பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தும்பிசேர்கீரனார்.




“தும்பிசேர்கீரனார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தைக் குறுந்தொகைப்பாடல் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் து¡ங்கு மலைகிழ்வோற்கே!

392 - குறுந்தொகை-
தும்பிசேர் கீரனார்.

(வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகச்சொல்லியது.)

தலைமக்களின் காதலை தலைவியின் பெற்றோர் அறிந்ததால் தலைவி வீட்டில் வைத்துக் காவல் காக்கப்பட்டாள்.(இற்செறித்தல்)வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டாள்.
தலைவனோ அதைப்பற்றிக் கவலைப்படுபவனாகத் தெரியவில்லை. தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி இருக்கிறான் ( வரைவு நீட்டிக்கிறான் )
இந்நிலையில் தலைவியைக் காண எண்ணிவந்த தலைவன் அருகில் இருக்க, தோழியோ தும்பியிடம் பேசுவது போல தலைவனுக்கு இவ்வாறு சொல்கிறாள்..

நீலமணிபோன்ற அகத்தே சிறகுகளைக் கொண்ட தும்பியே!
கேட்பாயாக…

நல்ல கருத்துக்களை ஒருவரிடம் சொல்வதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை.!

தலைவருடைய நெடிய மலைப்பகுதிக்கு நீ சென்றால் தேனடைகள் தொங்குகின்ற மலைகளை உரிமையாகக் கொண்ட அவரிடம் நீ சொல்….

“தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்று…!
தினைகளுக்கிடையே வளர்ந்த களைகளை புழுதி எழுமாறு நீக்கும் தன்மைகொண்ட தலைவியின் உடன்பிறந்தோர் (தமையன்மார்கள்) அவளைக் காத்தனர்.

(தினைகளுக்கிடையே தோன்றும் களைகளைக் நீக்கும் தமையன்மார்கள் தலைவியின் வாழ்வில் வந்த களையாக காதலையும் நீக்கிவிடுவர் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது)


காவல் மறவர்கள் கிடுகுப்படை என்னும் பாதுகாப்பு வளைத்துக்குள் வைத்து அரசனைக் காத்துச்செல்வர் அதுபோல தலைவியும் தமையன்மார்களின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்று கூறுவாயாக.

(அரசரைக் காக்கும் கிடுகுப்படை - தலைவியைக் காக்கும் தமையன்மார்களுக்கு உவமையானது)


அவள் நினைத்தாலும் அங்கிருந்து வெளியே வரமுடியாது என்று கூறுவாயா?


என்று தும்பியிடம் பேசுகிறாள் தலைவி.

அருகிலிருந்து கேட்கும் தலைவன் தலைவியின் நிலையை உணர்ந்து விரைவில் உடன்போக்கிலோ அல்லது தலைவியின் வீட்டில் கேட்டோ அவளைத் திருமணம் செய்து கொள்ள முயல்வான்.


இந்தப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் கிடைக்காத சூழலில் தும்பியோடு பேசிய இந்த உரையாடலே இப்புலவர் தும்பிசேர்கீரனார் என்று பெயர் பெறக்காரணமானது.

இப்பாடல் வழியாக இப்புலவரின் பெயருக்கான காரணம் விளக்கம் பெற்றதோடு, இற்செறித்தல்,
வரைவு நீட்டித்தல் என்னும் இரு அகத்துறைகளும் விளக்கம் பெறுகின்றன...

16 கருத்துகள்:

  1. பெயர்க்காரணம் மிக அருமையான பாடல் விளக்கத்தோடு அளித்தமைக்கு மிக்க நன்றி. அருமை.

    பதிலளிநீக்கு
  2. இலக்கியம் பருக அருமையான வலைத்தளம். அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கம் நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  4. சே.குமார் said...
    இலக்கியம் பருக அருமையான வலைத்தளம். அருமை.//

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. வேலன். said...
    அருமையான விளக்கம் நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.//

    நன்றி நண்ரே...

    பதிலளிநீக்கு
  6. தமிழின் மேல் உள்ள காதல் இன்னும் வளர்கிறது உங்கள் பதிவுகளை படிக்கும்போது...

    பதிலளிநீக்கு
  7. பூங்குன்றன்.வே said...
    தமிழின் மேல் உள்ள காதல் இன்னும் வளர்கிறது உங்கள் பதிவுகளை படிக்கும்போது...


    மகிழ்ச்சி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம். said...
    நல்ல விளக்கம்...



    நன்றி நண்ரே...

    பதிலளிநீக்கு
  9. உண்மையில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் கொண்ட காதலின் சாரல் குறையாமல் இன்றும் ரசிக்கும் வண்ணம் அருமையாக சொல்ல பட்டிருக்கிறது. பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகவல்
    கருத்து பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. என்ன ஒரு பொருள் நுட்பம்! என்ன ஒரு சொல் நுட்பம்! நன்கு ரசித்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு