
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.
ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறான்.
பெண் தனக்குள் இருக்கும் ஆண்வடிவத்தைக் காதலிக்கிறாள்
என்கிறது உளவியல்.
ஆண்களுக்குப் பெண்தன்மை அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரித்து வருகிறது.
என்கிறது அறிவியல்.
ஆண்போல வீரம் நிறைந்த பெண்களையும்,
பெண் போல அச்சம் நிறைந்த ஆண்களையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது.
100 விழுக்காடு ஆண்தன்மையுள்ள ஆண்களும்,
100 விழுக்காடு பெண்தன்மையுள்ள பெண்களும், இல்லை என்கிறது மருத்துவம்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் தீராது நடந்து வருகிறது. இந்தப் போருக்குப் பெயர் காதல்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் சார்ந்த போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போர் உயிர்உள்ள காலம் வரை தீராது வரும்.
இந்தப் போர் மனம் என்னும் ஆயுதம் தாங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொல்லும் கொடுமையான போர்.
மற்ற போருக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
○ பிற போர்களில் வாழ்வு - சாவு இரண்டில் ஒன்று கிடைக்கும்.
○ காதலர்களுக்கான போரில் - வாழ்ந்துகொண்டே சாகவும், செத்துக்கொண்டெ வாழவும், தினம் தினம் சாகவும் முடியும்.
இந்தக் கொடுமையை (சுகமான வலியை) அனுபவிக்க முடியாதவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொள்வர்.
○ பிற போர்களில் உடல் காயப்படும்.
○ காதல்ப் போரில் மனம் காயப்படும்.
○ பிற போர்களுக்கான நோக்கம் மண்,பெண்,பொன் என பல்வேறு ஆசைகள் இருக்கலாம். ஆனால், காதல்ப் போரின் நோக்கம் அன்பில் உயந்து நிற்பது நீயா? நானா? என்பது தான்.
○ பிற போர்களில் யாரோ ஒருவர் தான் வெற்றியோ, தோல்வியோ அடைவர். ஆனால் காதல்ப் போரில் இருவரும் வெற்றிபெறவும், தோல்வியடையவும் முடியும்.
○ பிற போர்களில் விட்டுக்கொடுத்தவர் தோற்றுப் போவார். ஆனால் காதல் போரில் விட்டுக்கொடுப்பதே வெற்றியின் அடிப்படையாக அமைகிறது.
○ பிற போர்களில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரிவர். காதல்ப் போரில் ஒவ்வொருவரும் தம் மனதை எதிர்த்துப் போரிடுவர். ஆனால் இந்தப் போராட்டமே தன் இருவருக்கும் வலி தருவதாக அமையும்.

○ நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் என்று உடல் கண்ணிடம் முறையிடும்!
நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!
சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க நீங்க செய்த தவறுக்கு என்னை நானே அடித்துக்கொள்கிறேன் என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!
கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை என்று நினைத்துவிட்டீர்களா? என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!
என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று உடலிடம் உயிர் சொல்லும்!
நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்துச்சிப்பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

கண், உடல், இதயம், மனம், உயிர் எல்லாம் மூளையின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதால் தான் இன்னும் ஆண், பெண் இன்னும் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறார்கள்.
என்றும் தீராத காதல்ப் போரை நானறிந்தவரை, உணர்ந்தவரை சொல்லிவிட்டேன்..
இன்னும் விளக்கமாக, அழகாக, ஆழமாக, ஔவையார் சொல்கிறார்………..
“செல்வார் அல்லர்“ என்று யான் இகழ்ந்தனனே
“ஒல்வாள் அல்லள்“ என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
குறுந்தொகை - 43 (பாலை)
என்கிறார் ஔவையார்
பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது.
தலைவன் தன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் அதனால் தன்னை விட்டுப் பிரியமாட்டான் என நினைத்தாள் தலைவி!
அதனால் அவன் பிரிவினைத் தடுக்கும் எண்ணமின்றி இருந்தாள்.
பிரிவு என்றால் இதுதான் என்று அறியாதவள் தன் காதலி. அதனால் பிரிவினை உரைத்தாள் இவள் தாங்கமாட்டாள் என்ற எண்ணம் கொண்டிருந்தான் தலைவன்.
இவ்வாறு இருவரும் தம் மனதுக்குள் பேராற்றல் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,
ஒருவரை மட்டும் பாம்பு கடித்து, அதனை நஞ்சு தலைக்கு ஏறி அறிவிப்பது போல,
தலைவியின் உடல் மெலிந்தது, அதற்கு தலைவனின் பிரிவே காரணம் என்று உடல் மாற்றம் அறிவித்தது.
பாம்பு கடித்தவர் தம் உயிர்போகும்வரை துன்புறுத்துவது போல
தலைவனின் பிரிவு தலைவியின் உயிர்போகும் வரை துன்புறுத்துவதாகவுள்ளது.
“அவர் நம்மைப் பிரியமாட்டார் என்ற தலைவியின் ஊக்கம்!
இவளுக்குச் சொல்லாமலே பிரிவோம் என்ற தலைவனின் துணிவு!“
இருவரின் பேராண்மைகளுக்குச் சான்றாகும்.
பிரிவால் துன்பமும்
அறியாமையால் கலக்கமும் கொண்ட தலைவியின் மனநிலை முழுவதையும் எடுத்தியம்புதாக “அலமலக்குறுமே“ என்னும் சொல் அமைகிறது.
பாடல் வழியே….
v ஆண்மை - பெண்மை இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்றே பலரும் எண்ணிவருகின்றனர். இப்பாடல் இக்கருத்தாக்கத்தில் புதிய சிந்தனையைத் தூண்டுவதாகவுள்ளது.
v இருபேராண்மை என்ற சொல்லாக்கம் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையை, ஆற்றலை உணர்த்துவதாகவுள்து.
v தலைவியின் மனம் தாங்காது என்ற தலைவியின் மனநிலையை ஆழ்ந்துநோக்கும் தலைவனின் பண்பு தலைவனுக்குள் இருக்கும் பெண்மைக்கு மென்மைக்குச் சான்றாகவுள்ளது.
v தலைவி ஆற்றலுடையவளாக இருந்தாலும் பாம்பு கடித்தது போன்ற உயிர்வலியைக் கடைசியில் பெறுகிறாள். ஆற்றலுடன் போர்புரிந்தாலும் மென்மைகாரணமாகத் தோற்றுப்போகிறாள். அதனால்தான் தலைவி பெண் வடிவத்துடனும் பெண் மனதுடனும் இருக்கிறாள்.
v தலைவியின் நிலையை நன்கு உணர்ந்த இவன் நம்பிரிவை ஏற்கமாட்டாள் என்பதை அறிந்தவனாயினும், பிரிவு வாழ்க்கைத்தேவைகளை நிறைவு செய்வது என்று துணிந்து தலைவியைப் பிரியும் பண்பு அவன் ஆணாகவே இருப்பதற்கு அடிப்படையாகவுள்ளது.
v காதல் உடல்மட்டும் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. உடல் சார்ந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போராட்டம் காலம் உள்ளவரை மனிதர் வாழும் வரை தீராது என்கிறார் ஒளவையார்.
v பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது என்னும் அகத்துறை தலைவனைப் பிரிந்த தலைவி தன் உடல் மெலிந்து தோழிக்குச் சொல்லியது என்ற அகத்துறைக்குத் தக்க சான்றாகவும் அமைகிறது.