சனி, 31 அக்டோபர், 2009
இசைக்கு மயங்கிய கிளிகள்.
இன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிர்பாராத விதமாகப் பார்ப்பதும்,காதல் கொள்வதும்,
அதனால் முதல்நாள் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திக்க முயற்சிப்பதும்,
பின் தன் நண்பனின் வாயிலாகவோ, அந்தப்பெண்ணின் தோழியின் வாயிலாகவோ மீண்டும் சந்திக்கவோ எண்ணுவதுண்டு இதற்கு சங்க காலத்தில் இருந்த பெயர்,
இயற்கைப் புணர்ச்சி
இடந்தலைப்பாடு
பாங்கர்கூட்டம்...
தலைவன் தலைவியை எதிர்பாராமல் பார்ப்பது இயற்கைப் புணர்ச்சியாகும், முன் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திப்பது இடந்தலைப்பாடு, தோழியின் வாயிலாகவோ, தோழனின் வாயிலாகவோ ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வர் அதற்குப் பாங்கர் கூட்டம் என்றும் தோழியிற் புணர்ச்சி என்றும் பெயர்கள் உண்டு..
அகத்துறைகளுள் ஒன்றாகவுள்ள “பாங்கர்க்கு உரைத்தது“ என்னும் துறையை விளக்குவதாக இப்பாடல் அமைகிறது.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் தலைவியைச் சந்திக்க விரும்பினான். அதனால் தலைவியின் பண்புகளைப் பாங்கனிடம் கூறுகிறான். தலைவியின் பண்புநலன்களையும் அவள் மீது தலைவன் கொண்ட காதலையும் கேட்ட பாங்கன் அவர்களின் சந்திப்புக்குத் துணைநிற்பான்.
தலைவி தினையில் படியும் கிளிகளை ஓட்டுவதற்கு குளிர் என்னும் இசைக்கருவியை இசைக்கிறாள். தன் குரலாலும் ஒலி எழுப்புகிறாள். ஆனால் கிளிகளோ அவ்விடத்திலேயே நிலையாகத் தங்கிவிட்டன. கிளிகள் யாவும் குளிர் என்னும் இசைக்கருவியின் இசைக்கு மயங்கியதாலேயே அங்கு தங்கின. தலைவியின் குரல் மிகவும் இனிமையானவையாக இருந்தன. அதனால் கிளிகள் தலைவியின் குரலை தம் இனத்தின் குரல் என்றே கருதின. தாம் முயன்றும் கிளிகளை விரட்ட முடியவில்லையே என்று வருந்தினாள் தலைவி. கிளிகளைக் கூட விரட்ட முடியவில்லையே என்று தாய் தன்னைக் கடிந்து கொள்வாளே என்பதை எண்ணியவுடன் தலைவிக்கு அழுகையே வந்துவிட்டது.
இயலாமை, அச்சம் காரணமாக தலைவி அழுதநிலையிலும் தனக்கு இனியவளாக இருத்தலை பாங்கனுக்கு உணர்த்தினான் தலைவன்.
பாடல் இதோ…
291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிறி, ‘அவள் விளி’ என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
கபிலர்
குறுந்தொகை.291.
இசைமருத்துவம் குறித்த பல செய்திகளை உள்ளடக்கிய சங்க இலக்கியத்தில் இசைக்கு மயங்கிய விலங்கினங்கள், புள்ளினங்கள் பற்றிய பல குறிப்புக்களையும் காணமுடிகிறது. அவ்வடிப்படையில் இப்பாடல் வாயிலாக இசைக்கு மயங்கிய கிளிகளின் நிலையை கபிலர் அழகாக இயமபியுள்ளார்.
இன்றைய சூழலில் இப்பாடலை நோக்கும் போது…
கிளிகள் இசைக்கு மயங்குமா..?
தலைவியின் குரல் கிளியின் குரல் போல இருந்திருக்குமா..?
தலைவி இந்த அளவுக்குப் பேதைத் தன்மையாக இருப்பாளா..?
என்ற வினாக்களெல்லாம் தோன்றும். சங்ககால மக்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்த சூழலோடு ஒப்பு நோக்கும் போது இப்பாடலின் இயல்பு நிலை புரியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை
பதிலளிநீக்குசுவாரஸ்யம்... !!
பதிலளிநீக்கு//இன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிர்பாராத விதமாகப் பார்ப்பதும் காதல் கொள்வதும் நண்பனின் வாயிலாகவோ, தோழியின் வாயிலாகவோ மீண்டும் சந்திப்பதுண்டு இதற்கு சங்க காலத்தில் இருந்த பெயர்,//
இடையில் ஏதாவது தவறி விட்டதா.. தொடர்பில்லாமல் இடிக்குதே..?!
ஸ்ரீ.கிருஷ்ணா said...
பதிலளிநீக்குஅருமை/
வருகைக்கு நன்றி நண்பரே...
ஏதும் குறையவில்லை ப்ரியா...
பதிலளிநீக்குகருத்தைச்சுருக்கமாக கூற எண்ணியதால் மயக்கமாகத் தெரிகிறது என நினைக்கிறேன்..
இவையாவும் அகத்துறைகள்...
இன்றைய வாழ்விலும் காதல் நிகழ்கிறது...
அதற்குச் சங்ககாலத்திலிருந்த பெயர்களே...
இயற்கைப்புணர்ச்சி
இடந்தலைப்பாடு
பாங்கர்கூட்டம்...
அடுத்த இடுகை இன்னும் எளிமையாக எழுதுகிறேன்...
வருகைக்கு நன்றி....
தங்களின் பார்வைக்கு மயக்கமாகத் தெரிவதால் மேலும் எளிமையாக இவ்வரிகளை மாற்றியமைத்துள்ளேன்...
பதிலளிநீக்குகருத்துக்களுக்கு நன்றி ப்ரியா...
oh nanringa..! kuzhappamaa irunthichu.. athaan..!
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி..
மூன்று விதமான சந்திப்புகளுக்கு தந்த விளக்கம் மிக அருமை. காதலை மென்மையாக புரிந்து கொண்ள்ளுதலே சிறந்தது..
பதிலளிநீக்கு