செவ்வாய், 15 ஜூன், 2010
இயற்கையின் இசையரங்கு
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.
என்ற கம்பனின் கவிநயத்தை வியக்காதவர்களே அரிது.
கம்பனின் இப்பாடலைப் படிக்கும் போது என்மனம் ஏனோ இந்த அகநானூற்றுப் பாடலையே ஒப்புநோக்கிறது.
யானையைத் தேடிவந்த தலைவனை எல்லோரையும் போலத்தான் தலைவியும் பார்க்கிறாள். ஆனால் அவளையும் அறியாமல் அவன் மீது காதல் கொள்கிறாள். தம் காதலைத் தோழியிடம் தெரிவிக்கிறாள். இதுவே இப்பாடலின் சூழல்.
தலைவி தோழியிடம்………
அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளையில் காற்று புகுவதால் எழும் இனிய ஒலி இசையாகவும்,
இன்னொலியுடன் வீழும் அருவியின் இனிய ஓசை, கூட்டமான மத்தளங்களின் இசையாகவும்,
கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் இசையாகவும்,
மலைச்சாரலிடத்தே பூக்களைக் குடைந்தாடும் வண்டின் ஒலி யாழிசையாகவும் காட்டிலே விளங்குகினறது.
இவ்வாறு இனிமையாகவொலிக்கும் பல இசைகளைக் கேட்டு, ஆரவாரமிக்க மந்திக்கூட்டம் வியப்புற்றுக் காண்கிறது.
மூங்கில் வளரும் பக்கமலையில் மயில்கள் உலவி ஆடுகின்ற காட்சி, ஆடுகளத்தில் புகுந்தாடும் விறலி போலத் தோற்றம் தரும்.
அத்தகைய காட்சியுடைய மலைநாட்டையுடையவன் நம் தலைவன். மாலையணிந்த அகன்ற மார்பினன். அவன் அச்சம் தரும் வலிய வில்லினைக் கையில் கொண்டான். சிறந்த போர் அம்பினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். தான் அம்பால் எய்த யானை சென்ற வழியைப் பற்றி எம்மிடம் கேட்டான். கேட்டு முதிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்தின் சிறுவாயிலின் ஒருபக்கத்தே வந்து நின்றான்.
இவ்வாறு நின்றவனைக் கண்டோர் பலராவர். அவருள்ளும்,அரிய இருள் செறிந்த இரவில் படுக்கையிடத்துப் பொருந்திக் கிடந்து, கண்கள் நீர் சொரிய யான் ஒருத்தியே மெலிந்த தோள்களை உடையேன் ஆயினேன். அதற்குக் காரணம் யாதோ?
என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி. பாடல் இதோ,
“ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5 கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10 நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15 பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
அகநானூறு 82
குறிஞ்சி - கபிலர்
தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.
(களவொழுக்கத்தின்போது தலைவன் வருகையில் தடையேற்பட்டது. அதனால் வருந்திய தலைவி தோழியை அறத்தோடு நிற்குமாறு கூறியது.)
பாடல் வழி..
² தலைவனைக் கண்டோர் பலராயினும், அவருள் அவனைப் பார்த்தவுடன் காதல் கொண்டாள் தலைவி. அதன் காரணம் என்ன என்பதையும் தான் அறியாதவளாகவுள்ளாள். தன்னிலையைத் தலைவி, தோழிக்குச் சொல்வதன் வாயிலாக இங்கு தலைவி தோழிக்கு (அறத்தோடு நின்றாள்) காதலை வெளிப்படுத்தினாள்.
² சங்கத்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக இப்பாடல் விளங்குகிறது.
வண்டு துளைத்த மூங்கில் காற்று இட்ட முத்தம் இசையாக!
அருவி வீழும் ஓசை மத்தளங்களின் தாளங்களாக!
கலைமான்களின் தாழ ஒலிக்கும் ஒலி இனிய பெருவங்கிய இசையாக!
மலைச்சாரலில் பூக்களைக் குடைந்து ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலி யாழிசையாக!
இத்தகைய பல இனிய ஒலிகளைக் கேட்டு வியந்து நோக்குகிறது மந்தி,
மலைப்பகுதிகளில் ஆடும் மயில் ஆடல்மகள் விறலியுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.
Þ காதலைச் சொல்லவந்த தலைவி இயற்கையை ஏன் இவ்வளவு விவரித்துச் சொல்ல வேண்டும்?
வாழ்க்கை வேறு இயற்கை வேறு என்று பகுத்தறிய இயலாதவாறு சங்கத்தமிழர் வாழ்வில் இயற்கை இயைபுறக் கலந்திருந்ததே காரணமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காதலும் இயற்கையும் கலந்த இலக்கிய ரசம்-ரசனை.அற்புதம்.
பதிலளிநீக்கு@ஹேமா நன்றி ஹேமா.
பதிலளிநீக்குசங்ககால இலக்கியங்களில் காதலை அற்புதமாக சொல்லிருக்காங்க.. நன்றி குணா.
பதிலளிநீக்குநமது முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தினர். நாம்..........????????
பதிலளிநீக்குÞ காதலைச் சொல்லவந்த தலைவி இயற்கையை ஏன் இவ்வளவு விவரித்துச் சொல்ல வேண்டும்?
பதிலளிநீக்குவாழ்க்கை வேறு இயற்கை வேறு என்று பகுத்தறிய இயலாதவாறு சங்கத்தமிழர் வாழ்வில் இயற்கை இயைபுறக் கலந்திருந்ததே காரணமாகும்
..... எத்தனை விஷயங்களை நாம் இன்னமும் கற்று கொள்ள வேண்டியது இருக்கிறது.
இயற்கையையும் காதலித்திருக்கிறார்கள்.. எனத் தெரிகிறது குணசீலன்..:))
பதிலளிநீக்கு//வண்டு துளைத்த மூங்கில் காற்று இட்ட முத்தம் இசையாக!//
பதிலளிநீக்குஎன்னே ரசனை மிக்க வரிகள். மேர்சொன்ன வரி ம்அட்டும் பசக்கென்று ஒட்டிக் கொண்டது. நல்ல விளக்கங்கள். நன்றி நண்பரே..
@Starjan ( ஸ்டார்ஜன் ) கருத்துரைக்கு நன்றி அன்பரே.
பதிலளிநீக்கு@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
பதிலளிநீக்குநாம் செயற்கையோடு குடும்பம் நடத்துகிறோம்.
@Chitra ஆம் நாம் நிறைய இழந்திருக்கிறோம்.
பதிலளிநீக்குகண்களை விற்று ஓவியம் வாங்குவது போல,
இயற்கையை விற்று அறிவியல் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
@thenammailakshmanan உண்மைதான்..
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி அம்மா.
@புலவன் புலிகேசி இரசிப்புக்கு நன்றி புலவரே..
பதிலளிநீக்குநல்ல கவிதை நண்பா கலக்கிடீங்க . உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி.
பதிலளிநீக்குஆஹா அருமையான இயற்கை காட்சிகளோடு காதல் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் குரு ஜி.
பதிலளிநீக்குநன்றி
நன்றி வைசாலி
நீக்கு