புதன், 5 ஆகஸ்ட், 2009
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.
(மூங்கிலின் இருபுறமும் தீப்பற்றிக்கொண்டபோது அதன் இடையில் சிக்கிக்கொண்ட எறும்பு)
“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.”
இவ்வரிகளை,
முதல் முறை படித்போது கவிதை நயம் உணர்ந்தேன்..
இரண்டாம் முறை படித்த போது உவமை நயம் உணர்ந்தேன்..
மூன்றாம் முறை படித்த போது எறும்பின் வலி உணர்ந்தேன்...
நான்காம் முறை படித்த போது எறும்பைப் போன்ற தலைமக்களின் மனவலியை உணர்ந்தேன்....
இப்போது எனக்கு ஒரு ஐயம் எழுகிறது..
எறும்பின் வலி முதல் முறை படித்த போது ஏன் என்னால் உணர முடியவில்லை..?
‘பூனை எலியை விரட்டுகிறது,
இரண்டும் ஓடுகின்றன..
இரண்டும் ஓட்டம் தான் ஆனால் இரு ஓட்டத்துக்கும் வேறுபாடு உண்டு.
பூனை பசிக்காக ஓடுகிறது...
எலி உயிர் காக்க ஓடுகிறது....
பூனை பசிக்காக ஓடுவது போல நாம் பணத்துக்காக ஓடுகிறோம். கூட்டத்தோடு கூட்டமாக நானும் ஓடுகிறேன்...
அதனால் நானும் உணர்வுகளை இழந்து எந்திரமாக மாறிவிட்டேனோ என்பதே என் ஐயம்..
ஆம்...
நாளிதழில் கோர விபத்துக்களைப் படித்துக்கொண்டே என்னால் காபி அருந்தமுடிகிறது.....
தொலைக்காட்சியில் சுனாமியையும், தீ விபத்துக்களையும் பார்த்துக்கொண்டே என்னால் சாப்பிடமுடிகிறது.....
சாலையில் அடிபட்டுகிடப்பவரைப் பார்த்துக்கொண்டே அவருக்கு உதவி ஏதும் செய்யாமல் என்னால் போகமுடிகிறது.....
எனப் பலவாறு எண்ணி....
நான் எந்திரம் தான் என்று முடிவுக்கு வருமுன்பு.....
இருதலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பு என்னிடம் பேச ஆரம்பித்தது.
எறும்பு – காலம் கடந்தாவது வலியைப் புரிந்து கொண்டாயே....
உனக்குள் இன்னும் மனிதம் உயிருடன் தான் உள்ளது என்று....
பாடல் – 1.
முத்தொள்ளாயிரம்.
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள்நெகிழ்ப்பக்
காமரு தோள் கிள்ளிக்கு என் கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத்
திரிதரும் பேரும் என் நெஞ்சு.
முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலில்,
தலைவியின் மனநிலைக்கு எறும்பின் மனநிலை ஒப்புமை காட்டப்படுகிறது.
தலைவன் வீதியில் வலம் வருகிறானாம்...
தலைவிக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை..
போ...!போ....! சென்று பார் என்று ஒரு மனம் சொல்கிறது....
கூடாது ! சென்று பார்க்கக் கூடாது அது பெண்மைக்கு அழகல்ல....
என்று நாணம் ஒருபக்கம் தடுக்கிறது..........
தலைவியின் இம்மனநிலையை....
மூங்கிலின் இருபுறமும் தீப்பற்றிக்கொள்ள அதன் இடையே அகப்பட்ட எறும்பின் மனநிலையோடு ஆசிரியர் ஒப்பிட்டுச்செல்கிறார்....
இப்பாடலைப் படித்து முடித்துவிட்டு,
என்ன! உவமை,!
எத்தகு உயிர் வலி! மெய்சிலிர்த்து நிற்கிறேன்..........
தீக்குள் அகப்பட்ட எறும்பு வந்து என்னிடம் சொல்கிறது........
என்னை முதலில் பாடியது முத்தொள்ளாயிரம் இல்லை.
சங்க இலக்கியத்தில் அகநானூறு...
ஆம் இங்கு தலைவியின் மனநிலைக்கு என்னை ஒப்புமை சொன்னது போல அகநானூற்றில் தலைவனின் மனநிலைக்கு என்னை ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றது...
பெருமகிழ்ச்சியோடு அகநானூற்றுப் பாடலைப் பார்க்கிறேன்...
பாடல் – 2.
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
5 அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
10 ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
நரை முடி நெட்டையார்
(அகநாநூறு – 339) பாலை.
“ போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது“ 339
பொருள் ஈட்டி வர வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான் , சென்றவன் இடைவழியில் அவளுடைய உயர்ந்த பண்புகளை எண்ணித் தன் நெஞ்சிடம் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.“
விரைந்தோடும் குதிரைகளைக் கொண்டது தேர்....
அதன் சக்கரங்கள் பதிந்து செல்லும் சுவட்டில் மழை நீர் ஓடுகிறது..
சக்கரங்களின் சுவட்டில் மழை நீர் ஓடுவது பாம்பு விரைந்தோடுவது போலவே இருக்கிறது.
குவிந்து ஒன்றோடொன்று தொடர்பற்ற விரல்களைப் போல பயிற்றங்காய்கள் விரிந்து முதிர்ந்தன..
இவ்வாறாகப் பனிப்பருவம் தோன்றியது...
ஒருபக்கம்...............
முயன்று பொருள் தேடவேண்டும்....
என்று தளர்வில்லாத ஆண்மை முன்னே இழுக்கிறது...
மறுபக்கம்.............
தலைவி மீது நான் கொண்ட காமம் பின்னே இழுக்கிறது....
அதனால் இருபாற்பட்ட நெஞ்சையுடைய நான்..........
இருபுறமும் கணுக்களில் தீப்பற்றிக் கொண்ட எறும்பு ஒருபுறமும் செல்ல இயலாது....
உள்ளேயே இருந்து வருந்துவது போல வருந்தி நிற்கிறேன்....
உடம்பும் உயிரும் சேர்ந்தால் தான் காதல்...
உடலை விட்டு உயிர் பிரிந்தால் சாதல்....
நானும் தலைவியும் உடம்பும் உயிரும் போல.....
இப்போது பிரிந்திருக்கிறோம்........
எனக்கு உயிர் இருக்கிறதா..........?
பாவம் தலைவி என்னைப் போலத் தானே அவளும் எண்ணுவாள் என்று புலம்புகிறான் தலைவன்..............
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.
என்னும் ஒரு உவமை அகநானூறு, முத்தொள்ளாயிரம் என்னும் இரு நூல்களிலும் ஆளப்பட்டுள்ளது.
அகநானூற்றில் தலைவனின் மனநிலைக்கும்,
முத்தொள்ளாயிரத்தில் தலைவியின் மனநிலைக்கும்
உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது....
மெல்ல மெல்ல உணர்வுகளை இழந்து எந்திரங்களாக மாறிவரும் சமூகத்துக்கு உயிரின் வலியையும், உணர்வுகளின் சுமையையும் எடுத்தியம்பிவதாக இவ்வுவமை அமைகிறது என்றால் அது மிகையல்ல..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இருதலைக் கொள்ளி எறும்பை உவமையாக்கிய பழங்கவிதைகளை நன்றாக விலக்கியுள்ளீர்கள்!
பதிலளிநீக்குஇறைவன்/இயற்கை உங்களுக்கு எல்லா நலனும் அருளுவதாகுக!
அன்பிணை,
நா. கணேசன்
இருதலைக் கொள்ளி எறும்ப் போல என்று அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறேன், விளக்கத்திற்கு நன்றி..
பதிலளிநீக்குஉங்களின் தேடல் வியக்க வைக்கிறது முனைவரே. என்னை கவர்ந்தது உவமையும்.உங்களின் விரிவுரையும்.
பதிலளிநீக்குஇருதலைக் கொள்ளி எறும்பை உவமையாக்கிய பழங்கவிதைகளை நன்றாக விலக்கியுள்ளீர்கள்!
பதிலளிநீக்குஇறைவன்/இயற்கை உங்களுக்கு எல்லா நலனும் அருளுவதாகுக!
அன்பிணை,
நா. கணேசன்/
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா...
தங்களின் வருகையும் கருத்துரையும் என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது....
தங்களின் வழிகாட்டுதலில் தான் தமிழ்மணத்தில் இணைந்து பல புதிய நண்பர்களை அறிந்து கொண்டேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.........
இருதலைக் கொள்ளி எறும்ப் போல என்று அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறேன், விளக்கத்திற்கு நன்றி../
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மூர்த்தி......
(கருணாகரசு)
பதிலளிநீக்குஉங்களின் தேடல் வியக்க வைக்கிறது முனைவரே. என்னை கவர்ந்தது உவமையும்.உங்களின் விரிவுரையும்.
/வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.........
மாறாத காதல் நோயாளன் போல் - தமிழ்மணம் பரப்பும் உங்களைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குநல்லதொரு இடுகை உங்கள் விளக்கமோ மிக மிக அருமை... நன்றிகள்...
பதிலளிநீக்குஇருதலைக் கொள்ளி எறும்பின் வலி அதன் மேல் தீஜீவாலை ஐய்யோ வலி வலி வலி...படத்தின் கீழ் கருத்து
பதிலளிநீக்குசவுக்கடி குணா உங்கள் சிந்தனை வியந்தேன்...
பிறகு இரண்டு பாடல் இருதலைக்கொள்ளியோடு உவமை காட்டி அங்கு காதலின் நிலை....வெகு அழகு நேர்த்தி...இந்த பதிவு ஏனோ மனதை பிசைகிறது...தற்போதைய பதிவுகளில் நடையில் நிறைய மாற்றங்கள் நல்லாயிருக்கு குணா...
இப்படி ஒரு பார்வை இருக்கா
பதிலளிநீக்குநல்லா சொல்லியிருக்கீங்க
மாறாத காதல் நோயாளன் போல் - தமிழ்மணம் பரப்பும் உங்களைப் பாராட்டுகிறேன்./
பதிலளிநீக்குபாராட்டுதலுக்கு நன்றி மருத்துவரே.........
நல்லதொரு இடுகை உங்கள் விளக்கமோ மிக மிக அருமை... நன்றிகள்.../
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு....
இருதலைக் கொள்ளி எறும்பின் வலி அதன் மேல் தீஜீவாலை ஐய்யோ வலி வலி வலி...படத்தின் கீழ் கருத்து
பதிலளிநீக்குசவுக்கடி குணா உங்கள் சிந்தனை வியந்தேன்...
பிறகு இரண்டு பாடல் இருதலைக்கொள்ளியோடு உவமை காட்டி அங்கு காதலின் நிலை....வெகு அழகு நேர்த்தி...இந்த பதிவு ஏனோ மனதை பிசைகிறது...தற்போதைய பதிவுகளில் நடையில் நிறைய மாற்றங்கள் நல்லாயிருக்கு குணா.../
கருத்துரைக்கு நன்றி தமிழ்....
யாவருக்கும் எளிதில் புரியவேண்டும் என்ற எண்ணமே எனது எழுத்து நடையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கிறேன்....
எளிமையான விளக்கம் அருமை முனைவரே வாழ்த்துக்கள்...........
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் முனைவரே
பதிலளிநீக்குஎளிமையான நடையில் அருமையான விளக்கம். மிக்க நன்றி தோழரே... தொடருங்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பு...
பதிலளிநீக்குஅற்புதமான உவமைகளை மிகத் தெள்ளிய தமிழில் தருவதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் முனைவர்
பதிலளிநீக்குhttp://dinamani.com நல்ல கட்டுரைகளைத் தமிழில் தருகிறது.
பதிலளிநீக்குபடித்துப் பாருங்கள். அண்மையில் இந்தப் பதிவு போலவே ஒன்று.
நா. கணேசன்
-------------
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=107130&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=
கண்கொண்டது மயக்கம்; கால் கொண்டது தயக்கம்!
திருநீலக்குடி மா.உலகநாதன்
First Published : 16 Aug 2009 11:59:00 PM IST
Last Updated :
அது ஒரு மாலைப்பொழுது. சாதாரண மாலைப்பொழுதா? அல்ல...அல்ல... மயக்கும் மாலைப்பொழுது. அப்பொழுது கிள்ளியென்னும் சோழ மன்னன் உலா வருகிறான். சோழனைப் பார்க்கச் சென்ற தோழியர் சிலர் அவனுடைய தோளின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி? ராமபிரானின் தோள் அழகைக் கம்பன் வர்ணிப்பானே அப்படி.
""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''
(கம்-உலாவியர் படலம்-பா.1081)
மன்னனின் தோள் அழகைப் பற்றிப் பிறர்பேசிக்கொண்டிருந்ததை ஒரு பெண் கேள்வியுற்றாள். அதுமுதல் அவனைக் காணாமலேயே அவன்மீது காதலும் கொண்டாள். அவளுடைய கண் அந்தக் கிள்ளியின் தோள்களைப் பார்க்க வேண்டுமென்ற தாங்கொணா ஆசையைக் கொண்டிருந்தது.
அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. மீண்டும் சோழன் உலா வருகிறான். ஒவ்வொரு தெருவுக்கும் போய் பின் அரண்மனை திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். ஆசைப்பட்டவள் இருக்கின்ற வீட்டுக்கு அருகிலும் வருகிறான். பொழுதும் யாமம் ஆகிப்போகிறது. அவள் வெளியே வந்து அவனைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். மனமோ தெருவாசற் கதவினடிக்கு வந்தது. உடனே நாணம் வந்து மனத்தைப் பிடித்துப் பின்னாலேயே இழுக்கத் தொடங்குகிறது. ஆனாலும் கிள்ளியின் மேல் வைத்த காதல் நலன் வந்து மனத்தை நெகிழ்வித்து முன்னே செல்லும்படித் தூண்டுகிறது. மனம் மட்டுமா? அவள் கண்களும் கூட எப்படியாவது காமருதோட்கிள்ளியைக் காட்டு என்று அடம் பிடிக்கிறது. பாவம் அவள் என்ன செய்வாள்? மனம் இங்கும் அங்குமாக ஒருதலைப்படாமல் அலைகிறது. ஆசை முன்னே தள்ள, நாணம் பின்னே தள்ள இருதலைக் கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்பு போலத் தவிக்கிறாள்.
கைக்கிளையாய் (ஒரு தலைக்காதல்), அலைபாயும் அவளின் மன உணர்ச்சிகளை முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்று அழகாக முன்னெடுத்து வைக்கிறது.
""நாணொருபால் வாங்க நலனொருபால் உண்ணெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென கண் கவற்ற - யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் னெஞ்சு''
(பா-100)
அகநானூற்றுப் பாடல் ஒன்றும் இக்கருத்தை வழிமொழிகிறது.
பனிக்காலம். பனிக்காலத்தில் பயற்றஞ் செடிகளில் பிஞ்சுகள் கொத்துக்கொத்தாய் காய்த்து விரிகின்றன. ஒரு பொருளைப் பற்றியிருக்கின்ற விரல்கள் அதை விடுத்துப் பின்பு பிரிவதைப்போல பயற்றம் பிஞ்சுகளெல்லாம் கொத்திலிருந்து சிறிது கூன்நிமிர்ந்து விளங்குகின்றன. இந்தப் பனிக்காலத்தில்தான் தலைவன் பொருள் தேடும் முயற்சிக்காக தலைவியைப் பிரிந்து தேரேறிப் போகிறான். தேர்ப்பாகன் தேரை மிக விரைவாகச் செலுத்துகிறான். மேலாடை விழுந்தது எடு என்பதற்குள் நாலாறு காதம் சென்றது நளனின் தேர். அதுபோல, தேர் செல்லுகின்ற விரைவினாலே, நறுமணம் கமழ்கின்ற காடு விறுவிறு என்று பின்னிட்டு ஓடுகிறது. இங்ஙனம் தேர் போகும்போது தேரிலிருக்கின்ற தலைவன் பலப்பல எண்ணுகிறான்.
பொருள் தேட வேண்டுமே என்று ஆண்மை அவன் நெஞ்சைப் பற்றி முன்னே இழுக்கிறது. ஆனால், தலைவியினிடம் வைத்திருக்கின்ற காதல் வந்து, போகாதே, வா வீட்டுக்கு என்று தடுக்கிறது. இந்த நிலையில் அவன் மனம் பொருளா? தலைவியா? என ஊசலாடத் தொடங்குகிறது. மனமும் ஆண்மையும், போவதும் வருவதுமாக அலைகின்றன. அவனுடைய உணர்ச்சியை நரைமுடி நெட்டையார் என்ற நல்லிசைப் புலவர் நவின்ற முறையாவது,
""வீங்குவிசைப் பணித்த விரைபரி நெடுந்தேர்
நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற்
பாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப்
பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றாற் பொழுதே முற்பட
ஆழ்விழைக் கெழுந்த அசைவி லுள்ளத்து
ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
சுவைபடு நெஞ்சங் கட்க ணகைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
ஒருதலைப்படாஅ உறவிப் போன்றன
நோங்கொல் அளியன் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்த லன்ன காதல்
சால லன்ன பிரிவரி யோளே''
(அக.339)
தலைவனுடைய மனம் படுகின்ற தடுமாற்றத்தை ஆண்மை வாங்க என்றும், தலைவி படும் பாட்டை நாணொருபால் வாங்க என்றும், காமந் தட்ப என்பதையும் நலனொருபால் உள்நெகிழ்ப்ப என்பதையும் ஒப்பிட்டு உணரலாம். இவ்வாறான இனிமையும், உணர்ச்சியும், மயக்கமும், தயக்கமும் காதற் குணங்களோ?
ஐயா
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
தங்கள் அளித்த முகவரிக்கே சென்று அக்கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன்...
ஆகஸ்ட் 5 அன்று வெளியான எனது கட்டுரையும்
ஆகஸ்ட் 16 அன்று வெளியான தினமணிகட்டுரையும்
ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்..
தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி!!!!!!!!!!!
மாணிக்கவாசகப் பெருமானார் அருளிய திருப்பாடல்:
பதிலளிநீக்குஇருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே. (8.6.9)
அற்புதமான உவமைகளை மிகத் தெள்ளிய தமிழில் தருவதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் முனைவர்/
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி நேசமித்திரன்..
(அ.நம்பி)மாணிக்கவாசகப் பெருமானார் அருளிய திருப்பாடல்:
பதிலளிநீக்குஇருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே. (8.6.9)/
வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி நண்பரே.......
நல்ல பதிவு.
பதிலளிநீக்குஉங்கள் பதிவில் படிக்க நிறைய இருக்கிறது.
மகிழ்ச்சி தினேஷ்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி தனசேகரன்.
பதிலளிநீக்குI have read elsewhere that there is a species of ant called koLLi eRumbu. Due to a genetic aberration some of them have two heads (iru thalai). The two heads are fused at an angle to each other. When it moves the instructions come from both heads (brains) with the result the ant has a difficult time obeying both commands. Hence it goes in a zig-zag direction. Can you relate to this phenomenon? The same dilemma attributed to the thalaivi in muththoLLAyiram and thalaivan in aganAnUru will also apply here. Can you shed some light on this?
பதிலளிநீக்கு