வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

குழவி இறப்பினும்....




பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார் ஒளவையார்.


(மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26))

பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.

கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான்.“


தமிழர்தம் மானம்
போர்க்களத்தில் அழிய எண்ணுதல்
விழுப்புண் வேட்கை
(விழுப்புண் - முகத்தினும் மார் பினும் பட்ட புண். )
ஆகிய பண்புகளை இயம்பும் புறநானூற்றுப் பாடல் காலத்தை வென்று தமிழர் தம் பெருமையைப் பறை சாற்றி நிற்கிறது.


குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?

(புறநானூறு-74)

பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

பிள்ளை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருதார். மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர். ஏனென்றால் ஒவ்வொரு ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்தது.

தமிழர் மரபு இவ்வாறு இருக்க,
ஓர் அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால், வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனை, சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான். அத்தகைய மனிதம் இல்லாத பகைவர்,
வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா....?

காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக் குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல் என்கிறது. சேரன் மனம்.

இதுவே பாடலின் பொருள். இப்பாடல் வழி தமிழரின் விழுப்புண் வேட்கை,போர்க்களத்தில் அழிய எண்ணுதல், மற்றும் மானத்துக்காக உயிரையே விடலாம் என்னும் உயர்பண்பு ஆகியவற்றை அறியமுடிகிறது.

6 கருத்துகள்:

  1. பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்தது முனைவரே...

    பதிலளிநீக்கு
  2. என்னே தமிழரின் மானமும் பண்பும்...இறந்தே பிறந்தாலும் விழுப்புண் ஏற்படுத்தி அடக்கம் செய்தல் புதிய தகவல் குணா...தோல்வியுற்ற அரசனை துன்புறுத்தும் மரபு அன்றிலிருந்தே உண்டா குணா? அதான் இன்று ராணுவத்திலும் நடப்பதால் கேள்வியுற்றேன்.. மானம் பெரிதென எண்ணி உயிர் நீக்கும் மன்னர்களின் வீரம் நாம் பெருமிதக்க தக்க ஒன்று...

    பதிலளிநீக்கு
  3. ஆம் தமிழ்..
    வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனை மிகவும் துன்புறுத்தியுள்ளான்.. அதற்கான சான்று இப்பாடலிலே உள்ளது பாருங்கள்..

    'ஓர் அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால்இ வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனைஇ சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான்.

    இன்னும் வெற்றி பெற்றவன் தோல்வியுற்ற நாட்டை தீக்கிறையாக்குதலும், கழுதையை வைத்து ஏர் உழுவதும் இன்னும் பல் கொடுமைகள் செய்தல் உண்டு....

    பதிலளிநீக்கு
  4. /பாடல்களுக்கான விளக்கம் எளைமையா புரியும்படி இருந்தது முனைவரே/

    நன்றி வசந்த்....

    பதிலளிநீக்கு
  5. பசி வந்தால் பறந்து போகும் பத்து எவையெவை என அறிந்துகொண்டேன்.
    நட்சத்திர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு