வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தீயில் விழுந்த தளிர்.



காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

தமிழர் மரபில் சில பண்பாடுகள் உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.

அகம், புறம் என வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நாகரீகம் தமிழ்நாகரிகமே ஆகும்.

அகத்தில்,

தலைமக்களின் காதலை களவு, கற்பு என இரண்டாகப் பகுத்தனர்.

இயற்கைப் புணர்ச்சி ( தலைமக்கள் ஒருவரையொருவர் இயல்பாகப் பார்ப்பது)
இடந்தலைப்பாடு ( தலைவியை முன்பார்த்த இடத்தில் மீண்டும் பார்த்தல்)
பாங்கர் கூட்டம் ( தோழனின் துணையால் தலைவியைத் தலைவன் பார்த்தல்)
பாங்கியர் கூட்டம் ( தோழியின் துணையால் தலைமக்கள் சந்தித்தல்)
அம்பல் (தலைமக்களின் காதலை ஊரார் தமக்குள்ளே பேசுதல்)
அலர் (தலைமக்களின் காதலை ஊரார் பலரறிய பேசுதல்)
இற்செறித்தல் (களவினை அறிந்த பெற்றோர் தலைவியைக் காத்தல்)
வரைவு கடாவுதல் (தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்)
அறத்தொடு நிற்றல் (காதலை தலைவி தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் புரியவைத்தல்)
உடன் போக்கு (பெற்றோரறியாது தலைமக்கள் அவர்களை நீங்கிச் செல்லுதல்)


இவ்வாறு இன்றும் நிகழும் இது போன்ற காதல் நிகழ்வுகளுக்கு அற்றைக் காலத்தில் அகத்துறைகளில் இதுபோல அழகான பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு முறை முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆய்வி்ன் தலைப்பு “ இற்செறித்தலும் உடன்போக்கும் “ என்பதாகும். வினாநேரத்தில் நான் ஒரு வினாவை….

இற்செறித்தல் என்றவொன்றிருக்கும்போது உடன்போக்கு தேவையா? என்று கேட்டேன்…

ஆய்வு மாணவரால் பதிலளிக்கமுடியாத சூழலில் எனது நெறியாளர் சொன்னார்….


“இற்செறித்தல்“ பெற்றோரின் கடமை உடன்போக்கு காதலரின் “திறமை“ என்று..


சரி சங்ககாலச் சூழல் ஒன்றைப் பார்ப்போம்.

தோழி தலைவியிடம்….

நீ குன்றுகளையுடைய நாட்டின் தலைவனோடு, உடன்போக்கில் செல்ல உடன்பட்டமையால், யான் அவனிடம் கூறி அவனை அழைத்துக் கொண்டுவந்தேன். அவன் உன்னுடன் செல்லத் தயாராகக் குறியிடத்து வந்து நின்றான்.

நின் கைகளும், கால்களும் தளர்ந்து மெலிய தீயுற்ற தளிரைப்போல நாணத்தால் உள்நடுங்கி “இன்றைய பொழுது கழிவாதாகுக“ என்று கூறுகிறாய்….!

இந்நிலையில் நான் என்ன செய்வது………..?

என்று கேட்கிறாள்.

தலைவியின் உயிர் அவளை உடன்போக்குக்குச் (தலைவனுடன்) செல்ல
தூண்டியது!

அவளுடைய நாணம் (ஒழுக்கம் காரணமாக வரும் வெட்கம்) தீ உறு தளிர் போல நடுங்கி அதனைத் தவிர்க்க முற்பட்டது.


தோழியோ தலைவியிடம் நாணத்தைவிட கற்பு மேலானது என்பதை அறிவுறுத்தி அதற்குத் தயங்கும் தலைவியிடம் தன்னால் வேறு என்ன செய்ய இயலும் என்று வினவுவதாக இப்பாடல் அமைகிறது. பாடல் இதோ..

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
‘இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.


குறுந்தொகை 383. பாலை

படுமரத்து மோசி கீரன்

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி நாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது.

இப்பாடலின் வழி..

² அகத்துறையொன்று விளக்கம் பெறுகிறது.

² உடன்போக்குச் செல்ல எண்ணிய தலைவி பின் தீயில்பட்ட தளிர்போல நடுங்குவது தமிழ்பண்பாட்டின் அடையாளமாக உணரமுடிகிறது. மரபை மீறிச்செல்கிறோமே என்ற அச்சம் காரணமாகவே தலைவியின் உடல் நடுக்கம் அமைகிறது.



7 கருத்துகள்:

  1. தமிழிலக்கிய சிறப்பினை விளக்கும் வகையில் சுவாரஸ்யமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. //காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

    தமிழர் மரபில் சில பண்பாடுகள் உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.//

    இன்றைய தலைமுறையினரும் அதை உணரச் செய்வது நம் கடமையாகிறது.

    பதிலளிநீக்கு
  3. எப்பொழுதுமே உங்க பதிவு டாப் தான் நண்பா

    பதிலளிநீக்கு
  4. “இற்செறித்தல்“ பெற்றோரின் கடமை உடன்போக்கு காதலரின் “திறமை“ ...இந்த வரி ரசனைக்குரியது.
    தொடரட்டும்தமிழ்ப்பணி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் தமிழ் புலமை அபாரம். மெச்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு