வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 23 மார்ச், 2010

உங்களை எங்கேயோ பார்த்துபோல இருக்குதே?



உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?

இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 10 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.


ஒருகதை,



பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.

மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.




இங்கு ஐங்குறுநூறு என்னும் அகப்பாடலில் தலைவன் மனம் முழுக்க தலைவி மட்டுமே நிறைந்திருக்கிறாள்.


மயில்,முல்லை, மான் என இயற்கைக் கூறுகள் எதைப் பார்த்தாலும் தலைவியைப் பார்த்தது போலவே தோன்றுகிறது.


போர்க்கடமை மேற்கொண்டு சென்ற தலைவன், வினை முடிந்து மீண்டுவந்தபோது தன் காதலியிடம் இவ்வாறு சொல்லி மகிழ்கிறான்.

அழகிய நெற்றியையுடைய பெண்ணே!

சாயலில் அப்படியே உன்னைப் போலவே இருந்த மயில் ஆடக்கண்டேன்!

உன் அழகிய நெற்றியைப் போலவே மனம் வீசும் முல்லை மலரக் கண்டேன்!

உன்னைப் போலவே மருண்டு நோக்கும் மான்களைக் கண்டேன்!

இந்த இயற்கைக் கூறுகள் யாவும் உன்னையே எனக்கு நினைவுபடுத்தின. அதனால், உன்னையன்றி வேறொன்றையும் எண்ணாது, விரைந்தோடும் கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன்!

(கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன் என்பதால் தலைவன், தான் குறித்துச்சென்ற கார்காலத்திற்கு முன்பே வந்தான் என்பதும் உணர்த்தப்படுகிறது)

தலைவனின் உள்ளத்தில் தலைவியின் நினைவே நிறைந்திருந்ததால், காணும் காட்சிகள் யாவிலும் தலைவியே தெரிந்தாள்.

மயில், முல்லை, மான் ஆகிய இயற்கைக் கூறுகள் தலைவன் தலைவியின் நினைவின்றி வேறு நினைவு கொள்ளாதவனாக இருக்கத் துணைநின்றன.

பாடல் இதோ,

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

ஐங்குறுநூறு -492

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.


◊ நினைவுகளின் வெளிப்பாடே நாம் காணும் காட்சி என்னும் உளவியல் கூறு உணர்த்தப்படுகிறது.
◊ நம் மனதில் நிறைந்த ஏதோ ஒன்று நாம் காணும் பொருள்களிலெல்லாம் வெளிப்படும் என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

(பெண்களின் ஏழு பருவங்கள்

பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண்)

26 கருத்துகள்:

  1. கதையுடனான விளக்கம் வெகு நன்று.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம்; அருமையான பாடல் முனைவர் ஐயா அவர்களே.....!

    பதிலளிநீக்கு
  3. பூனை, நாய் கதை சிரிப்பை வரவழைத்து விட்டது.
    எளிய விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. பாடலுக்கு முன் நல்ல விளக்கம் நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரு அழகான விளக்கம்! வியந்தேன்:)

    பதிலளிநீக்கு
  6. //நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
    நன்னுதல் நாறும் முல்லை மலர
    நின்னே போல மாமருண்டு நோக்க
    நின்னே உள்ளி வந்தனென்
    நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.//

    சங்க காலத்தில் மட்டும் அல்ல.. நிகழ்காலத்திலும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

    மிகவும் தெளிவான விளக்கம். மிகவும் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. //மயில்,முல்லை, மான் என இயற்கைக் கூறுகள் எதைப் பார்த்தாலும் தலைவியைப் பார்த்தது போலவே தோன்றுகிறது.//

    காதலின் ஏக்கம்..உங்களின் அழகான விளக்கம்...நல்லது தோழரே..

    பதிலளிநீக்கு
  8. மயில் படம் அருமை..பாடமும் மிக அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

    பதிலளிநீக்கு
  9. ஓ. இது மாதிரிதான் நிறைய தமிழ் படங்கள்ல வருதோ ? பார்க்கும் இடத்திலெல்லாம், காதலனுக்கு காதலி நினைவும், காதலிக்கு காதலி நினைவும்.

    பதிலளிநீக்கு
  10. \\பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது\\

    நண்பா எதார்த்தமான உண்மை

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  11. உண்மை.நிறைய சம்பவங்கள்...மனிதர்கள் பரிச்சயமானது போல அடிக்கடித் தோன்றும்

    பதிலளிநீக்கு
  12. ///////உங்களை எங்கேயோ பார்த்துபோல இருக்குதே?///////



    ஒரு நிமிடம் பயந்து போய்விட்டேன் என்ன இப்படி திடீர் என்று கேக்குறிங்களே என்று !


    அருமையான பாடல் . சிறந்த விளக்கம் . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  13. சுருக்கமான சொல்லப்பட்ட அழகான வரிகள். செம்புலப்பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலக்கும் இத்தருணத்தில் உங்கள் நிலைக்கும் ஏற்ற பாடல் இது! சரி தானே குணா?! :-)

    பதிலளிநீக்கு
  14. ஆம் நண்பா..

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. நன்று முனைவரே

    உங்கள் அணைத்து பதிவுகளும் அருமையிலும் அருமை

    பதிலளிநீக்கு