வெள்ளி, 25 செப்டம்பர், 2009
குறுந்தொகை ச(ஜ)ப்பானியக் கவிதை ஒப்பீடு
சப்பானியக் கவிதைகள் பலவும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகவுள்ளன.
சான்றாக....
“எத்தனை காலம்
ஏங்கிக் காத்திருந்த பின்
இன்றிரவு எங்கள் சந்திப்பு!
இவ்வொசாகாவின் சேவல்
இன்றொரு நாளாவது
கூவாமல் போகட்டும்
பொழுதிங்கு விடியாமல் நிற்கட்டும்.”
“யாரோ” எழுதிய இப்பாடலைச் சப்பானியக் கவிதைகளின் தொகுப்பில் கண்டேன்.
தலைமக்கள் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கின்றனர். தலைவி பாடுவது போல உள்ள இக்கவிதையில்,
தலைவனுடன் சேர்ந்திருக்கும் இந்த நிமிடங்கள் நீளாதா..?
பொழுது விடியாமல் இருக்காதா...?
பொழுது விடியாமல் இருந்தால் தலைவன் தன்னுடனே இருப்பானே என்று பலவாறு எண்ணிக்கொள்கிறாள்.
விடியலை அறிவிப்பது சேவல் தானே...
இன்று ஒரு நாளாவது இந்த சேவல் கூவாமல் இருக்கட்டும்..!
பொழுதிங்கு விடியாமல் இருக்கட்டும்.!
என எண்ணுகிறாள் தலைவி..
இந்தப்பாடலில் தலைவி,
சேவல் கூவாமல் இருக்கட்டும்.
பொழுது விடியாமல் இருக்கட்டும்...
என்று மட்டுமே எண்ணுகிறாள் ..
இந்தப் பாடலின் தொடர்ச்சி போலவும்...
இதே பாடலின் சூழலோடும் உள்ள குறுந்தொகைப் பாடலைக் காண்போம்....
“குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
கடுநவைப் படீஇயரோ நீயே- நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பியோயே.!
(குறுந்தொகை-107)
(துறை- பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது.)
துறை விளக்கம்...
பொருள் தேடிச் சென்ற தலைவன் மீண்டு தலைவியுடன் தங்கியிருக்கிறான். தலைவி இந்த இரவு நீள வேண்டும் என்று காதல் மிகுதியால் உரைத்தது.
மதுரைக்கண்ணனார் பாடிய இப்பாடல் முன் சொன்ன சப்பானியப் கவிதையின் தொடர்சி போல உள்ளது..
சப்பானியக் கவிதையில் வரும் தலைவி சேவலைக் கூவாதே என்றாள்..
குறுந்தொகைத் தலைவி தன் சொல்லை மீறிக் கூவிய சேவலுக்குச் சாபமிடுகிறாள்..
குறுந்தொகைப் பாடலின் விளக்கம்....
பொருள் தேடச் சென்ற தலைவன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பியுள்ளான். அவனோடு இனிது தூங்கும் தலைவி, இந்த இரவு இப்படியே நீள வேண்டும் என்று நினைக்கிறாள்.
மாறாக சேவல் கூவுகிறது.
தலைவிக்குச் சேவல் மீது மிகுந்த சினம் (கோபம்) வருகிறது..
அந்த சேவலுக்குச் சாபமிடுகிறாள்....
செங்காந்தள் மலரைப் போன்ற சிவந்த கொண்டையைக் கொண்ட சேவலே..
நெடுங்காலப் பிரிவுக்குப் பின்னர் புதுவருவாய் போன்று வந்த தலைவனுடன் நான் இனிது உறங்கும் போது,
கூவி என்னை எழுப்பிவிட்டாயே..!
வீட்டில் உள்ள எலிகளைப் பிடித்து உண்ணும் காட்டுப் பூனையின் குட்டிக்கு பல நாள் வைத்து உண்ணும் உணவாக நீ பெருந்துன்பம் அடைவாய்...
என்பதே தலைவி தன் துயிலை எழுப்பி விடியலைத் தெரியப்படுத்திய சேவலக்கு இட்ட சாபம்.
ஒப்புமை.
இரு கவிதைகளிலும் தலைவியர், தலைவனுடன் சேர்ந்திருக்கும் இரவு நீள வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.
பொழுது விடியக் கூடாது,
பொழுது விடிவதைச் சேவல் அறிவிக்கக் கூடாது என்றே எண்ணுகின்றனர்.
“சேவல் கூவுவதற்கும் பொழுது விடிவதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. சேவல் கூவாவிட்டாலும் பொழுது விடியும்.”
(சேவல்/கள் பொதுவாக 40 தொடங்கி 70 டெசிபல் அளவு சத்தத்தை உருவாக்கவல்லது/ன.
மனிதர்கள் 0 தொடக்கம் 100 டெசிபல்கள்அளவுள்ள சத்தத்தை அவற்றின் அளவிற்கு ஏற்ப குறிப்பிட்ட நேர காலங்களுக்கு தொடர்ந்து கேட்க அனுமதிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
பொழுது புலர்ந்ததும் அதிகாலையில் புழுக்கள் நிலத்தின் மேற்பகுதிக்கு வரும். அதனைத் தம் கோழிகளுக்கு அறிவிக்கவே சேவல் கூவும். இதுவே இயற்கை.
சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..
சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...
ஆனால் குறுந்தொகைத் தலைவியோ,
இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...
உளவியல் அடிப்படையில் யாருக்குமே தோன்றும் மனநிலை தான் இது. இதனைப் புலவர் அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.
இரு கவிதைகளையும் படிக்கும் போது....
ஒன்றுக்கொன்று தொடர்புடையன போலவே தோன்றுகின்றன.
இரு பாடல்களும் கால நிலை, சூழல், மொழி, பண்பாடு என்னும் பல நிலைகளில் வேறுபட்டனவாக இருந்தாலும் காதல் என்னும் பண்பால் ஒன்றுபட்டிருக்கக் காண்கிறோம்
உளவியல் அடிப்படையிலான மனநிலை இப்பாடலின் சுவையை மேலும் மிகுவிப்பதாக உள்ளது.
சனி, 19 செப்டம்பர், 2009
அசையும் படங்களை (GIF)வலைப்பதிவில் பொதிய...
இணைய தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவு நுட்பங்களும் வலைப்பதிவுகளை இணையதளத்துக்கு இணையானதாக ஆக்க முயற்சித்து வருகின்றன. வலைப்பதிவு நுட்பங்கள் கூறும் பதிவுகள் பல இருப்பினும் நான் நீண்ட காலம் தேடியும் கிடைக்கதா தொழில்நுட்பத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பிளாக்கர் டிரிக் உள்ளிட்ட பல இணையதளங்கள் தொழில்நுட்பத் தகவல்களை ஆங்கிலத்தில் அளிப்பதால் தமிழில் தேடும் போது பல நுட்பங்கள் அறிந்து கொள்ள இயலாது போகிறது.
வலைப்பதிவுகளில் அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்வது எப்படி?
வலைப்பதிவுகளில் (jpeg) படங்களைப் பதிவேற்றம் செய்வது போல (gif) அசையும் படங்களைப் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. மாறாக அசையும் படங்களை சாதாரணமாகப் பதிவுற்றம் செய்தால், அவை அசைவில்லாப் படங்களாகவே காட்சியளிக்கும்.
படிநிலை -1.
இத்தளத்தில் ஒரு இலவசமான பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின் அங்கு பதிவேற்றப் பகுதிக்குச் சென்று நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்பினை பதிவேற்றினால். அவர்கள் ஒரு நிரல்த்துண்டு (ஜாவா ஸ்கிரிப்ட்) தருவார்கள். அதனைக் காப்பி செய்து...
படிநிலை-2.
நம் வலைப்பதிவுக்குச் சென்று நாம் இடுகைப் பகுதியில் படம் எங்கு வரவேண்டுமோ அங்கு நிரலை ஒட்ட வேண்டும்.
இப்போது இடுகையை வெளியிட்டுப் பாருங்கள்...
உங்கள் படம் அசையும் படமாகக் காட்சியளிக்கும்.
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
வாழ்வில் நாம் காணும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு ஏதோ ஒன்றை நினைவுபடுத்திச் செல்கின்றன.
இங்கு ஒரு தலைவன் தன் மனைவியையும் மகனையும் பிரிந்து பொருள் தேட வந்தான்.
வந்தவேலை நல்லபடியாக முடிந்தது.
மனமெங்கும் தன் மனைவியும், புதல்வனுமே இருக்கிறார்கள்.
அவர்களைக் காண மனம் துடிக்கிறது.
இடையில் கடக்க வேண்டிய தூரம் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது.
நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் சென்றுவிட மனத்தால் முடிகிறது..
உடலால்............?
கார்காலத்தில் வந்துவிடுவேன் அதுவரை காத்திரு என்று வந்தான் தலைவன்.
உரிய காலத்துக்குள் வந்த வேலையும் முடிந்துவிட்டது..
இக்காலத்தில் நான் வந்துவிடுவேன் என்று என் மனைவியும், புதல்வனும் காத்திருப்பார்களே என்று தலைவனின் மனம் தவிக்கிறது.
அப்போது தலைவன் அந்நிலத்தில் கண்ட காட்சி அவன் மனதை மேலும் வாட்டுவதாக இருந்தது.அக்காட்சியைத் தன் தேர்ப்பாகனுக்குக் காட்டி தேரை விரைந்து செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறான். இதுவே பாடலின் சூழல் .
பாடல் இதோ.....
'இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே'
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன்
கார் கண்டு பாகற்குச் சொல்லியது
நற்றிணை
242 முல்லை - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
பாகனே...
பழுத்த இலைகளை உதிர்த்த பிடவமெல்லாம் மெல்லிய மலர்கள் தோன்ற அரும்பிவிட்டன.
புதர்மேல்ப் பற்றிடும் முல்லைக் கொடிகள் யாவும் மலர்ந்தன.
பொன்னைப் போன்ற கொன்றை மலரும் மலர்ந்தது.
நீலமணி என்னும்படியான மலர்கள் காயவில் மலர்ந்தன.
இவ்வாறு பல மலர்களும் மலர்ந்து இது கார்காலம் என்பதை அறிவுறுத்தின.
இதோ பார்........
மடப்பத்தை உடைய பிணைமான் தன் குட்டியுடன் தன் கூட்டத்டதை விட்டுப் பிரிந்து செல்கிறது. அந்தக்குட்டியைப் பார் மருண்டு விழிக்கிறது.
அட!!!!
அதோ பார் அந்த பிணையையும் குட்டியையும் விரும்பிய ஆண்மான் அவை எங்கே..? என்று தேடுகிறது..
என்று தான் கண்ட காட்சியைப் பாகனுக்கு உரைத்த தலைவன்,
அந்த மான்களின் வாழ்வியலுடன் தன் வாழ்வியலை ஒப்புநோக்கிக்கொள்கிறான்.
ஆண்மானாகத் தன்னையும்
பெண்மானாகத் தன் மனைவியையும்
மான்குட்டியாகத் தன் புதல்வனையும் ஒப்புநோக்குகிறான்..
இப்பாடலில் 'விழிகட்பேதை' என்னும் சொல் மருண்டு விழிக்கும் மானின் குட்டியைக் குறிப்பதாகவுள்ளது.
இத்தொடரின் இனிமை கருதி இப்புலவர் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என்ற பெயருடனே அழைக்கப்படலானார்.
இப்பாடல் வழி தலைமக்களின் அன்பியைந்த வாழ்வியலும்.
பிரிவு அன்பை அதிகப்படுத்தும் என்னும் உண்மையும் புலப்படுத்தப்படுகிறது.
அதோடு இப்புலவரின் பெயருக்கான காரணமும் அறியமுடிகிறது.
சனி, 12 செப்டம்பர், 2009
தனிமகனார்
தனிமை கொடுமையானது.
அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது.
தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.
சிலர் தனிமை வரம் என்பார்கள்
சிலர் தனிமை சாபம் என்பார்கள்
தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி ஒருத்தியின் தனிமைப் புலம்பல் நற்றிணைப்பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது..
இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்பதாகும்.
இது இவரின் இயற்பெயர் அல்ல..
இப்பாடலில் சிறந்த தொடரைக் கையாண்டதால் பெற்ற பெயர்.
தனிமகன் என்னும் பெயருக்கான காரணத்தைப் பாடல் வழி காண்போம்.
'குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே
153 பாலை - தனிமகனார்
'பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது'
திருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது போல வருந்தினாள்.
மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல என் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது.பின் அங்கே தங்கி என்னை மறந்துபோனது.
என் உடலோ போருக்கும் பின்னர் மக்கள் நீங்கிய ஊரில் காவல் செய்யும் தனி மனிதன் போல வருந்தியது என்றாள் இதுவே பாடலின் பொருள்..
கீழைக் கடலில் நீரை முகந்த மேகம் மின்னல் மின்னி இடிமுழக்கத்துடன் மழையாகப் பொழிந்தது. பின்னர் தெற்குதிசையில் சென்று மறைந்தது. அதுபோல என் நெஞ்சம் என்னை நீங்கித் தலைவனிடம் சென்று அவனிடமே தங்கியது.
என்உடலோ,
போர்நடந்த ஊரில் மக்கள் வெளியேறிய பின்னரும் காவல் புரியும் தனிமகன் போல தனித்து வருந்தியது. உடலில் உயிர் தங்கும் அளவு உணவு உண்பதால் என் உடலில் உயிர் இன்னும் தங்கியுள்ளது என்கிறாள் தலைவி....
இப்பாடலில் தலைவியின் நெஞ்சம் தலைவனுடன் சென்ற பின்னர் தன் உடல் மக்கள் நீங்கிய ஊரைத் தனித்துக் காவல் செய்யும் தனிமகன் போல வருந்தியது என்று சுட்டப்படுகிறது..
இதில் தனிமகன் என்னும் தொடரினிமை கருதி இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்றே வழங்கப்பட்டது.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
சங்ககால ஒலி கேளுங்கள்.......
பொருள்களின் அசைவால் ஒலி எழுகிறது. ஒலியை மொழியாக்கவும், இசையாக்கவும் கற்றுக்கொண்டவன் மனிதன். அந்த ஒலி இன்று ஒலி மாசுபாடாக உருவெடுத்து நிற்கிறது. ஒலி மாசுபாடு நம் உடலில் கண்ணுக்குத் தெரியாத பல மாறுபாடுகளை உருவாக்குகிறது.
மின்விசிறி, குளிர் சாதனப் பெட்டி போன்ற கருவிகளிலிருந்து எழும் மெல்லிய ஒலிகள் கூட மனிதர்களுக்குத் தோன்றும் மனஅழுத்தத்துக்குக் காரணமாக அமைகிறது என்கிறது அறிவியல்.
ஒலி மாசுபாடு நாகரீகத்தன் குறியீடுகளுள் ஒன்று. அதனால் அதனை முற்றிலும் நீக்கமுடியாது. கட்டுப்படுத்த முடியும். ஒலிமாசுபாட்டுக்கான தீர்வுகளுள் முதன்மையானது தாவரங்களை வளர்த்தலாகும்.
மரங்களின் இலைகளும், அதில் படியும் தூசும் ஒலிமாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
கண்ணை மூடி உங்களைச் சுற்றி எழும் ஒலிகளை உற்று நோக்குங்கள்.......
போக்குவரத்து, தொழிற்சாலை, ஒலிபெருக்கி, என ஒலிமாசுபாட்டுக்கான கூறுகள் நீண்டு கொண்டே செல்லும்..
இச்சூழலில் சங்கத்தமிழர்களின் வாழ்வில் ஒலி பெற்ற இடத்தைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது.
பூ பூக்கும் மெல்லிய ஓசை,
பூ உதிரும் நுட்பமான ஓசை என மென்மையான ஓசைகளையும், 110 டெசிபல் அளவுள்ள இடியோசைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
சங்க இலக்கியங்களில் பலவிதமான ஒலிகள் இடம்பெற்றிருந்தாலும். ஒலியைக் குறிப்பிட்டதாலேயே பெயர்பெற்ற இலக்கியம் ஒன்று உண்டு.
அது தான் மலைபடு கடாம்.
பத்துப்பாட்டில் ஒன்றாக இடம் பெற்றுள்ள இவ்விலக்கியத்துக்கு கூத்தராற்றுப் படை என்றொரு பெயரும் உண்டு.
“ மலையை யானைக்கு உவமித்து அதில் பிறந்த ஓசையை கடாம் “ எனச் சிறப்பித்ததால் இவ்விலக்கியம் மலைபடு கடாம் என்று பெயர் பெற்றது.
இவ்விலக்கியம் மலையில் பல்வேறு ஒலிகள் எழுந்ததாகப் பதிவு செய்துள்ள ஒலிகளைக் கேளுங்கள்..........
மலையில் தோன்றம் பலவித ஒலிகளைக் கேட்டல்
'கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்,
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்,
அருவி நுகரும் வான்அர மகளிர்,
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், 295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்,
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்;
சேய் அளைப் பள்ளி, எ•கு உறு முள்ளின் 300
எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில்,
நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என,
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியலர் பாடல்;தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை 305
மலைமார், இடூஉம் ஏமப் பூசல்:
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; 310
கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி,
சிறுமை உற்ற களையாப் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, 315
நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக,
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சானம் என;
நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு 320
மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து 325
உரவுச் சினம் தணித்து, பெரு வெளில் பிணிமார்,
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்;இனத்தின் தீர்ந்த துளங்கு இயில் நல் ஏறு, 330
மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் 340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, 345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப’
பாடலடிகளின் விளக்கம்.
• முசுக்கலை என்னும் குரங்கு மலையிலுள்ள பலாப்பழத்தைத் தோண்டித் தின்றது. அதனால் அப்பழத்தின் மணம் திசையெங்கும் வீசியது.அத்தகைய மலையில் பல்வேறு பண்டங்களையும் அடித்துக்கொண்டு ஒலியோடு ஓடி வருகிறது அருவி. அந்த அருவியில் தெய்வமகளிர் நீராடுகிறார்கள் அருவியின் ஓசை இசைக் கருவிகளின் ஒலியோடு ஒத்து இருக்கிறது.
• மலையில் பரண் அமைத்து கானவர்கள் திணைப்புனத்தை உண்ணவரும் யானைகளைப் பிடிக்க ஆரவாரம் செய்கின்றனர்.
• கானவர்கள் முள்ளம்பன்றியைப் பிடித்துக்கொன்றனர். அப்போது அதன் கூர்மையான முள் குத்தியதால் அவர்கள் வருந்தி அழுதனர்.
• தன் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்ணை ஆற்றுவதற்காக மகளிர் பாடல் பாடினர். இது கொடிச்சியர் பாடல் எனப்பட்டது. ( இதனை இசைமருத்துவக் கூறாகவே கருதமுடிகிறது. பாடல் வலியை நீக்கும், குணப்படுத்தும் என்ற பழந்தமிழர் நம்பிக்கை இன்றைய அறிவியலுடன் ஒத்துப்போகிறது.)• முதல் நாளில் மலர்ந்த பொன் போன்ற வேங்கை மலர்களைப் பறிப்பதற்காக மகளிர் “புலிபுலி“ என்று கத்தினர்.(இவ்வாறு கத்தினால் மரம் தம் கிளையைத் தாழ்த்திக்கொடுக்கும் என்பது அக்கால நம்பிக்கையாக இருந்திருக்கிறது)
• கருவுற்ற நிலையில் பிடியானை இருக்க அதைக் காத்தல் பொருட்டு உணவு தேட களிறு சென்றது. அப்போது மறைந்திருந்த புலி தாக்கியது. அதைக் கண்ட பிடியானை தம் சுற்றத்துடன் சேர்ந்து ஒலி எழுப்பியது. அவ்வோசை மலைப்பகுதிகளில் இடியோசை போலக் கேட்டது.
அவ்வோசைக்கு அஞ்சி தம் குட்டியைத் தழுவ மறந்து தவறவிட்டது. மலையில் வீழ்ந்து இறந்தது குட்டி. குரங்குக் கூட்டங்கள் அஞ்சிப் பேரொலி எழுப்பின.
• ஏறுதற்கரிய உயர்ந் மலை உச்சியிலிருந்த தேனை எடுத்ததால் உண்டான ஆரவாரம் கேட்டது.
• அழித்தற்கரிய பகைவர்களின் சிற்றரண்களை அழித்ததால் கானவர்களின் ஆரவார ஒலி கேட்டது.
• தேர்கள் தம் பாதையில் ஓடி வரும்போது ஏற்படும் ஒலிபோல ஆறுகளில் நீரோட்ட ஒலி கேட்டது.
• காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்ட களிற்றுயானையின் சினத்தை அடக்கி, தாம் அவை சொன்ன சொல் கேட்பதற்குப் பழக்கும் யானைப் பாகரின் ஒலி கேட்டது.
• மகளிர் ஒலிக்கும் மூங்கிலால் செய்த தட்டை என்னும் கருவியைப் புடைத்து புள்ளிங்களை விரட்டும் ஒலிகேட்டது.
• கோவலரும், குறவரும், தம் வெற்றியைக் கொண்டாடும் கல் என்னும் ஓசையும் கேட்டது.
• எருமைக் கடாக்களின் சண்டையிடும் ஒலி கேட்டது.
• பலாப்பழங்களின் விதைகளைப் பொறுக்கி விளையாடும் சிறுவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி கேட்டது.
• கரும்பின் சாறுகளைப் பிழியும் சாலைகளின் ஓசை கேட்டது.
• தினை குத்தும் மகளிரின் வள்ளைப் பாட்டொலியும் கேட்டது. (இவ்வள்ளைப் பாட்டு உளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் மருத்துவமாகவே உள்ளது. இவ்வாறு பாடல் பாடும் மகளிர் தம் மன உணர்வுகளை வெளிப்படுத்திப் பாடுவதால் தம் மன அழுத்தம் நீங்கப் பெற்றனர்.)
• சேம்பு, மஞ்சள் போன்றவை வளர்ந்த பின்னர் அவற்றைப் பன்றிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகக் காவலர்கள் பன்றிப்பறை இசைத்தனர்.
இவ்வாறு மலைகளில் தோன்றும் ஒலி
அதனால்த் தோன்றும் எதிரொலி
மலையின் உயரத்தில் தோன்றும் ஒலி,
மலையின் தாழ்வரையில் தோன்றும் ஒலி,
ஆகிய பல ஓசைகளும் தாழ்ந்து நெருங்குவதால் அவை சொல்ல இயலாத பல கூறுகளைக் கொண்டவையாக விளங்கின.
“ஆதலால் எண்ணரிய மலைகளில் தோன்றும் ஓசைகள் எண்ணரிய பல யானைகளின் ஒசைகள் போல இருக்கும்.“
சங்க இலக்கியத்தில் இதுபோன்ற பல பாடல்கள் வழியாக,
இயற்கை ஒலி
விலங்கின ஒலி
புள்ளினை ஒலி
மனிதர் ஒலி
செயற்கை ஒலி
ஆகிய ஒலிகளைப் புலவர்கள் பதிவுசெய்து சென்றுள்ளனர்.
வியாழன், 10 செப்டம்பர், 2009
நீங்கள் வாழ்வது நாடா? - UPSC EXAM TAMIL - புறநானூறு - 187
மக்கள் வாழ்வது நாடு!
மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்)
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே!
மாக்கள் வாழ்வது நாடாகுமா..?
சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்...
வள்ளுவப் பெருந்தகையே!
நாடு என்பது எது........?
வள்ளுவர்..
சுருக்கமாகச் சொன்னால்,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராதியல்வது நாடு (குறள்-734.)
அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.
வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது,
பசி – தலை விரித்தாடுகிறது.
பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்டுகிறது.
பகை – இனக்குழு சமூகம் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஓய்ந்தபாடில்லை.
( மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்
உலகமே போதாது என்றவனுக்கு இந்தக் கல்லறை போதுமானதாக இருந்தது.)
சரி ஔவையாரை இதே கேள்வியைக் கேட்போம்..
ஔவையாரே நாடு என்பது எது..?
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
(புறநானூறு-187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)
ஔவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..
ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
ஆடவர் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறாரகளோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.
வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் ஆடவரைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட ஆடவர் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.
நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.
“ தன்னிடத்து வாழ்வோரின் இயல்பல்லது
தனக்கென ஓர் இயல்பும் இல்லாதது நிலம்“
என்கிறார் ஔவையார்.
சங்க காலம் மன்னனையும், ஆண்களையும் முதன்மையாகக் கொண்டு இயங்கியதால் ஆடவர் என்று ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் (ஒவ்வொரு ஆணும் பெண்ணும்) மக்கள் யாவரையும் குறிப்பதாகவே இக்கூற்று அமைகிறது.
வள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் கருத்தின்படி நாட்டிற்கான தகுதிகள்.
1. பசியின்றி இருத்தல்
2.நோயின்றி இருத்தல்
3.பகையின்றி இருத்தல்
4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.
1. பசியின்றி இருத்தல்
பசி என்னும் நோய் இல்லாத நாடும். இல்லாத நாளும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது
சங்க இலக்கியங்கள் கலைஞர்களின் பசி என்னும் நோய் தீர்த்த மன்னனை ' பசிப்பிணி மருத்துவன்'என்று போற்றுகின்றன.
பசியை முழுவதும் ஒழிக்க முடியுமா..?
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதை விட அந்த மீனை எப்படி பிடிப்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
என்பது சீனப்பழமொழி..
எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் உலகில் உள்ள பசிப்பிணியை முழுவதும் நீக்குவது என்பது இயலாது. பசியோடு இருப்போர் எல்லாம் வாழத் தெரியாதவர்கள். அவர்களுக்கு எப்படி வாழ்வது என்ற சொல்லிக்கொடுப்பதே பெரிய தீர்வாக அமையும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சென்று தனித்தனியாகப் பாடம் நடத்திச் சொல்லிக்கொடுக்க முடியாது.
இன்றைய சூழலில் நிறைய ஊடகங்கள் வந்துவிட்டன.
வாழ் நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்……?
2.நோயின்றி இருத்தல்...
நல்ல சுற்றம், நல்ல மனநிலை, அளவான உணவு, உடற்பயிற்சி ஆகியனவே நோயற்ற வாழ்வின் அடிப்படைகள்..
3.பகையின்றி இருத்தல்
தீதும் நன்றும் பிறர் தர வாராது என்று எண்ண வேண்டும்...
