வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 டிசம்பர், 2010

வலியா நெஞ்சம் வலிப்ப….



ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெறமுடியுமா…?

இளமையை தொலைத்துக் கல்வியை வாங்குகிறோம்…!
கல்வியை விற்று சம்பளம் வாங்குகிறோம்…
பணத்தை இழந்து மகிழ்ச்சி வாங்குகிறோம்…

ஆனாலும் மகிழ்ச்சியை மட்டும் யாரும் இழக்க விரும்புவதில்லை.

மகிழ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சி எல்லோரும் விரும்புவது! இருந்தாலும் சிலருக்கு மட்டுமே கிடைப்பது.

யாருமே தொலைக்கவில்லை
இருந்தாலும்…….
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் நிம்மதியை!

என்னும் ஆன்றோர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

சங்கச் சான்றோர்தம் வாழ்க்கைக் குறிப்புகளாகத் திகழ்வன சங்க இலக்கியங்களாகும்.

இதோ ஓர் வாழ்க்கைக் குறிப்பு..

தலைவன் பொருளுக்காகப் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள். அவளிடம் தோழி “உனது நலன்கள் தலைவரை தடுத்து நிறுத்துவன அல்ல போலும். அதனால் ஆற்றியிருப்பதன்றி வேறு வழியில்லை என்று சொல்லித் தேற்றினாள்.

பாடல் இதோ…

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினையிடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐதுஏய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து
மலர் பிணைத்தன் மாஇதழ் மழைக்கண்
முயல் வேட்டெழுந்த முடுகு விசைக் கதநாய்
பல்நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே!

நற்றிணை -252 (பாலை)
அம்மெய் நாகனார்.

கூற்று - பொருள்வயிற்பிரியும் என்று கவன்ற தலைவிக்குத் தோழி சொல்லியது.

 உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தில் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலிக்கின்ற வேற்றுநாட்டின் வழியே “இவ்வாறு தலைவியைப் பிரிந்து பொருளுக்காகச் செல்வோம்” என்ற கொள்கை கொண்டார் தலைவர்.
 அவ்வாறு பெறும் அரிய பொருள் வீட்டில் சோம்பியிருப்பாருக்குக் கூடுவதில்லை என்று இதுவரை பிரியக் கருதாத நெஞ்சமும் (வலியா நெஞ்சமும் வலிப்ப) பிரிவதற்கு உடன்படும்

தலைவியின் அழகுநலன்கள்...

 சுவரிலே புனைந்து எழுதப்பட்ட படிமத்தைப் போன்ற அழகுடையவள் தலைவி.
 மெலிதாய் பொருந்தி அகன்ற அல்குலையும் (இடை) மை எழுதப்பட்டு நீலமலரைப் பிணைத்து வைத்தது போன்ற கரிய இமையுடன் விளங்கும் அழகிய கண்களையும் உடையவள்.
 முயலை வேட்டையாகக் கொள்ளும் விருப்பத்துடன் எழுந்து விரைந்த வேகத்தையுடைய சினமுடைய நாயினுடைய நல்ல நாவை ஒத்த சிறிய அடிகளையுடையவள்.
 பொலிவுடைய கூந்தலையுடையவள்.

 பொருளின் தேவையையுணர்ந்த தலைவனின் முடிவை உனது இத்தகைய அழகுநலன்கள் கூட மாற்ற முடியாது. அதனால் அவர் வரும் வரை ஆற்றியிருப்பதே நாம் செய்யத்தக்கவொன்றாகும் என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.

பாடலின் வழி...

“சிள்வீடு” என்றும் சிள்வண்டு மரத்தின் கிளையோடு மறைந்து ஒலிக்கும் அதுபோல தலைவன் மீது தலைவி கொண்ட ஏக்கமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத்தோன்றாது உள்ளத்தே நின்று வருத்தும் என்னும் இறைச்சி (உட்பொருள்) அழகாகப் புலப்படுத்தப்படுகிறது.
“அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்” என்னும் கருத்து சிறந்த பொன்மொழியாகவே கொள்ளத்தக்கதாகும். வீட்டில் இருப்போருக்குத் தானே பொருள் வந்து சேராது. தேடிச்செல்வோருக்கே மகிழ்ச்சி தேடிவரும் என்னும் அரிய கருத்தை விளக்குவதாக இப்பொன்மொழி விளங்குகிறது.
“வலியா நெஞ்சம் வலிப்ப” என்னும் அடிகள் இதுவரை எந்தவொரு சூழலிலும் தலைவியைப் பிரியக் கருதாத தலைவன் இப்போது பிரிவது பொருளின் தேவையை அவன் உணர்ந்ததையே எடுத்துரைப்பதாகவுள்ளது.
சங்ககால மக்கள் சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருந்தனர் என்பதை “புனை சுவர்ப்பாவை” என்னும் அடிகள் விளக்குவனவாகவுள்ளன.

10 கருத்துகள்:

  1. முதலில் சொல்லப்பட்டு இருக்கும் - ஒன்றை இழந்து ஒன்றை வாங்குகிறோம். பொறித்து வைக்கப்பட வேண்டிய நல்ல வாசகம்.

    பதிலளிநீக்கு
  2. நிறைய நாளுகப்புறமா உங்க பக்கம்.குணா சுகம்தானே.

    ஒன்றை இழப்பதே ஒன்றைத் தேடுவதற்காகவோ இல்லை எடுப்பதற்காகவோதானே.நல்ல விளக்கத்துடன் எப்பவும்போல
    உங்கள் பதிவு !

    பதிலளிநீக்கு
  3. @ஹேமா நலம் நலமறிய ஆவல்..

    கருத்துரைக்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  4. ஒன்றை இழந்து தான் மற்றொன்றை வாங்குகிறோம்..ஆனால்,இழந்ததின் தாக்கம் பெறுவதினால் வரும் சுகத்தினை விட சில சமயங்களில் அதிகமாகி விடுகிறது !!

    பதிலளிநீக்கு
  5. திருமணத்துக்குப் பிறகு நீண்ட விடுமுறை...

    வரும்போதே மகிழ்ச்சியாய் ஒரு பதிவு....

    நல்ல இடுகை. ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியும் என்பது உண்மையிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  6. சங்கப் பாடல்களின் ஆழ்ந்த பொருட்செறிவு வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. muthal paragh unmaiyo unmai..therumba pera mudiyathavaigalai ezhanthu perugirom innondrai...

    பதிலளிநீக்கு