பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உங்கள் வலைப்பதிவின் மதிப்பை அறிய..



உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது


வெள்ளி, 29 அக்டோபர், 2010

மாயமல்ல…



சங்க இலக்கியங்கள் சங்ககால வரலாற்றுக் கருவூலங்களாகவே திகழ்கின்றன. சங்ககால மக்களின் நடைமுறை வாழ்வியலை எடுத்தியம்புவன சங்கப்பாடல்களே. அக, புற வாழ்வியலின் நாட்குறிப்புகளாக இப்பாடல்கள் விளங்குகின்றன.

தலைவன் தலைவியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணந்துகொண்டான். தலைவியைப் பார்த்துவரலாம் என்று தோழியும் அவன் வீட்டுக்குச் சென்றாள். தலைவியின் புதிய அழகினைக் கண்டு வியந்தாள் தோழி. பாடல் இதோ...


“தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி! வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரையகம் தொறும்
தொன்று உரை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானை கோடு கண்டன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே!


-புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிழான்

நற்றிணை -294 (குறிஞ்சி)

மண மனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.


(தலைவன் தலைவியைக் கொண்டு சென்று தன்னகத்து மணந்தமை அறிந்த தோழி, தலைவனின் வீட்டுக்குச் சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து தலைவனின் மார்பு முன்பு நோயும், பின்பு இன்பமும் தந்தது என்று கூறியது.)

(காதலிக்கும்போது (களவுக்காலத்தில்) தலைவியை நீங்கி தலைவிக்கு நோய் தந்த தலைவன் இப்போது சேர்ந்திருப்பதால் இன்பம் தந்தான் இதனையே இத்துறை இயம்புகிறது)


தோழி....
மூங்கில்கள் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ள பெரிய மலையின் உள்ளிடந்தோறும் பழமையான அறிவுடன் வலிமையுடன் மிகுந்த சினமும் கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற் போல செவ்விய புறப்பகுதியைக் கொண்ட செழுமையான அரும்பவிழ்ந்த காந்தள் மணம் கமழும். அத்தகைய மணம் வீசும் சாரல் விளங்கும் மலைநாடனின் அகன்று விரிந்த மார்பு “தீ, காற்று“ எனும் இரு முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆகாயம் போன்று நோயும், இன்பமும் தரத்தக்கனவாயிருந்தது. இது மாயமல்ல உண்மையே ஆகும் என்றாள்.


பாடல் வழி..


 வீட்டுக்குத் தெரியாமல் தாம் விரும்பும் பெண்ணைத் தலைவன் தம் ஊருக்கு அழைத்துச் சென்று தம் வீட்டில் மணந்துகொள்ளும் மரபு சங்காலத்தில் இருந்தமை இப்பாடலால் புலனாகிறது
 நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐந்து கூறுகளால் ஆனது நம் உடல் இறுதியில் இக்கூறுகளுடனேயே இரண்டறக் கலந்துபோகிறது. இதனை உணர்ந்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.
 தலைவனின் மார்பு தீ, காற்று ஆகிய கூறுகளைத் தம்மகத்தே கொண்ட வானின் பண்புகளைக் கொண்டது என்பதைப் புலவர் சுட்டுகிறார்.


 காந்தள் மலரின் தோற்றத்தைச் சொல்லவந்த புலவர், யானையின் தந்தத்தைப் போன்றது என்று நேரடியாகக் கூறாமல்...

பழமையான அறிவும், வலிமையும், மிகுந்த சினமும் கொண்டது யானை என்றும் அந்த யானை வலிமைமிக்க புலியையும் கொல்லும் தன்மையது என்றும் கூறி அத்தகைய யானையின் தந்தத்தைப் போன்றது காந்தள் என்ற புலவரின் கற்பனைத் திறன் அவரின் அழகுணர்ச்சியைக் காட்டுவதாகவுள்ளது.

யானை புலியைக் கொன்றால் அதன் தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருக்கும்.இரத்தம் தோய்ந்த யானையின் தந்தம் எப்படியிருக்கும்....?
காந்தள் மலரைப் போல இருக்கும்...!

புலவரின் ஒப்புநோக்கும் திறன்
சங்ககால மக்களுக்கு இருந்த விலங்கியல்
மற்றும் தாவரவியல் அறிவுக்கும்
கற்பனை நயத்துக்கும் சங்ககால பழக்கவழக்கங்களுக்கும் தக்கதொரு சான்றாக இப்பாடல் அமைகிறது.

வியாழன், 28 அக்டோபர், 2010

காதல்னா சும்மாவா..?


எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல்!
காதலர் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை.

களவும் கற்று மற ! என்பதையே பலர் பிழைபடத்தான் புரிந்துகொண்டுள்ளனர்.
களவும் கற்று மற ! என்பதற்குத் திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றே பொருள் கொண்டுவருகின்றனர்.

களவு என்றால் காதல்.
காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதையே..

களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.

இன்றைய காதலர்கள்.........

“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை
ஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“
என்று புலம்புகின்றனர்“.

இன்றைய சூழலில் காதலின் பொருளும், அதன் புரிதலும் பிற பண்பாட்டுத் தாக்கங்களால் சற்றுத் திரிபடைந்துள்ளது.
அற்றைக் காலத்தில் காதலில் எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை எடுத்தியம்பும் அழகான பாடல் இதோ…

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 10
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா 20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.

அகநானூறு 122. குறிஞ்சி - பரணர்

(தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொன்னது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (தலைவன் அருகில் மறைந்திருக்க அவன் வந்தமை அறியாதது போல தோழிக்குத் தலைவி சொல்வதாக இத்துறை அமைந்துள்ளது)


மிகுதியான கள்ளைப் பருகிக் களித்தாடும் மக்களையுடைமையால், ஆரவாரத்தினையுடைய பழைமையான இந்த ஊரானது, விழாக்கள் நடைபெறவில்லையாயினும் உறக்கம் கொள்ளாது.

ஊரிலுள்ள வளமிக்க கடைத்தெருவும் பிற தெருக்களும் ஒரு சேர உறங்கி ஒலி அடங்கினாலும் ,

உரத்த குரலுடன் பேசும் கொடிய சொற்களைக் கொண்ட நம் அன்னை உறங்கமாட்டாள்.

நம்மைப் புறம் போகவிடாது காவல் செய்யும் அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினாலும் உறங்காத காவலைக் கொண்ட ஊர்க்காவலர் விரைந்து சுற்றி வருவர்.

ஒளி பொருந்திய வேலையுடைய அக்காவலர்கள் உறங்கினாலும் கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையுடைய நாய் குரைக்கும் .

நிலவோ வான்முழுவதும் தோன்றிப் பகல் போல ஒளி செய்யும். அந்நிலவு மறைந்து எங்கும் இருள் பரவிய பொழுதும், இல்லத்து எலியை உணவாகக் கொள்ளும் வலிய வாயினையுடைய கூகைச் சேவல் (ஆந்தை) பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும். பொந்தில் வாழும் அந்தக் கூகைச் சேவல் குழறாது உறங்கினாலும் மனையில் வாழும் கோழிச் சேவல் தனது மாட்சிமைப்பட்ட குரலையெழுப்பிக் கூவும்.



ஒருநாள் இவையெல்லாம் உறங்கினபொழுது எப்போதும் என்னையே எண்ணிக்கொண்டிருக்கும் எம் தலைவன் என்னைக் காணாது ஒழிவர்.

என்று ஒரு தலைவி காதலின் இடையூறுகளைக் காட்சிப்படுத்துகிறாள்.


ஒப்புநோக்க...

இன்றைய சூழலில் காதலர்கள் ஒருவரை சந்திப்பதில் சில மரபு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சங்ககாலக் காதலர்கள் ஊராரின் அலருக்கு (பழி தூற்றுதலுக்கு) அஞ்சினர். இன்றைய காதலர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
அன்றைய காவலர்களைக் கண்டு காதலர்கள் அஞ்சினர். இன்றை காதலர்களோ காவல் நிலையங்களிலே தஞ்சமடைந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

புதன், 27 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து.....


பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு.
பந்தி என்றதும் நமக்குச் சாப்பாட்டுப் பந்தி தான் முதலில் நினைவுக்கு வரும்..


சாப்பாட்டுப்பந்தியில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்கள் தான் காட்சிகளாக வந்துவந்து செல்லும்.

சாப்பிடுபவரையே எப்போதுடா எழுந்திருப்பார் என்று குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருத்தல்..

அவரின் அருகிலேயே சென்று நிற்றல்.

என இடம்பிடிப்போரின் தொல்லை தாங்காமல் சரியாகச் சாப்பிடாமல் எழுந்து செல்வோர் பலருண்டு. சிலர் தன்னைப் யார்பார்த்தாலும் கவலையேபடாமல் மிகவும் பொறுமையாக இருந்து சாப்பிட்டுக் காத்திருப்பவரை வெறுப்பேற்றுவர். இப்படி பல நகைச்சுவைக் காட்சிகள் சாப்பாட்டுப்பந்தியில் நடைபெறும்.

சரி…
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று இதைத் தான் நம்முன்னோர் சொல்லிச்சென்றார்களா? என்றால் இல்லை.

பந்தி என்றால் வரிசை. இங்கு போரில் உள்ள வரிசையையே இந்த பந்தி என்ற சொல் சுட்டுகிறது.

“போர் என்று அழைத்தால் முதல் ஆளாகச் செல்.
படை என்று வந்தால் போர் முடிந்து எதிரிகளை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாகத் திரும்பி வா“


என்பதே சரியான பொருள். இதற்குச் சான்று பகரும் புறப்பாடல் ஒன்று..

எமக்கு கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணுமன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே“

திணை – கரந்தை
துறை – நெடுமொழி
பாடியவர் – ஆலியார்


கலங்கிய கள் மிகவும் களிப்பளிப்பது (மயக்கமளிப்பது) அதனால் அதனை எமக்குத் தந்துவிட்டு, தெளிந்த தேறலை (கள்ளை) தான் உண்பான்.

பகைவரின் அடைவதற்கு அரிய மதிலைச் சூழ்ந்து உதட்டினைக் கவ்வி முழக்கிக் கொண்டு நீ முந்திச் செல்க என்று ஏவாது தான் முந்திச் சென்றான். அதனால் வேந்தன் இப்போது மிகவும் இன்னாதவன் ஆயினன்.

தன்னை ஏவாது தான் முந்திச் சென்று எமக்கு முன்மாதிரியா க இருந்தாலும் தமக்கு இந்த வாய்ப்பை அளிக்கவில்லையே என்று வருந்துகிறான் இந்த வீரன்.

கரந்தை – பகைவர் கைப்பற்றிய பசுக்கூட்டங்களை மீட்டல் கரந்தையாகும்.
நெடுமொழி – சிறப்புமிக்க அரசனுக்கு வீரன் ஒருவன் தன்னுடைய மேம்பாட்டை உயர்த்திச் சொல்லுவதாகும்


பாடலின் வழி..


கரந்தை என்னும் புறத்திணையும், நெடுமொழி என்னும் புறத்துறையும் விளக்கம் பெறுகிறது.

பந்திக்கு முந்து என்றால் போரில் வரிசைக்கு முந்து என்னும் பொருள் விளக்கம் பெறுகிறது

தலைமைக்கான அடிப்படை இலக்கணம் வேலை ஏவுவது அல்ல முன்னின்று தான் செயலாற்றுவது என் தத்துவம் விளக்கம் பெறுகிறது

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...

ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

அதற்குப் புலி சொன்னது...

