பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 23 டிசம்பர், 2010

மதிப்புகள்



ஒருமுறை ஒரு மனிதன் பேரழகு சிலையொன்றைத் தன் நிலத்திலிருந்து கண்டெடுத்தான். அவன் அதனை அழகான பொருட்களை விரும்பும் ஓர் ஆட்சியாளரிடம் கொண்டு சென்று விற்பதற்காகக் கொடுத்தான்.

ஆட்சியாளர் ஒரு பெருந்தொகைக்கு அதனை வாங்கியதும் அந்த மனிதன் பிரிந்துசென்றான்.

பணத்துடன் வீட்டை நோக்கிச் செல்லும்போது அவன் ஏதோ நினைத்து தனக்குத் தானே …………

“இந்தப் பணம் எப்பேர்ப்பட்ட உயிர்ப்புள்ளது!
ஆயிரக்கணக்கான வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த செதுக்கப்பட்ட, யாரும் கனவுகாணா இந்தச் சிலைக்கு இவ்வளவு பணத்தை எவ்வாறு ஒருவரால் கொடுக்கமுடியும்………..,?”

என எண்ணிக்கொண்டான்.

இப்போது அந்த ஆட்சியாளர் தன்னிடமிருந்த அந்தச் சிலையினைப் பார்த்தபடி எண்ணிக்கொண்டார்………

“என்ன அழகு!
என்ன உயிர்த்துடிப்பு!
எப்பேர்ப்பட்டதோர் ஆன்மாவின் கனவு!
ஆயிரக்கணக்கான வருடங்களின் இனிமையான தூக்கத்தின் புதுமையான வளர்ச்சி!
இறந்துபோன கனவற்ற இந்தப் பணத்துக்காக எவ்வாறு ஒருவன் இந்தச் சிலையினைக் கொடுக்கமுடியும்……….?”

புதன், 22 டிசம்பர், 2010

நீங்க அறிவாளியாகவே இருங்க..! - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 20

குறுந்தொகை 20


ஒரு மனிதனைக் கோபத்திற்குள்ளாக்கும் மிகப்பெரிய கேள்வி...?

உனக்கு அறிவிருக்கிறதா...........?

சரி அறிவைப்பற்றி இங்கு ஏன் இவ்வளவு ஆராய்ச்சி என்கிறீர்களா..?

எல்லா அறிவாளிகளும் அறிவாளிகள் அல்ல!
எல்லா முட்டாள்களும் முட்டாள்களல்ல!


என்னும் உண்மையைப் புலப்படுத்தும் அகப்பாடல் இதோ..

“அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்

புதன், 15 டிசம்பர், 2010

ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010




மறக்கமுடியுமா....
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால் நம்பமுடியவில்லை.நேற்றுதான் சந்தித்ததுபோல இருக்கிறது


பள்ளிக்கால பழக்கமா..?
கல்லூரி தந்த நட்பா..?
தொப்புள் கொடி உறவா..?

இவையெல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மொழி தந்த உறவிது..!

தமிழின் இனிமையை,

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்
.“

என்பார் பாரதிதாசன். இவ்வினிய மொழிதந்த உறவிது அதனால் இவ்வுறவுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமான உறவுகளை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சங்கம முயற்சி இணையத்தமிழ் வளர்ச்சியின் அடுத்த படிநிலையாகவே கருதத்தக்கதாகும்.

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


இதோ நாம் தமிழர் என்று கர்வப்பட ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது ஈரோடு வலைப்பதிவர் சங்கமக்குழு..

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


தமிழன்பர்கள் அனைவரையும் வருக வருகவென ஈரோடு பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்..

சனி, 4 டிசம்பர், 2010

உள்ளுதொறும் நகுவேன்..


ளம் துறவி தம் குருவிடம் ஓர் சந்தேகம் கேட்டார்...

குருவே நான் புகைவண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன். அப்போது என் எதிரே இருந்தவர் தவறுதலாக என்னை மிதித்துவிட்டார். கோபம் கொண்ட நான் அவரைத் திட்டிவிட்டேன். கோபத்தை அடக்க எண்ணியும் என்னால் இயலவில்லையே ஏன்? எப்போது என்னால் அமைதியான மனநிலைக்குச் செல்லமுடியும்? என்று வினவினார்.
குரு சொன்னார்....

“ நீ வேறு !
உன் உடல் வேறு !”
என்ற எண்ணம் எப்போது உனக்குத்தோன்றுகிறதோ அப்போதுதான் உன்னால் முதிந்த நிலையடைய முடியும்! என்றார்.

இன்று இரு பழம்பாடல்களைக் காணப்போகிறோம்....

இப்பாடல்களில் வரும் இருவரும் “தான் வேறு தன் உடல்வேறு ” என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்! ஆனால் இவர்கள் துறவிகளல்ல..

பாடலுக்குச் செல்வோம்....

சிற்றிலக்கியங்களில் குறிப்பித்தக்ககது முத்தொள்ளாயிரம். இதன் பாடல்கள் சங்கஇலக்கியப் பாடல்களுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகத் திகழ்வது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

சுவைமிகு சிற்றிலக்கியப் பாடல் ஒன்று....
சேரனின்மேல் தீராத காதல் கொண்ட பெண்ஒருத்தி சேரனைக் காணத்துடிக்கிறாள்.அதனால் இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.
ஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் ? என்றும் அவளுக்குப் புரியவில்லை !
'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே !', என்று மனம் கலங்கி நிற்கிறாள்.
ஆனால் தன் நெஞ்சமோ, சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் பரிதவித்து நிற்கிறது !', என்கிறாள் அவள் !

இப்பாடலில் தலைவி தன் உடல் வேறு நெஞ்சம் வேறு என்று எண்ணிக் கொள்வது காதலின் ஆழத்தையும், கவிதையின் சுவையையும் கூட்டுவதாகவுள்ளது.

பாடல் இதோ..

கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை ஆக,
நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றஎன் நெஞ்சு. (பாடல்-17)


ஒப்பு நோக்கத்தக்க சங்கப்பாடல்...

தலைவனின் பிரிவை ஏற்க இயலாத தலைவி உடல் மெலிவுற்றாள். தன் நெஞ்சமோ அதன் நல்வினைப் பயனால் தலைவனின் பின்னே சென்றுவிட்டது. ஆனால் நானே தீவினைப் பயனால் இங்கு ஊராற் பழிச்சொல்லுக்கும் உடல்மெலிவிற்கும் உரியவளாய் வாடுகிறேன் என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இதனை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் தனக்கு சிரிப்பு வருகிறது என்று அவலம் (வருத்தம்) தோன்ற சொல்கிறாள்.

பாடல் இதோ...

உள்ளுதொறும் நகுவேன் தோழி – வள்ளுகிர்
பிடி பிளந்திட்ட நார்இல் வெண்கோட்டு
கொடிறுபோல் காய வால் இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
பல்இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டு ஒழிந்தது
ஆனாக் கௌவை மலந்த
யானே தோழி நோய்ப் பாலேனே

நற்றிணை -107

கூற்று – பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

தலைவனின் பிரிவால் உடல்மெலிந்த தலைவி தோழியிடம்........

o பெரிய நகமுடைய பெண்யானை உண்பதற்காக ,பாலை மரத்தின் மேலுள்ள தோற்பட்டைகளை பறித்தது. அதனால் அம்மரம் நாரில்லாத வெண்மையான கிளைகளுடன் பற்றுக்குறடுபோல் காய்களையும் பூங்கொத்துகளையும் கொண்டதாகக் காட்சியளிக்கும்.
o ஓமை மரம், இயங்கும் காற்றினால் இலைகள் பல உதிர்ந்து கிளைகளில் காய்ந்த நெற்றுகள் மலையிலிருந்து வீழும் அருவிபோல ஒல்லென ஒலிக்கும்.
o இத்தகைய மரங்கள் உடையதாயும், புலியின் இயக்கம் உடையதாயும் விளங்குவது என் தலைவர் சென்ற வழியாகும். அப்பாலை நிலத்து வழியே அவரின் பின்னே என் நெஞ்சமும் அதன் நல்வினைப் பயனால் சென்றுவிட்டது.
o ஆனால் நானோ நான் செய்த தீவினைப் பயனால் இங்கு ஊராரின் பழிச்சொல்லுக்கும், உடல் மெலிவிற்கும் ஆட்பட்டுத் தவிக்கிறேன்.
o இவ்வாறு இருவினையாலும் (நல்வினை, தீவினை) ஏற்படும் பயனை நான் ஒருசேர அனுபவிக்கிறேன். என் நிலை கண்டு எனக்கே சிரிப்புத்தான் வருகிறது என்று புலம்புகிறாள்.

பாடலின் வழி


 பிரிந்து சென்ற தலைவனின் நினைவால் தாம் எப்போதும் இருப்பதனை, அவன் பின்னே தன்நெஞ்சம் சென்றது என்றும், இது என் நெஞ்சம் செய்த நல்வினைப்பயனால் கிடைத்த வாய்ப்பு என்றும் சொல்கிறது தலைவியின் மனம்.
 தலைவனின் பின்னே தன் நெஞ்சம் சென்றது போல் தன் உடலால் செல்லமுடியவில்லை. அதனால் உடல் மெலிவுற்று, ஊராரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகித் தான் வாடுவது தான் செய்த தீவினைப் பயனே என்றும் கருதுகிறாள்.

உள்ளுறைப் பொருள்..
o பெண்யானை மரத்தின் தோலை பறிப்பது போலத் தலைவியின் நலத்தைப் பெற்றான் தலைவன்.
o பாலை நிலத்தில் இலை தீர்ந்து நெற்று ஒலிப்பது போலத் தலைவியின் நெஞ்சம் கலக்கத்திற்குள்ளானது
o புலி வழங்கும் அத்தம் என்றது, அன்னை முதலான உறவினர்கள் தலைவியை அச்சுறுத்தினர் என்ற பொருள்நயம் தோற்றுவிப்பதாகவுள்ளது.
ஒப்பீடு...
உடல் வேறு மனம் வேறு என்று இருத்தல் ஒருவித ஞான நிலையாகும். காதலும் ஒருவகை தவம் தானே அதனால் இந்தப் பண்பு கூடிவந்தது போலும்.
 முத்தொள்ளாயிரம் – நற்றிணை என்னும் இருபாடல்களிலும் தலைவியர்கள் தம் உடல்வேறு – நெஞ்சம் வேறு என்னும் எண்ணம் கொண்டிருத்தல் ஒப்பநோக்கத்தக்கதாகவுள்ளது.
 முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு வருந்துகிறாள்
 நற்றிணைத் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிறாள்.
 முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சின் நிலைகண்டு வருந்தினாலும் காதலின் வலிமை கண்டு பெருமிதம் கொள்கிறாள்.
 நற்றிணைத் தலைவி தன் நெஞ்சின் நிலை கண்டு பெருமிதம் கொண்டாலும் தன் உடலால் இயலவில்லையே என்று வருத்தம்கொள்கிறாள்.
 நற்றிணைத்தலைவி இருவினையையும் நினைத்து நினைத்து சிரிப்பதாகத் தோழியிடம் சொன்னாலும். தலைவியின் சிரிப்பு மகிழ்ச்சி காரணமாக மட்டும் தோன்றிதல்ல.... அவலம் (வருத்தம்) காரணமாகவும் தோன்றியது என்று எண்ணும்போத கவிதையின் சுவை கூடுகிறது.

வியாழன், 2 டிசம்பர், 2010

வலியா நெஞ்சம் வலிப்ப….



ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெறமுடியுமா…?

இளமையை தொலைத்துக் கல்வியை வாங்குகிறோம்…!
கல்வியை விற்று சம்பளம் வாங்குகிறோம்…
பணத்தை இழந்து மகிழ்ச்சி வாங்குகிறோம்…

ஆனாலும் மகிழ்ச்சியை மட்டும் யாரும் இழக்க விரும்புவதில்லை.

மகிழ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சி எல்லோரும் விரும்புவது! இருந்தாலும் சிலருக்கு மட்டுமே கிடைப்பது.

யாருமே தொலைக்கவில்லை
இருந்தாலும்…….
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் நிம்மதியை!

என்னும் ஆன்றோர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

சங்கச் சான்றோர்தம் வாழ்க்கைக் குறிப்புகளாகத் திகழ்வன சங்க இலக்கியங்களாகும்.

இதோ ஓர் வாழ்க்கைக் குறிப்பு..

தலைவன் பொருளுக்காகப் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள். அவளிடம் தோழி “உனது நலன்கள் தலைவரை தடுத்து நிறுத்துவன அல்ல போலும். அதனால் ஆற்றியிருப்பதன்றி வேறு வழியில்லை என்று சொல்லித் தேற்றினாள்.

பாடல் இதோ…

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினையிடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐதுஏய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து
மலர் பிணைத்தன் மாஇதழ் மழைக்கண்
முயல் வேட்டெழுந்த முடுகு விசைக் கதநாய்
பல்நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே!

நற்றிணை -252 (பாலை)
அம்மெய் நாகனார்.

கூற்று - பொருள்வயிற்பிரியும் என்று கவன்ற தலைவிக்குத் தோழி சொல்லியது.

 உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தில் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலிக்கின்ற வேற்றுநாட்டின் வழியே “இவ்வாறு தலைவியைப் பிரிந்து பொருளுக்காகச் செல்வோம்” என்ற கொள்கை கொண்டார் தலைவர்.
 அவ்வாறு பெறும் அரிய பொருள் வீட்டில் சோம்பியிருப்பாருக்குக் கூடுவதில்லை என்று இதுவரை பிரியக் கருதாத நெஞ்சமும் (வலியா நெஞ்சமும் வலிப்ப) பிரிவதற்கு உடன்படும்

தலைவியின் அழகுநலன்கள்...

 சுவரிலே புனைந்து எழுதப்பட்ட படிமத்தைப் போன்ற அழகுடையவள் தலைவி.
 மெலிதாய் பொருந்தி அகன்ற அல்குலையும் (இடை) மை எழுதப்பட்டு நீலமலரைப் பிணைத்து வைத்தது போன்ற கரிய இமையுடன் விளங்கும் அழகிய கண்களையும் உடையவள்.
 முயலை வேட்டையாகக் கொள்ளும் விருப்பத்துடன் எழுந்து விரைந்த வேகத்தையுடைய சினமுடைய நாயினுடைய நல்ல நாவை ஒத்த சிறிய அடிகளையுடையவள்.
 பொலிவுடைய கூந்தலையுடையவள்.

 பொருளின் தேவையையுணர்ந்த தலைவனின் முடிவை உனது இத்தகைய அழகுநலன்கள் கூட மாற்ற முடியாது. அதனால் அவர் வரும் வரை ஆற்றியிருப்பதே நாம் செய்யத்தக்கவொன்றாகும் என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.

பாடலின் வழி...

“சிள்வீடு” என்றும் சிள்வண்டு மரத்தின் கிளையோடு மறைந்து ஒலிக்கும் அதுபோல தலைவன் மீது தலைவி கொண்ட ஏக்கமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத்தோன்றாது உள்ளத்தே நின்று வருத்தும் என்னும் இறைச்சி (உட்பொருள்) அழகாகப் புலப்படுத்தப்படுகிறது.
“அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்” என்னும் கருத்து சிறந்த பொன்மொழியாகவே கொள்ளத்தக்கதாகும். வீட்டில் இருப்போருக்குத் தானே பொருள் வந்து சேராது. தேடிச்செல்வோருக்கே மகிழ்ச்சி தேடிவரும் என்னும் அரிய கருத்தை விளக்குவதாக இப்பொன்மொழி விளங்குகிறது.
“வலியா நெஞ்சம் வலிப்ப” என்னும் அடிகள் இதுவரை எந்தவொரு சூழலிலும் தலைவியைப் பிரியக் கருதாத தலைவன் இப்போது பிரிவது பொருளின் தேவையை அவன் உணர்ந்ததையே எடுத்துரைப்பதாகவுள்ளது.
சங்ககால மக்கள் சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருந்தனர் என்பதை “புனை சுவர்ப்பாவை” என்னும் அடிகள் விளக்குவனவாகவுள்ளன.

புதன், 1 டிசம்பர், 2010

கலுழ்ந்தன கண்கள்…


தலைமக்களின் ஆழமான காதலைக் கண்டு அவர்களைச் சேர்த்துவைக்க எண்ணினாள் தோழி. அதனால் பெற்றோர் அறியாது அவர்கள் உடன்போக்கில் செல்ல ஏற்பாடு செய்தாள். தலைவியின் வளர்ப்புத்தாயும் தன்தாயுமான செவிலியிடம் சென்று தலைவியின் காதலையும் தெரிவித்தாள்(அறத்தொடு நிற்றல்).

பின்னர் ஆவலாகக் காத்திருந்த தலைவனிடம் சென்று...

“தலைவி உன்னோடு வரமாட்டாள்..
அவள் உன்னுடன் வரலாம் என்ற முடிவுடன்தான் தம் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். ஆனால் அப்போது அவளுக்குத் தம் தோழியரின் நினைவு வந்துவிட்டது. தம் சிலம்பைக் காணும் போது தம் தோழியர் தம் நினைவால் மிகவும் வருந்துவரே அவர்கள் பாவம் என்று மிகவும் கண் கலங்க அழுதனள் என்றாள்.

பாடல்....

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇ பல்மாண்
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண்தொறும் நோவர் மாதோ
அளியர் அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன்வரைந்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

கயமனார்

நற்றிணை-12

துறை – தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.


பாடலின் உட்பொருள் இதோ....

 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தை இட்டுவைத்துள்ளனர். அதனால் விளம்பழத்தின் மணம் எங்கும் கமழ்கிறது.
 அத்தயிர்ப்பானையைத் தயிர் ஆடித்தேய்த்ததால் மத்தின் தண்டு தேய்ந்திருக்கிறது.வெண்ணை தோன்றத் தேய்தலால் எங்கும் மத்தின் ஓசை முழங்குகிறது. இத்தகைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதில், தலைவனுடன் செல்ல எண்ணிய தலைவி, பருக்கக்கற்கள் போட்டு செய்யப்பட்ட தன் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். அப்போது தலைவியின் உள்ளத்தில்,

“என் தோழிகள் இவற்றைக் காணும் போதெல்லாம் வருந்துவார்களே!
அவர்கள் இரங்கத்தக்கவர்கள்” என்று எண்ணினாள் அப்போது
அவளுக்கு உன் நினைவும் வந்தது. என்ன செய்வது என்று அறியாது
அவளது கண்கள் அளவிடமுடியாத அளவுக்குக் கலங்கின என்று தோழி
தலைவனிடம் உடன்போக்கின் விளைவினையும், தலைவியின்
இயலாமையையும், மறைமுகமாக ....

தலைவா நீ ஊரறிய திருமணம் செய்வதே சிறந்தது! யாரும் அறியாது உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்வது உனக்கு சிறப்பாகது என்பதையும் அறிவுறுத்துகிறாள்.

பாடலின் வழியே....
 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தைப் பானையில் இட்டுவைக்கும் சங்ககால மக்களின் வழக்கத்தை அறியமுடிகிறது.
 பருக்கைகல் போட்டு சிலம்பணியும் சங்ககால பழக்கமும், திருமணத்திற்குப் பின்னர் சிலம்பு அணிவதில்லை என்ற அக்கால மரபும் புலப்படுத்தப்படுகிறது.
 தம் சிலம்பைக் காணும் போதெல்லாம் தோழியர் மனம் வாடுவார்களே என்று கலங்கும் தலைவியின் கண்கள் ஒருகண்ணில் நட்பையும், மறுகண்ணில் காதலையும் தாங்கி நிற்பது பாடலுக்குச் சுவைகூட்டுவதாகவுள்ளது.
 செவிலிக்குச் சொல்லியும் சேர்க்கமுடியாத காதலை உடன்போக்கிலாவது சேர்த்துவைக்கலாம் என்று எண்ணிய தோழியே பின் உடன்போக்கு வேண்டாம் என்று தலைவனை ஆற்றுப்படுத்துவது...
மறைமுகமாகத் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாகவும், உடன்போக்கைவிட பெற்றோர் சேர்த்துவைக்கும் திருமணமே சிறந்தது என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது.