வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

கனவில் வந்தவன்...


விருப்பத்தின் விளைவே கனவு!
நிறைவேறாத ஆசைகளை நிறைவு செய்கிறது கனவு!
புரியும் கனவு, புரியாத கனவு,
தூக்கத்தின் முதல் நிலையில் தோன்றும் கனவு!
தூக்கத்தின் ஆழ்நிலையில் தோன்றும் கனவு!

எனக் கனவு பலநிலைகளைக் கொண்டது.


கனவு எங்கு தோன்றுகிறது? மூளையிலா? இதயத்திலா? கண்ணிலா?
கனவு கருப்பு வெள்ளையா? வண்ணமா?
கனவில் கேட்கும் சத்தங்கள் எப்படிக் கேட்கின்றன?
கனவில் காண்பதெல்லாம் நடக்குமா?
பகற்கனவு பலிக்குமா?
காலையில் விழித்தவுடன் கனவு ஏன் மறந்துபோகிறது?
கனவில் கண்ட காட்சிகளை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?

அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று எந்தக் கனவைச் சொன்னார்?

விழித்துக்கொண்டே கனவு காண்பது எப்படி?

கனவை நனவாக்குவது எப்படி?


“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“

என்பர் வள்ளுவர். எனின் உறக்கம் என்பது மரணம் போன்றதா?

எனின் கனவு வந்தால் அது நல்ல தூக்கமா? இல்லையா?


என ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் கேள்விகள் கனவுகுறித்துத் தோன்றும்.


இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறேன் என்று சில நல்லவர்கள்………..


நல்ல கனவு வந்தால் கெட்டது நடக்கும் என்றும்!
கெட்ட கனவு வந்தால் நல்லது நடக்கும் என்றும்!
வெற்றி பெறுவதாகக் கனவு கண்டால் தோல்வி கிடைக்கும் என்றும்!
தோல்வி பெறுவதாகக் கனவு கண்டால் வெற்றி கிடைக்கும் என்றும்!
ஆசைகள் நிறைவேறுவதாகக் கனவுகண்டால் நிறைவேறாது என்றும்!
ஆசைகள் நிறைவேறாததுபோலக் கனவு கண்டால் நிறைவேறும் என்றும்!



கனவு சோதிடம் சொல்வார்கள். இவர்களை ஒருவகையில் உளவியல் மேதைகள் என்றே சொல்லலாம்.
ஆமாம் கனவுக்கு பொருள் தேடும் ஏமாளிகளை மனம் தளரவிடாது நேர்மறையான கருத்துக்களைக் கூறி திடப்படுத்தும் பணிசெய்வதால் இவர்களை உளவியல் மேதைகள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?


சரி உளவியல் மேதைகள் கனவு பற்றி என்ன சொல்கிறார்கள்?

கனவு குறித்த உளவியல் அறிஞர்களின் மொத்த கருத்தைச் சுருக்கிச் சொன்னால்,

விருப்பத்தின் விளைவே கனவு“ என்றும் “அச்சத்தின் விளைவே கனவு“ என்றும் சொல்லலாம்.

இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் உள்ள காலத்திலேயே கனவு குறித்த முழுமையான விளக்கம் சொல்ல முடியாது நாம் தவித்து வருகிறோம்.

நமது கண்ணைப் போன்ற தானியங்கி வீடியோ கேமரா இனிமேலும் கண்டறிய முடியாது.

நம் மூளையைப் போன்ற அதிநவீன் தொழில்நுட்ப வசதி கொண்ட தானியங்கி வீடியோ பிளேயரை இனிமேலும் உருவாக்க முடியாது.


ஆம் விழித்திருக்கும்போது காணும் காட்சிகளைப் போலவே தூங்கிக்கொண்டிருக்கும் போதும் காட்சிகளை ஓட்டிக்காட்டும் மூளையின் திறம் எண்ணி எண்ணி வியப்படையத்தக்கதாகவுள்ளது. மூளையின் வியத்தகு செயல்களில் கனவு குறிப்பிடத்தக்கவொன்றாகும்.



சங்கஇலக்கியத்தில் கனவு குறித்த சிந்திக்கத்தூண்டும் பாடல்கள் நிறையவுள்ளன.


தலைவி தன் விருப்பத்தின் விளைவாகத் தான் தலைவனுடன் கூடுவது (சேர்ந்திருத்தல்) போலக் கனவு காண்கிறாள் தான் கண்ட கனவை, வௌவால் கண்ட கனவுடன் ஒப்புநோக்கிப் பார்க்கிறள்.

பாடல் இதோ……..


உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
5 அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

நற்றிணை -87. நெய்தல்

நக்கண்ணையார்

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது.


தலைவன் தலைவியை மணம்புரியும் எண்ணத்துடன் பொருள்தேடப் பிரிந்தான். அப்பிரிவுக்கு ஆற்றாத தலைவி தூக்கத்தில் கனவு கண்டு எழுந்தாள். அதனைத் தோழிக்குக் கூறுகிறாள்…..

ஊரிடத்திலுள்ள மாமரத்தில் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால் உயர்ந்த கிளையில் பற்றித் தூங்கும். அப்போது சோழர்குடியில் பிறந்து ஆர்க்காட்டில் வீற்றிருக்கும் அழிசி என்பனின் பெரிய காட்டிலிருக்கும் இருப்பதும் தனக்குக் கிடைக்காததுமான நெல்லிக்கனியைத் தாம் பெற்றதாகக் கனவு காணும்…


வௌவால் கண்ட கனவு போல,

தலைவனின் நாட்டில் பெரிய அடிப்பகுதியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலரும். அவற்றின் மகரந்தத் தாதுக்கள், கடலின் துறையிடத்தே அமைந்த மணற்பகுதிகளில் மேயும் இப்பிகளின் ஈரமான புறப்பகுதிகளில் வீழ்ந்து மூடும்.

இவ்வாறு அமைந்த சிறுகுடியைப் பெற்ற பரதவரின் மகிழ்ச்சியையும் பெரிய குளி்ர்ந்த கடற்கரைச் சோலையையும் நான் நினைத்துக்கொண்டேன்…..


பரதவரின் மகிழ்ச்சியையும் கடற்கரையையும் நினைத்த அளவிலேயே நானும் தலைவனும் கூடி இன்புற்றதாகக் கனவு கண்டேன். கண்டதெல்லாம் கனவு என்பதை அறிந்ததும் அத்தகைய இன்பமெல்லாம் என்னைவிட்டு நீங்கிப் போனது…
என்று தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் தலைவி.


வௌவால் தான் பெறாத சுவையைக் கனவில் பெற்றது போல,
தலைவி தான் பெறாத தலைவனைக் கனவில் கண்டாள்.

வௌவால் தான் பெறாத நெல்லியைப் பெற்றது போலக் கனவு கண்டது,
தலைவி தான் கூடிப் பெறாத தலைவனைக் கூடியது போலக் கனாக்கண்டாள்!

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சி என்பது பரதவரின் இல்லற மகிழ்ச்சியைக் குறிப்பதாக அமைந்தது. அவர்களைப் போல தாமும் இனிது இல்லறம் நடத்தவேண்டும் என்ற தலைவியின் விருப்பத்தின் விளைவாகவே இக்கனவு தலைவிக்குத் தோன்றியது.

இப்பியின் ஈரமான புறப்பகுதியில் புன்னையின் தாதுக்கள் மூடும் என்றது கருத்து தலைவனின் நினைவால் வாடும் தலைவியின் உடல்மெலிவு கொண்டு பசலை மூடுவதுடன் ஒப்புநோக்கத்தக்கதாகவுள்ளது.

இப்பாடலின் வழி சங்ககால மக்களின் உளவியல் அறிவுநுட்பம் புலப்படுகிறது.

தலைவிக்கும், வௌவாலுக்கும் தோன்றும் கனவுகள் விருப்பத்தின் விளைவே என்று உணர்ந்து பாடிய, நக்கண்ணையாரின் அறிவு நுட்பம் சங்ககால மக்களின் அறிவுக்குத்தக்க சான்றாக அமைகிறது.

14 கருத்துகள்:

  1. மிக அருமையான பகிர்வு. கனவின் ஊடே நுழைந்து.......நுழைந்து.... ஆஹா அருமை நண்பரே!!!!!!

    பதிலளிநீக்கு
  2. தலைவியின் கனவு பயணம் சுகமாய் இருந்தது, வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல அசத்திடீங்க நண்பரே, அந்த பதத்தில் இருப்பது என்ன மரம்

    பதிலளிநீக்கு
  4. கனவுப் பயணம் வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும் சுகமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. இன் சுவைச் சங்கச் சாறுடன் இக்கால பனிக்கூழையும் சேர்த்தெமக்குச் செம்மையாய வழங்கும் இக்கால நக்கண்ணையாரே.. வாழ்க உம் சேவை.. அதில் நிறையும் எம் தேவை.. உம்மால் சங்கம் அறிகிறோம். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  6. @ஆதிரா தங்கள் கருத்துரைக்கு நன்றி ஆதிரா.

    நான் படித்து இன்புற்ற சங்கச்சுவையை யாவரும் படித்து மகிழவேண்டும் என்னும் விருப்பமே இப்பதிவுக்குக் காரணம்..

    தங்கள் கருத்துரை என்னை மேலும் எழுதத்தூண்டுவதாகவுள்ளது

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கனவுப்பயணம் நெல்லிமரம் போல சத்து நிறைந்தது.பாராடுக்கள்.

    பதிலளிநீக்கு