பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 27 நவம்பர், 2009
நிலம்புடை பெயரினும் (150வது இடுகை)
உலகத்தின் அழிவை முன்மொழியும் படமாக இப்போது ருத்ரம் 2012 என்னும் படம் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் உலகத்தின் அழிவு என்பது எப்படியிருக்கும் என்ற சிந்தனை மையக் கருத்தாகவுள்ளது. பைபிள், திருக்குரான் போன்ற மறை நூல்களில் இந்த உலக அழிவு முன்பே கூறப்பட்டுள்ளது என்று கூறும் இப்படத்தில் “ நில அதிர்வு, கடல்கோள் (சுனாமி), எரிமலை, வெண்ணீர் ஊற்று என பலவிதங்களில் இயற்கையின் சீற்றம் அமையும் என்ற கருத்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது.
“இயற்கைச் சீற்றங்களால் உலகம் அழிவதில்லை,
மனிதர்களிடம் அன்பு குறையும் போது தான் உலகம் அழிந்து போகும்”
என்ற காட்சிக்கு திரையரங்கில் பலத்த கைதட்டல் ஒலிக்கிறது.
இந்தப் படத்தில் வரும் காட்சிகள் எதிர்கால சிந்தனை கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என்பதை அறிவுறுத்துபவை.
உலகம் அழியப் போகிறது என்ற செய்தியை மறைநூல்கள் (பைபிள், திருக்குரான்) முன்பே சொல்லியிருக்கின்றன என்று வாதம் செய்பவை.
மறைநூல்களில் மட்டுமல்ல சங்க இலக்கியங்களிலும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன என்பதை எடுத்தியம்புவதாக இவ்விடுகை அமைகிறது. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.
“ நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ- தோழி- நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிறல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூர்ப் பூநாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?'
குறுந்தொகை-373
மதுரைக் கொல்லன் புல்லன்
அலர்மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.
(அலர் என்பது தலைமக்களின் காதலை ஊர்ப்பெண்டிர் புறம்பேசுதல்)
தலைவன் மீது தலைவி கொண்ட காதல் உறுதி வாய்ந்தது. அதனை வெவ்வாய்ப் பெண்டிரின் அலர் மொழியால் அழித்துவிடமுடியாது என்று கலங்கிய தலைவியிடம் கூறினாள் தோழி.
“நிலம் கீழ்மேலாகப் பெயர்ந்தாலும்
நீரின் தட்பம் நெருப்பிற்கும்
நெருப்பின் வெப்பம் நீருக்குமாக மாறினும்
பெரிய கடல் வற்றி எல்லை தோன்றினாலும், அலர் பேசும் பெண்டிரின் அலர்மொழியால் உன் காதல் அழிந்துபோகாது.
கடிய பற்களையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஊகம் என்னும் குரங்கு பலாப்பழத்தைத் தோண்டுதலால் காந்தள் மணம் வீசும் ஊரெங்கும் பலாப்பழத்தின் மணம் வீசும். அத்தகைய நாடனானான தலைவனோடு நீ கொண்ட நட்பு வெவ்வாய்ப் பெண்டிர் பேசும் அலர் மொழியால் அழியாது கவலைப்படாதே!
என்று தேற்றுகிறாள் தோழி.
அகச்செய்திகள்.
1.தலைவன் மீது தலைவி கொண்ட காதலை ஊரார் அறிந்து தூற்றுவதால் கலங்கிய தலைவியிடம் தோழி இயற்கை, தன்னிலை மாறினாலும் நீ தலைவன் மீது கொண்ட காதல் அழியாது என்று காதலின் ஆழத்தை உணர்த்துகிறாள்
2.குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால் மணம் ஊரெங்கும் வீசியது என்ற குறிப்பால் தலைமக்களின் காதலை ஊரார் அறிந்தமையும் அதனால் தலைவியின் பெற்றோர் அறிந்தமையும் உணரமுடிகிறது.
3.கருங்குரங்கு பலாவினைத் தொடுதல் கண்டு அதனைக் காப்போர் குரங்கினை விரட்ட முற்படுவர். அதுபோல தலைவனிடமிருந்து தலைவியைக் காக்க எண்ணிய பெற்றோர் தலைவியை இற்செறிக்க முற்படுவர். அதனால் தலைவி அஞ்சினாள்.
அறிவியல்ச் செய்திகள்
1. நிலம் கீழ்மேலாகப் பெயரும் என்ற உண்மையை சங்கத்தமிழர்கள் அறிந்திருந்தனர். நிலநடுக்கம் குறித்த அறிவு அவர்களுக்கு இருந்ததை இச்செய்தி புலப்படுத்துகிறது.
2. நீரும் நெருப்பும் தன்னிலை மாறும் என்பதன் வாயிலாக கடல்கோள்(சுனாமி), எரிமலை பற்றியும் பண்டைத்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிலாம்.
3. எல்லை காணமுடியாத கடலும் இயற்கையின் சீற்றத்தால் மாற்றத்தால் எல்லை காணும் நிலை வரும் என்ற சிந்தனையும் எண்ணி வியப்பெய்தத் தக்கதாகவுள்ளது.
வியாழன், 26 நவம்பர், 2009
தொடித்தலை விழுத்தண்டினார்.
வாழ்க்கை எவ்வளவு தூரம்…?
கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!
இந்த வாழ்க்கை ஆற்றுநீர்போன்றது சில நொடிகளுக்கு முன் இருந்த நீர் அடுத்த நொடி அங்கு நில்லாது ஓடும் அது போல இளமை நிலையில்லாதது.
இளமைக்காலத்தில் யாருடைய அறிவுரையையும் கேட்பதில்லை மனது.
இளமைக்காலத்தில் செய்வதெல்லாம் சரியென்றே சொல்லும் மனது எதற்கும் அஞ்சுவதில்லை.
வயது முதிர்ந்தபோது இளமைக்கால நிகழ்வுகளெல்லாம் வந்து வந்து போகும்.
மாடு அசைபோடுவது போல இங்கு ஒரு முதியவர் தன் இளமைக்கால அனுபவங்களை அசைபோட்டுப்பார்க்கிறார்.
பாடல் இதோ..
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
பாடலின் பொருள்.
செறிந்த மணலில் செய்த வண்டற்பாவைக்குப் பூவைப்பறித்துச் சூடுவர் இளமகளிர். அந்த மகளிருடன் கைகோத்து அவர்களுடன் தழுவியவழி தழுவியும், அசைந்தவழி அசைந்தும் ஒளிவு மறைவு அறியா இளமைந்தரும் விளையாடுகின்றனர்.
அத்தகைய மைந்தருடன் உயர்ந்த மருத மரம் விளங்கும் நீர்த்துறையில் தாழ்ந்து நீருக்கு மிக அருகில் படிந்த கொம்புகளில் ஏறி கரையிலுள்ளோர் திகைப்பெய்த நீர்த்திவலைகள் சிதற திடும் எனக் குதிக்கின்றனர்.
மூச்சடக்கி நீரின் அடியில் சென்று மணலெடுத்து வருகின்றனர்.
எதையுமே ஆராய்ந்து பார்க்காத இளமைப் பருவம் இரங்கத்தக்கது.
அத்தகைய இளமைப்பருவம் இன்று எங்கு சென்றதோ..?
பூண் செறிந்த பெரிய தடியை ஊன்றியவராயும், நடுக்கமுறுபவராயும், இருமல்களுக்கிடையே
சில சொற்களைப் பேசுகின்ற முதுமையுடையவர்களாகிய எங்களுக்கு அவ்விளமை எங்கிருக்கிறதோ.?
அது இரங்கத்தக்கது.
இப்பாடல் வாயிலாக அறியப்படும் உண்மைகள்.
1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெற்ற “தொடித்தலை விழுத்தண்டு என்னும் தொடரின் சிறப்புக் கருதி இப்புலவர் “தொடித்தலை விழுத்தண்டினார் என்றே அழைக்கப்படலானார்
3. செறிந்த மணலில் செய்த வண்டற்பாவைக்குப் பூவைப்பறித்து சூடி இளமகளிர் விளையாடும் பாவை விளையாட்டு பற்றி அறியமுடிகிறது.
3. கையற்றுப் புலம்புவது கையறுநிலையாகும். இப்பாடலில் இளமை கடந்து போனதால் இம்முதியவர் கையற்றுப் புலம்புகிறார். கையறுநிலை என்னும் துறையும் விளக்குதாகவும் இப்பாடல் விளங்குகிறது.
செவ்வாய், 24 நவம்பர், 2009
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..
காதலித்துப் பார்
நிமிசங்கள் வருசமென்பாய்
வருசங்கள் நிமிசமென்பாய்!
என்பார் வைரமுத்து.
நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீயென்னை நீங்கிச்சென்றாலே..!
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீயென்தன் பக்கம் நின்றாலே…!
என்று காதல் தேசம் என்னும் படத்தில் அன்பே அன்பே என்றபாடலில் வரிகள் இடம்பெறும்.
இந்த சிந்தனையை இன்றைய பல திரைப்படப்பாடல்களிலும் பலவாறு கேட்கமுடிகிறது.இந்த சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்த குறுந்தொகைப்பாடல் இதோ...
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“
குறுந்தொகை-57 சிறைக்குடி ஆந்தையார்
(தலைவியின் காதலை அவள்தம் பெற்றோர் அறிந்ததால் இற்செறித்தனர். அந்த காவல் மிகுதியில் தலைவனைச் சந்திக்க இயலாத ஆற்றாமையில் வருந்திய தலைவி தன் துன்பத்தைத் தோழியிடம் இவ்வாறு தெரிவிக்கிறாள்.)
நீர்வாழ்ப்பறவை அன்றில். ஆணும் பெண்ணுமாக ஒன்றையொன்று பிரியாமல் வாழ்வன.
தமக்கிடையே பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலஅளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன. அந்தப் பறவைகள் போல ஓருயிர் இரு உடல்களாக நானும் தலைவனும் வாழ்கிறோம்.
தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓருடலில் வாழும் இழிவு ஏற்படும்.
அதற்குத் தலைவன் பிரிந்தவுடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.
இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.
அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..
இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.
அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..
இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
சொற்பொருள் விளக்கம்
இருவேம் - இருவரும் சேர்ந்தே தோன்றுவோம்
காமம் - மெய்யுறு புணர்ச்சி, அன்பின் மிகுதி
தண்டாக்காமம் - அடங்காத காமம்
திங்கள், 23 நவம்பர், 2009
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..
பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?
பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…
ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.
(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)
“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“
(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)
சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.
· பாம்பு தோற்றத்தால் அழகிய கோடுகளை உடையதாயினும் செயலால் மிகவும் கொடியது.
· பெண் அழகிய தோற்றம் உடையவளாயினும் உயிரைக் கொல்லும் உணர்வுகளைத் தூண்டக்கூடியவள்.
· பாம்பு தன் பற்களில் கொண்ட விசத்தன்மையால் அடுத்தவரைத் துன்புறுத்தும்.
· பெண் சிரிப்பு என்னும் முறுவல் குறிப்பால் காண்போர் நெஞ்சை வருத்தும் இயல்பினள்.
· பாம்பின் குட்டி தீண்டினால் உடலெங்கும் விசம் பரவும்.
· பெண்னைப் பார்த்தல், அவள் உடல் தீண்டுதல் ஆகியவற்றால் ஆணின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதனால் பெண்வழிச் சேரலில் ஆண் தன் வாழ்க்கையைத் தொலைக் நேரிடும்.
இவ்வாறு பாம்புக்கும், பெண்ணுக்கும் பல ஒற்றுமைகளைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் இருக்கும் ஈர்ப்பே மனித இனம் வளர்ச்சி பெறக் காரணமாகிறது.
இந்த ஈர்ப்பு மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.
காதல் - அன்பு - ஈர்ப்பு ஆகியவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாகும்.
இந்த வேதியியல் மாற்றங்களால் ஆணும் பெண்ணும் தன் வாழ்வியல் நெறிகளில் பிறழ்ந்துவிடக்கூடாது என்று பல வழிகளில் நம்முன்னோர் அறிவுறுத்தினர்.
அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே..
சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே
என்று அறிறுத்தினர்.
சீறும் பாம்பு யாரைப் பார்த்துச் சீறினாலும்
தன்னைப் பார்த்துச் சீறுவதாகவே நம்ப வேண்டும்!
சிரிக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரித்தாலும்
ஒரு நொடிப் பொழுது யோசிக்க வேண்டும்……
ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!
பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!
புதன், 18 நவம்பர், 2009
இரும்பிடர்த்தலையார்
தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்துறையையும் விளக்குவதாக இவ்விடுகை அமைகிறது.
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடிய புறநானூற்றுப்பாடலில் எடுத்தாளப் பெற்ற “இரும்பிடர் தலையிருந்து“ என்னும் தொடரால் “ இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார்.
நிலம் பிறழ்ந்து பெயர நேர்ந்தாலும் உன் ஆணையாகிய சொல்லில் மாறாதே என்று மன்னனுக்குப் புலவர் அறிவுறுத்தியதால் இப்பாடலின் துறை “செவியறிவுறூஉ“ ஆயிற்று.
பாடல் இதோ,
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
பாடலின் பொருள்.
முழு மதியின் வடிவத்தைப் போல விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை!
அது நிலைத்த கடற்பரப்பை எல்லையாக உடைய நிலத்தை, நிழல் செய்யவும் காவலாக அமைத்த முரசு, இழும் என்னும் ஓசையுடன் முழங்கவும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தியவர் பாண்டியர்!
அருளுடைய நெஞ்சமும் குறையாத ஈகையும் கொண்டவர். அத்தகைய பாண்டிய மரபிலே வந்தவனே!
குற்றமற்ற கற்பினையுடைய சேயிழையின் (மனைவி, பெண்) கணவனே!
பொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளியையுடைய நெற்றியையும் நெருங்க முடியாத வலிமையையும் மணம் வீசும் மதநீரையும், கயிற்றால் கட்டிய கவிழ்ந்த மணிகள் பொருந்திய பக்கங்களையும் பெரிய துதிக்கையையும் கொண்டது உனது யானை!
அது தன் தந்தங்களையே போர்க்கருவியாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தும்!
அத்தகைய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து கூற்றுவனைப் போல, பகைவர் மீள வழியின்றி வீழ்த்தும், ஒளி வீசும் வாளைக் கையில் கொண்டவனே!
பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த காலும், பூசப்பட்டு உலர்ந்த சந்தனத்துடன் குறுக்கே அகன்ற மார்பையும் கொண்டவனே!
நீரில்லாத அரிய நில வழிகளில் மறவர்களின் அம்புக்கு இலக்காகி இறந்தவர்களின் அடையாளமாக அங்கு கற்குவியல்கள் காணப்படும். அதன் மீது திருந்திய சிறகினையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து அமர்ந்து வருந்தும்.
உன்ன மரங்கள் வளர்ந்து பிரிந்து செல்லும் வழிகள் விளங்கும்.
இத்தகைய வழிகளைக் கடந்து உன்னிடம் பொருள் பெறும் எண்ணத்துடன் இரவலர் வருவார்கள். அவர்களின் மனக்குறிப்பை முகக்குறிப்பாலேயே உணரும் திறன்கொண்டவன் நீ என்பதால் உன்னை இரந்து வேண்டுவர்.
அதனால் நிலமே பெயர்வதாயினும் உன் ஆனையாகிய சொல் மாறக்கூடாது. என்று மன்னனிடம் இந்தப் புலவர் அறிவுறுத்துகிறார்.
இப்பாடலின் வழி அறியாலுகும் உண்மைகள்
1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத நிலையில் இப்பாடலில் இடம்பெறும், “இரும்பிடர்த் தலையிருந்து“ என்னும் தொடரால் இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து புலப்படுகிறது.
2.எமனிடமிருந்து உயிர்கள் பிழைப்பது அரிது என மக்கள் எண்ணுவர். அது போல பாண்டியனிடமிருந்து பகைவர் பிழைத்தல் அரிது. என்ற கருத்தின் வழியாக பாண்டியனின் வீரம் உணர்த்தப்படுகிறது.
3.யானையின் வீரத்தையும், அதன் மீது அமர்ந்து போர்செய்யும் பாண்டியனின் வலிமையையும் கூறுவதால், பாண்டியனின் படைச்சிறப்பும், அதை வழிநடத்தும் ஆற்றலும் சுட்டப்படுகிறது.
4.நீரில்லாத பாலை வழியே வரும் மக்களை அம்பெய்து கொல்லும் ஆறலைக்கள்வர்கள் இறந்த உடல்களின் மீது கற்களைக் குவியல்களாகப் போடுவர். வழிச்செல்வோர் “வம்பலர்“ என்றழைக்கப்படுவர். அவர்கள் மீது இடப்பட்ட கற்க்குவியல் ஆதலால் அதை “வம்பப் பதுக்கை“ என்று அழைத்தமையும் அறியமுடிகிறது.
5.“முன்னம் முகத்தின் உணர்ந்து“ என்னும் தொடர் வழியாக,உன்னம் என்ற மரம் தழைத்தலும், கரிந்து நிற்றலும் சகுனங்களாகும் என்ற சங்க கால நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளலாம்.
6.பாலை நிலத்தின் கொடுமையும், ஆறலைக்கள்வர்களின் கொடுமையும், அந்நில வழியே பல துன்பங்களைக் கடந்து பாண்டியனை நம்பி வரும் இரவலர்களின் வறுமையும் குறிப்பிடும் புலவர், இரவலர்களின் மனக்குறிப்பை அவர்களின் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டு கொடையளிக்கும் தன்மையுடையவன் பாண்டியன் என்று கூறுவதால் பாண்டியனின் கொடைத்திறனும் சுட்டப்பட்டது.
7.நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்..
என்று பாண்டியனின் செவிகளில் புலவர் அறிவுறுத்துகிறார். இதன் வழி இரவலர் உன் மீது கொண்ட நம்பிக்கையும்,உன் செங்கோலும் வழுவாது ஆடசி செய்தல் வேண்டும் என்ற அறிவுத்தல் புலனாகிறது....
மேலும் நிலம் பெயரும் (நிலநடுக்கம் ஏற்படும்) என்ற சங்க கால மக்களின் எண்ணத்தையும்,
அவ்வாறு நிலம் பெயர்ந்தாலும் தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற சங்ககாலமக்களின் ஆழ்ந்த கொள்கையையும் எண்ணிப்பெருமிதம் கொள்வதாக இப்பாடல் அமைகிறது.
செவ்வாய், 17 நவம்பர், 2009
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
எமன் என்னும் கற்பனை மக்களிடம் நீண்ட நெடிய காலமாகவே இருந்து வருகிறது. எமன் என்பவன் மக்களின் உயிரை வாங்கும் தெய்வம். எருமை வாகனத்தில் வருவான். இவனுக்கு காலன், கூற்றுவன் என வேறு பெயர்களும் உண்டு. சங்க இலக்கியத்தில் எமனைப் பற்றி பல பாடல்கள் பலவிதமாகப் பாடப்பட்டுள்ளன. புறநானூற்றில் எமனின் இரங்கத்தக்க நிலையை நப்பசைலையார் சுவைபடக் கூறியுள்ளார்.
பாடல் இதோ,
“செற்றன்று அயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும் - பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே“.
புறநானூறு.226
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கி்ள்ளி வளவனை மாறோகத்து நப்பசலையார் பாடியது
கூற்று என்னும் கால இறுதி பயக்கும் தெய்வம், எல்லா உயிர்களின் உயிரையும் எளிதில் எடுத்துவிடலாம்.
ஆனால் கிள்ளிவளவனின் உயிரைமட்டும் எளிதில் எடுத்துவிடமுடியாது.
கிள்ளி வளவன் மீது பகை கொண்டாலும்
சினம் கொண்டாலும்
அவனிடமிருந்து பிழைத்தல் அரிது.
பாடுநர் போல வந்து தொழுது அவனிடம் கொடைப் பொருளாக வேண்டுமானல் அவன் உயிரைப் பெறலாம். அதனால் பொன்னால் செய்த மாலையையும், போரில் எதிர் நின்று வெல்லும் படையினையும், நல்ல தேரையும் கொண்ட சோழனின் உயிரை வவ்வ வேறு வழியே இல்லை.
இப்பாடலில் கூற்றுவன் என்னும் எமன் சோழனின் உயிரை செற்றோ ( பகை கொண்டோ) செயிற்றோ ( சினம் - கோபம் - வெகுளி கொண்டோ) பெற முடியாது மாறாக., பாடுநர் போல வணங்கி உன் உயிரைத் தா என்று கேட்டால், கொடை என்று மனமகிழ்ச்சியோடு ஈந்துவிடுவான் என்கிறார் புலவர்.
இப்பாடலில் கிள்ளிவளவனின் வீரமும், கொடைத்திறமும் சிறப்பித்துப் பேசப்படுகிறது.
எமனே நெருங்க அஞ்சும் வீரமுடையவன் சோழன் என்றும்,
பாடுநர் போல வணங்கிக் கேட்டால் தன் உயிரைக் கூடத் தந்து விடுவான் என்பதால் அவன் கொடைத்திறமும் உணர்த்தப்பட்டது.
எமன் என்னும் கடவுள் குறித்த நம்பிக்கை சங்ககாலத்திலிருந்து இன்று வரை இருக்கிறது.
நம்பிக்கை மட்டுமே இருக்கிறது
இப்பாடலில் வளவனின் வீரத்தையும், கொடையையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதே புலவரின் நோக்கம். அதற்கு மக்கள் அஞ்சும் உயர் குறியீடாகவுள்ள கூற்றுவனை எடுத்துக்கொணடார்.
திங்கள், 16 நவம்பர், 2009
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்
பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற்கான எந்த அடையாளமும் இன்றியே உள்ளன. இன்றைய குழந்தைகள் பெயரால்
டமிலனின் குழந்தைகளாக, மணிப்பிரவாளக் குழந்தைகளாக உள்ளன.
தமிழில் இல்லாத பெயர்களா..?
சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் 473 பேர் ஆவர்.
இவர்களின் பெயர் அகர வரிசையில் பெற இங்கு அழுத்தவும்.
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -1
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -2
தமிழகம்
தமிழ்மக்கட்பெயர்
களஞ்சியம்
அழகுத்தமிழ்ப் பெயர்கள்
தமிழ்ப் பெயர்கள். ( பெண் )
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது தமிழ் மரபின், பண்பாட்டின் நீட்சி.......
சனி, 14 நவம்பர், 2009
கூகைக்கோழியார்
இலக்கை இயம்புவதே இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையுமே இலக்காக இயம்பியுள்ளன.
அறவழியே பொருளைத் தேடி அதை இன்பத்துக்குச் செலவழித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக உள்ளது.
அறவழியே தேடுவதே பொருள்
அந்தப் பொருளை இன்பத்திற்கே செலவழிக்க வேண்டும்.
அப்போது வீடுபேறு தானே கிடைக்கும்.
இன்பம், வீடுபேறு (சொர்க்கம்)
சிற்றின்பம், பேரின்பம் என இன்பம் இருவகைப்படும்.
நமக்குத் தோன்றும் சுயநல ஆசைகள் யாவும் சிற்றின்பங்களே.
வீடு பேறு அடைய எண்ணுவதே பேரின்பம்.
சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.
நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…
சொர்க்கம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு குறியீடு.
நரகம் என்பது மக்களை அச்சுறுத்தி நல்வழிப்படுத்தும் முயற்சி.
இன்பம் என்பது யாது?
கொடுத்து மகிழ்தலே இன்பம்.
அடுத்தவருக்குக் கொடுத்து அவரின் முகமலர்ச்சி காண்தலே இன்பம்.
இறந்த பின்பு சொர்க்கம் சென்று அங்கு கொடுத்து மகிழமுடியாது என்று அறிவுறுத்துகிறது இப்பாடல்,
'வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே
364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
(புறநானூறு)
பாடலின் பொருள்
வாடாத பொன்மாலையை பாடினி அணியவும்,
நீர்நிலையில் பூக்காத எரிபோலும் பொற்றாமைரை மலரை பாணன் பெற்று மகிழவும்,
கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்தி அதன் ஊனை தீயிலிட்டுச்சுட்டு, அந்த சுவையான ஊன் உணவை கள்ளோடு இரவலர்க்கு இட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்வோம் அதுவே இன்பம் வா..
என்று அரசனைப் புலவர் அழைப்பதாக இப்பாடல் அமைகிறது.
(அரசன் பாடினிக்குப் பொன்மாலையும், பாணனுக்கு பொற்றாமரையும் பரிசில் தந்து கள்ளும் ஊன் உணவும் கொடுதது மகிழ்விப்பது மரபாகும்)
(ஈத்துவக்கும்) கொடுத்து மகிழும் இன்பத்தின் இன்றியமையாமையை,
மறப்போரைச் செய்பவனே, முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து கேட்போர் அஞ்சத்தக்க குரலில் கூகை என்னும் பேராந்தை கூவ,
பிணங்களை இட்டுவைக்கும் ஈமத்தாழிகள் நிறைந்த சுடுகாடு சென்றபின்னர் கொடுத்து மகிழும் இவ்வின்பம் கிடைக்குமா..?
அதனால் உயிரோடு இருக்கும் இல்வாழ்க்கையிலேயே கொடுத்து அடுத்தவர் மகிழ்வதைப் பார்த்து இன்பம் காண் என்கிறார் புலவர்.
வாழ்க்கை நிலையில்லாதது!
கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!
என்ற கருத்தை எடுத்தியம்பிய இப் புலவரின் பெயர் கிடைக்கவில்லை.அதனால் இப்பாடலில் சிறந்த தொடராக அமைந்த கூகைக் கோழி என்பதே இவருக்கு கூகைக்கோழியார் என்று பெயர் தோன்ற காரணமானது…
வெள்ளி, 13 நவம்பர், 2009
கொல்லிப்பாவை.
பாவை என்ற சொல்லுக்கு பொம்மை என்று பொருள் உண்டு. கொல்லிப்பாவை பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. அவற்றை எடுத்தியம்புதாக இவ்விடுகை அமைகிறது.
கொல்லிமலை வல்வில் ஒரி என்னும் வள்ளலுக்கு உரியது. காரி என்பவன் ஓரியை வென்று அம்மலையைச் சேரனுக்கு ஈந்தான். இம்மலையின் மேற்குப்பகுதியில் சூரியஒளிபடுமாறு மேற்கு நோக்கியவாறு தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது. இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்பட்டது. அழியாத அழகுடைய தலைவிக்குக் கொல்லிப்பாவையை உவமையாகப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.
சான்று-1
களவுக்காலத்தில் தாம் வரும் பாதையின் துன்பம் எண்ணி அஞ்சிய தலைவியிடம் தலைவன்,
“பயன்மிக்க பலா மரங்களைக் கொண்ட கொல்லிமலையின் மேற்குப் பகுதி சார்ந்த மலையிடத்தே முன்பு தெய்வத்தாலே வடிவமைத்து வைக்கப்பட்ட புதிய வகையில் இயங்குகின்ற பாவையானது, விரிந்து பரவும் சூரியனது வெயிலிலே தோன்றி நின்றது போன்ற உன் அழகிய நலம் கருதி வருவேன்.
அவ்வாறு வரும்போது உன் உடம்பிலிருந்து பரவும் ஒளியே எங்கும் பரவி இருளைப் போக்கும் நீ அஞ்ச வேண்டாம் என்கிறான்.இதனை,
'பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.
(நற்றிணை-192-8-12.)
என்ற பாடலடிகள் விளக்கும்.
சான்று-2
கொல்லி மலையிலே கலை வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ?
படைத்தல் தொழில்வல்ல அயனால் நல்ல மகளிருடைய உறுப்புகள் எல்லாம் ஒரு சேரக்கொண்டு படைக்கப்பட்டவளோ?
அன்றி ஆடவரின் மேலுள்ள வெறுப்பாள் தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி மறைத்து பெண் வடிவு கொண்டு வந்த கூற்றமோ..?
என்று தலைவியின் அழகு நலத்தை வியக்கிறான் தலைவன். இதனை,
“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“
(கலித்தொகை-56-6-9)
அடிகளின் வழி அறியலாம்.
சான்று-3
பாங்கர் கூட்டத்தில், தலைவி பெறுதற்கரிய காவலையுடையவள். அவளை எண்ணி நீ வருந்துவதில் எந்தப் பயனுமில்லை என்று தலைவனை நோக்கிப் பாங்கன் உரைத்தான். அதற்குத் தலைவன்,
“ எக்காலத்தும் அழியாத கொல்லிப்பாவை போல என்னுள்ளத்தே தங்கினாள் தலைவி, அவளை எவ்வாறு மறத்தல் கூடும்? என்று கேட்கிறான் தலைவன்.
இதனை,
5 செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10 பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.
பரணர்
(நற்றிணை-201-5-12)
என்னும் அடிகள் உரைக்கும்.
மேலும்
“பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6)
“நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6)
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6)
“ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2)
என்னும் அடிகள் வாயிலாகவும் தலைவியின் அழகு நலம் கொல்லிப்பாவையேடு ஒப்பிட்டமை உணரலாம்.
இன்றைய நிலையில்..
கொல்லிப்பாவை காவல் தெய்வம் என்றும், கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது.
மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங் களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு "கொல்லிமலை' என்று பெயர் வந்ததாக அந்த ஊருக்கான பெயர்க்காரணம் உரைக்கப்படுகிறது.
சங்கத் தமிழரிடமிருந்த நம்பிக்கை இன்று வரை தொடர்ந்து வருவது வியப்பிற்குரிதாகவே உள்ளது. இந்நிலையில் இதிலுள்ள உண்மையை நோக்கும் போது மக்களின் நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது. கொல்லிப்பாவையால் யாரும் கொல்லப்பட்டதற்கான குறிப்புகளை எங்கும் இல்லை..
ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு. உயிர் அந்தப் படைப்பில் இருப்பதில்லை.
நம் அழகுணர்வு மட்டுமே அங்கு உள்ளது.
அது போல சங்ககாலத்தில் கொல்லிமலையில் உருவாக்கபட்ட பாவை என்னும் பொம்மையோ, சிற்பமோ மிகவும் அழகாக இருந்திருத்தல் கூடும். அந்த அழகு மீண்டும் மீண்டும் எண்ணத்தக்கதாக இருந்திருக்கும்.அதனால் பல கற்பனைக் கதைகளும் வழிவழியாக வழக்கில் வந்து இன்றைய சூழலில் ஒரு தெய்வமாக வழக்கில் உள்ளது.
செவ்வாய், 10 நவம்பர், 2009
சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்
இசை உயிர்களை இசைய வைப்பது. இசைக்குள் எல்லா உயிர்களும் அடங்கும். இசைமருத்துவம் என்னும் துறை இன்று வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாகும். இசையால் இரத்த அழுத்தம் முதல் நரம்பியல் தொடர்பான நோய்கள்கூட குணமாகின்றன என்று இன்றைய அறிவியல் உரைக்கிறது.
நியூரான்களின் தொகுப்பே மூளை. இசையால் உண்டாகும் மின்னலைகள் உடலில் உள்ள உயிர்வேதி மின்னலைகளுடன் ஒத்துப்போகின்றன. அதனால் உடலில் பல மாற்றங்கள் உருவாகின்றன. இந்த மாற்றத்தையே நாம் இசைதல் என்கிறோம்.
சங்ககால இசையறிவு
சங்ககால மக்கள் இசைத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சிப்பண், பாலைப்பண், மருதப்பண், படுமலைப்பண், விளரிப்பண், காமரப்பண், ஆம்பல் பண் எனப் பல்வேறு பண்களையும் காலை, மாலை எனப் பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர். நரம்பு, துளை, தோல,; கஞ்சம் என நான்கு வகையான இசைக்கருவிகளோடு குரலாலும் இசைத்து மகிழ்ந்தனர்.
இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின் வழி புள்ளினங்கள், விலங்கினங்கள் இசைக்கு மயங்கிய தன்மைகளையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.. யானை யாழோசைக்குக் கட்டுப்பட்டதை,
‘காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தாங்கியாங்கு’ (கலித்தொகை-2-26-27)
யானைப் பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானைகூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கியமை புலப்படுத்தப்படுகிறது.
செந்நாய்க்கு அஞ்சிய கலைமான் இன்னிசை கேட்டு அச்சம் நீங்கியதை,
‘ செந்நாய் வெரீஇ புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீர்இடை’ அகநானூறு-219-13-16
இவ்வடிகள் உணர்த்தும்.
செந்நாய்க்கு அஞ்சிய கலைமான், விளாம்பழ ஓட்டின் துளை வழியே வரும் வெப்பமான காற்று இனிய ஓசையோடு வருவதைக் கேட்கிறது. அவ்வோகை கோவலரின் குழலோசை என்றே கருதுகிறது. அதனால் அச்சம் நீங்குகிறது என்பர் கயமனார்.
இசையின் இனிமையில் மயங்கிய கிளிகளைப்பற்றி,
‘படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’ குறுந்தொகை-291-2-4
இப்பாடல் சுட்டுகிறது. தினைகளில் விழும் கிளிகளை விரட்டச்சென்றாள் ஒரு தலைவி. குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். அங்கு வந்த கிளிகளோ குளிர் என்னும் இசைக்கு மயங்கின. தலைவியின் குரலைத் தம் இனத்தின் குரலே என்று எண்ணிய கிளிகள் வேறிடம் செல்லாது அங்கேயே தங்கின. அதனால் வருந்திய தலைவி அழுதனள் இதையே இப்பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில் இசைக்கு கிளிகள் மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.
அசுணமா என்னும் உயிரியை யாழிசைத்து வரவழைப்பதையும் பின் அதனைப் பறையறைந்து கொன்றதையும் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்தறிவு உயிரினங்களையே மயக்கும் இசை ஆறறிவு படைத்த மனிதனை மேலும் மயக்குவதாக இருந்தது. மனிதன் தான் விரும்பிய இசையை மீண்டும் மீண்டும் இசைத்து மகிழ்ந்தான்.
கொடிய மனம் கொண்ட ஆறலைக்கள்வரையும் மயக்கும் தன்மை இசைக்கு இருந்தது என்பதை
“ஆறலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை (பொருநர்-21-22)
என்பர் முடத்தாமக்கண்ணியார்.
புறவாழ்வில் போரில் இசை பெரும்பங்கு வகித்தது. போரின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிப்பதே இசையாக இருந்தது. போரில் எந்த நாட்டு மன்னன் வெற்றிபெறுகிறான் என்பதைத் தெரியப்படுத்துவது இசையே. வென்ற மன்னன் தோற்ற மன்னனின் முரசைக் கிழிப்பதை மரபாகக் கொண்டிருந்தான்.அரண்மனையில் முரசுகட்டில் இருந்தது.
போரில் முழங்கும் முரசு வீரர்களின் மனதில் ஊக்கத்தை அளிப்பதாக இருந்தது. சான்றாக,
“ பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அது போர் என்னும் என்ஐயும் உளனே’ புறநானூறு-89-7-9
இவ்வடிகளில் காற்றின் காரணமாக ஒலியெழுப்பியது தண்ணுமை. அவ்வொலி போரின் அறிவிப்பொலியே என்று ஐயம்கொண்ட வீரனின் நிலை சுட்டப்பட்டுள்ளது.
இதனால் இசை அக்காலத்தில் எந்த அளவுக்கு மனதில் ஊக்கத்தையும் சிந்தனையையும் தூண்டுவதாக அமைகிறது என்பது புலனாகும்.
சங்க இலக்கிய இசை மருத்துவக் கூறுகள்.
சங்கப் பாடல்கள் சுட்டும் பல கருத்துக்கள் இன்றைய இசைமருத்துவம் சுட்டும் கூறுகளுடன் ஒத்துப்போகின்றன. இதனை
“தீம்கனி இரவமொடு வேம்பு மனை செரீ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
இசைமணியெறிந்து காஞ்சிபாடி“ புறநானூறு-281-1-5
இப்பாடலில் போரில் புண்பட்ட வீரனின் புண்னை ஆற்றவும் அவன் வலியின்றி இருக்கவும் காஞ்சிப்பண் பாடியமை சுட்டப்படுகிறது.
இசை வலியைக் குறைக்கும் என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்தமை இதனால் அறியலாம் . இதனை மேலும் ஒரு சான்று வாயிலாகவும் அறியமுடிகிறது.
“ கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க் காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்’ மலைபடுகடாம்-302-304.
இவற்றால் உடலில் ஏற்பட்ட வலி குறைய பழந்தமிழர்கள் இசையை மருந்தாகப் பயன்படுத்தியமை புலனாகிறது.
வள்ளைப்பாட்டு
குறமகளிர் தினை குற்றும் போது பாடும் பாடல் வள்ளைப்பாட்டு ஆகும்.
இதனை,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளை (மலைபடுகடாம்-343)
பாவடி உரல பகுவாய்வள்ளை (குறுந்தொகை-89-1)
ஆகிய அடிகள் உணர்த்தும். வள்ளைப்பாட்டு என்பது மகளிரின் மன அழுத்தம் நீக்கும் ஒருவகையான இசைமருத்துவமாகவே அறியமுடிகிறது.
வெறியாட்டு
தலைவியின் உடல்வேறுபாடு கண்டு நிகழ்த்தப்படும் வெறியாட்டு ஒரு வகையான இசைமருத்துவமாகவே அன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதனை,
‘கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடுஅணி அயர்ந்த அகன் பெரும்பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐது அமை பாணிஇரீஇ’ (அகநானூறு-98-14-17)
‘அருங்கடி வேலன் முரகொடு வளைஇ
அரிக்கூட்டு இன்னியம் கறங்க’ (மதுரைக்காஞ்சி611-612)
இவ்வடிகள் வழியாக வெறியாட்டில் இசை மைய ஆற்றலாக விளங்கியமை உணர்த்தப்படுகிறது. தன்னைப் பற்றி ஊரார் பேசும் அலரால் ஏற்பட்ட மன அழுத்தமே தலைவியின் உடல்வேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணமாகும்.இசை இந்த மனஅழுத்தத்தைப் போக்குவதாக அமைகிறது
நிறைவுரை..
• மக்களுக்கு வரும் நோய்களை உடல் தொடர்பானவை, மனம் தொடர்பானவை என இருநிலைகளில் பகுக்கலாம். மனம் தொடர்பான நோய்கள் மன அழுத்தம் காரணமாகவே தோன்றுகின்றன. உடல் தொடர்பான நோய்கள் பலவிதங்களில் வருகின்றன.
• இசை இவ்விருவகை நோய்களுக்கும் தக்க மருந்தாக அமைகிறது. மன அழுத்தம் நீங்கி மனதைத் தன்வயமாக்கும் ஆற்றல் கொண்டதாக இவ்விசை விளங்குகிறது.
• இசை உடலில் உள்ள உயிர்வேதி மின்லைகளோடு ஒத்துப்போவதால் புத்துணர்வளிப்பதாகவும் இசை அமைகிறது. இதனை இன்றைய மருத்துவவியலார் நன்கு உணர்ந்துள்ளனர். மேலை நாடுகளில் மிகவும் புகழ்பெற்றதாக இந்த இசை மருத்துவ முறை விளங்குகிறது. சங்ககாலத்திலேயே இசையின் தன்மையை உணர்ந்து சங்ககாலமக்கள் பயனறிந்து இசைத்து மகிழ்ந்தமை இலக்கியங்கள் வழி அறியும் போது வியப்பாக உள்ளது.
• பாகனுக்கு அடங்காத யானை யாழிசைக்கு அடங்கியதையும்,
• கிளிகள் யாழிசைக்கு மயங்கியதையும்,
• அசுணமாவை யாழிசைத்து வரவழைப்பதையும் பறையறைந்து கொல்வதையும், சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன.
• கொடிய மனம் கொண்ட ஆறலைக்கள்வரையும் இசையவைக்கும் தன்மை இசைக்கு இருந்தது என்ற சங்ககால மக்களின் இசையறிவு இசையின் பயனை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதையே உணர்த்துகின்றது.
• போரில் புண்பட்டவர்களுக்கும். வேட்டையாடி புண்பட்டவர்களுக்கும் இசை இசைத்து அவர்களின் வலிபோக்க எண்ணியமை பாடல்கள் வழி அறிகிறோம். இசை காயத்தை ஆற்றும், வலியைக்குறைக்கும் என்ற அவர்களின் இசைமருத்துவ அறிவு எண்ணி இன்புறத்தக்கது.
• வெறியாட்டு, வள்ளைப்பாட்டு ஆகிய இரண்டும் சங்க காலப் பெண்டிரின் மன அழுத்தம் நீக்கும் அடிப்படைக் காரணியாகத் திகழ்ந்தமை சங்கப்பாடல்கள் வழி அறிகிறோம். இவ்விரு நிகழ்வுகளிலும் இசை மைய ஆற்றலாக விளங்குகிறது.
சங்க கால மக்கள் இசையின் பயனை நன்கு அறிந்திருந்தனர். அதனை தம் வாழ்வில் ஒரு கூறாக போற்றினர் என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்கள், புள்ளினங்கள் கூட இசைக்கு மயங்கும் என்ற குறிப்புகள் வழி அக்கால மக்களின் இசைநுகர்ச்சியை அறியலாம். இசை நோயைக் குணப்படுத்தும், வலியைக் குறைக்கும் என்ற அவர்களின் சிந்தனை அவர்களின் இசைமருத்துவ அறிவை உணர்த்துவதாகவே உள்ளது.
வெள்ளி, 6 நவம்பர், 2009
பசிப்பிணி மருத்துவன்..
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (குறள்-734)
பசி, பிணி(நோய்), பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு என்பர் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே எல்லோருக்கும் தோன்றும் கேள்வி..
சங்க காலத்திலும் பசியிருந்தது…
பசி என்னும் வயிற்றுத் தீயை தணிக்கும் நீராக அக்கால அரசர்கள் இருந்தார்கள்.
வறுமையும் புலமையும் சேர்ந்தே பிறந்ததால் பசியோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இரவலர்களுக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர்களாக அக்கால மன்னர்களும் வள்ளல்களும் விளங்கினர்..
இரவலர்களுக்கு புரவலர்கள் உணவளித்துப் பசியைப் போக்கியதையே ஆற்றுப்படை இலக்கியங்கள் இயம்புகின்றன. இரவலர்களின் பசிப்பிணியைப் போக்கியதால் புரவலன் “பசிப்பிணிமருத்துவன்“ என்றழைக்கப்பட்டான்.
பசிப்பிணி மருத்துவர்கள் குறைந்துவிட்டதால் தான் பசி… பசி.. பசி.. என்னும் கூக்குரல் ஓயாது கேட்டுக்கொண்டே இருக்கிறது.
பண்ணனிடத்துப் பரிசில் பெறப்போகும் பாணன், பரிசில் பெற்றுவரும் பாணனை வினவுவது போல அமைந்த புறநானூற்றுப் பாடல் சங்க காலத்தில் பசியின் கொடுமையையும் பசிப்பிணி மருத்துவர்களின் சேவையையும் இயம்புவதாக அமைகிறது.
“மரம் பழுத்துவிட்டால் புள்ளினங்கள் கூடி பழத்தை உண்டு ஆரவாரம் செய்வது இயல்பு. அந்த ஆரவாரரம் போல “ பண்ணன்“ என்னும் வள்ளலின் அரண்மனையில் இரவலர்கள் ஊண் உணவை உண்டு மகிழ்ந்து பேராரவாரம் செய்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.
பழுக்காத மரத்தையும், ஈயாத செல்வரையும் தேடி யாரும் செல்வதில்லையே… இரவலரின் பசிப்பிணியைத் தீர்ப்பவன் பண்ணன் என்பதால் இவ்வொலி கேட்டுக்கொண்டே இருந்தது.
எறும்புகள் மழை வருவதை உணர்ந்து தம் முட்டைகளைச் சுமந்து மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குச் செல்வது போல, உணவுண்ட கையினைக் கொண்டவராக சுற்றத்தாரோடு சிறுவர்கள் சென்றனர். அவர்களைக் கண்டும்,
பசி வருத்தத்தாலும்,
வழி நடந்த வருத்தத்தாலும்,
மென் மேலும் பெருவிதுப்புற்றவர்களாக இருக்கும் இரவலர்கள் (பாணர்கள்) பரிசில் பெற்றுவரும் இரவலர்களைக் கண்டு கேட்டனர்…..
பசி என்னும் நோய் தீர்க்கும் மருத்துவனாகிய பண்ணனின் இல்லம் பக்கமா..? தூரமா..?
பாணர்களின் பசியென்னும் நோயைத் தீர்ககும் “பண்ணன்“ நான் வாழும் நாளையும் சேர்த்து வாழ்வானாகுக என்று பரிசில் பெற்ற பாணனை நோக்கி பெறவிரும்பும் பாணன் வினவுகிறான்..
பாடல் இதோ…
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,“
173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
எல்லா சமயத்தாரும் “விரதம்“ என்னும் பட்டினி கிடப்பதைக் கடைபிடிக்கின்றனர். அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே…!
விரதம் இருப்பதன் உண்மையான நோக்கம் தான் என்ன..?
பசி என்றால் என்ன..?
பசித்தவன் வலி என்ன..?
வயிற்றில் தீ எறிவது போன்ற பசியோடு அவன் படும் பாடு என்ன….?
என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே கடவுளின் பெயரால் விரதம் இருப்பதால் என்ன பயன்..?
நமக்கும் பசிப்பது போலத் தானே பசித்தவனும் வலியுணர்வான் என்பதை உணர்தாலே நாமெல்லாம் பசிப்பிணி மருத்துவர்களாகிவிடுவோம்.
வியாழன், 5 நவம்பர், 2009
உளறிக்கொட்டிய உண்மை…
குற்றவாளிகள் பொய்பேசுகிறார்களா என்று கண்டறிய “ உண்மை கண்டறியும் கருவிகளைப்“ பயன்படுத்துகிறார்கள்….
குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இப்னாடிசம் என்னும் மனவியல் உத்திகளைக் கையாள்கிறார்கள்.
இணைய அரட்டைகளில் பொய்யான நாடு, ஊர், பெயர் என ஏமாற்றும் நிலை அதிகரிப்பதால் அரட்டையடிப்பவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று கண்டறியவதற்கெல்லாம் மென்பொருள்கள் வந்துவிட்டன.
எதிர்காலத்தில் நாம் பார்க்கும் சராசரி மனிதர்கள் பேசுவது உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிவதற்குக் கூட கருவிகள் வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
குழந்தைகள் பொய் பேசுவதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அவர்வளின் கண்களே அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்…
உலகமே நாடக மேடை என்பதால் எல்லோரும் நடிகர்களாகிவிட்டார். எல்லோரும் நடிகர்களாகிவிட்டதல் எல்லோரும் பொய் பேசுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
இவர்களெல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள்..?
தூக்கத்தில் உளறும் போது உண்மைதான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்…
ஏனென்றால் வாய் பொய் பேசும்.ஆழ்மனமும், கண்ணும் உண்மை தான் பேசும்…
இங்கு ஒரு தலைவியின் ஆழ்மனத்திலிருந்த உண்மையை அவள் விழித்திருக்கும் போதே உளறிக்கொட்டிய அழகிய காட்சியை கொள்ளம்பக்கனார் என்னும் சங்கப்புலவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்…
பாடல் இதோ…
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
5 அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
10 பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?
நற்றிணை - 147. குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்
பாடலின் பொருள்….
(தலைவன் தலைவியை மணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி களவுக் (காதல்) காலத்தையே நீட்டிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தோழியோ தலைவன் தலைவியைக் காண அருகே வந்து மறைந்திருக்கும் போது அவன் கேட்குமாறு, தலைவியின் அறியாமையும் அதனால் அவள் காதல் பெற்றோர் அறிந்து கொண்டதையும் உணர்த்தினாள்..
இதனைக் கேட்கும் தலைவன்….
தலைவியின் காதல் அவள்தம் பெற்றோர் அறிந்தால் தலைவி இற்செறிக்கப்படுவாள் (வீட்டுக்காவல்) என்பதை அறிந்து விரைவில் மணம் செய்து கொள்ள முற்படுவான்…)
தலைவி உளறிக் கொட்டிய உண்மை…
தோழி : தோழி….. அன்னை உன்னிடம்,“ அழகிய நெற்றியையுடைய இளமகளே!
இடமகன்ற மலைச்சாரலில் அமைந்தது நம் தினைப்புனம். அதில் வந்தமரும் கிளிகளை விரட்டாது எங்கு சென்றாய்….?
என்று தானே கேட்டாள்.
தலைவி : ஆமாம்..
தோழி : அதற்கு நீ என்ன சொன்னாய்…?
தலைவி : அத ஏன்டி கேட்கிற…
அருவி முழங்கும் மலைநாடனை நான் காதாலும் கேட்டறியேன்.
கண்ணாலும் பார்க்கவில்லை.
மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையில் நீராடவும் இல்லை என்று நடந்த உண்மையை உளறிகொட்டிவிட்டேன்…
தோழி : இவ்வளவு அறியாமை உடையவளாகவா இருப்பாய்..?
நீ இப்படியிருந்தால் நீ எவ்வாறு குடும்பம் நடத்துவாய் என்று ஊரார் பேசமாட்டார்களா..?
சரி! அதற்கு உன் தாய் என்ன சொன்னாள்…?
தலைவி : சினத்துடன்…
தலைகுனிந்தவாறே சென்றுவிட்டாள்..!
தோழி : ஆம்! அவள் என்ன செய்வாள்…
ஊரார் அலருக்கு அஞ்சி தலைகுனிந்து சென்றிருப்பாள்..
இனி நீ “ இற்செறிக்கப்படுவாய்”
இவையெல்லாம் தலைவன் அறிந்து உன்னை விரைவில் மணம் செய்து கொள்ளவேண்டும்.
இப்பாடலில்….
தலைவனைத் தலைவி எப்போதும் மறந்திலள் என்பதனைக் குறிக்க, பொய் சொல்ல வேண்டிய சூழலிலும் உண்மை சொன்னாள் என்பது சுட்டப்பட்டது..
இதில் தலைவியின் காதலின் ஆழம் உணர்த்தப்பட்டது….
பொய் கூற வேண்டிய இடத்தும் உண்மை கூறியதால் அவளின் அறியாமை புலப்படுத்தப்பட்டது.
செவ்வாய், 3 நவம்பர், 2009
2500 ஆண்டுகளாய் தீராத சண்டை…
தெருவில் ஒரு சின்ன பையன் ஒரு சின்னப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து விட்டு ஓடினான். அந்தப் பெண் அவன் பின்னேயே ஓடிச் சென்று அவன் முடியைப் பிடித்து இழுத்தால் இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர் அவர்களைத் தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இது போன்ற காட்சிகளை இன்றும் உங்கள் அருகாமையில் பார்க்கமுடியும்.
2500 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்துக்குச் செல்வோம்….
தலைவன், தலைவியை அவள் பெற்றோர் அறியாது மணம் செய்து கொள்வதற்காக அழைத்துச் செல்கிறான். இதற்கு “உடன் போக்கு“ என்று பெயர். இடைச்சுரத்தில் இவர்களைக் காண்போர் “கண்டோர்“ என்றழைக்கப்பட்டனர். அவர்கள்,
இளமைப்பருவத்தில் இந்த தலைவனும் தலைவியும் நிகழ்த்திய விளையாட்டினை நினைவு கூர்ந்தனர்.
“ தெருவில் விளையாடும் போது, இவளுடைய ஐவகையாக முடிக்கப்பட்ட கூந்தலை இவளறியாதவாறு இவன் பிடித்து இழுப்பான். அதனை அறிந்த இவளோ அவனுடைய முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டே அவன் பின் ஓடுவாள்.“
இவ்வாறு தம்முள் அயலாரைப் போல பகைமை கொண்டு எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் இவர்களை இடைமறித்து இவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அழைத்துச் செல்வார்கள். இனி அந்த சண்டை தீர்ந்தது. இனி இவர்களுக்குள் சண்டையே வராது.
மெல்லிய காம்புகளைச் சேர்த்து, இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையைப் போல இப்போது இவர்கள் ஒரு மாலையில் இணைந்த இரு பூக்கள் போல வாழ நல்வழி காட்டியதால் விதியே நீ நல்லை எனப்படுவாய் என்று தலைமக்களின் தோற்றம் கண்டு கண்டோர் கூறுகின்றர்.
பாடல் இதோ…
229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
மோதாசனார்
இளமைக் காலத்தில் உடம்பால் நீங்காது பகை விளைவித்துக்கொண்டிருந்த இவர்கள் உள்ளத்தாலும் நீங்காதவாறு நட்பு விளைவித்த ஊழ்வினையே நீ நல்லை என்று கண்டோர் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
2500 ஆண்டுகளாகிவிட்டது…..
இன்றும் குழந்தைகளின் சண்டை தீரவி்ல்லை…...
காதல் தீரவில்லை……...
ஊழ்வினை என்னும் விதி பற்றிய நம்பிக்கையும் தீரவில்லை..
தீரவும் தீராது….
இன்னும் 2500 ஆண்டுகள் கழித்தும் இது தொடர்ந்து வரும்..
ஏனெனில்….
குழந்தைகளின் வயது அவர்ளைச் சண்டையிடச் செய்கிறது…
தலைமக்கள் வயது அவர்களைக் காதலிக்கச் சொல்கிறது…
இதைப் பாரக்கும் கண்டோர் வயது…
இதற்குக் காரணம் விதி என்று சொல்ல வைக்கிறது…
ஆம்..
உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே விதி என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
எந்த விலங்கும் காதலுக்காக மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வதில்லை..
மனிதன் மட்டுமே காதலுக்காக உயிரைக் கூடக் கொடுக்கிறான்.
பரிணாம வளர்ச்சியில் மனிதமூளையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணம்..
ஞாயிறு, 1 நவம்பர், 2009
தீண்டாய் மெய் தீண்டாய்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்……….
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
(குறுந்தொகை-27)
பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
(தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது)
என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடல் சங்கஇலக்கியத்தில் இடம்பெற்ற குறுந்தொகை என்பது பலருக்குத் தெரியாது.
இந்தப்பாடலின் பொருள்…
தலைவனின் பிரிவைத் தலைவி ஆற்றாள் என்று வருந்தினாள் தோழி. தலைவியோ நான் ஆற்றியிருந்தாலும் என் அழகு எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாது பசலையால் அழிந்து போகிறதே என்று வருந்துகிறாள்.
“ நல்ல பசுவின் இனிய பால், அப்பசுவின் கன்றும் உண்ணாது, பசுவுக்குச் உரிமையாளர்களுக்கும் பயன்பாடாமல் மண்ணில் சிந்தி அழிந்தது போல, என் அழகு எனக்கும் பயன்படாது என் தலைவக்கும் பயன்படாது பசலையால் விரும்பி உண்ணப்படுகிறதே என்று வருந்துகிறாள் தலைவி.“
இதுவே பாடலின் பொருள்..
இவ்வினிய பாடலே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருமாறியது.
தமிழ்த்திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் நீண்ட நெடிய நாட்களாகவே இருக்கிறது. கண்ணதாசன், வைரமுத்து, தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று…..
வேர் எது?
விழுது எது?
என்ற தெளிவு!
திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..
வேர் சங்க இலக்கியம்
விழுது இன்றைய கவிதைகள்
என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…