இளம் துறவி தம் குருவிடம் ஓர் சந்தேகம் கேட்டார்...
குருவே நான் புகைவண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன். அப்போது என் எதிரே இருந்தவர் தவறுதலாக என்னை மிதித்துவிட்டார். கோபம் கொண்ட நான் அவரைத் திட்டிவிட்டேன். கோபத்தை அடக்க எண்ணியும் என்னால் இயலவில்லையே ஏன்? எப்போது என்னால் அமைதியான மனநிலைக்குச் செல்லமுடியும்? என்று வினவினார்.
குரு சொன்னார்....“ நீ வேறு !
உன் உடல் வேறு !” என்ற எண்ணம் எப்போது உனக்குத்தோன்றுகிறதோ அப்போதுதான் உன்னால் முதிந்த நிலையடைய முடியும்! என்றார்.
இன்று இரு பழம்பாடல்களைக் காணப்போகிறோம்....இப்பாடல்களில் வரும் இருவரும் “தான் வேறு தன் உடல்வேறு ” என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்! ஆனால் இவர்கள் துறவிகளல்ல..
பாடலுக்குச் செல்வோம்....சிற்றிலக்கியங்களில் குறிப்பித்தக்ககது முத்தொள்ளாயிரம். இதன் பாடல்கள் சங்கஇலக்கியப் பாடல்களுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகத் திகழ்வது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.
சுவைமிகு சிற்றிலக்கியப் பாடல் ஒன்று....சேரனின்மேல் தீராத காதல் கொண்ட பெண்ஒருத்தி சேரனைக் காணத்துடிக்கிறாள்.அதனால் இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.
ஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் ? என்றும் அவளுக்குப் புரியவில்லை !
'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே !', என்று மனம் கலங்கி நிற்கிறாள்.
ஆனால் தன் நெஞ்சமோ, சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் பரிதவித்து நிற்கிறது !', என்கிறாள் அவள் !
இப்பாடலில் தலைவி தன் உடல் வேறு நெஞ்சம் வேறு என்று எண்ணிக் கொள்வது காதலின் ஆழத்தையும், கவிதையின் சுவையையும் கூட்டுவதாகவுள்ளது.
பாடல் இதோ..கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை ஆக,
நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றஎன் நெஞ்சு. (பாடல்-17)ஒப்பு நோக்கத்தக்க சங்கப்பாடல்...தலைவனின் பிரிவை ஏற்க இயலாத தலைவி உடல் மெலிவுற்றாள். தன் நெஞ்சமோ அதன் நல்வினைப் பயனால் தலைவனின் பின்னே சென்றுவிட்டது. ஆனால் நானே தீவினைப் பயனால் இங்கு ஊராற் பழிச்சொல்லுக்கும் உடல்மெலிவிற்கும் உரியவளாய் வாடுகிறேன் என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இதனை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் தனக்கு சிரிப்பு வருகிறது என்று அவலம் (வருத்தம்) தோன்ற சொல்கிறாள்.
பாடல் இதோ...
உள்ளுதொறும் நகுவேன் தோழி – வள்ளுகிர்
பிடி பிளந்திட்ட நார்இல் வெண்கோட்டு
கொடிறுபோல் காய வால் இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
பல்இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டு ஒழிந்தது
ஆனாக் கௌவை மலந்த
யானே தோழி நோய்ப் பாலேனே
நற்றிணை -107
கூற்று – பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.
தலைவனின் பிரிவால் உடல்மெலிந்த தலைவி தோழியிடம்........
o பெரிய நகமுடைய பெண்யானை உண்பதற்காக ,பாலை மரத்தின் மேலுள்ள தோற்பட்டைகளை பறித்தது. அதனால் அம்மரம் நாரில்லாத வெண்மையான கிளைகளுடன் பற்றுக்குறடுபோல் காய்களையும் பூங்கொத்துகளையும் கொண்டதாகக் காட்சியளிக்கும்.
o ஓமை மரம், இயங்கும் காற்றினால் இலைகள் பல உதிர்ந்து கிளைகளில் காய்ந்த நெற்றுகள் மலையிலிருந்து வீழும் அருவிபோல ஒல்லென ஒலிக்கும்.
o இத்தகைய மரங்கள் உடையதாயும், புலியின் இயக்கம் உடையதாயும் விளங்குவது என் தலைவர் சென்ற வழியாகும். அப்பாலை நிலத்து வழியே அவரின் பின்னே என் நெஞ்சமும் அதன் நல்வினைப் பயனால் சென்றுவிட்டது.
o ஆனால் நானோ நான் செய்த தீவினைப் பயனால் இங்கு ஊராரின் பழிச்சொல்லுக்கும், உடல் மெலிவிற்கும் ஆட்பட்டுத் தவிக்கிறேன்.
o இவ்வாறு இருவினையாலும் (நல்வினை, தீவினை) ஏற்படும் பயனை நான் ஒருசேர அனுபவிக்கிறேன். என் நிலை கண்டு எனக்கே சிரிப்புத்தான் வருகிறது என்று புலம்புகிறாள்.
பாடலின் வழி பிரிந்து சென்ற தலைவனின் நினைவால் தாம் எப்போதும் இருப்பதனை, அவன் பின்னே தன்நெஞ்சம் சென்றது என்றும், இது என் நெஞ்சம் செய்த நல்வினைப்பயனால் கிடைத்த வாய்ப்பு என்றும் சொல்கிறது தலைவியின் மனம்.
தலைவனின் பின்னே தன் நெஞ்சம் சென்றது போல் தன் உடலால் செல்லமுடியவில்லை. அதனால் உடல் மெலிவுற்று, ஊராரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகித் தான் வாடுவது தான் செய்த தீவினைப் பயனே என்றும் கருதுகிறாள்.
உள்ளுறைப் பொருள்..o பெண்யானை மரத்தின் தோலை பறிப்பது போலத் தலைவியின் நலத்தைப் பெற்றான் தலைவன்.
o பாலை நிலத்தில் இலை தீர்ந்து நெற்று ஒலிப்பது போலத் தலைவியின் நெஞ்சம் கலக்கத்திற்குள்ளானது
o புலி வழங்கும் அத்தம் என்றது, அன்னை முதலான உறவினர்கள் தலைவியை அச்சுறுத்தினர் என்ற பொருள்நயம் தோற்றுவிப்பதாகவுள்ளது.
ஒப்பீடு...
உடல் வேறு மனம் வேறு என்று இருத்தல் ஒருவித ஞான நிலையாகும். காதலும் ஒருவகை தவம் தானே அதனால் இந்தப் பண்பு கூடிவந்தது போலும். முத்தொள்ளாயிரம் – நற்றிணை என்னும் இருபாடல்களிலும் தலைவியர்கள் தம் உடல்வேறு – நெஞ்சம் வேறு என்னும் எண்ணம் கொண்டிருத்தல் ஒப்பநோக்கத்தக்கதாகவுள்ளது.
முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு வருந்துகிறாள்
நற்றிணைத் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிறாள்.
முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சின் நிலைகண்டு வருந்தினாலும் காதலின் வலிமை கண்டு பெருமிதம் கொள்கிறாள்.
நற்றிணைத் தலைவி தன் நெஞ்சின் நிலை கண்டு பெருமிதம் கொண்டாலும் தன் உடலால் இயலவில்லையே என்று வருத்தம்கொள்கிறாள்.
நற்றிணைத்தலைவி இருவினையையும் நினைத்து நினைத்து சிரிப்பதாகத் தோழியிடம் சொன்னாலும். தலைவியின் சிரிப்பு மகிழ்ச்சி காரணமாக மட்டும் தோன்றிதல்ல.... அவலம் (வருத்தம்) காரணமாகவும் தோன்றியது என்று எண்ணும்போத கவிதையின் சுவை கூடுகிறது.