வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/ 20



இயற்கைக்கும் மனிதனுக்கும் பன்னெடுங்காலமாகவே போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயற்கைச் சீற்றங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மனிதனும். மனிதனிடமிருந்து தம்மைக்காத்துக்கொள்ள இயற்கையும் பெரும் போராட்டமே நடத்தி வருகிறது.

இயற்கையின் மடியில் தவழ்ந்து வளர்ந்த மனிதன் நீர், நிலம், காற்று, தீ, வான் என இயற்கையின் ஐந்து கூறுகளையும் முதலில் கண்டு பயந்தான் அவற்றைக் கடவுளராக்கி வணங்கினான். காலம் செல்லச் செல்ல பக்குவமடைந்தவனாக இயற்கையின் ஆற்றல்களைக் கண்டு அவற்றைத் தம் ஆளுகைக்குட்படுத்த முயன்றான். இயற்கைக்கு இணையாக செயற்கையாக பலவற்றையும் உருவாக்கி இயற்கையைத் தாம் வென்றுவிட்டதாகப் பகல்கனவு கண்டான்.
ஒரு கதை,
'ஒரு மன்னன் தம் நாட்டுக்கு ஞானி ஒருவரை அழைத்துவந்து தம் நாட்டு எல்லைகளைக் காட்டிப் பெருமிதம் கொண்டான். அந்த ஞானியோ எல்லாவற்றையும் பார்த்தபின்னர் சொன்னார்,


வேந்தனே! சென்றமுறை நான் இங்கு வந்தபோது உன்னைப்போலவே உன் தந்தை இதே மன்னைக்காட்டி சொந்தம் கொண்டாடினான். அவன் தந்தையும் உன்னைப் போலவே எண்ணம் கொண்டிருந்தான். ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்,


இந்த மண்ணை நீ வாங்கவில்லை,

இந்த மண் தான் உன்னை வாங்குகிறது!“



என்றார்.

இயற்கையைத் தம் ஆளுமைக்குக் கொண்டுவர எண்ணிய மனிதன்,

காடுகளை அழித்தான்,

விளைநிலங்களை வாழிடங்களாக்கினான்,

நீர்நிலைகளை அழித்து விற்பனை இடங்களாக்கினான்,



நுனிக்கிளையிலிருந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மனிதனின் அறியாமைச் செயல் யாவற்றையும் தாங்கிய நிலம் தற்போது எதிர்வினைபுரிய ஆரம்பித்திருக்கிறது.


புவி வெப்பமயமாதல்,

பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்தல்,

குடிநீர் வறட்சி,


நோய் தொற்று,

என இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டம் காலகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இச்சூழலில் மனிதன் புரிந்துகொள்ள வேண்டிய இயற்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது ஒரு புறப்பாடல்.


நீர் பெருக்கெடுத்து மிகுமானால் அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையான அரணும் இல்லை!

தீ பெருகி எரிக்குமானால் உலகில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கின்ற நிழலும் இல்லை!

காற்றுப் பெருகி புயலாக வீசினால் அதனைத் தாங்கும் வலிமையும் உயிர்களுக்கு இல்லை!


நீர், தீ, காற்றுப் போலவே புகழ்மிகுதியும் உடையவனாய் சினம் மிகுந்து போர் புரிபவன் மாறன் வழுதி. அவன் குளிர்ச்சியான தமிழ்நாடு மூவேந்தர்களுக்கும் பொதுவானது என்பதை ஏற்கமாட்டான். தனக்குமட்டுமே உரியது என்ற கொள்கையுடையவன். அதனால் அவனைப் பணிந்து திறை செலுத்துபவர்கள் அச்சமின்றி வாழலாம், அவனைப் பணியாது திறை செலுத்தாதவர்கள்,


நுண்ணிய பல கறையான்கள் அரிது முயன்று எடுத்த செம்மையான நிறமுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயல் போல ஒருநாள் வாழ்க்கைக்கும் அஞ்சித்திரிவர்.


பாடல் இதோ,

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

புறநானூறு -51

பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

திணை: வாகை. துறை; அரச வாகை.



பாடல் வழி அறியலாகும் செய்திகள்



1.இயற்கையின் முன் மனிதன் என்றுமே குழந்தைதான். இயற்கையின் சீற்றத்துக்கு முன் உயிர்களை முழுவதும் காத்துக்கொள்ளும் கண்டுபிடிப்புகள் இன்னும் மனிதர்களால் கண்டறியப்படவில்லை. அதனால் இயற்கையை அழித்தல் நாம் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது என்னும் கருத்து உள்ளீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

2.இயற்கையின் வலிமையைத் தம்மகத்தே கொண்டவன் மனிதன். அவனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற கருத்தை பாண்டியன் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

3.மன்னனின் வெற்றியையும், வீரத்தையும் பாடுவது வாகைத்திணையாகும். இதன் துறைகளுள் அரசவாகை என்பதும் ஒன்று. பாண்டியனின் புகழைப்பாடவந்த ஐயூர்முடவனார் “ இயற்கையை எதிர்க்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்று கூறி அதனால் இயற்கையைக் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.“

19 கருத்துகள்:

  1. //“ இந்த மண்ணை நீ வாங்கவில்லை,

    இந்த மண் தான் உன்னை வாங்குகிறது!“//

    காலங்கருதி அருமையான பதிவினை எழுதியிருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. “ இந்த மண்ணை நீ வாங்கவில்லை,

    இந்த மண் தான் உன்னை வாங்குகிறது!“

    ......ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. இயற்கையின் அங்கங்களாம் ஐம்பூதங்களில் ஒன்றின் செயல் நின்றுவிட்டாலோ, அல்லது ஒன்று கோபப்பட்டாலோ, எந்த ஒரு உயிரும் இவ்வுலகில் வாழ முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

    காலத்திற்கேற்ற மிக சரியான பதிவு.

    நன்றி.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    வாழிய தாய்த்தமிழ்.!

    பதிலளிநீக்கு
  4. காலங்கருதி அருமையான பதிவினை எழுதியிருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க மகிழ்ச்சி நண்பரே...காலத்திற்கேற்ற தெவையான பதிவு...நன்றி..புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. என்னதான் அறிவியல் முன்னேற்றம் என்றாலும் இயற்கையின் முன் தோற்றோடத்தான் வேண்டி இருக்கிறது.

    குளிர்நத தமிழ்நாடு மூவேந்ருக்கும் பொதுவானது என்பதை ஏற்காத இந்த மன்னவன் சண்டைக்காரப்பையன் என்று புலவர் தாழ்த்தி உயர்த்துகிறாரோ...

    பதிலளிநீக்கு
  7. புவி வெப்பமயமாதல்,
    பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்தல்,
    குடிநீர் வறட்சி,

    இதனுடன் - நிலநடுக்கமும்

    -வேலு

    பதிலளிநீக்கு
  8. @சத்ரியன்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சத்ரியன்.

    பதிலளிநீக்கு
  9. @ஜெகதீஸ்வரன்.இரா


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜெகதீஸ்வரன்.

    பதிலளிநீக்கு
  10. @சுல்தான் ஆம் நண்பரே சரியான புரிதலுக்கு மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் விரிவுரையாளர் நல்ல கட்டுரை கொடுப்பதில் வல்லவர் .

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு குணசீலன். பூமியின் வளங்களை இப்படி மனிதன் அழித்துக்கொண்டே சென்றால் வருங்கால சந்ததியினர் வாழ வேறு கிரகம் தேட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நாராயணன்.

    பதிலளிநீக்கு
  14. உண்மைதான் இயற்கையோடு மனித வாழ்க்கை இணைந்து காணப்பட்டது. ஆனால் இன்று விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறிவிட்டது.

    இந்த மண் தான் உன்னை வாங்கியது என்பதிலே நிலத்தின் அருமை புரிகிறது.

    அருமையான கட்டுரை எளிமையாக புரிந்தது.நன்றி குருவே.

    பதிலளிநீக்கு