இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.
கீழே விழுந்த ஒருவன் தன் வலியைவிட
தன்னை யாரும்
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ?
என்பதிலேயே விழிப்புடனிருப்பான். அதுபோல,
நம்மை யாரும் பார்க்கவிட்டாலும், எல்லோரும் நம்மை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.
அந்த நேரத்தில் வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும். தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும் பார்க்கத் தோன்றாது.
இங்கே ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.
மகிழ்ச்சியின் திறவுகோலான சிரிப்பு இவளுக்கு துன்பத்தின் திறவுகோலாகிவிட்டது!
மனிதர்கள் சிரித்துவிடுவார்களோ என்று வருந்துவோர்கள் பலரிருக்க,
இங்கு இந்தப் பெண் தன்னைப் பார்த்து முல்லை சிரித்துவிட்டதே என்று வருந்துகிறாள்.
தலைவி தோழியிடம் சொல்கிறாள்………..
செல்வத்தை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர், என்னிடமும் அவரிடமும் உள்ள இளமையை எண்ணிப்பார்க்கவில்லை. இங்கு இன்னும் வந்துசேரவில்லை. அவர் இப்போது எவ்விடத்தில் உள்ளாரோ என பசுமையான முல்லை தம் அழகிய பற்கள் தோன்ற என்னைப் பார்த்து சிரிக்கின்றது.
(முல்லையின் அரும்புகள் தலைவிக்குக் தலைவன் வருவதாகச் சொல்லிச்சென்ற கார்கால வருகையை அறிவித்தன.
முல்லையின் அரும்புகள் தோன்றுதல் கார்காலம் சிரிப்பதாக உவமிக்கப்பட்டது.
தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்த கார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறியதை இப்போது தலைவி எண்ணிப்பார்த்தாள்.
முல்லைக்கு மழையைத் தந்து காத்த மேகம் இப்போது தனக்குப் பகையாய் வந்து வருத்துதை எண்ணி துன்பமடைந்தாள் தலைவி.
கார்காலம் வந்தபின்னும் தலைவன் வரவில்லை. இந்நிலையிலும் தலைவி உயிருடன் உள்ளாள் என்பதை எண்ணியே கார்காலமும் முல்லையும் தன்னைப் பார்த்து சிரிப்பதாகத் தலைவி வருந்துகிறாள்.)
இளமை - செல்வம் என்னும் இரு வாழ்வியல் கூறுகளை ஒரு மனிதன் வாழ்வில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
செல்வம் நிலையற்றது எப்போது வேண்டுமானலும் அதனைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் இளமை கழிந்தால் மீளாது என்ற கருத்தை எடுத்தியம்புவதாக இப்பாடல் உள்ளது.
பாடல் இதோ,
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
-ஒக்கூர் மாசாத்தியார்
குறுந்தொகை -126. முல்லை - தலைவி கூற்று
பருவம் கண்டு அழிந்த தலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.
காதலித்துப் பார் என்னும் கவிதைத் தலைப்பில் வைரமுத்து எழுதிய...
காக்கை கூட
உன்னைக்
கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே
உன்னைக் கவனிப்பதாய்
உணர்வாய்…..
என்னும் கவிதைக்கு மேற்கண்ட குறுந்தொகைப் பாடல்கூட ஒரு தாக்கமாக இருந்திருக்கலாம்.
INFOTECH கம்பெனிகளில்,
பதிலளிநீக்குஇடுப்பொடிய வேலை
களைத்துப் போய்,
இல்லம் ஏகும்,
இளைஞனையும்,
அவனை எதிர்பார்த்து..
ஏங்கி நிற்கும்,
இல்லாளையும் பார்த்து..
அரும்புகின்ற முல்லை ஒன்று,
அடக்க முடியாமல் சிரித்தது,
இன்று..!!!!!!
எப்பவும்போல இலக்கியச் சுவை அருமை குணா !
பதிலளிநீக்கு@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி நல்ல ஒப்புமை நண்பரே..
பதிலளிநீக்குதாங்கள் சங்ககாலத்தில் பிறந்திருக்கவேண்டியவர்..
என்ன ரசனை!!
மகிழ்ச்சியாகவுள்ளது நண்பரே..
@ஹேமா தங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துரைகளுக்கும நன்றி ஹேமா.
பதிலளிநீக்குஎப்பவும்போல இலக்கியச் சுவை.
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி குமார்
பதிலளிநீக்கு