வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-3




மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் பாண்டித்துரைத்தேவர் ஆவார். தமிழ் ஆர்வலர். அவர் ஒருமுறை மதுரை வந்தபோது தனது கோடைக் கால வீட்டில் (தற்போதைய செந்தமிழ்க்கல்லூரி) தங்கியிருந்தார். அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி நடந்த காலம்.

ஒருநாள் சிகாட் என்னும் ஆங்கிலப் பாதிரியார் ஒருவர் பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பார்க்க வந்தார். பாண்டித்துரைத் தேவரும் அந்தப் பாதிரியாரை வரவேற்று அமரச்செய்தார்.

பாதிரியார்
- நான் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் திருக்குறளை அச்சிட்டு வழங்கவுள்ளேன். அதன் பிரதிகள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறேன். தாங்கள் தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்பவர். அதனால் தாங்கள் இதனை வாங்கிச் சிறப்பு செய்தல் வேண்டும்.

பாண்டித்துரைத் தேவர்-
மிகவும் மகிழ்வாகவுள்ளது. தாங்கள் ஒரு அயல் நாட்டவராக இருந்தாலும் தமிழ்மொழி மீது தங்களுக்கு உள்ள பற்று மகிழ்வளிப்பதாகவுள்ளது.

(பாதிரியார் தந்த குறளின் முதல் பக்கத்தைத் திறந்து படித்தவுடனேயே பெருந்திகைப்படைகிறார் பாண்டித்துரைத்தேவர்.)

முதல் குறள் இப்படி இருந்ததாம்….

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
முகர முதற்றே உலகு.

பாண்டித்துரைத் தேவர்
- (பெரும் சினம் தோன்றினாலும் வெளிக்காட்டாமல்) குறட்பாவில் மாறுதல்கள் உள்ளனவே. ஏதும் அச்சுப்பிழையா?

பாதிரியார்
- இல்லை! இல்லை! காலகாலமாகத் தமிழ்மக்கள், அறிஞர்கள், புலவர்கள் கவனிக்காமல்விட்டதை நான் கவனித்து எதுகை, மோனைக்க ஏற்ப திருக்குறளை மாற்றியமைத்திருக்கிறேன். ( என்கிறார் பெருமிதத்துடன்)

பாண்டித்துரைத்தேவர் - (அடக்கமுடியாத சினத்தையும் அடக்கியவராக) சரி இப்படி எத்தனை குறள்களை மாற்றியிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- (பெருமகிழ்ச்சியோடு) என்னால் முடிந்தவரை பெரும்பாலான குறட்பாக்களை மாற்றிவிட்டேன். அதுமட்டமல்ல,

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இருந்ததை மாற்றி,

இயன்முறய்பால், இயய்முறய்பால், இறய்முறய்பால் என்றும் மாற்றியிருக்கிறேன்.

நோற்பியல், சால்பியல், நோக்கியல், பீடியல், காமியல், ஏமியல் என அதிகாரத்தலைப்புக்களையும் கொடுத்திருக்கிறேன்.


பாண்டித்துரைத்தேவர் - எத்தனை பிரதிகள் இவ்வாறு அச்சிட்டிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- நானூறு பிரதிகள் அச்சிட்டிருக்கிறேன்.

பாண்டித்துரைத்தேவர்
- தாங்கள் தயங்காது 400 பிரதிகளையும் எனக்கே தந்தருளவேண்டும்.

(பாதிரியார் பெரிதும் மகிழ்ந்து தன் பணியாளன் வாயிலாக எல்ல நூல்களையும் எடுத்துவரச்செய்து பாண்டித்துரைத் தேவரிடமே கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும வாங்கிச் சென்றுவிட்டார்)

பாதிரியார் சென்றவுடன் அந்த நூல்கள் யாவற்றையும் கண்டு பெரிதும் வருந்திய பாண்டித்துரைத் தேவர் தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிதே என்று எண்ணி தம் வீட்டில் பெரிய குழிதோண்டி அதில் எல்லா நூல்களையும் இட்டு தீயிட்டாராம்..


(வெளியே தெரியாது இதுபோல தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர் பலராவர்)

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்( உருது - தமிழ்)


1. அகர்பத்தி - அகில் மணத்தி.
2. அமிலம் - புளிக்காரம்.
3. அலாதி - தனிச்சிறப்புடையது.
4. ஆசாமி - ஆள்.
5. இனாம் - கொடை.
6. இஸ்திரி - தேய்ப்பு.
7. உஷார் - எச்சரிக்கை,அறிவுறுத்தல்.
8. ஊதா - கருநீலம்.
9. கச்சேரி - கூடம்
10. கசரத் - உடற்பயிற்சி.
11. கசாப்பு - இறைச்சி.
12. கடுதாசி - மடல்
13. கப்சா - பொய்.
14. சந்தா - தவணை, முறைக்கட்டணம்.
15. சபாஷ் - நன்று.
16. சர்க்கார் - அரசு, ஆள்வோர்.
17. சராசரி - சரிக்கு சரி. இணையாக.
18. சலாம் - வணக்கம்.
19. சல்லிசு - மலிவு
20. சலம் - நீர்.
21. சலனம் - அசைவு.
22. சவ்வாது - பூ மணத்தி.
23. சவடால் - அடாவடி.
24. சவரம் - மழிப்பு.
25. சவாரி - இவர்தல்.
26. சவால் - அறைகூவல், வெல்விளி.
27. சாதா - பொது.
28. சாப்ஸ் - துண்டுக்கறி
29. சாமான் - பண்டம் , பொருள்.
30. சால்ஜாப்பு - சாக்குப் போக்கு, ஏமாற்றும் வேலை.

6 கருத்துகள்:

  1. நான்காம் தமிழ்ச்சங்கம் அறிந்திராத தகவல்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாண்டித்துரைத் தேவர் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் அந்த தகவல் ஏற்கனவே கேட்ட ஞாபகம் உள்ளது.

    கசாப்பு, சவரம் போன்ற வார்த்தைகள் இரு தலைமுறைக்கு(எங்க அப்பிச்சி) முன்பு உபயோகப்படுத்தி உள்ளார்களே?

    பதிலளிநீக்கு
  3. Blogger வானம்பாடிகள் said...

    நான்காம் தமிழ்ச்சங்கம் அறிந்திராத தகவல்.நன்றி.

    மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. Blogger திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

    பாண்டித்துரைத் தேவர் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் அந்த தகவல் ஏற்கனவே கேட்ட ஞாபகம் உள்ளது.

    கசாப்பு, சவரம் போன்ற வார்த்தைகள் இரு தலைமுறைக்கு(எங்க அப்பிச்சி) முன்பு உபயோகப்படுத்தி உள்ளார்களே?


    கருத்துரைக்கு நன்றி நண்பரே..
    பல தலைமுறைகளாக தமிழ்மொழியில் பிறமொழிக்கலப்பு நிகழ்ந்துள்ளது நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா பாண்டித்துரைத் தேவர் பற்றி இதுவரை தெரியாத விசயம்தான் நண்பரே இது . . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு