வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

தெரியவேண்டிய தமிழர்பண்பாடு.


திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளியிலிருந்து 10 பேர் கொண்ட மாணவியர் குழு ஜப்பான் சென்று வந்தது. அவர்களின் கல்விமுறை, பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். திரும்பிய மாணவிகளின் ஒருவர் பேட்டி ஒன்றில் சொல்கிறார்….

ஜப்பானியர்களின் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அவர்களின் பண்பாடுகளில் அவர்கள் கொண்ட ஆர்வம், கல்வி முறை ஆகியன வியப்படையச் செய்வதாக இருந்தது என்று!

தம் தாய் மொழியையே விரும்பிப் பேசும் அவர்கள் ஆங்கிலம் பேசுவதை அவ்வளவு விரும்பவில்லை. தகவல் தொடர்பின் தேவைகருதியே ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் பண்பாடுகளை எங்களிடம் சொல்லுவதில் அவர்களுக்கிருந்த ஆர்வம். நம் பண்பாடுகள் மீது நாம் இன்னும் பற்றுவைக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக இருந்தது. மேலும் அவர்களின் கல்விமுறை…..

காலை முழுதும் தியரி வகுப்பும் மாலை முழுக்க செயல்முறை வகுப்புகளுமே இருந்தது.

என்று குறிப்பிடுகிறார்..


நாம் நம் பண்பாட்டை, மொழியை எந்த அளவுக்குத்,
தெரிந்து வைத்திருக்கிறோம்?
நேசிக்கிறோம்?
அடுத்தவருக்குச் சொல்வதில் பெருமைகொள்கிறோம்?

என்னும் பல கேள்விகளைத் தொடுப்பதாக இம்மாணவியின் கூற்று அமைகிறது..


சரி தமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றை இன்று காண்போம்….

“விருந்தோம்பால்“ நம் தொன்மையான பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.

அன்றைய காலத்தில் விருந்தோம்பல் வாழ்வியல் கடமைகளுள் ஒன்றாகப் போற்றப்பட்டது. அதன் எச்சமாகவே வீடுகளுக்கு வெளியே திண்ணைகள் இருந்தன…

ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகளையே பார்ப்பது அரிதாகவுள்ளது!

அகப்பாடல் ஒன்று…..


முன்பு ஒரு காலத்தில் பொருள் தேடி மீண்ட தலைவன் மீண்டும் பொருள்தேடவேண்டும் என்று எண்ணினான். அப்போது அவன் தென் நெஞ்சிற்குச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.


நெஞ்சே வாழிய! பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டு இனி நாம் தலைவியைப் பிரிந்து போதலும் கூடுமோ?
அவ்வாறு பிரிவதாயினும் நான் கூறுவதனைக் கேட்பாயாக!!

நாள்தோறும் நாம் உறக்கத்தில் கனவு காணும்போது அக்கனவில் தோன்றும் பொருள்கள் யாவும் கனவு கலைந்தவுடன் மறைந்துபோகும் தன்மையன. அதேபோல, நனவிலும் இளமையது செலவும், முதுமையது வரவும் கிடைத்தற்கரிய சிறப்பினையுடைய காமவின்பத்தின் தன்மையும் ஆய இவையும் தோன்றி விரைந்து மறையும் பொய்களேயாம்.

இவ்வுண்மைகளை நீ அறியாய் போலும்!!

வெம்மையான கோடைக்காற்றானது செந்நிற மூங்கிலின் அசையும் தண்டினைத் தாக்கி, ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்தது. அவ்விடத்தே, களர் நிலத்துப்பிறந்த புழுதியை வாரி எடுத்துச் சுழன்று அடித்தது.

அத்தகைய வேனில் நிலைபெற்ற வெஞ்சுரத்துக் காட்டினிலே, தளர்ந்த நடையினையுடைய இளைய பெண் மானுடன் கூடியிருந்த புள்ளிகளையும், அறல்பட்ட கொம்பினையும் உடைய ஆண்மான், நீர் பருகும் வேட்கையுடன் தழை உண்பதை கைவிட்டு, அருகிலிருக்கும் நீரற்ற குளம் நோக்கிச் சென்று உண்ணுநீர் பெறாது மெலிந்து தளர, நிழல் அற்ற மரங்கள் கொண்ட பாலை நிலத்து நெடுவழியை நாம் கடந்து செல்ல வேண்டும்.

