வெள்ளி, 2 ஏப்ரல், 2010
மிளகுக்கு இணையா தங்கம்?
தங்கத்துக்குக் கிடைக்கும் மதிப்பு இன்று சில மனிதர்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை.
சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்.
பாடல் சான்று இதோ..
அகநானூறு 149. பாலை
[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது]
சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையில்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
5. அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
10. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
1அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது
15. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
-2எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
தலைவியைப் பிரிந்து பொருளீட்ட எண்ணும் தலைவன் தன் தலைவியின் மென்மையையும் சுரவழியின் கொடுமையையம் நீள நினைந்து தன் பயணத்தைத் தவிர்த்தான் இதற்கு செலவழுங்குதல் என்று பெயர். இவ்வகத்துறையை விளக்கும் பாடலில் சங்ககாலத்தமிழரின் வணிகமுறையைப் பற்றி தெளிவான விளக்கம் பெறமுடிகிறது.
சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று எடுத்த உயரமான சிவந்த புற்றிலிருக்கும் புற்றாம் பழஞ்சோற்றை பெரிய கையினையுடைய கரடிகளின் பெருங்கூட்டம் அகழ்ந்தெடுத்து உண்ணும். அதனைதத் தின்று வெறுக்குமானால் அருகிலிருக்கும் இருப்பையின் வெண்மையான மலர்களை உண்ணும்.
எனது நெஞ்சமே அத்தகைய சுரவழியைக் கடந்து போய் நாம் பொருளீட்டிவருதல் வேண்டும்.
சுள்ளி என்னும் பெயர் கொண்டு பேரியாறு சேர அரசர்க்கு உரியதாகும். அவ்வழகிய ஆற்றின் வெண்ணிற நுரை சிதறுமாறு, தொழில்சிறப்புடைய யவணர்கள் கொண்டு வந்த நல்ல மரக்கலம் பொன்னைக் கொண்டுவந்து விலையாகத் தந்து மிளகை அள்ளிச்செல்லும். அத்தகைய வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை,
வலிமையான யானைகளையும் வீரமும் வாய்ந்த பாண்டியமன்னன் ஆரவாரம் தோன்ற வென்று அங்கிருந்த பொன்னாலான படிமத்தைக் கவர்ந்து சென்றான்.
அச்செழியனின் கொடிகள் அசைந்தாடும் வீதிகளைக் கொண்ட கூடல் நகரின் மேற்கே பல புள்ளிகளைக் கொண்ட மயில் கொடி தோன்றும் இடைவிடாத விழாக்கள் நடக்கும் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அக்குன்றத்தில் வண்டுகள் மொய்க்கும் ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்கள் இரண்டு ஒன்று சேர்ந்து இருந்தமைபோல நானும் தலைவியும் இருந்துவந்தோம். இப்போது தலைவியின் செவ்வரி படர்ந்த செருக்குடைய குளிர்ந்து கண்கள் நீர்க்கொள்ள அரிய சுரங்ளைக் கடந்து ஈட்டத்தக்க பொருளை எளிதாகப் பெற்றாலும் நான் இவளை நீங்கிப் பிரிந்து வரமாட்டேன் என்று தன் நெஞ்சுக்குச் சொல்கிறான் தலைவன்.
பாடல்வழி அறியலாகும் கருத்துக்கள்.
1. யவணர்க மிளகைப் பெறுவதற்காக தங்கத்தை விலையாகக் கொடுத்த சங்ககால வணிகமுறை புலனாகிறது.
2.மிளகின் மருத்வ குணம் அறிந்தே யவணர்கள் மிளகைப் பெற்றுச் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணமுடிகிறது.
3.செலவழுங்குதல் என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிளகான (தங்கமான) பதிவு.
பதிலளிநீக்குமிளகின் பெருமையும் தமிழின் பெருமையும் ஒரு சேர விளக்கும் பகிர்வு. நன்றி
பதிலளிநீக்குmilakkukku thangam... aiyaiyo ippa milakalavu thangam vangakkuda nammalala mudiyalaiye....
பதிலளிநீக்குnalla pathivunka.
////சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்./////
பதிலளிநீக்குபுதிய தகவல் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !
http://karurkirukkan.blogspot.com/2010/04/blog-post_5123.html
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா.
பதிலளிநீக்கு@வானம்பாடிகள் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி குமார்..
பதிலளிநீக்கு@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சங்கர்.
பதிலளிநீக்கு