‘வேர்களை அறுத்தோடும்
நதியின் மீதும் கலகலவென்று பூச்சொரியும்
கரையோரத்துக் கிளைகள்...
அறுத்ததற்குக் கோபமில்லையாம்
நனைத்ததற்கு நன்றியாம்
மரம் சொன்னது :
''இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்''
என்பார் வைரமுத்து..
ஒரு கண்ணத்தில் அறைந்தால் இன்னொரு கண்ணத்தைக் காட்டு என்றாறாம் இயேசுநாதர்...
எனக்கு வந்த குறுந்தகவல்..
'ஒருவன் உன் மீது கல்லை எறிந்தால்
நீ அவன் மீது பூவை எறி
அவன் மீண்டும் உன் மீது கல்லை எறிந்தால்
நீ பூந்தொட்டியைக் கொண்டு எறி சாகட்டும்...'
இது நகைச்சுவை மட்டுமல்ல
நிகழ்கால உண்மையும் கூட அதுதான்..
எனக்கு ஒரு கண்போனால் என் எதிரிக்கு இரண்டுகண்களும் போக வேண்டும் என்றே எண்ணுகிறோம்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'-அதனால் முடிந்தவரை பகையின்றி வாழ முயற்சிப்போம்.
4.தனி மனித ஒழுக்கத்துடன் இருத்தல்.
தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு நாட்டின் நிலையை உயர்த்திக் காட்ட வல்லது.
சான்றாக ஒரு சிறிய கதை,
ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவன் தன் மக்களிடம் நாளை நம் ஊரிலுள்ள கோயிலில் பாலாபிடேகம் செய்யப் போகிறோம் அதனால் ஒவ்வொருவரும் நம் அரண்மனை முன் உள்ள தொட்டியில் ஒவ்வொரு லிட்டர் பாலை பொழுது விடிவதற்கு முன்னர் ஊற்றி விட வேண்டும் என்றானாம்
அந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நாம் ஒருவர் மட்டும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினால் என்ன தெரியவா போகிறது என்று ஒவ்வொருவரும் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றினார்களாம். பொழுது விடிந்து தொட்டியைப் பார்த்தால் ஒரு சொட்டுக்கூட அதில் பால் இல்லையாம்.
இந்தக் கதை வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது....
ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்தது தான் சமூகம்..
ஒவ்வொரு தனிமனிதத் தவறுகளும் அவர் வாழும் சமூகத்தைப் பாதிக்கும் என்பதே!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வள்ளலார்..
இது பிற உயிரையும் தன்னுயிர் போல எண்ணியதால் வந்த விளைவு..
ஓரறிவிலிருந்து உயிர்கள் உள்ளன..
பிற உயிர்களையும் தன்னுயிர் போல எண்ண முயற்சி செய்வோம்.
மாக்களாக வாழாது மக்களாக வாழ முயல்வோம்
நாம் வாழும் நிலத்தை நல்ல நாடாக்க முயல்வோம்
புதன், 9 செப்டம்பர், 2009
தூங்காத விழிகள் ரெண்டு
• துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.
• நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.
• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.
• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.
“உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339என்பர் வள்ளுவர்.
ஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு
ஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.
இப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.
“மெத்தைய வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல“
என்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.
கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லும்போது,
தவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.
நன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.
தூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,
தூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.
• “தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது“
•
அக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..
சங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,
இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.
இதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,
சான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத தலைவி ஒருத்தியின் புலம்பல்.
சான்று-1
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
28. பாலை - தலைவி கூற்று-
ஔவையார்.
(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)
எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.
மூட்டுவேனா?
தாக்குவேனா?
ஆஅ ஒல்லெனக் கூவுவேனா?
என்கிறாள்.
தலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..
நமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.
சிலர்...
உறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”
என்று பெருமூச்சு விடுவார்கள்.
சிலர்....
உறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...
ஓங்கி மிதிக்கலாமா....?
ஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..?
என்றெல்லாம் தோன்றும்.
இன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.
சான்று-2
• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக’கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.
இதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...
இதோ....
கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.
30. பாலை - தலைவி கூற்று
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)
நள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு!
அதில் என் தலைவன்!
நடந்தது உண்மை என்றே எண்ணினேன்....
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..?
என்று தடவிப்பார்த்தேன்..
வண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.
சான்று-3
• இன்னொரு தலைவி..
“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “6.
நெய்தல் - தலைவி கூற்று
-பதுமனார்.
தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி
நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே! என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.
இவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
துன்பத்தில் இன்பம் காண........
துன்பம் வரும்போது சிரியுங்கள். அந்தத் துன்பத்தை எதிர்த்துப் போராடவல்லது அந்தச் சிரிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை
(இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃது ஒப்பது இல்(குறள்-621)
என்பர் வள்ளுவர்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்“
என்பர் கண்ணதாசன்.
துன்பம் வரும் போது அழுகை தானே வரும்.
சிரிப்பு எப்படி வரும் என்கிறீர்களா..?
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் துன்பத்திலும் சிரிக்க முடியும்.!
நேர்மறை எண்ணங்களுக்கும் – எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையிலான போராட்டம் தான் நம் வாழ்க்கை.
ஒரு சின்ன கதை...
ஒரு ஊரில் ஒரு (உண்மையான) துறவி இருந்தாராம். அவருக்கென்று ஒரு குடிசை வீடு இருந்ததாம். ஒரு நாள் புயலும் மழையும் அடித்ததில் பல வீடுகளும் சேதம் அடைந்ததாம். அதில் அந்தத் துறவியின் வீடும் ஒன்றாக இருந்ததாம்.
ஒவ்வொருவரும் தம் வீடு போய்விட்டதே என்று அழுது வருந்திக்கொண்டிருந்தார்களாம்.
துறவி மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாராம்..
ஊர்மக்களுக்கு ஒரே வியப்பு!!!!!!
அவரிடமே சென்று கேட்டார்களாம்.
ஐயா..
அடித்த புயலில் உங்க வீட்டுக் கூரையே பிய்த்துக் கொண்டு சென்றுவிட்டதே...
உங்களுக்கு வருத்தமாக இல்லையா..? என்று..
அந்தத் துறவி அவர்களிடம் கேட்டாராம்..
ஏன் வருந்த வேண்டும்...? என்று...
துன்பமான இந்த நிகழ்வுக்கு வருத்தம் வராதா என்று மீண்டும் கேட்டார்களாம்..
அதற்குத் துறவி சொன்னாராம்...
“ நான் இதுவரை நிலவை பார்த்து மகிழ வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டியதாயிருந்தது..
இன்று முதல் அந்தத் தொல்லை எனக்கில்லை..
இனி வீட்டுக்குள் இருந்து கொண்டே நிலவை பார்த்து மகிழ்வேன்“ என்றாராம்.
• ஒரு பெரிய மலையையே தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிறிய கல்போலத் தான் காட்சியளிக்கும்!
ஒரு சிறிய கல்லைக் கூட கண்ணருகில் வைத்துக் காணும் போது பெரிய மலை போலத்தான் தெரியும்.
• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மையங்கள் உண்டு!
எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் பயிற்சி மையங்கள் குறைவு!
எப்படி வாழ வேண்டும் என்பதை இலக்கியங்கள் வழி நம் முன்னோர்கள் நிறையச் சொல்லிச்சென்றுள்ளனர்.
கலித்தொகையில் ஒரு பாடல்...
(தலைவன் பொருள் வயிற் பிரிகின்ற காலத்து “ காடு கடியவாயினும் இவ்வகைப்பட்டனவும் உள“ என்று கூறினார்.
அவை காண்டலின் வருவர், எனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது.)
தலைவன் பொருள் தேடுவதற்காப் பிரிந்து சென்றிருக்கிறான், அவன் சென்ற பாலை நிலம் மிகவும் கொடுமையானது.
தலைவனின் பிரிவுத் துன்பம் ஒரு பக்கமிருக்க,
பாலை நிலத்தின் கொடுமை இன்னொருபுறமாகத் தலைவியைத் துன்புறுத்துகிறது.
ஆயினும் தலைவி தம் தலைவன் பிரியும் போது சொல்லிச்சென்றதை எண்ணிப்பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.
தலைவன் பிரியும் போது “ காடு கொடுமையானது தான் ஆயினும் அங்கு இனிய காட்சிகள் பல உண்டு “ என்றான்.
அவன் சொன்ன காட்சிகளை எண்ணிப்பார்த்தும் நிமித்தங்களை நோக்கியும் தலைவி தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள் இதுவே பாடலின் போக்கு...
இனி பாடலுக்குச் செல்வோம்...
தலைவன் பொருள் தேடச்சென்றிருக்கிறான்.
அவன் பிரிவினை ஆற்றாது தலைவி வருந்துவாளே என்று தோழி வருந்துகிறாள்..
தலைவி –
• நம்மிடம் பொருள் வேண்டி வருவோருக்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல் வேண்டும்.
• பெரிய பகைகளையெல்லாம் வென்று அடிபணியாதவரை அழித்தல் வேண்டும்.
• முற்பிறப்பில் நம் இருவருக்கும் உண்டான பிணைப்பு நம்மைச் சேர்த்து வைக்கும். என்று,
வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தான் உணர்ந்து எனக்கும் உணர்த்திச் சென்றார் தலைவர். அவர் விரைவில் திரும்பி வருவார்.
தோழி –
பொருள் தேடச்சென்ற அவர் தாம் தேடச்சென்ற பொருள் முற்றிய பின்னர் தானே திரும்பி வருவார்.
தலைவி-
இல்லை அவர் அந்நிலத்தில் இடைச்சுரத்தில் காணும் காட்சிகள், அவரை மேலும் செல்லாது திரும்பி வரச்செய்யும்.
தோழி-
அக்கொடிய நிலத்தில் அப்படியென்ன காட்சிகனைக் காண்பார்?
தலைவி-
• காடுகள் நெருப்புப் போன்ற வெம்மையினால், பாதங்கள் பொறுக்கும் அளவின்றி இருக்கும் என்றார் தலைவர்,
அக்காட்டிடத்தே, துடியினைப் போன்ற அடியினைக் கொண்ட யானைக்கன்று, தாயும் தந்தையும் உண்ணவேண்டும் என்று கருதாது சிறிதளவு உள்ள நீரையும் கலக்கும். அந்தக் கலங்கிய நீரையும், முதலில் பிடியுண்ணுமாறு ஊட்டிப் பின்னரே களிறு உண்ணும் என்றார்.
• காடுகள் இலைப் பசுமை நீக்கி சென்றோரை வருத்தும் தன்மையுடையனவாக இருக்கும் என்றார்.
அக்காட்டிலே, ஆண்புறாக்கள், தம்மீது அன்பு கொண்ட பெண்புறாக்கள் வெம்மையில் வாடக்கூடாது என்று கருதி தம் சிறகை விரித்து ஆற்றும் என்றும் உரைத்தார்.
• சூரியனின் வெம்மையால் மூங்கி்ல் வாடும்படி இருக்கும் அந்நிலத்தில் செல்வோர் மிகவும் துன்புறுவர்.
அந்நிலத்தில் கலைமான், நிழலின்றி வருந்தும் பெண்மானுக்கு தன் நிழலை அளிக்கும் என்றும் உரைத்தார்.
தோழி-
இந்தக் காட்சிகள் போதுமே...
இவற்றில் ஏதாவது ஒன்றை அவர் பார்த்தாலும், உன் நினைவு வந்து அவர் திரும்பி வந்து விடுவாரே.
தலைவி-
ஆம்! அது மட்டுமல்ல பல்லியும் நம் வீடடில் நல்ல நேரத்தில், நல்ல இடத்தில் ஒலித்தது. அவ்வொலி அவரின் வருகையை அறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.எனது கண்ணும் இடப்பக்கம் துடிக்கிது இது நல்ல நிமித்தம் தானே..?
தோழி-
ஆம். தலைவர் விரைவில் திரும்பி வருவார். இந்த நிமித்தங்கள் கூட அவரின் வருகையையே சுட்டுகின்றன.
இதுவே பாடலின் பொருள்.
பாடல் இதோ........
“அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:
'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;
'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;
'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.
என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே“
கலித்தொகை -11
இப்பாடலில்,
• பாலை நிலமோ மிகவும் துன்பத்தைத் தருவது, என்பதும் உற்று நோக்கினால் மனதுள் இன்பத்தை விளைவிக்கும் காட்சிகளும் அங்கு உண்டு என்பதை உணரலாம்.
• தலைவனின் பிரிவு ஆற்றாலாகத் துன்பத்தை விளைவிப்பது ஆயினும் தலைவி வாடி நிற்கவில்லை மாறாகத் தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறாள். நேர்மறையான எண்ணங்களை நினைத்து தலைவர் விரைவில் திரும்பி வருவார் என்று நினைக்கிறாள்.
• பல்லி கத்துதல், தம் கண் இடப்பக்கம் துடித்தல் ஆகியன சிலருக்கு மூடத்தனமாகத் தோன்றினாலும். மனதைத் தேற்றிக்கொள்ள இது ஒரு நல்ல உத்தியாகவே தோன்றுகிறது.
இலக்கியங்கள் மனிதர்களைப் பண்படுத்தவே தோன்றின. நம் முன்னோர் இவ்விலக்கியங்களின் வழியாக அவர்தம் அனுபவங்களை நமக்குத் தந்து சென்றுள்ளனர். நம் அறிவோடு அவர்தம் அனுபவமும் சேரும் போது நம் வாழ்வு இனிக்கும். அதனால் அவ்விலக்கியங்களைப் படிக்கும் போது நம் வாழ்வில் நேரும் துன்பங்களிலும் இன்பம் காணமுடியும்.
திங்கள், 7 செப்டம்பர், 2009
நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா..?
இது என்ன கேள்வி?
நாம் உயிரோடு தானே இருக்கிறோம் என்கிறீர்களா..?
சங்க இலக்கியத்தி்ல் குறுந்தொகைப் பாடலைப் படித்துப் பார்த்த பின்னர் சொல்லுங்கள்....
(தலைமகன் பொருள்வயிற் பிரிந்த வழி ஆற்றால் எனக கவன்ற தோழிக்கு, அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன் என்று கிழத்தி சொன்னது.)
தோழி : தலைவர் பொருள்தேடச் சென்றுவிட்டார்....
உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவரின் பிரிவை நீ எவ்வாறு ஆற்றுவாயோ..?
தலைவி : அவரது பிரிவைக் கூட ஒருவாறு எண்ணி ஆற்றிக்கொள்வேன்.அவர் சென்ற கானத்தை எண்ணித் தான் என் மனம் மேலும் வருந்துகிறது.
தோழி : அட! வியப்பாக இருக்கிறதே. தலைவரின் பிரிவைக் கூட ஆற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு வந்துவிட்டதா..?
தலைவி : ஆம். தலைவர் பிரிவை எண்ணி முதலில் மிகவும் வருந்தினேன். அவரோ “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று என்னைத் தேற்றிவிட்டார்.
தோழி : அது என்ன உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்..?
தலைவி : அதாவது நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை
சிதைத்து செலவு செய்வோர் உயிரோடு உள்ளவராகக் கருதுவது நம் தமிழர் மரபில் இல்லையே! அதுதான்..
தோழி : நம் பெற்றோர் சேர்த்துவைத்த செல்வத்தை செலவு செய்வதற்கு நமக்குத் தானே உரிமையிருக்கிறது. நாம் செலவு செய்யாவிட்டால் வேறு யார் அந்தச் செல்வத்தைச் செலவு செய்வது....?
தலைவி : நம் பெற்றோர் சேர்த்த செல்வத்தை நாம் செலவு செய்யும் போது, நமக்கு உழைக்கும் வாய்ப்பு இல்லாது போகிறது. மேலும் அந்த செல்வத்தின் மதிப்பை நாம் உணராமல்ப் போகிறோம். அதனால் தான் நம் முன்னோர்கள் நாம் செல்வத்தின் மதிப்பை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி “ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்“ என்று சொல்லிச்சென்றனர்.
தோழி : அட!
தலைவி : பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும்,
பொருள் இல்வாழ்க்கைக்கு அடிப்படைத்தேவை என்பதையும்,
பொருளின்றி வாழ்வது இரந்து உயிர்வாழ்வதை விட இழிவானது என்பதையும் தலைவர் சொன்னவுடன் நான் ஒருவாறு அவரின் பிரிவைத் தாங்கிக்கொண்டேன்..
தோழி : நம் முன்னோரின் உயர்ந்த கொள்கையையும், அதை மதித்த நம் தலைவரையும், தலைவனின் எண்ணத்துக்கு மதிப்பளித்த உன்னையும் எண்ணும் போது மிகவும் பெருமையாகவுள்ளது.!
தலைவி : எனது கவலையெல்லாம் அவர் சென்ற வழியை எண்ணித்தான்..?
தோழி : ஆம்.! கொடுமையான நிலம் தான் பாலை.
குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதே..
தலைவி : ஆம்! எமனைப் போன்ற கொடிய வேற்படையை உடைய மறவர், வழிச் செல்வோரைக் கொல்வர். அவ்வாறு இறந்த வழிச்செல்வோர் உடல்கள் மிக்க நாற்றம் உண்டாகும் வரை உண்பதற்காகப் பருந்துகள் காத்திருக்கும். இத்தகையை, நெடிய, பழமையான இடையீடுகள் பலவற்றையும் கொண்ட நீரில்லாத நிலம் பாலை..!
அங்கு சென்ற நம் தலைவர் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும்.
தோழி : அஞ்சாதே தலைவர் நல்லபடியாகத் திரும்பி வருவார்.
பாடலின் பொருள் இதுதான். பாடல் இதோ,
283. பாலை - தலைவி கூற்று
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தௌியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
இப்பாடல் வழியாகப் பல அரிய கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது.
o பகுத்துண்டு வாழ்தல் வேண்டும்.
o நம் முன்னோர் சேர்த்துத் தந்த பொருள்களை போற்றிக்காப்பது ஒன்றே நம் கடன். அதனைச் செலவு செய்ய நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு செலவு செய்தால் நாம் உயிருள்ளவராக மதிக்கப்பட மாட்டோம்.
o பொருளின்றி வாழ்தல் இரந்து வாழ்தலை விடவும் இழிவானது.
o நாம் உழைத்து,அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும்.
o பாலை நிலம் மிகவும் கொடுமையானது அங்கு வழிப்பறி செய்யும் கள்வர் வழிச்செல்வோரைக் கொன்று அவர்களின் பொருளை வவ்வி வாழ்வதை இயல்பாகக் கொண்டிருந்தனர்.
போன்ற பல கருத்துக்களை இப்பாடல் வழி அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடலைப் படிக்கும் போது நான் உயிருடன் இருக்கிறேனா?
என்று எண்ணிப் பார்க்கத்தோன்றியது.
உங்களுக்கு..?
நட்சத்திர இடுகை.
தமிழ் மணம் திரட்டியில் இந்த வார நட்சத்திரமாகத் தேர்வு செய்யப்பட்டமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.
பெருமிதம் கொள்கிறேன்
உவகையடைகிறேன்.
• வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது பதிவை எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை. “தமிழ்மணம்“ என்னும் திரட்டி குறித்த அறிமுகமும், பயன்பாடுகளும் குறித்து தமிழ்க்கொங்கு ஐயா கணேசன் அவர்களின் வாயிலாகவே அறிந்தேன். அவர்களை இவ்வேளையில் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
• எனது பதிவை தமிழ்மணத்தில் இணைத்தபிறகு பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை 77 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்மணம் வாயிலாக இதுவரை 609 பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஒரே நாளில் 30 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் எனது பதிவைப் பார்வையிட்டனர். அப்போது தான் நான் தமிழ்மணம் திரட்டியின் மதிப்பை அறிந்தேன். அன்றுமுதல் தமிழ்மணம் திரட்டியைப் பெருமதிப்புடன் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் எனது பதிவு இடம்பெறுவதையும், மறுமொழிப்பெட்டியில் எனது பதிவு வெளிவருவதையும் பார்த்து மகிழ்ந்தேன். இவ்வேளையில் என் பதிவை மதித்து என்னை இந்தவார நட்சத்திரமாக்கியுள்ளமை எனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாகவும், என்னை மேலும் எழுதத் தூண்டுவதாகவும் அமைகிறது.
• நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திரும்பிப் பார்க்கிறேன். 120 இடுகைகள் 660 கருத்துரைகள் பல்வேறு இணையதளங்களில் 20 கட்டுரைகள் ஆகியன மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சங்க இலக்கியம் , இணையதளத் தொழில்நுட்பம் ஆகிய பொருள்களில் நான் எழுதிய கட்டுரைகளை உலகத்தமிழர்களுக்குக் கொண்டு சென்றதில் தமிழ்மணம் திரட்டிக்குப் பெரும்பங்கு உண்டு. இத்திரட்டி வாயிலாக வந்த பார்வையாளர்கள் எனக்களித்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள அடிப்படையாக அமைந்தன.
• திரட்டியில் இணைத்தல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தமிழ்மணம் குழுவினர் உடனுக்குடன் மின்னஞ்சல் வழியே தீர்த்துவைத்தனர். அதனால் இவ்விணையதளத்தின் மீது நான் கொண்ட மதிப் அதிகரித்தது.
• பிற திரட்டிகளுக்கு முன்னோடியாகவும், பல புதுமைகளைப் புகுத்திவரும் திரட்டியாகவும், குறிப்பாகத் தமிழுக்கு முதன்மை தரும் திரட்டியாகவும் திகழும் தமிழ்மணத்தில் என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்தமைக்குக் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
தீம்புளிப்பாகர்
கணவன் – என்ன பாயசம் கிண்ட சொன்னா களி கிண்டி வைச்சிருக்க.
மனைவி – நான் என்னங்க செய்வேன்..!
உங்க பையன் தான் அணில் சேமியா வாங்கி வரச் சொன்னா வேற ஏதோ சேமியா வாங்கி வந்துட்டான் அதாங்க இப்படி ஆயிருச்சு..
என்ற உரையாடலை தமிழக வானொலிகளில் யாவரும் கேட்டிருப்பீர்கள்..
மனைவி – நீதிபதி ஐயா இவருக்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருக்கய்யா...
நீதிபதி – ஏம்மா...?
மனைவி – இவரு நேற்று என்னை விசம் வைச்சுக் கொல்லப் பார்த்தாருய்யா....
நீதிபதி – ஏம்பா...? உன் மனைவி சொல்றது உண்மையா..?
கணவன் – நீங்களே சொல்லுங்கையா..?
இவ மட்டும் என்ன ரசம் வைச்சுக் கொல்லப் பார்த்தா..
அது மட்டும் சரியா..?
இது நகைச்சுவை மட்டுமல்ல பல வீடுகளில் இன்று இது போன்ற காட்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது உண்மைதான்..
ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.“அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,
அதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.“
உறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.
எந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.
பாயசத்தைக் களி போலக் கிண்டிய மனைவியிடம்...
கணவன் – பரவாயில்லையே இது கூட நன்றாகத் தான் உள்ளது. புதுவிதமான சுவையுடன் உள்ளது என்று சொன்னால் மனைவி அடுத்தமுறை பாயசம் செய்யும் போது நன்றாகச் செய்ய முயற்சியாவது செய்வாள்..
பாராட்டு ஒரு செயலை மேன்மைப்படுத்துகிறது இது உளவியல் ஒப்பிய உண்மை.
சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.
(கடி நகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.)
தலைவி இல்லறம் நடத்தும் சிறப்பினை, நேரில் கண்டறிந்த செவிலி நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.
தலைவி தலைவனுக்காக திறமையாக உணவு சமைக்கிறாள். அதனை உண்ட தலைவன் தலைவியை மனம் நிறையப் பாராட்டுகிறான். தலைவன் தன்னைப் பாராட்டுகிறான் என்பதால் தலைவி செருக்குக் கொள்ளவில்லை. மாறாக அவன் பாராட்டை மனதிற்குள் எண்ணி மகிழ்கிறாள். இக்காட்சியைக் கண்ட செவிலி, உவந்து நற்றாயிடம் தெரிவிக்கிறாள். பாடல் இதோ...
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
(கூடலூர் கிழார்,167. குறுந்தொகை.)
பாடலின் பொருள்,
நன்றாகக் காய்ச்சிய பாலை, உறை ஊற்றிப் பெற்ற கட்டித் தயிரை, காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைகிறாள், அவ்விரல்களால் தான் உடுத்தியிருந்த தூய ஆடையில் துடைத்துக் கொண்டாள். அதனால் அழுக்கான அவ்வுடையைத் துடைக்காமல் உடுத்தியிருந்தாள்.
தாளிக்கத் தெரியாமல் தாளிக்கிறாள் அதனால் குய்யென்னும் புகை அவள் கண்களில் படிகிறது.
இவ்வாறு அரிது முயன்று புளிப்புச் சுவையையுடைய குழம்பினைத் தானே சமைத்தாள்.
தான் செய்த தீம்புளிப்பாகர் (பாகற்காய் குழம்பு) என்னும் குழம்பைத் தன் கணவனுக்கு இட்டு அவன் உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள்.
உணவின் சுவையோடு அவளின் முயற்சியையும் நன்கு உணர்ந்த தலைவன் மகிழ்ந்து “இனிது“ என்று பாராட்டுகிறான்.
தலைவன் பாராட்டிவிட்டானே என்று தலைவி செருக்குக் கொள்ளவில்லை. அகத்தில் மனமகிழ்வு கொண்டாள் என்பதை அவளின் ஒளிபொருந்திய நெற்றியே வெளிப்படுத்தியது. அதுவும் உளவியலை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தலைவியின் மனவுணர்வை அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
தலைவி வீட்டில் இருக்கும் போது எந்த வேலையும் செய்யாது செல்லமாக வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு தன் கணவனுக்காக அரிது முயன்று உணவு சமைப்பதும், அதனைத் தலைவன் உண்டு இனிது என்று மகிழ்ந்து பாராட்டுவதும் கண்ட செவிலி, பெருமகிழ்ச்சி கொண்டாள். அதனை நற்றாயிடம் தெரிவித்தாள். இதுவே பாடலின் பொருள்.
இன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,
சமைத்தல் என்பதும் – அதுவும்
மனைவி சமைத்தல் என்பதும் – அதுவும்
சுவையாக சமைத்தல் என்பதும்
வியப்பான ஒன்றாகவே இருக்கும்.
மாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,
உணவு விசமாகாது!!
விசம் உணவாகும்.!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)