பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 18 ஜூன், 2010
திருடிக்குத் தேள் கொட்டியதுபோல…
திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன ஆகும்?
திரு திரு என்று விழிக்க வேண்டியது தான்…..
அதே திருடன் வலி தாங்காமல் கத்தி மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் தலைகவிழ்ந்து நிற்க வேண்டடியது தான்…..
உலகத்தில் தவறு செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?
எல்லோருமே தவறு செய்தவர்கள்தான். என்றாலும். அதே தவறை மீண்டும் செய்தால் தப்பாகிவிடும் என்று உணர்ந்து திருத்திக்கொள்ளும் போது அவர்கள் மதிப்புக்குரிய மனிதர்களாகிறார்கள்.
தவறிழைத்தோர் யாருமே தம் தவறுக்கு என ஏதாவதொரு காரணம் வைத்திருப்பார்கள்.
தவறு செய்வோர் உருவாக அவர்கள் மட்டுமே காரணமில்லை. அவர்கள் வளர்ந்த சூழலும், வாழும் சூழலும் கூட காரணமாகின்றன.
ஒரு குழந்தை தவறி மீன்தொட்டியை உடைத்துவிட்டது என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்.
பொருளின் இழப்பை அக்குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும்.
அதைவிட்டு விட்டு அக்குழந்தையை அடித்தால் அடுத்த முறை இதுபோல தவறு நேர்ந்தால் அக்குழந்தை தன் தவறை ஏற்றுக்கொள்ளாது. தான் தவறிழைக்கவில்லை என்று தன் தவறை யார் மீதாவது சுமத்தவே முயலும்.
இவ்வாறு வளரும் சூழலும் ஒரு மனிதனின் பண்புகளுக்குக் காரணியாகிறது.
சங்ககாலம்…………..
மக்கள் தொகை குறைவான காலம், இனக்குழுவிலிருந்து நிலவுடைமைச் சமூகத்துக்கு மனிதன் வளர்ந்த காலம். அதனால் தலைவன் பரத்தையரிடம் (பொருட்பெண்டிர்) செல்வதைத் பெருந்தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சங்ககாலச் சமூகச் சூழல் அதற்குத் துணையாக இருந்தது. இருப்பினும் தலைவி வாயில் மறுத்து தலைவனின் செயலை எதிர்த்திருக்கிறாள்.
பரத்தையர் சேரியில் தங்கியிருந்த தலைவன் வீடு திரும்பினான். அவன் செயல் எண்ணித் தலைவி ஊடல் கொண்டாள்(சினம்). தன்னிடம் ஊடிய தலைவியிடம் தலைவன், “யான் பரத்தையர் யாரையும் அறியேன்“ என்றான். அதுகேட்ட தலைவி தலைவன் நட்புக் கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டமையும் அவள் மீது அன்பு கொண்டமையும் கூறினாள்.
தலைவனே!
நீர்நாய்களையுடைய பழைய நிர்நிலையின்கண் செழித்து வளர்ந்த தாமரையின் அல்லியாகிய இதழினைப் போன்ற குற்றமற்ற உள்ளங்கையினையும்,
பவளம் போன்ற அழகிய வாயினையும்,
நாவால் திருத்தமாகப் பேசப்படாவிட்டாலும், கேட்போர் விரும்பும் மழலை மொழிபேசும், பொற்றொடி அணிந்த நம் புதல்வனைப் பகைவரும் விரும்புவர்.
அத்தகைய நம் புதல்வன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நீ விரும்பும் பரத்தை அவ்வழியே வந்தாள். நம் புதல்வன் உன் உருவத்துடன் இருப்பது கண்டு வியந்து மகிழ்ந்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தன்னைக் காணவில்லை என்ற எண்ணத்தில் புதல்வனை தன் மார்போடு சேர்த்து அனைத்துக்கொண்டாள்.
இக்காட்சியைக் கண்ட நான் அவ்விடத்தைவிட்டு நீங்காமல் அங்கேயே நின்றேன். என்னைக் கண்டு உன் பரத்தை திகைத்தபோது நான் சென்று அவளைத் தழுவிக்கொண்டு,
குற்றமற்ற இளமகளே ஏன் மயங்கினாய்?
நீயும் என் புதல்வனுக்குத் தாய்போலத் தானே?
என்று கூறினேன். திருடியவன் மாட்டிக் கொண்டது போல, தவறை உணர்ந்த பரத்தை “ நாணி முகம் கவிழ்ந்து நிலத்தைக் கீறி நின்றாள்.“
அவளுடைய நிலையைக் கண்ட நான் வானில் காண்பதற்கரிய அருந்ததி என்னும் விண்மீனுக்கு ஒப்பான இவள் நம் புதல்வனுக்குத் தாயாகும் தகுதியுடையவள் என்று அவளை விரும்பினேன் என்றாள். பாடல் இதோ,
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5 யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10 'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ
15 களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?
அகநானூறு -16
(மருதம்)சாகலாசனார்
பரத்தையர் சேரியிலிருந்து வந்த தலைமகன் “யாரையும் அறியேன்“ என்றாற்குத் தலைமகள் சொல்லியது.
நகையும் சுவையும்,
l தலைவனின் புதல்வனைத் தெருவில் கண்டு கட்டித்தழுவிய பரத்தையிடம் சினம் கொண்டு சண்டையிடாத தலைவி, “நீயும் எம் புதல்வனுக்குத் தாய்தானே“ என்று எள்ளலாகச் சொல்லுவது நகையேற்படுத்துவதாகவுள்ளது.
l தலைவிக்குத் தெரியாது தவறிழைத்தவர்கள் தலைவனும், பரத்தையும் ஆவர். யாருக்கும் தெரியாது என்று அவர்கள் செய்த தவறு தலைவிக்குத் தெரிந்தபோது,
பரத்தை - நாணி முகம் கவிழ்த்து நிலம் கீறி நிற்கிறாள்.
தலைவன் - பதில் சொல்ல முடியாது தவிக்கிறான்.
இவ்விருவரின் செயல் நகையேற்படுத்துவதாகவும்.
இவர்களின் தவறை அறிந்தும் அவர்கள் தம் தவறை உணர்ந்தார்கள் என்பதால் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தலைவியின் செயல் அவளின் பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் உள்ளது.
நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்.
தலைவனுக்கும், பரத்தைக்கும்,
இதற்கு மேல் என்ன பெரிய தண்டனை கொடுத்துவிடமுடியும்?
//அவளுடைய நிலையைக் கண்ட நான் வானில் காண்பதற்கரிய அருந்ததி என்னும் விண்மீனுக்கு ஒப்பான இவள் நம் புதல்வனுக்குத் தாயாகும் தகுதியுடையவள் என்று அவளை விரும்பினேன் என்றாள்.//
பதிலளிநீக்குவஞ்சப் புகழ்ச்சி.
அருமையான விளக்கம்.
அருமையான விளக்கம் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@பாலமுருகன் கருத்துரைக்கு நன்றி பாலமுருகன்..
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி.
பதிலளிநீக்குஇவர்களின் தவறை அறிந்தும் அவர்கள் தம் தவறை உணர்ந்தார்கள் என்பதால் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தலைவியின் செயல் அவளின் பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் உள்ளது.
பதிலளிநீக்கு...... வித்தியாசமான அணுகுமுறை. :-)
//இதற்கு மேல் என்ன பெரிய தண்டனை கொடுத்துவிடமுடியும்? //
பதிலளிநீக்குசங்க காலத்தில் மனசாட்சியோடு வாழ்ந்தார்கள். வஞ்சக புகழ்ச்சியே பெரிய தண்டனையாக அமைந்தது
இந்த காலத்தில் எந்த சாட்சி இருந்தாலும் நீதி,நேர்மை வீழ்ச்சி அடைகிறது.
எனினும் தாங்கள் அளித்துள்ள பாடல் விளக்கம் மிக நன்று .
பாடலும் விளக்கமும் அருமை, மற்றபடி நான் யூர்கன் க்ருகியர் சொன்னதை ஆமோதிக்கிறேன்
பதிலளிநீக்கு@Chitra கருத்துரைக்கு நன்றி சித்ரா.
பதிலளிநீக்கு@யூர்கன் க்ருகியர் நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு@கவினன்[Cavin] முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவினன்.
பதிலளிநீக்குமீண்டும் மீன்டும் இலக்கிய வாசனை.இங்கு வரும்போதே
பதிலளிநீக்குஒரு சந்தோஷம்.நன்றி குணா.
@ஹேமா
பதிலளிநீக்குநன்றி ஹேமா..
வழமை போல் அருமையான விளக்கங்கள். நண்பரே உங்கள் வலைப்பூவைத் திறந்தால் மொத்த வலை இணைப்பின் வேகமே குறைகிறது. கொஞ்சம் கவனிக்கவும். வளர்க உமது தமிழ்ப் பணி....
பதிலளிநீக்குசங்க கால மனிதர்கள் மனசாட்சி உள்ளவர்கள்..தவறுகளுக்குப் பயப்படுவார்கள்.ஆனால் இப்போது நாம் வாழும் காலமோ???
பதிலளிநீக்குதரம் கெட்ட மனிதர்களால் எந்த நாடும் கெட்டுப் போவதில்லை..செய்த தவறை JUSTIFY செய்கிறார்களே.. அவர்கள் தான் நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்!!!
தமிழர்களின் வாழ்வியல் நுட்பங்களை விளக்கும் மிகவும் அருமையான வலை பூ .....தொடரட்டும் உங்கள் சேவை.
பதிலளிநீக்கு