வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வில்லக விரலினார்




சங்க காலத்தில் தலைவன் பரத்தையரிடம் செல்வது பெரும் தவறாகக் கருதப்படவில்லை. அதற்கு அக்காலச்சூழல் ஒரு காரணமாக அமைகிறது. தலைவனின் செயலால் தலைவி வருந்துவதுண்டு. அவ்வேளையில் தலைவி தலைவன் மீது ஊடல் (கோபம்)கொள்வாள், வாயில் மறுப்பாள் (தலைவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தல்) ஆயினும் தலைவனை ஏற்றுக்கொள்வாள். சில நேரங்களில் பரத்தையை நொந்துகொள்ளுதலும் உண்டு.

தலைவி தன்னைப் பழித்துப் பேசினாள் என்பதை அறிந்தாள் ஒரு பரத்தை. அதனால் தலைவி மீது கோபம் கொண்டாள். தலைவியின் உறவினர் கேட்குமாறு தனக்கும் தலைவனுக்குமான நெருங்கிய அன்பு நிலையைப் புலப்படுத்துகிறாள்.........


பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
குறுந்தொகை -370. (மருதம் - பரத்தை கூற்று)


வில்லகவிரலினார்.

பொய்கையிலிருக்கும் ஆம்பல் மலரானது, வண்டுகளின் வருகையை உணர்ந்து தன் இதழைத் திறக்கும். இத்தகைய குளிர்ச்சியான நிலத்தின் தலைவனோடு சேராது தனித்திருந்தால் தான் நானும் தலைவனும் இரு வடிவினை உடையவர்களாக இருப்போம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து அணைந்திருந்தால் வில்லோடு சேர்ந்த விரல் போல ஒருவராகத் தான் காட்சியளிப்போம். என்கிறாள் பரத்தை.


மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர். அதன் செவ்வியை உணர்ந்து தலைப்படுபவர் சிலரே என்பது அவர்தம் கருத்து.

காமம் என்ற சொல்லை இக்காலக் கண்கொண்டு காண்பதை விட சங்க காலக் கண்கொண்டு காண்பது நலம் தருவதாக அமையும்.

கமம் என்ற சொல்லே காமம் என்றானது. கமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்பது பொருளாகும். சங்க இலக்கியத்தில் பயின்று வரும் காமம் என்ற சொல்லுக்கு அன்பின் நிறைவு என்பதே பொருளாகும்.


அத்தகைய மலரை விட மென்மையான அன்பின் முதிர்ச்சியைச் சுட்டும் காமத்தைத் தலைவனின் தேவையை உணர்ந்து அளிக்கத் தக்கவள் தானே என்கிறாள் பரத்தை.

ஆம்பலின் மலரானது வண்டின் வருகையை அறிந்து தன் இதழைத் திறக்கும் என்பதற்கு தலைவன் தான் தன்னைத் தேடி வருகிறான். தான் தலைவனைத் தேடி வரவில்லை என்ற பொருளும் நோக்கத்தக்கதாகவுள்ளது.

இப்பாடலில் பரத்தை தனக்கும் தலைவனுக்குமான உறவுநிலையை வில்லுக்கும் விரலுக்குமான உறவு நிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள். இத்தொடரின் சிறப்பினைக் கருதி இப்புலவர் வில்லக விரலினார் என்று அழைக்கப்படலானார்.

10 கருத்துகள்:

  1. பாடலும் விளக்கமும் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. கமம் என்ற சொல்லே காமம் என்றானது. ]]


    இன்று தங்களிடம் கற்றது.

    பதிலளிநீக்கு
  3. /பாடலும் விளக்கமும் அருமையாக உள்ளது./


    நன்றி அன்பு....

    பதிலளிநீக்கு
  4. கமம் என்ற சொல்லே காமம் என்றானது. ]]


    இன்று தங்களிடம் கற்றது./

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்./

    குழுவினருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு .... காதற்காமம் என்ற சொல் பரிபாடலில் உள்ளது அல்லவா?

    பதிலளிநீக்கு
  7. பிரிந்தால் இரு வடிவாகவும் சேர்ந்தால் ஒரு வடிவாகவும் தோன்றுவோம் என்று இந்தப் பாடல் சொல்வதாகத் தோன்றவில்லை நண்பரே. ஊரனொடு இருப்பின் இருமருங்கினமே - தலைவனும் தானும் அமர்ந்திருக்கும் போது அங்கங்கள் தழுவிய நிலையில் இருபக்கங்களிலும் இருவரும் அமர்ந்திருப்பது போல் ஒரு தோற்றம் தோன்றும். கிடப்பின் வில்லக விரலிற் பொருந்தி - இருவரும் கிடந்திருக்கும் போது வில்லும் விரலும் போல் கிடப்போம். அவன் நல் அகம் சேரில் ஒரு மருங்கினமே - அவன் நல் உடம்பில் நான் சேரும் போது பார்க்க ஒரு உருவம் கொண்டு இருப்போம். இவ்வாறு அமர்ந்திருத்தல், கிடந்திருத்தல், கலவி என்ற மூன்று நிலைகளிலும் தான் தலைவனிடம் கொண்டுள்ள நெருக்கத்தைச் சொல்வதாகத் தோன்றுகிறது. திணையும் மருதத்திணை என்பதால் பிரிவு இங்கே பேசப்பட்டிருக்காது என்று தோன்றுகிறது. துறை மட்டுமே இது பரத்தை கூற்று என்று கூறுகிறது; மற்றபடி தலைவியும் இப்பாடலைப் பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் கருத்துரை மேலும் சிந்திக்க வைத்து விட்டது நண்பரே...
    தங்களின் நுட்பமான நோக்கு மகிழ்வளிப்பதாகவுள்ளது.


    மருத நிலத்தில் ஊடல்தான் உரிப்பொருள் என்றாலும் அந்த ஊடலுக்குக் காரணமே பரத்தையர் பிரிவு தானே நண்பரே....

    இந்த பாடலை மேலும் உற்று நோக்க வைத்தமைக்கு நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  9. /நல்ல பதிவு .... காதற்காமம் என்ற சொல் பரிபாடலில் உள்ளது அல்லவா?/

    நன்றி முனைவர் கல்பனா....

    பதிலளிநீக்கு