பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 26 மார்ச், 2010

துபாயா..? அபுதாபியா..?




நான் சுற்றி வளைச்செல்லாம் கேட்க விரும்பல. நேரடியாகவே கேட்குறேன் .

துபாய் போறேன்.. அபுதாபி போறேன்னெல்லாம் சொல்லிட்டு கிளம்பறீங்களே..

நீங்களெல்லாம் போனவுடனே அள்ளிட்டு வருமாறு பொருளெல்லாம் ஒரே இடத்திலேயேவா கிடைக்குது?

உங்களை மாதிரி வெளிநாடு போகாம உள்ளூரிலேயே இருக்கறவங்கள்ளாம் சாப்பிடக்கூட வழியில்லாமலா இருக்காங்க?

வெளிநாடு சென்று ஈட்டும் அந்தப்பொருளை உங்களாள உங்க சொந்த நாட்டிலேயே ஈட்டமுடியாதா?

இப்படி வெளிநாடு போறவங்களப் பார்த்து இன்றும் கேட்கவேண்டிய கேள்வியை சங்ககாலப் பெண்ணொருத்தி கேட்டிருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பாள்.

(வாழ்நாள் குறைவானது, இளமை அருமையுடையது, முயன்று பொருளீட்டுதல், அறம் செய்தலின் சிறப்பு, பொருள் இல்லாமையின் இழிவு, பொருளின் உயர்வு, அன்பின் சிறப்பு, பிரிவின் கொடுமை, என்பவற்றைத் தோழியிடம் கூறிய தலைவன், பொருள் தேடச்செல்ல எண்ணினான்.

அதற்குத் தோழியோ,
முன்பு நடந்ததைக் கூறி தலைவனின் வெளிநாடு செல்லும் பயனத்தைத் தடுத்தாள்.இதற்குச் செலவழுங்குதல் என்று பெயர்.)


தலைவனே!
அரிய பொருள்களின் மீது எழுந்த ஆசையால் உள்ளம் தூண்ட தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்றிருக்க எண்ணாதே!
நீ விரும்பித் தலைவியின் தோளில் எழுதிய தொய்யிலும், உன் வலிமையான மார்பில் தலைவி சாய்ந்ததால் ஏற்பட்ட தேமலும மாறுமா? என சிந்தித்துப்பார்.

நீ நன்கு மதித்த பொருளும் தேடச்சென்றவர்கள் நீண்ட காலம் தேடுவன்றி அள்ளிக்கொள்ளுமாறு ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?

பொருள் தேடப்போகாது, ஒரே இடத்திலேயே இருப்பவர்கள் எல்லாரும உணவுக்குக் கூட வழியில்லாது அழிந்து போகிறார்களா என்ன?

இளமையும், இருவர் உள்ளத்தே ஒத்த காமமும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள், பொருளை விரும்புவார்களா?

இல்வாழ்க்கை என்பது இளமையும் காமமும் உள்ளவரை தம்முள் தழுவியும் ஒரு சில நேரம் ஒன்றன் கூறாகிய ஆடையும் உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் அதனைப்பற்றிக் கவலைப்படாமல் ஒன்றிக் கலந்து அன்புடன் வாழ்வதல்லவோ வாழ்க்கை.

அன்றி பொருளுக்காகப் பிரிந்து சென்ற நீ இளமை கழிந்து பொருளை மட்டும் ஈட்டி வருவதா வாழ்க்கை?


என்று தலைவனிடம் தோழி கேட்டவுடன் சிந்தித்த தலைவன் தன் பயணத்தைத் தவிர்த்து நிறுத்திக்கொண்டான்.
பாடல் இதோ,

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்,
பிரிந்து உறை சூழாதி -ஐய! - விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்;
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும், காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிது அரோ
சென்ற இளமை தரற்கு!
கலித்தொகை 18

துபாய் அபுதாபின்னு கிளம்பறவங்களே இதையும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்க!

(இந்த இடுகையைப் படித்த நண்பர் ஒருவர் மின்னஞ்சல் வழியே துபாயில் வாழும் வெளிநாட்டினரைப் பற்றி அனுப்பிய நிழற்படம்.... .
இதோ..

37 கருத்துகள்:

  1. வெளிநாடு சென்று ஈட்டும் அந்தப்பொருளை உங்களாள உங்க சொந்த நாட்டிலேயே ஈட்டமுடியாதா?


    இந்தியாவிலேயே அத்தனை பேருக்கும் வேலை கிடைத்தால் ..............

    பதிலளிநீக்கு
  2. முனைவரே நல்ல படைப்பு....

    "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று நீங்கள் கூறும் இதே தமிழில் தானே நாங்களும் படித்தோம்....

    வாஸ்தவம் தான் முனைவரே....அவரவரது குடும்ப சூழல் மற்றும் பொருளாதார தேவையை பொறுத்தே தான் வெளிநாடு செல்கிறோம்....

    ஈட்டிய பொருளை இந்தியாவிற்க்கு தானே கொண்டு வந்து தருகிறோம்.

    "பொருள் தேடப்போகாது, ஒரே இடத்திலேயே இருப்பவர்கள் எல்லாரும உணவுக்குக் கூட வழியில்லாது அழிந்து போகிறார்களா என்ன?"

    இங்கு "பொருள்" என்பதை விட்டுவிட்டு "பிணி" என்று போட்டுக்கொள்ளுங்கள்
    ஆம் நான் அழிந்திருப்பேன் இந்நேரம்... இந்திய மருத்துவத்தின் தரம் அப்படி இருக்கின்றது. போலியொ சொட்டு மருந்தில் கலப்படம்...கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு கண்ணே போன கொடுமை...இதுபோல எத்தனை சம்பவங்களையும் என்னால் மேற்கோள் காட்டமுடியும். அயல் நாடுகளில் தவறு நடகின்றது முனைவரே இங்கு 1000 மருத்துவரில் ஒருவன் குற்றம் செய்தால் இந்தியாவில் 1000 இல் ஒரு மருத்துவன் தானே ஒழுங்காக இருக்கின்றான்.

    பிற துறையை விடுங்கள் மருத்துவம் சார்ந்த துறையில் தவறு நடப்பது இந்தியாவில் மிக அதிகம்..இது மன்னிக்க முடியாத குற்றம்...

    சரி நான் இங்கு சர்வீஸ் engg ஆக பணி புரிகின்றேன். நான் இங்கு வாங்கும் சம்பளத்தை இந்தியாவில் எனக்கு தருவார்களா? இங்கு என்னுடைய வருமானத்தில் என் செலவு போக சேமித்த பணத்தில் இந்தியாவில் சொந்த வீடு... ஒரு பைசா கூட கடனில்லாமல் வாங்கினேன்....ஆக அயல் நாட்டில் பொருள் ஈட்டினாலும் அதனை தாய் மண்னில் தானே விதைகின்றோம்.

    "இளமையும், இருவர் உள்ளத்தே ஒத்த காமமும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள், பொருளை விரும்புவார்களா?"

    அருள் இல்லாதவர்க்கு அவ்வுல‌கம் இல்லை பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பணம் இல்லையென்றால் கட்டியவள் கூட மதிக்க மாட்டாள் இந்த காலத்தில் முனைவரே...
    பிறகு எங்கே காமத்தை பற்றி யோசிப்பது?

    "அன்றி பொருளுக்காகப் பிரிந்து சென்ற நீ இளமை கழிந்து பொருளை மட்டும் ஈட்டி வருவதா வாழ்க்கை?"

    உண்மை தான் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் என் வாழ்ககையில்.கண்டிப்பாக கட்டியவளை பிரிய மாட்டேன் என்னுடனே அழைத்து வந்துவிடுவேன்.

    பிறரின் வாழ்க்கையில் அவ்வாறு இல்லையென்றால் "ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறவேண்டும்" என்ற தத்துவத்தை மனதில் கொண்டு வாழ்கையை வாழ வேண்டியது தான்......

    நம்முடைய இன்றைய சூழல் அப்படி....

    பிழை இருந்தால் மன்னிக்கவும் முனைவரே.....என் மனதில் பட்டதை கருத்துரையாக போட்டிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால் திருப்தியின் அளவு உன் மனதில் உள்ளதே அதை யாராலும் அறிய முடியாது. அவரவர் மகிழ்ச்சி அவரவர் மனதால் ஆயிரம் சம்பாதித்து அழுபவனும் ஐந்து ரூபாயில் மகிழ்பவனும் இந்நாட்டில் உண்டு.

      நீக்கு
  3. திரை கடலோடியும் திரவியம் தேடிடச் செல்லும் தலைவன் அருகினில் இருக்கும் தலைவியைப் பிரிவதால் ஏற்படும் விளைவுகளை அருமையாகச் சொல்லும் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். பொருள் விளக்கம் இலகு நடையில் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. சங்க இலக்கியப் பாடல்களில் ஐவகை நிலங்களைப் பற்றியும் பாடுகின்ற பாடல்களிலும் பாலை நிலத் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடல் செல்லும் போது ஏற்படுகின்ற பிரிவுத்துயர் பற்றியும் நான் தமிழிலக்கியம் படித்த காலப்பகுதியில் கேள்விப்பட்டுள்ளேன்.




    அதனை இப் பாடலைப் படிக்கும் போது நினைவுபடுத்தக் கூடியதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. பன்மடங்கு பெருகி விட்ட மக்கள் தொகை உள்ள, இந்த சூழலில் சற்று கடினம்தான்.

    பதிலளிநீக்கு
  6. நண்பா நல்ல கேள்வி அதோடு விவாதிக்கவேண்டிய கேள்வியும் கூட

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கிறார்களே இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  7. புதுமையான நடையில் உங்க பதிவு அருமை குணா..ம்ம்ம்ம்ம் சங்ககாலத்திலேயே பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்களா குணா...

    பதிலளிநீக்கு
  8. மிகக்குறைந்த காலகட்டத்தில் மிக அதிக பொருளை ஈட்ட வேண்டும் என்ற ஆசை மற்றும் என்னதான் வெளிநாட்டில் அடிமை வேலை பார்த்தாலும் ஊர் திரும்பிய பிறகு கிடைக்கும் மரியாதை, வெளிநாட்டில் வேலை பார்த்தவன் என்கிற பட்டம், அதுபோக சில சுய தம்பட்டம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் தான் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர். அவர்கள் தானாக திருந்தும் வரை இதை மற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
  9. @Chitra

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா..
    எல்லோருக்கும் வேலை கிடைத்தால் என்பதை விட..
    ஏன் சுயதொழில் செய்து நாலுபேருக்கு வேலை கொடுக்கக் கூடாது?

    என்று சிந்திப்பது நலம் என நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. @நித்தியானந்தம்


    வருகைக்கும் பழந்தமிழ்பபாடலை ஆழ்ந்து வாசித்தமைக்கும முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே.

    'திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று நீங்கள் கூறும் இதே தமிழில் தானே நாங்களும் படித்தோம்....'

    உண்மைதான் நண்பரே திரைகடல் ஓடித் திரவியம் தேடலாம். நம் நாட்டிலேயே திரவியம் இருக்கும் போது ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது தான் எனது கேள்வி.

    'அவரவரது குடும்ப சூழல் மற்றும் பொருளாதார தேவையை பொறுத்தே தான் வெளிநாடு செல்கிறோம்'


    ஆம் நண்பரே.. ஏற்க வேண்டிய கருத்து தான்.

    ஒவ்வொருவரும் இதே போல நினைத்தால் தாய் நாடு என்று சொல்லிக்கொள்ள நாடு என்றவொன்று இருக்காதே என்பது எனது சிந்தனையாகவுள்ளது.


    பிற துறையை விடுங்கள் மருத்துவம் சார்ந்த துறையில் தவறு நடப்பது இந்தியாவில் மிக அதிகம்..இது மன்னிக்க முடியாத குற்றம்...

    உண்மைதான் நண்பரே. மருத்வத்துறை மட்டுல்ல..
    கல்வி, விளையாட்டு என எல்லாத்துறைகளிலும் அரசியல் புகுந்து நாடே சீர்கெட்டுத்தான் இருக்கிறது அதை நான் மறுக்கவில்லை.

    சீர்கேட்டைக கண்டு வேறு நாட்டுக்குச் செல்வது மட்டும் தீர்வாகிவிடுமா?

    'சரி நான் இங்கு சர்வீஸ் engg ஆக பணி புரிகின்றேன். நான் இங்கு வாங்கும் சம்பளத்தை இந்தியாவில் எனக்கு தருவார்களா?'

    நியாயமான கேள்வி நண்பரே..
    அங்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை இங்கு கண்டிப்பாகத் தரமாட்டார்கள்..

    ஆனால் நீங்கள் அங்கு வாங்கும் சம்பளத்தை இங்கு வேறு பணிவாயிலாகப் பெறுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.. நாம் ஏன் நம் நாட்டுக்கேற்றவாறு நம் தகுதிகளை வளர்த்துக்கொள்ளக்கூடாது?

    நம் நாட்டை நாமே புறக்கணிப்பது எவ்விதத்தில் நியாயம்?

    பணம் இல்லையென்றால் கட்டியவள் கூட மதிக்க மாட்டாள் இந்த காலத்தில் முனைவரே...
    பிறகு எங்கே காமத்தை பற்றி யோசிப்பது?

    உண்மைதான் நண்பரே.. அந்தப் பொருளை ஏன் நம் நாட்டில் ஈட்டக்கூடாது? என்பது மட்டுமே எனது கேள்வி.


    "ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறவேண்டும்" என்ற தத்துவத்தை மனதில் கொண்டு வாழ்கையை வாழ வேண்டியது தான்......

    ஏன் நண்பரே இழக்கவேண்டும்.

    தாய்நாடு நம் நிழல்போல நாம் எங்கு சென்றாலும் அதன் நினைவுகள் நம்மைச் சார்ந்தே வந்து கொண்டிருக்கும்.
    அது கொடுமையல்லவா நண்பரே.

    தாங்கள் கூறியதில் பிழை எதுவும் இல்லை நண்பரே.. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்..

    நிகழ்கால எதார்த்தமும் தாங்கள் சொல்வதில் உள்ளது.

    கல்வி கற்றோர், கல்வியறிவில்லாதவர்கள் என யாவரும் வெளிநாடு வெளிநாடு என்று ஓடுவது தான் வருத்தமாக உள்ளது நண்பரே..

    சுயதொழில் தொடங்குவது பற்றியோ, நம்நாட்டிலே ஏன் முயற்சிக்கக்கூடாது என்றோ சிந்திக்காதவர்களைப் பார்த்தால் இவ்வாறு எண்ணத்தோன்றுகிறது நண்பரே.
    நம் நாட்டில் ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லும் நம் மனது நம் முயற்சிக்குத் தடையாக இருக்கிறது என்பது எனது எண்ணம் நண்பரே..

    பதிலளிநீக்கு
  11. @கமல்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கமல்

    பதிலளிநீக்கு
  12. @ஜிஎஸ்ஆர்


    நன்றி நண்பரே..

    நம் நாட்டில் கிடைக்காத திரவியத்தைக் கடல் கடந்து என்ன எங்கு சென்று வேண்டுமானாலும பெறலாம் என்பது பொருள் நண்பரெ.

    பதிலளிநீக்கு
  13. வாழ்வின் யதார்த்தம் எக்காலமும் உண்மையாயிருப்பதை தங்களது பதிவு உறுதிசெய்கிறது. திரைகடலோடி திரவியத்தை மட்டும் தான் தமிழன் பெற்றானா? அல்லது வாழ்வியல் சிந்தனையையும் பண்பாட்டையும் பெற்றானா?

    பதிலளிநீக்கு
  14. @Sivakumar

    நல்ல கேள்வி நண்பரே.. திரைகடலோடிய தமிழன் பண்பாடுகளைக் கற்றுக்கொண்டதோடு பிறருக்கும் கற்றுக் கொடுத்தான்.

    பதிலளிநீக்கு
  15. புகைப்படம், இடுகைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பதிவும் பாடல்களும் விளக்கங்களும் அருமை. நீங்கள் சொல்வது உண்மை. அதே நேரத்தில் நித்யானந்தா சொல்வதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. ஓரளவு என்று ஏன் சொல்கிறேனென்றால் அவரது படிப்பிற்கு தகுந்தாற்போல சரியான வேலை, சம்பளம் குடும்பத்துடன் வாழ வசதி என கிடைத்திருக்கிறது. ஆனால் மத்திய தரைகடல் நாடுகளில் வசிக்கும் எத்தனை பேருக்கு அந்த வசதி கிடைத்திருக்கிறது என்று சொல்லுங்கள் 75 சதவிகிதத்தினருக்கு மேல் மனைவி மக்களை விட்டு தனியாகத்தான் இங்கெல்லாம் வசிக்கின்றனர். தங்கள் இளமை முழுவதையும் இங்கேயே அழித்துவிட்டு செல்கின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு மேல் இங்கேயே இருந்துக்கொண்டு வருடம் ஒரு முறையோ அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறையோ சென்று ஒன்று அல்லது 2 மாதங்கள் ஊரில் இருந்து விட்டு வருபவர்கள் தான் அதிகம். நித்தியானந்தம் போன்ற பெரிய படிப்புகள் படித்தவர்களுக்கு வேண்டுமானால் அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஆனால் அது மிகவும் குறைந்த சதவிகிதமே. மற்றவர்கள் எல்லாம் தங்கள் இளமையை, குடும்பத்தை தியாகம் செய்துவிட்டே இங்கிருக்கின்றனர்.

    அதே நேரத்தில் ஊரில் இருப்பவர்கள் கொஞ்சம் முயற்சித்து கஸ்டப்பட்டு இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

    வெளிநாட்டில் வேலைசெய்பவர்கள் ஊருக்கும் போகும் போது ஒவ்வொரு காசையும் கணக்கு போட்டு செலவழிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இருக்கும் அவர்களது நண்பர்கள் குறைந்த வருமானத்திலும் கூட நிறைவாகவே இருக்கின்றனர்.

    மேலும் குறிப்பிட்ட வருடங்கள் வெளிநாட்டில் தங்கிவிட்டு பிறகு ஊருக்கு செல்பவர்களால் அங்கு சரியாக ஒட்ட முடிவதில்லை, வேலைக்கும் போக முடிவதில்லை, இயல்பு மாறிவிடுகிறது. மீண்டும் வெளிநாட்டிற்கே போகலாம் என்ற எண்ணத்துடனேயே இருக்கின்றனர்.

    50 வயதுக்கு பிறகு ஊருக்கு செல்பவர்கள் என்னத்தை அனுபவிக்க போகிறார்கள் என்பதும் மிகப்பெரிய கேள்வி......

    பதிலளிநீக்கு
  17. @மஞ்சூர் ராசா வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி நண்பரே. நண்பர் நித்தி அவர்களின் கருத்தை நான் முழுவதுமாக மறுக்கவில்லையே. இடுகைக்கு கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்களேன் ஏன் நாடுவிட்டு நாடு சென்று இவ்வளவு துன்பப்படவேண்டும்?

    பதிலளிநீக்கு
  18. முனைவரே, நித்தியானந்தின் கருத்தை நீங்கள் மறுத்ததாக நான் கூறவில்லை. நித்தியானந்தரின் கருத்தானது உயர்பணிகளில் இருப்பவர்களுக்கு அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால் அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என சென்றிருக்கும் பலர் குடும்பங்களை விட்டு பிரிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  19. உண்மை தான்! மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  20. நல்ல பகிர்வு.. அதே சமயம் வெளிநாடு செல்லும் எல்லோரும் பணத்துக்காக மட்டும் செல்வதில்லை.. குடும்ப சூழ்நிலையினால் பணத்தை தேடிச் செல்லும் அவர்கள் மனதுக்குள்லும் ஆயிரம் தவிப்புகள் வேதனைகள் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  21. @பிரேமா மகள்

    உண்மைதான் அதனைச் சொல்லத்தானே இந்தப் பதிவே. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பாடலைப் படித்தால் நேரடியாகத் தலைவியே பாடியது போல் தோன்றுகிறதே! குறிப்பாக 'விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும்' என்னும் இடம். அப்படி இருக்க இதைத் தோழி சொன்னாள் என்று விளக்கம் சொல்லுவது ஏன்? இப்படியே பல இடங்களிலும் காண்கிறேன். பாடல் நேரடியாகத் தலைவியே பாடுவது போல் இருக்க, அதனைத் தோழியின் வாய்மொழியாக திணை துறை விளக்கம் சொல்லும் போது கூறுகின்றனர். இப்படிச் சொல்வது தான் மரபா?

    பதிலளிநீக்கு
  23. @குமரன் (Kumaran) தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி நண்பரே..

    பாடல் பாடிய காலம் வேறு
    திணை துறை தொகுத்த காலம் வேறு
    என்பதால் தமிழர் மரபில் இதுபோன்ற மயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    தலைவி பேசவேண்டிய பல சூழல்களில் தோழியே பேசியிருக்கிறாள்
    இதனையே பல அறிஞர்களும் ஏற்கின்றனர் அதனால் உரையும் அவ்வாறே வழிவழியாக வந்துகொண்டிருக்கிறது நண்பரே.

    பதிலளிநீக்கு
  24. திரைகடலோடியும் திரவியம் தேடு என்றது அந்தக் காலம்...தற்போது நம் இந்தியாவின் செல்வத்தைப் பயன்படுத்திப் படித்து,பின்னர் பெற்ற அறிவை வெளி நாட்டானுக்குப் பயன்படுத்துவது என்ன நியாயம்?

    பதிலளிநீக்கு
  25. என்ன சொல்லுரதெண்டு தெரியல
    ஆனா மனசு கனக்குது

    பதிலளிநீக்கு
  26. @கவி அழகன் உண்மையை உணர்ந்தால் இப்படித்தான் இருக்குமோ..

    வருகைக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  27. நீங்க எழுதியது அருமை ஆனால் எங்கழுக்கு வேர வழி தெரியல நாங்கள் ஊரில் வாழ முயற்ச்சி செய்யுறோம் முடியல என்ன செய்ய உங்களுக்கு ஒன்று தெரியுமா பிரிவு என்பது மரனத்தை விட கொடியது அதை அனுபவித்தால் தான் புரியும் .

    பதிலளிநீக்கு
  28. மறுக்கமுடியாத உண்மைதான் முனியான்டி.

    பதிலளிநீக்கு