3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

“எவ்வளவு பெரிய பூனை“ என்று …

அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

--------------------------------------------------------------------------------
உலகில் மனிதர்களை மூவகைப்படுத்தலாம்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள். ( அரேபியப் பழமொழி)

--------------------------------------------------------------------------------

சராசரி மனிதன் புத்தகத்தோடு இருப்பான்!
சாதனை மனதன் புத்தகத்தில் இருப்பான்!

-------------------------------------------------------------------------------
மனம் திறந்து பேசுங்கள்!
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்!
சிலர் பிரிந்து செல்வார்கள்!

-----------------------------------------------------------------------------
மகிழ்ச்சி இருக்குமிடத்தில் நீங்கள் வாழ விரும்புவதைவிட
நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிமையுடையதாக இருக்கும்!
----------------------------------------------------------------------------

ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
தான் தவறு செய்யும் போதும்,
செய்த தவறை மறைக்கும் போதும்!
---------------------------------------------------------------------------

புதன், 13 அக்டோபர், 2010

திருமண அழைப்பிதழ்..

நட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.

குறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பெருநகை கேளாய்…



என்னை நீங்கிப்போய்வருகிறேன் என்று சொல்வதானால் அதனை என்னிடம் சொல்லவேண்டாம். உயிரோடு இருப்பவர்கள் யாரோ அவர்களிடம் சென்று சொல்லுங்கள். போகவில்லை என்பதை மட்டுமே என்னிடம் சொல்லுங்கள். என்பாள் குறள் சுட்டும் தலைவி.

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.. (குறள் - 1151)

ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் வாழ முடியாது இறந்துபடுவாள் என்பது பொருள்.

சங்ககாலத் தலைவியின் நிலை………….


தோழி……..
உன் காதலர் உன்னை ஒருநாள் பிரிந்து தங்கினாலும் நீ உயிர் வாழ்வது அரிது. இந்நிலையில் பெரு நகைப்பிற்குரிய செயல் ஒன்றை நீ கேள்.

நம்மைவிட்டு நீங்கித் தலைவர் தனியே பொருள் தேடச் செல்லலாம் என்ற எண்ணம் கொண்டார் என நம் அருகிலிருக்கும் ஏவலர் கூறுகின்றார்.

பாம்பின் தலை நடுங்குமாறு பெய்யும் மழையில் இடியின் பேரொலியைத் தனியே கேட்டுக்கொண்டு அவர் வினை முடித்து மீளுமளவும் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனவும் உரைப்பா்.

இது பெருஞ்சிரிப்பை வரவழைப்பதாக அல்லவா இருக்கிறது…………….?


பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
5 தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.
ஔவையார்

நற்றிணை. 129 (குறிஞ்சி)
(பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது)

தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான் என்பதை உணர்ந்த தோழி அதனைத் தோழிக்கு அறித்துதல்.


பாடல் வழி.

² பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது என்னும் அகத்துறை விளக்கம் பெற்றது.
² தலைவனைத் தலைவி மிககககககககககககவும் நேசிக்க்க்க்கிறாள் என்பது தோழியின் கூற்றுவழியகாப் புலனாகிறது.
² தலைவியைத் தனியே விட்டுவிட்டுத் தலைவன் மட்டும் செல்கிறான் என்பது தோழிக்குப் பெருநகையேற்படுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் எவ்வாறு வாழ முடியும்? இந்த சின்ன உணர்வைக் கூட அறிந்துகொள்ளாத அறியாமையுடையவானக இருக்கிறானே தலைவன் என்பதால் தோழிக்கு பெருநகை (பெருஞ்சிரிப்பு) ஏற்பட்டது.

புதன், 6 அக்டோபர், 2010

மீன் சென்ற வழி....


பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது!
பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருள்!

எனவுரைப்பர் வள்ளுவர்.
எல்லோரும் தேடுவது பொருளே!
எல்லோருக்கும் கிடைக்கின்றதா பொருள்?

கிடைத்தாலும் நிலைக்கின்றதா?

நிலைத்தாலும் எடுத்துச் செல்லமுடியுமா?

“காதில்லாத ஊசியைக்கூட நாம் இறந்தபின் நம்முடன் எடுத்துச்செல்லமுடியாது“

என்றெல்லாம் சிந்தித்தால்…

நிலையாமையை நன்கு உணர்வோம். மனிதம் மலரும்!

அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியின்றி பல்லாயிரம் பேர் தவிக்க உனக்கென்ன ஏழுதலைமுறைக்குச் சொத்து வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை நம் மனம் நம்மிடம் கேட்கும்.

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஓர் அழகான அகச்சூழலில் ஆழமான வாழ்வியல் அறம் இயல்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.



தலைவியை விட்டு நீங்கி பொருள் ஈட்ட வேண்டுமென எண்ணியது தலைவனின் நெஞ்சம். அந்நிலையில் தலைவன் தன் நெஞ்சினை நோக்கி…


பொய்கையில் மீன்சென்ற வழியைப் போல இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகக் கூடியது செல்வம்!

நானோ கடல் சூழ்ந்த அகன்ற இந்நிலத்தையே மரக்காலாகக் (அளவீடுகருவி) கொண்டு ஏழு மரக்கால் அளவு பெரிய நிதியைப் பெருவதாக இருந்தாலும். அந்நிதியை விரும்பேன்.ஏனெனில்,

நான் இவளது கண்களால் கட்டுண்டேன்!
இது இன்பம் தந்தது.
இவ்வின்பத்தினும் பொருள் சிறந்தது இல்லை!

எனவே பொருள் தேட உன்னோடு நான் வரமாட்டேன் என்றான்.

பாடல் இதோ…….


16. பாலை
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே,
5 வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ;
யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
10 அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!

சிறைக்குடி ஆந்தையார்
(பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது)

பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று எண்ணிய நெஞ்சிடம் தலைவன் பேசி தன் பயணத்தைத் தவிர்த்தான்.

பாடல் வழி..


² செலவழுங்குதல் (தலைவன் பயணத்தைத் தவிர்த்தல்) என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
² பொருள் நிலையற்றது என்னும் வாழ்வியல் உண்மை உணர்த்தப்படுகிறது.

² பொருள் மீன்செல்லும் வழிபோல….
என்னும் உவமை எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.

² நிலத்தையே மரக்காலாகக் கொண்டு ஏழுமரக்கால் செல்வம் தந்தாலும் அதனை நான் விரும்பமாட்டேன் என்ற தலைவனின் கூற்று நயமுடையதாகவுள்ளது.


v பொருளின்றி யாரும் வாழமுடியாது!
v பொருளோடு யாரும் போகமுடியாது!

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிற்றில் நற்றூண் பற்றி…



உங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….

நீங்க வீட்டிலே இல்லை..

உங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க…

உங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…?

விளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம்….

இந்த பதிலில் உங்க அம்மாவுக்கு பெருமிதம் (கர்வம் கலந்த மகிழ்ச்சி) தோன்றுமா?

சங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.

ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.

தன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ...



சிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)

“உன் மகன் எங்கு உள்ளானோ..?“

தாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.

அவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.

பாடல் இதோ..

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

காவற் பெண்டு.

திணை - வாகை
துறை - ஏறாண் முல்லை.

(வீரம் செறிந்த குடியில் பிறந்த ஆண்மகனின் இயல்பைப் புகழ்தல் ஏறாண்முல்லையாகும்.)

பாடல் வழி ….

○ ஏறாண் முல்லை என்னும் புறத்துறைக்கான விளக்கத்தைப் பெறமுடிகிறது.
○ சங்ககால மகளிரின் வீரம் புலப்படுத்தப்படுகிறது.
○ காதலும் வீரமும் சங்ககால் மக்களின் இருகண்கள் என்ற கருத்துக்கு வீரத்துக்குச் சான்று பகர்வதாக இப்பாடல் அமைகிறது.
○ யாண்டு? என்னும் அக்கால வினா முறை சங்ககால பேச்சுமுறைக்குச் சான்றாகவுள்ளது.

