பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 6 ஜூன், 2010

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.


ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது. அவ்வோசைக்கு மாறாக அமமரத்தில் வாழும் அன்னச் சேவல் பறந்து ஒலியெழுப்பியது.

இத்தகைய வளமுடையது ஆய் அண்டிரனின் பொதிய மலை, இம்மலைக்கு ஆடுமகள் (விறலி) செல்லாமேயன்றி, போரை விரும்பும் பகைவர் செல்லமுடியாது என்று மன்னனின் வீரத்தை இயற்கையோடு இயைபுபடுத்திப் பாடுகிறார் முடமோசியார். பாடல் இதோ,

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

புறநானூறு 128.
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.

பாடலில் தோன்றும் நகை.

² மத்தளத்தை பலாப்பழம் என்று கருதித் தட்டிப்பார்த்த மந்தியின் செயலும், அதற்கு அஞ்சி மாறொலியெழுப்பிய அன்னச் சேவலின் செயலும் பேதமை காரணமாக நகையேற்படுத்துதாகவுள்ளது.

² பரிசிலர் பலா மரத்தில் கட்டியிருந்த மத்தளத்தை பழம் என்று கருதிய மந்தி ஏமாந்துபோனது போல, பகைவரும் ஆய் அண்டிரனுடன் போரிடவந்து அவன் வலிமை கண்டு ஏமாந்து போவார்கள் என்பது உள்ளுறையில் தோன்றும் நகையாகிறது.

² ஆய் அண்டிரனை பரிசிலர்கள் தம் கலைத்திறன் காரணமாக எளிதில் அணுகலாம், போர் எண்ணம் கொண்ட பகைவர் அணுகுவது அரிது என்பதை இயம்புவதாக இப்பாடல் அமைகிறது.

(ஆய் அண்டிரனின் வீரமும், கொடையும் பாடப்பட்டதால், பாடாண் என்னும் புறத்துறையானது. வாழ்த்திப் பாடியதால் வாழ்த்தியல் ஆனது)

15 கருத்துகள்:

  1. புறநானூறு பாடல்களுக்கு சிறப்பான விளக்கம் கொடுக்கும் பதிவு . புகைப்படமும் மிகவும் அருமை .
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பாட்டுக்கு எளிய விளக்கம்...நல்ல பகிர்வு தோழரே...

    பதிலளிநீக்கு
  3. தமிழ்99 விசைப்பலகையை எப்படி இணைத்தீர்கள்? விவரமாக தெரிவித்தால் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. @குடந்தை அன்புமணி கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    http://tamilblogging.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99

    இந்த முகவரியில் நிரல்துண்டு கிடைக்கும் நண்பா பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு