வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நினைத்து நினைத்து சிரித்தேன்….





² நாட்டுப்புற வழக்கில்………..

வீட்ல மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பார்கள்.

மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி போல மனைவியின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்றும்,

சிதம்பரம் என்றால் நடராசரின் ஆட்சிபோல கணவனின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்று புரிந்துகொள்வார்கள்.


² வீட்டுல எலி வெளியில புலி என்று மனைவிக்குப் பயந்த கணவனைக் குறிப்பார்கள்.


² அவ என்னை அடிக்க!
என்னை அவ அடிக்க! என்று என்னமோ தானே தன் மனைவியை அடித்தது போல பெருமையாக சில குடும்பத்தலைவர்கள் பேசிக்கொள்வார்கள்.



“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருசன்!

என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது.

“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி“ என்ற காலமெல்லாம் கடந்துபோய்விட்டது.

இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர்.

ஆனால் இன்றும்….
கணவனுக்குப் பயப்படும் மனைவியையும்!
மனைவிக்குப் பயப்படும் கணவனையும்!
பார்க்க முடிகிறது.

கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனைப் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது!


மனைவிக்குக் கணவன் ஏன் பயப்படவேண்டும்?
கணவனுக்கு மனைவி ஏன் பயப்படவேண்டும்?

மனைவி என்றவுடன் பல கணவர்களுக்கு பூரிக்கட்டை நினைவுக்கு வந்து அச்சமளிப்பது உண்மைதான்.

கணவனுக்குப் பயப்படும் மனைவியை இயல்பாக எடுத்துக்கொள்ளும் இந்த உலகம்…

மனைவிக்குப் பயப்படும் கணவனை வினோதமான விலங்கைப் பார்ப்பதுபோல இழிவாகப் பார்க்கும் போக்கை சமூகத்தில் பார்க்கமுடிகிறது. இந்த நிலை இன்று நேற்றுத் தோன்றியதல்ல. சங்ககாலத்திலிருந்தே இதே நிலைதான்..


“பரத்தையிடம் (விலைமகள்) சென்று அவள் கையைப் பிடித்து இழுத்த தலைவனின் செயலைத் தலைவியிடம் சொல்லுவேன் என்கிறாள் பரத்தை. அதுகேட்டு பெருநடுக்கமடைகிறான் தலைவன். “



சங்க காலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலைவுடைமைச் சமூகத்துக்கு உயர்ந்த காலம் என்பதாலும், மக்கள்தொகை குறைவு என்பதாலும் ஒரு ஆணுக்குப் பல பெண்கள் என்பதை இயல்பாகவே எடுத்துக்கொண்டனர். அதனால் தலைவன் பரத்தையரிடம் சென்று வருவது இயல்பாக இருந்தது.


இருந்தாலும் தலைவன் பரத்தையிடம் சென்று வருவதை தலைவி விரும்புவதில்லை. “வாயில் மறுத்தல்“ என்னும் துறைவழி தலைவியின் எதிர்ப்பை அறியமுடிகிறது. தலைவியிடம் வாயில் வேண்டிநிற்கும் தலைவன் தன் தவறை உணர்வதாகக் கொள்முடியும்.

நற்றிணைப் பாடல் ஒன்று அழகான நகைச்சுவை ஓவியத்தைப் பதிவு செய்துள்ளது.


பாடல் இதோ...


நற்றிணை .100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5 வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10 புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பரணர்
(பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது.)


தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து தலைவியை நாடிச் செல்கிறான் என்பதை உணர்ந்த பரத்தை வருத்தமடைந்தாள். அவனை மீண்டும் பெறவேண்டும் என்று கருதியவளாக………

தன்னிடம் தலைவன் நடந்துகொண்ட நடத்தையைக் கேட்டுத் தலைவி தலைவனை வெறுக்கவேண்டும் என்று எண்ணி, தலைவியின் உறவினர்கள் கேட்குமாறு தன் தோழியிடம் கூறுவதுபோல இவ்வாறு கூறுகிறாள்………..


தோழி! பெரிய நகத்தைக் கொண்ட கொக்கு கார்காலத்து உலாவும். அதன் கரிய மூக்குப் போன்ற ஆழமான நீரில் தோன்றிய ஆம்பல் மலரை உடையது குளிர்ந்த நீர்த்துறை. அத்துறைக்குரிய தலைவன் நெய்மணம் கமழும், என் கூந்தலைப் பற்றி என் கையில் உள்ள வேலைப்பாடமைந்த ஒளிவீசும் வளையைக் கழற்றிக் கொண்டான். அதனால் சினம் (கோபம்) கொண்ட முகத்தையுடையவளாக அவனிடம்,

“இனி நான் இவ்வாறு சினம்(கோபம்) கொள்ளாது இங்கு நடந்ததை உன் மனைவிக்குச் சொல்லுவேன் என்றேன்.“

அதற்கு அவன் ஊரின் எல்லையிலே உள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரை வென்று செலுத்திக்கொண்டு வருகிறவனும், இரவலர்களுக்கு தேர்கொடுக்கும் வள்ளன்மை உடையவனுமான மலையமான் அவையில் வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வது போல அதிர்ச்சியுற்று நடுங்கினான். அவன் நடுங்கி வருத்தமுற்ற நிலையை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பேன்.



○ பரத்தையின் கூந்தல் பற்றி வளையலைக் கழற்றிக் கொண்ட செயலலைத் தலைவி அறிந்தால் என்னாகும்? என நடுங்கிய தலைவனின் நிலையை எண்ணி எண்ணிப் பார்ப்பதால் பரத்தைக்குச் சிரிப்பு தோன்றுகிறது.

○ தலைவனின் நாகரிகமற்ற செயலைத் தலைவி அறிந்தால் அவனை வெறுப்பாள். அதனால் தான் மீண்டும் தலைவனைப் பெற்று இன்புறலாம் என்பது பரத்தையின் எண்ணமாகும்.

○ இப்பாடலின் வழி சங்ககால சமூகநிலையையும், வாழ்வியியல் ஒழுக்கங்களையும் அறியமுடிகிறது. காலம் கடந்து போனாலும் மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் மாறிப்போவதில்லை என்னும் வாழ்வியல் உண்மை புலப்படுகிறது.

10 கருத்துகள்:

  1. நானும் சிரித்து விட்டேன் நண்பா,வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்புறம் டெம்ப்ளேட் சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. பாடலுக்கு முன் நல்ல விளக்கம் முனைவரே..

    பதிலளிநீக்கு
  3. சிரிப்போ சிரிப்பு

    வாங்க படிக்கலாம்..

    பதிலளிநீக்கு
  4. சாதாரண விஷயத்துக்கே பூரிக் கட்டை என்றால்..’இந்த மாதிரி’ என்றால் என்ன என்னவெல்லாம் வருமோ?

    பதிலளிநீக்கு
  5. வாசித்தலுக்கு நன்றி ராமமூர்த்தி ஐயா..

    பதிலளிநீக்கு