யாண்டு என்பதே இன்று எங்கு என்று வழங்கப்படுகிறது.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தமிழனா... தமிங்கிலனா?



தமிழன்…..
“சிட்டி“யில் “காலனி“யில் “அப்பார்ட்மென்“டில் “பிளாக்“கில் “ப்ளோரி“ல் “டோர்நம்பரி“ல் குடியிருக்கிறான்.

தமிழன்……
“மம்மி“யும் “டாடி“யும் “அங்கிளு“ம் “ஆன்டி“யும் “பேபி“யும் ரிளேடிவ்“சும் “ப்ரென்ட்சு“மாய் வாழ்கிறான்.

தமிழன்……
“டூத்பேஸ்ட்“டால்“பிரஷ்“ஆல் பல் தீட்டுகிறான்.“ஹேர்ஆயிலை“ “கிரீமை“ தலைக்கு வைக்கிறான்.“பவுடரை“ பேஸ்“கிரீமை முகத்தில் இடுகிறான்.
“ப்ளேடால்“ சேவிங்“ ரேசரால் முகமயிர் மழிக்கிறான். “சர்ட்டை“பேன்டை“ உடலில் அணிகிறான். “சாக்ஸை“சூசை“ காலுக்குப் போடுக்கறான்.

தமிழன்……
“ஸ்டோரீஸ்“ நாவல்ஸ்“ படித்து - “ஸோங்ஸ்“ கேட்டு “டான்ஸ்“ட்ராமா“ பார்த்து - “சினிமா“டிவி“ சுவைத்து மகிழ்கிறான்.

தமிழன்…….
கடையில் “பில்“ கட்டுகிறான். மருத்துவமனையில்“டோக்கன்“ கேட்கிறான்.பேருந்தில் “டிக்கெட்“ கேட்கிறான்.
பால் விற்பனை நிலையத்தில் “கார்டு“ கேட்கிறான்.

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருடவருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் “Beware Of Dogs" என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருக்கிறான்.

தமிழனா தமிங்கிலனா… காசியானந்தன். பக்-44-45.

இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் நானறிந்தவரை...


சிட்டி - நகரம்
காலனி - கூட்டுக் குடியிருப்பு
அப்பார்ட்மென்ட் -அடுக்ககம்
பிளாக் - கட்டிடத்தொகுதி
ப்ளோர் - தளம்
டோர் - கதவு
நம்பர் - எண்
மம்மி - அம்மா
டாடி - அப்பா
அங்கிள் - மாமா
ஆன்டி - அத்தை
பேபி - குழந்தை
ரிளேடிவ் - உறவினர்
ப்ரெண்ட்ஸ் - நண்பர்கள்
டூத்பேஸ்ட் - பற்பசை
பிரஷ் - பல்துலக்கி
ஹேராயில் - தலைக்குத் தேய்க்கும் எண்ணை
கிரீம் - பசை,களிம்பு
பவுடர் - தூள், பொடி
பேஸ் கிரீம் - முகப் பசை
ப்ளேடு - மழிதகடு
சேவிங் - மழிப்பு
ரேசர் - மழிப்புக் கருவி
சர்ட் - சட்டை
பேன்ட் - கால்சட்டை
சாக்ஸ் - காலுறை,மூடணி
சூ - காலணி
ஸ்டோரி- கதை
நாவல் - புதினம்
ஸோங் - பாடல்
டான்ஸ் - ஆடல்
ட்ராமா - நாடகம்
சினிமா - பெரிய திரை
டிவி - தொலைக்காட்சி
பில் - விலைப்பட்டியல்
டோக்கன் - அடையாள அட்டை
டிக்கெட் - பயணச்சீட்டு
கார்டு - அட்டை