வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

சங்ககால ஒலி கேளுங்கள்.......




பொருள்களின் அசைவால் ஒலி எழுகிறது. ஒலியை மொழியாக்கவும், இசையாக்கவும் கற்றுக்கொண்டவன் மனிதன். அந்த ஒலி இன்று ஒலி மாசுபாடாக உருவெடுத்து நிற்கிறது. ஒலி மாசுபாடு நம் உடலில் கண்ணுக்குத் தெரியாத பல மாறுபாடுகளை உருவாக்குகிறது.
மின்விசிறி, குளிர் சாதனப் பெட்டி போன்ற கருவிகளிலிருந்து எழும் மெல்லிய ஒலிகள் கூட மனிதர்களுக்குத் தோன்றும் மனஅழுத்தத்துக்குக் காரணமாக அமைகிறது என்கிறது அறிவியல்.

ஒலி மாசுபாடு நாகரீகத்தன் குறியீடுகளுள் ஒன்று. அதனால் அதனை முற்றிலும் நீக்கமுடியாது. கட்டுப்படுத்த முடியும். ஒலிமாசுபாட்டுக்கான தீர்வுகளுள் முதன்மையானது தாவரங்களை வளர்த்தலாகும்.

மரங்களின் இலைகளும், அதில் படியும் தூசும் ஒலிமாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

கண்ணை மூடி உங்களைச் சுற்றி எழும் ஒலிகளை உற்று நோக்குங்கள்.......
போக்குவரத்து, தொழிற்சாலை, ஒலிபெருக்கி, என ஒலிமாசுபாட்டுக்கான கூறுகள் நீண்டு கொண்டே செல்லும்..

இச்சூழலில் சங்கத்தமிழர்களின் வாழ்வில் ஒலி பெற்ற இடத்தைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது.

பூ பூக்கும் மெல்லிய ஓசை,
பூ உதிரும் நுட்பமான ஓசை என மென்மையான ஓசைகளையும், 110 டெசிபல் அளவுள்ள இடியோசைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் பலவிதமான ஒலிகள் இடம்பெற்றிருந்தாலும். ஒலியைக் குறிப்பிட்டதாலேயே பெயர்பெற்ற இலக்கியம் ஒன்று உண்டு.

அது தான் மலைபடு கடாம்.

பத்துப்பாட்டில் ஒன்றாக இடம் பெற்றுள்ள இவ்விலக்கியத்துக்கு கூத்தராற்றுப் படை என்றொரு பெயரும் உண்டு.
“ மலையை யானைக்கு உவமித்து அதில் பிறந்த ஓசையை கடாம் “ எனச் சிறப்பித்ததால் இவ்விலக்கியம் மலைபடு கடாம் என்று பெயர் பெற்றது.

இவ்விலக்கியம் மலையில் பல்வேறு ஒலிகள் எழுந்ததாகப் பதிவு செய்துள்ள ஒலிகளைக் கேளுங்கள்..........

மலையில் தோன்றம் பலவித ஒலிகளைக் கேட்டல்

'கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்,
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்,
அருவி நுகரும் வான்அர மகளிர்,
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், 295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்,
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்;
சேய் அளைப் பள்ளி, எ•கு உறு முள்ளின் 300
எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில்,
நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என,
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியலர் பாடல்;
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை 305
மலைமார், இடூஉம் ஏமப் பூசல்:
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; 310
கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி,
சிறுமை உற்ற களையாப் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, 315
நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக,
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சானம் என;
நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு 320
மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து 325
உரவுச் சினம் தணித்து, பெரு வெளில் பிணிமார்,
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்;
இனத்தின் தீர்ந்த துளங்கு இயில் நல் ஏறு, 330
மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் 340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, 345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப’


பாடலடிகளின் விளக்கம்.

• முசுக்கலை என்னும் குரங்கு மலையிலுள்ள பலாப்பழத்தைத் தோண்டித் தின்றது. அதனால் அப்பழத்தின் மணம் திசையெங்கும் வீசியது.அத்தகைய மலையில் பல்வேறு பண்டங்களையும் அடித்துக்கொண்டு ஒலியோடு ஓடி வருகிறது அருவி. அந்த அருவியில் தெய்வமகளிர் நீராடுகிறார்கள் அருவியின் ஓசை இசைக் கருவிகளின் ஒலியோடு ஒத்து இருக்கிறது.
• மலையில் பரண் அமைத்து கானவர்கள் திணைப்புனத்தை உண்ணவரும் யானைகளைப் பிடிக்க ஆரவாரம் செய்கின்றனர்.
• கானவர்கள் முள்ளம்பன்றியைப் பிடித்துக்கொன்றனர். அப்போது அதன் கூர்மையான முள் குத்தியதால் அவர்கள் வருந்தி அழுதனர்.
தன் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்ணை ஆற்றுவதற்காக மகளிர் பாடல் பாடினர். இது கொடிச்சியர் பாடல் எனப்பட்டது. ( இதனை இசைமருத்துவக் கூறாகவே கருதமுடிகிறது. பாடல் வலியை நீக்கும், குணப்படுத்தும் என்ற பழந்தமிழர் நம்பிக்கை இன்றைய அறிவியலுடன் ஒத்துப்போகிறது.)• முதல் நாளில் மலர்ந்த பொன் போன்ற வேங்கை மலர்களைப் பறிப்பதற்காக மகளிர் “புலிபுலி“ என்று கத்தினர்.(இவ்வாறு கத்தினால் மரம் தம் கிளையைத் தாழ்த்திக்கொடுக்கும் என்பது அக்கால நம்பிக்கையாக இருந்திருக்கிறது)
• கருவுற்ற நிலையில் பிடியானை இருக்க அதைக் காத்தல் பொருட்டு உணவு தேட களிறு சென்றது. அப்போது மறைந்திருந்த புலி தாக்கியது. அதைக் கண்ட பிடியானை தம் சுற்றத்துடன் சேர்ந்து ஒலி எழுப்பியது. அவ்வோசை மலைப்பகுதிகளில் இடியோசை போலக் கேட்டது.
அவ்வோசைக்கு அஞ்சி தம் குட்டியைத் தழுவ மறந்து தவறவிட்டது. மலையில் வீழ்ந்து இறந்தது குட்டி. குரங்குக் கூட்டங்கள் அஞ்சிப் பேரொலி எழுப்பின.
• ஏறுதற்கரிய உயர்ந் மலை உச்சியிலிருந்த தேனை எடுத்ததால் உண்டான ஆரவாரம் கேட்டது.
• அழித்தற்கரிய பகைவர்களின் சிற்றரண்களை அழித்ததால் கானவர்களின் ஆரவார ஒலி கேட்டது.
• தேர்கள் தம் பாதையில் ஓடி வரும்போது ஏற்படும் ஒலிபோல ஆறுகளில் நீரோட்ட ஒலி கேட்டது.
• காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்ட களிற்றுயானையின் சினத்தை அடக்கி, தாம் அவை சொன்ன சொல் கேட்பதற்குப் பழக்கும் யானைப் பாகரின் ஒலி கேட்டது.

மகளிர் ஒலிக்கும் மூங்கிலால் செய்த தட்டை என்னும் கருவியைப் புடைத்து புள்ளிங்களை விரட்டும் ஒலிகேட்டது.
• கோவலரும், குறவரும், தம் வெற்றியைக் கொண்டாடும் கல் என்னும் ஓசையும் கேட்டது.
• எருமைக் கடாக்களின் சண்டையிடும் ஒலி கேட்டது.
• பலாப்பழங்களின் விதைகளைப் பொறுக்கி விளையாடும் சிறுவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி கேட்டது.
• கரும்பின் சாறுகளைப் பிழியும் சாலைகளின் ஓசை கேட்டது.
• தினை குத்தும் மகளிரின் வள்ளைப் பாட்டொலியும் கேட்டது. (இவ்வள்ளைப் பாட்டு உளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் மருத்துவமாகவே உள்ளது. இவ்வாறு பாடல் பாடும் மகளிர் தம் மன உணர்வுகளை வெளிப்படுத்திப் பாடுவதால் தம் மன அழுத்தம் நீங்கப் பெற்றனர்.)
• சேம்பு, மஞ்சள் போன்றவை வளர்ந்த பின்னர் அவற்றைப் பன்றிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகக் காவலர்கள் பன்றிப்பறை இசைத்தனர்.

இவ்வாறு மலைகளில் தோன்றும் ஒலி
அதனால்த் தோன்றும் எதிரொலி
மலையின் உயரத்தில் தோன்றும் ஒலி,
மலையின் தாழ்வரையில் தோன்றும் ஒலி,
ஆகிய பல ஓசைகளும் தாழ்ந்து நெருங்குவதால் அவை சொல்ல இயலாத பல கூறுகளைக் கொண்டவையாக விளங்கின.
“ஆதலால் எண்ணரிய மலைகளில் தோன்றும் ஓசைகள் எண்ணரிய பல யானைகளின் ஒசைகள் போல இருக்கும்
.“

சங்க இலக்கியத்தில் இதுபோன்ற பல பாடல்கள் வழியாக,
இயற்கை ஒலி
விலங்கின ஒலி
புள்ளினை ஒலி
மனிதர் ஒலி
செயற்கை ஒலி
ஆகிய ஒலிகளைப் புலவர்கள் பதிவுசெய்து சென்றுள்ளனர்.

6 கருத்துகள்:

  1. அருமையான விடயம்.
    சாவினால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கத் தானோ ஒப்பாரி.
    இந்த அருமையான பதிவில் எழுத்துப் பிறழ்வு இருப்பது அழகல்ல என்பதால் அவை:
    எறுமைக் கடாக்களின் - எருமைக் கடாக்களின்

    அப்பழத்தின் மனம் திசையெங்கும் - அப்பழத்தின் மணம் திசையெங்கும்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி.
    தெரியாத விடயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விடயம்.
    சாவினால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கத் தானோ ஒப்பாரி.
    இந்த அருமையான பதிவில் எழுத்துப் பிறழ்வு இருப்பது அழகல்ல என்பதால் அவை:
    எறுமைக் கடாக்களின் - எருமைக் கடாக்களின்

    அப்பழத்தின் மனம் திசையெங்கும் - அப்பழத்தின் மணம் திசையெங்கும்/(செயபால்)


    \அருமையான விடயம்.
    சாவினால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கத் தானோ ஒப்பாரி./
    ஆம் நண்பரே.....

    எழுத்துப் பிழைக்ளைச் சுட்டியதற்கு நன்றி நண்பரே...
    மாற்றிக்கொண்டேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. இந்த இடுகையின் வழியாக எனது பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்திவிட்டீர்கள். புராண கதைகள், விளக்கத்துடன் கூடிய பாடல்களை படிக்கும் போது அந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணமே தோன்றும். பகிர்வு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு