள்.

மருத்துவர் சொல்கிறார் நீங்கள் நன்றாகக் கவணித்தீர்களா..?

நான் என்னசெய்தேன்..

எனது நடுவிரலை நாயின் வாயில் வைத்தேன்!
எனது ஆட்காட்டி விரலைத்தான் எனது வாயில் வைத்துக்கொண்டேன்!!

என்றதும் ஆடிப்போனார்கள் மாணவர்கள்....!!!!!!!!!


இப்படி நீங்கள் விழித்துக்கொண்டு தூங்கியதுண்டா..?
அப்படித் தூங்கியவர்களைக் கண்டறிந்த அனுபவமுண்டா..?
எனப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..

(பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான் என்பதை இவர்களுக்குப் புரியவைக்க என்ன பாடுபடவேண்டியிருக்கிறது..?)

புதன், 16 பிப்ரவரி, 2011

சங்ககால இருமல் மருந்து


சங்கப்பாடல்களின் வழி அகப்புற கருத்துக்களுடன் அக்காலப் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதோ ஒரு அகப்பாலில் ஓர் மருத்துவக்குறிப்பு.

தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் சூழலில் தலைவி தோழிக்குச் சொல்லுவதாகவோ, தலைவிக்குத் தோழி சொல்லுவதாகவோ இப்பாடலைக் கொள்ளலாம்.

“அம்ம வாழி, தோழி! 'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த

சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்

வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்

தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,

நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து

அடி புதை தொடுதோல் பறைய ஏகி,

கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,

பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,

புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,

தண் கார் ஆலியின், தாவன உதிரும்

பனி படு பல் மலை இறந்தோர்க்கு

முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!”

அகநானூறு 101. பாலை -மாமூலனார்

(பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்.)

தொன்றுபடு பழமொழி

தலைவன் தலைவியைப் பிரிந்து காலத்தை நீட்டிக்கிறான். அதனால் வருந்திய தலைவி நன்மை செய்தவர்கள் நன்மைதானே பெறுவர். இதுதானே பழமொழி. இந்த அனுபவமொழி இன்று பொய்யானதோ..? என்று புலம்புகிறாள். இதனை..,

'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

என்னும் பாடலடிகள் சுட்டும்.

நான் தலைவருக்கு நன்மைதானே செய்தேன்...? (இயற்கைப் புணர்ச்சியின் போது தலைவனைச் சந்தித்த தலைவி அவனுக்கு இன்பமளித்தது)

அவரோ காலத்தை நீட்டித்து என்னைத் துன்புறுத்துகிறாறே! என்று வருந்துகிறாள் தலைவி.

சங்ககால இருமல் மருத்துவம்.

* செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுருண்ட, பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள்,

(வாய்ப் பகை கடியும் மண்ணொடு) வாயிலிருந்து எழும் இருமலான பகையினை எழமாற் தீர்க்கும் மருந்தான புற்றுமண்ணை வாயில் அடக்கிக் கொண்டனர்,
கடிய திறல்வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லொடு கையிற்பற்றி, வெண்ணெய்யை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆவினத்தையுடையராய், அவ்வினத்தினை அவ்விடத்தினின்று கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டிலே.

* அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஒடம்போல, பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரு மேல் காற்றினால், புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், குளிர்ந்த கார் காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்,நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..

1. பழமொழிகள் சங்க காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தமை இப்பாடல வழி அறியமுடிகிறது.“தொன்றுபடு பழமொழி” என்னும் சொல் இதற்குச் சான்றாகிறது.
2.இருமலுக்கு எறும்புப் புற்றிலுள்ள “புற்றுமண்ணை” மருந்தாக எண்ணி வாயில் அடைக்கிக்கொண்டனர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

காதல் என்பது எதுவரை? (300வது இடுகை)



அன்பின் உறவுகளே..
இன்று என் வாழ்வின் பெருமிதத்திற்குரிய நாள்.
ஆம் தமிழ்த்துறை சார்ந்த நான் கணினியையும் இணையத்தையும் வியப்புடன் நோக்கிய காலம் உண்டு. இன்று நான் வைத்திருக்கும் மடிகணினி என்தாய்மொழி தமிழ்தான் பேசுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வலையுலகில் எழுதிவருகிறேன்.
300 இடுகைகள் (சங்கத்தமிழ், இணையதள நுட்பங்கள் )
51000க்கும் மேற்பட்ட பார்வையாள்கள்!!
104 நாடுகளிலிருந்து!!
344 பின்தொடர்வோர்.
122 மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுவோர்..

என இது ஒன்றும் பெரிய சாதனையல்ல..
என்றாலும் பழந்தமிழை மட்டுமே நாடிவரும் தமிழ்த்தேனிக்களான அன்பு நெஞ்சங்களே உங்களை எண்ணித்தான் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

............./\............../\............../\......................../\.........../\......................../\...........
சரி இன்றைய இடுகைக்குச் செல்லலாம்.



காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!
காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!

காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.

காதல் என்பது எதுவரை.....?
கல்யாண காலம் வரும்வரை! என்பது போல.....

காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...


காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை?
கழுத்தினில் தாலி விழும் வரை
பெண்ணுக்கு இளமை எது வரை?
பிள்ளைகள் பிறந்து வரும் வரை


என்று அனுபவித்துப் பாடுவார்.

கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது?
செல்வத்துள் சிறந்த செல்வம் எது?

என பல வினாக்களுக்கும் விடைதருவதாக அமையும் அழகான அகப்பாடல்..


பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன் தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினைவேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே!


நற்றிணை-166
பாலை
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

தலைவன் தம்மை நீங்கிப் பொருளுக்காகப் பிரிந்துசென்றுவிடுவானோ என்று அஞ்சிய தலைவி வருந்தினாள். அதனை அறிந்த தலைவன்.

மடந்தையே வருந்தாதே...
அழகுமிக்க உன்னையும்...
செல்வத்திற் சிறந்த நம் புதல்வனையும் நீங்கி நான் எங்கு செல்லமுடியும்?
என்று சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.

பொன்னைப் போன்றது உன் உடம்பு!
மணியைப் போன்றது உன் மணம் வீசும் கூந்தல்!
குவளை மலரைப் போன்றது உன் மையுண்ட கண்கள்!
மூங்கிலைப் போன்றன உன் அழகுமிக்க தோள்கள்!


இவற்றைக் காணும் போதெல்லாம் நான் உள்ளம் மகிழ்ந்து அறத்தினால் நிலைபெற்றோர் பெறும் சிறப்பினை அடைந்தவனாகிறேன்.

அதைவிட.........

பொன்னாலாகிய தொடியணிந்த நம் புதல்வன் இப்போதுதான் விளையாடக் கற்றுக்கொண்டுள்ளான்.

உங்களைக் கண்டு மனம் மகிழ்வதன்றி வேறொன்றும் சிறந்தது இல்லை. எனவே வேறொரு இடம் சென்று நான் ஆற்றும் பெருஞ்செயலும் எதுவும் இல்லை.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் நாம் ஒருவரையொருவர் ஏன் பிரியப்போகிறோம். அதனால் நீ மனம் வேறுபட்டு வருந்தாதே என தலைவியிடம் சொல்கிறான் தலைவன். மேலும், தான் தலைவி மீது கொண்ட காதலானது கடலைவிடப் பெரியது என்றும் உரைக்கிறான்.


இப்பாடல் வழி,


• செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது என்னும் அகத்துறை (அகச்சூழல் விளக்கம் பெற்றது)
• அறத்தால் பெறும் பயன் மகிழ்ச்சியான வாழ்வில் கிடைக்கும் என்ற கருத்து வழி புலப்படுத்தப்படுகிறது.
• திருமணத்துக்குப் பின்னும் தலைவியைக் காதலிக்கும் தலைவன் தன் காதல் கடலை விடப் பெரியது என்றுரைக்கிறான்.
• குழந்தைச் செல்வத்தைவிட பெரிய செல்வம் எதுவும் இல்லை என்னும் கருத்து அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..?



தம் வேலையை பாதுகாத்துக்கொள்ள, தன் தேவையை நிறைவு செய்துகொள்ள ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல் என்று தான் இதுவரை நினைத்துவந்தேன்..
எனக்கு வந்த மின்னஞ்சல் இதன் உண்மையான பொருள் என்ன என்பதை எனக்குப் புரியவைப்பதாக இருந்தது..
அடுத்தவரின் கால், கையைப் பிடித்தலைத்தான் கால்+கையைப் பிடித்தலைத்தான் கால்கைபிடித்தல் என்று மாறி இன்று காக்கைபிடித்தல் என்று மாறியது என்பதைப் புரிந்துகொண்டேன்..

நம்மை ஒருவர் புகழும்போதும், இகழும்போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மைவெல்ல யாராலும் முடியாது!!

எனக்குக் காக்கை பிடிக்கத்தெரியாது....!!
உங்களுக்கு????