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?


கனவிலே பொருள்கள் தோன்றிக் கழிவது போல நனவிலும் நாட்கள் பிறந்து விரைந்து கழியும் தன்மையன என்றான். விருந்தோம்பியும் வறியார்க்கு அவர் வேண்டியதொன்றை வழங்கியும் இல்லறம் நடத்தும் நம் தலைிவியின் பண்புகளும் பள்ளியறைப் படுக்கயைில் நம்முடன் பேசும் குழலும் யாழும் அமிழ்தும் குழைதத்த மழலைக் கிளவியின் இனிமையும் பேரின்பம் தருவனவாதலின்,
ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்குகளும் துன்பம் தரும் கொடிய காட்டிடையே செல்கின்ற பொழுது அவ்வின்பத்தை நினைத்து நீ மீண்டு வரஎண்ணுவாய்.

நெஞ்சே தேடும பொருளைத் தேடி முடித்தோம். எனவே மீண்டு வருதல் அரிய இளமையும் இருதலையும் ஒத்த காமத்தையும் சேரப் பெற்ற யாம் எம் நெஞ்சு கலந்தொழுகும் அன்புடையாளைக் கைவிட்டுப் பொருளிடத்தே வேட்கை கொண்டு இனிப் செல்லம் எண்ணம் இல்லை எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான் என்க.

பாடல் இதோ..



ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5 அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10 கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15 மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20 வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்

அகநானூறு -353 (பாலை)




* “இல்லறக் கடமைகளில் தலைவனுக்கு உரிய பங்கு தலைவிக்கும் உண்டு. அவைனவிட மிகுதியான பொறுப்பும் உண்டு விருந்தோம்வுவது தலைவியின் கடமை என்றே கூறத்தக்கது. என்று தம் “ஓவச்செய்தி“ என்ற நூலில் மு. வரதராசனார் குறிப்பிடுவர்.

¯ இவ்வகப்பாடலில் விருந்தோம்பலின் சிறப்பு….


“விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்“ என்னும் அடிகள் வழியாக...

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?

என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.

14 கருத்துகள்:

  1. தங்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைக்காததால் மனங்கலக்கமுறும் அதேநேரம் வலைப்பதிவில் அவ்வரிய வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்வுறவும் செய்கிறது. பாடலின் கருத்து மனத்தினை விட்டகலாவண்ணம் மிக அழகாக எடுத்தியம்பியுள்ளீர். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //அன்றைய காலத்தில் விருந்தோம்பல் வாழ்வியல் கடமைகளுள் ஒன்றாகப் போற்றப்பட்டது. அதன் எச்சமாகவே வீடுகளுக்கு வெளியே திண்ணைகள் இருந்தன…

    ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகளையே பார்ப்பது அரிதாகவுள்ளது!//

    ஆம் நண்பா உண்மை தான் எங்கள் ஊரில் முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் வீடுகளிலும் பத்து பேர் உட்க்காரும் அளவிற்கு திண்ணைகள் வீதத்தின் இரு புறமும் இருக்கும். ஆனால் இப்பது அந்த திண்ணை இருந்த இடத்தில் கூட வீடு கட்டி வாடகைக்கு விட்டு விட்டனர். என்ன தான் செய்யபோகிரார்களோ தேவைக்கு அதிகமான இந்த காசை வைத்து கொண்டு

    பதிலளிநீக்கு
  3. கிணற்றினுள்ளே=கிணறு+உள்ளே அல்லது கிணற்றின்+உள்ளே

    பதிலளிநீக்கு
  4. ஊரில் பயணிகள் தங்க சத்திரம் கட்டினான்.வீடுகளில் திண்ணை கட்டினான்.வழியில் களைப்பாற வழியெங்கும் மரங்களை நட்டுவைத்தான். இன்று அனைத்தையும் காசாக்கி பெட்டியில் வைத்துவிட்டு நிம்மதி தேடி அலைகின்றான்.காலம் கெட்டுபேச்சு...
    அருமையான பதிவு நண்பரே..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  5. @உமா மிக்க மகிழ்சி உமா..
    தங்கள் கருத்துரை என்னை மேலும் கடமையுணர்வுடன் எழுதத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  6. @வேலன். உண்மைதான் நண்பா..
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு