பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 3 நவம்பர், 2009

2500 ஆண்டுகளாய் தீராத சண்டை…




தெருவில் ஒரு சின்ன பையன் ஒரு சின்னப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து விட்டு ஓடினான். அந்தப் பெண் அவன் பின்னேயே ஓடிச் சென்று அவன் முடியைப் பிடித்து இழுத்தால் இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர் அவர்களைத் தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இது போன்ற காட்சிகளை இன்றும் உங்கள் அருகாமையில் பார்க்கமுடியும்.

2500 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்துக்குச் செல்வோம்….

தலைவன், தலைவியை அவள் பெற்றோர் அறியாது மணம் செய்து கொள்வதற்காக அழைத்துச் செல்கிறான். இதற்கு “உடன் போக்கு“ என்று பெயர். இடைச்சுரத்தில் இவர்களைக் காண்போர் “கண்டோர்“ என்றழைக்கப்பட்டனர். அவர்கள்,
இளமைப்பருவத்தில் இந்த தலைவனும் தலைவியும் நிகழ்த்திய விளையாட்டினை நினைவு கூர்ந்தனர்.

தெருவில் விளையாடும் போது, இவளுடைய ஐவகையாக முடிக்கப்பட்ட கூந்தலை இவளறியாதவாறு இவன் பிடித்து இழுப்பான். அதனை அறிந்த இவளோ அவனுடைய முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டே அவன் பின் ஓடுவாள்.“

இவ்வாறு தம்முள் அயலாரைப் போல பகைமை கொண்டு எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் இவர்களை இடைமறித்து இவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அழைத்துச் செல்வார்கள். இனி அந்த சண்டை தீர்ந்தது. இனி இவர்களுக்குள் சண்டையே வராது.

மெல்லிய காம்புகளைச் சேர்த்து, இரட்டையாகச் சேரத்தொடுத்த மாலையைப் போல இப்போது இவர்கள் ஒரு மாலையில் இணைந்த இரு பூக்கள் போல வாழ நல்வழி காட்டியதால் விதியே நீ நல்லை எனப்படுவாய் என்று தலைமக்களின் தோற்றம் கண்டு கண்டோர் கூறுகின்றர்.


பாடல் இதோ

229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
மோதாசனார்


இளமைக் காலத்தில் உடம்பால் நீங்காது பகை விளைவித்துக்கொண்டிருந்த இவர்கள் உள்ளத்தாலும் நீங்காதவாறு நட்பு விளைவித்த ஊழ்வினையே நீ நல்லை என்று கண்டோர் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

2500 ஆண்டுகளாகிவிட்டது…..


இன்றும் குழந்தைகளின் சண்டை தீரவி்ல்லை…...
காதல் தீரவில்லை……...
ஊழ்வினை என்னும் விதி பற்றிய நம்பிக்கையும் தீரவில்லை..
தீரவும் தீராது….



இன்னும் 2500 ஆண்டுகள் கழித்தும் இது தொடர்ந்து வரும்..

ஏனெனில்….

குழந்தைகளின் வயது அவர்ளைச் சண்டையிடச் செய்கிறது…
தலைமக்கள் வயது அவர்களைக் காதலிக்கச் சொல்கிறது…
இதைப் பாரக்கும் கண்டோர் வயது…
இதற்குக் காரணம் விதி என்று சொல்ல வைக்கிறது…

ஆம்..
உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே விதி என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

எந்த விலங்கும் காதலுக்காக மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வதில்லை..
மனிதன் மட்டுமே காதலுக்காக உயிரைக் கூடக் கொடுக்கிறான்.

பரிணாம வளர்ச்சியில் மனிதமூளையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணம்..

12 கருத்துகள்:

  1. நிகழ் காலத்தையும் சங்க காலத்தையும் இணைத்து அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்.........

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே...வாழ்வியலோடு தமிழை விளக்கும் உங்கள் பாங்கு மிகவும் பிடித்திருக்கிறது...நல்ல விளக்கங்கள். இது போல் சொன்னால் தான் அனைவருக்கும் புரியும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். தொடருங்கள்.........

    பதிலளிநீக்கு
  3. ஊடகன், 03 November 2009 01:58
    நிகழ் காலத்தையும் சங்க காலத்தையும் இணைத்து அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்........./

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஊடகன்...

    பதிலளிநீக்கு
  4. புலவன் புலிகேசி said...
    அருமை நண்பரே...வாழ்வியலோடு தமிழை விளக்கும் உங்கள் பாங்கு மிகவும் பிடித்திருக்கிறது...நல்ல விளக்கங்கள். இது போல் சொன்னால் தான் அனைவருக்கும் புரியும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். தொடருங்கள்........./

    மகிழ்ச்சி நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. கவிக்கிழவன் said...
    நன்றாக உளது.../

    நன்றி கவிக்கிழவன்...

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீ.கிருஷ்ணா said...
    அருமையான பதிவு சார்/

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. அந்தகாலத்து இலக்கியங்கள் எப்படித்தான் தொலைநோக்கு சிந்தனையாக படைக்கபட்டதோ?
    நவீன உலகில் எவ்வளவு மாற்றங்கள் ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்டவை இன்னும் நம்கண்முன்னால் நடக்கிறது. அருமை.

    குறுந்தொகை பற்றிய செய்யுள் விளக்கங்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நண்பரே

    //இயற்கை காட்டியோயே.// என்ற பதத்திற்கு இயற்கையாகவே உருவாகியது என்றும் பொருள் கொல்லலாம் அல்லவா ?

    பதிலளிநீக்கு
  9. குறுந்தொகைப் பாடலையும் சிறுபிள்ளை விளையாட்டினையும் சேர்த்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்...

    ரசிக்கக்கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  10. நாஞ்சில் பிரதாப் said...

    அந்தகாலத்து இலக்கியங்கள் எப்படித்தான் தொலைநோக்கு சிந்தனையாக படைக்கபட்டதோ?
    நவீன உலகில் எவ்வளவு மாற்றங்கள் ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்டவை இன்னும் நம்கண்முன்னால் நடக்கிறது. அருமை.

    குறுந்தொகை பற்றிய செய்யுள் விளக்கங்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்/


    வருகைக்கு நன்றி நண்ரே....
    தொடர்ந்து எழுதுகிறேன்...

    பதிலளிநீக்கு