வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 3 ஜூலை, 2010

சங்ககாலத் தொழில்நுட்பம்….


வீட்டைவிட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்பி வந்தால் தான் உண்டு.
அந்த அளவுக்கு வெளியே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.

சாலை விபத்து
திருடர் பயம்
இயற்கை சீற்றங்கள்
தீவிரவாதிகளின் தாக்குதல்….

என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் நம் உறவினர்களோ, நண்பர்களோ எங்கும் சென்றால் அவர்கள் சென்றவுடன் நல்லபடியாகச் சென்றுசேர்ந்துவிட்டோம் என்பதைத் தெரிவிக்கச்சொல்லுவோம். அல்லது நாமாவது அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வோம்.

இன்றைய தகவல் பரிமாற்றத்துக்கு…

அலைபேசி
இணையவழி பேசி (ஒலி - ஒளி)

ஆகியன பெரிதும் பயன்படுகின்றன…

கொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்றுபாருங்கள்..

பேஜர் - தொலைபேசி - கடிதம் - தூதன் - புறா - அன்னம் ………………


எத்தனை படிநிலைகளைக் கடந்து நாம் வந்துள்ளோம்.

சங்ககாலத்தில் இதே தகவல் பரிமாற்றத்துக்கு என்ன பயன்படுத்தியிருப்பார்கள்?


◊ வழிதவறியவாறு காட்டில் சிக்கிக்கொண்டவர்கள் சேர்ந்து இசைக்கருவிகளை முழக்குவர்.

◊ மதம்பிடித்த யானையின் வருகை, கரைகடந்து வரும் ஆற்றுவெள்ளம் மற்றும் போர்தொடர்பான அறிவிப்புகளை முரசரைந்து தெரிவி்த்தனர்.


சரி அன்பு கலந்த தகவல்தொடர்புப் பரிமாற்றம் ஒன்றைக் காண்போம்..

தலைவியை மணந்துகொள்ளும் எண்ணமின்றி நாள்தோறும் துன்பம் நிறைந்த காட்டுவழியில் தலைவன் இரவுக்குறியின்கண் வந்துவந்து தலைவியைச் சந்தித்து மீண்டான். அதுகண்ட தோழி,

இரவில் வரும்போது அவன் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து எடுத்துக்கூறி இனி இரவில் வராதே என இரவுக்குறியை மறுத்துத் தலைவியை மணந்துகொள்ளமாறு வற்புறுத்தினாள்.


மலையிலிருந்து ஓடிவரும் அருவியின் ஒலியுடன், வண்டின் ஒலி சேர்ந்தது. முழவின் ஒலியுடன் யாழ் ஒலி சேர்ந்து ஒலிப்பதுபோல இம்மென்று ஒலிக்கும், மேலான வெற்றியினையும், அகன்ற இடத்தினையும் உடைய எல்லோருக்கும் பயன்கொடுக்கும் மலையையுடைய தலைவனே!

நீ கடந்து வரும் காடோ சிறுவழிகளையுடையது.
விலங்குகள் செல்லும் அவ்வழிகளில் யானைகளும் திரியும்.
வானத்தின் மீது இடிமுழங்கும். மேலும்,
அச்சம் தரும் பாம்பும் புலியும் அவ்வழிகளில் அதிகமாக இருக்கும்.
இத்தகைய வழியில் நீ இரவில் தனியாக வருகின்றாய்….

நீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அதற்குத் தடையேதும் இல்லை! நீ விரும்பிய வாறே மணந்துகொள்ளலாம்.

“ஆதலால் இன்றுமுதல் இரவில் இங்கு அவ்வாறு வருதல் வேண்டாம்!
அவ்வாறு நீ வந்தால் நீ வரும்,செல்லும் வழிகுறித்து அஞ்சியிருக்கும் எங்கள் துன்பம் தீரும் பொருட்டு உன் மலையை நீ அடைந்தபின்னர்,

வேடுவர்கள் நாயை அழைக்க ஊதும், ஊதுகொம்பினை நீ சற்றே ஊதுதல் வேண்டும்.“

என்கிறாள் தோழி.

கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5 வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10 ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15 நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!


கபிலர்


அகநானூறு 319. பாலை

இரவுக்குறி வந்த தலைமகனை வரவுவிலக்கி வரைவு கடாயது.

வரவு விலக்குதல் - வருகையை நிறுத்துதல்
வரைவு கடாவுதல் - திருமணத்துக்குத் தூண்டுதல்.

பாடல் வழி…

○ வரைவு விலக்குதல், வரைவு கடாவுதல் என்னும் அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.

○ நம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.

இன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


இப்பாடலில் தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு.
அவன் வரும் வழிகுறித்த அச்சம் ஆகியன நீங்க அவர்கள் கடைபி்டித்த தொழில்நுட்பம் - ஊதுகொம்பு ஊதுதல் ஆகும்.

தொழில்நுட்ப வசதி மிகவும் பழமையானதாக இருந்தாலும் அன்பு கலந்து இதனைப் பார்க்கும் போது நெகிழ்வாகவுள்ளது.

இப்படியெல்லாம் படிநிலைகளைக் கடந்துதான் நாம் வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இப்பாடல்வரிகள் துணைநிற்கின்றன.

10 கருத்துகள்:

  1. ஓ இப்படியெல்லாமா நடந்திருக்கு.....
    நல்லா இருக்கு நண்பா

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருக்கு நண்பா சூப்பர் விளக்கம்.தொடரவும்

    பதிலளிநீக்கு
  3. நம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.

    இன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு//

    உண்மைதான் நண்பரே...உலகம் சுருங்கிகொண்டு செல்கின்றது. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துகொண்டுவருகின்றது.
    நல்ல பதிவு.அருமையான கட்டுரை.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  4. இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html

    பதிலளிநீக்கு