வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 ஜூலை, 2009

நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.


காதல் வெளிப்படும் அழகான சூழல்...


தலைவி தோழிக்குச் சொல்லியது.....

தலைமக்கள் இருவரும் ஒருவரை அறியாமல் அவரவர் மனதிற்குள்ளேயே காதல் கொண்டிருந்தனர்.ஆயினும் இயல்பாக ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல நடந்து வந்தனர்..

இந்நிலையில் அவர்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழலைக் காட்சிப்படுத்துகிறது கலித்தொகைப் பாடல்..........

தலைவி : ஒளி பொருந்திய வளையினை அணிந்த என்னுயிர்த் தோழியே நான் சொல்வதைக் கேட்பாயாக....

தோழி : ம்.. சொல் கேட்கிறேன்....

தலைவி : முன்னொரு நாள் நானும் என் அன்னையும் வீட்டில் இருந்தோமா....

தோழி : ம்.....

தலைவி : அப்போது வீட்டு வாசலில் ஒரு குரல்...

தோழி : என்ன குரல்...?

தலைவி : வீட்டில் இருப்பவர்களே....
உண்ணும் நீர் வேட்கையால் தங்கள் வீடு தேடி வந்திருக்கிறேன்....
யாராவது தண்ணீர் தருவீர்களா..........?
என்று.

தோழி : சரி...
யார் உங்களுக்குத் தெரிந்தவர்களா....?

தலைவி : எங்களுக்கு மட்டுமில்லை ...
உனக்கும் அவனைத் தெரியும்...

தோழி :அப்படியா... எனக்கும் தெரியுமா...?
யார் அவன்....?

தலைவி : நாம் மணலால் சிறு வீடு கட்டியபோது அதனை வந்து காலால் எட்டி உதைத்துச் சிதைத்ததோடு அல்லாமல்,
என் கூந்தலை பிடித்து இழுத்து, நாம் விளையாடிய வரிப்பந்தனை எடுத்துக்கொண்டு ஓடினானே ஒருவன்....
உனக்கு நினைவிருக்கிறதா...?

தோழி : ஆமாம்...

தலைவி : அவனே தான்....

தோழி : அவன் தெருவில் நமக்குத் துன்பம் செய்தது போதாது என்று இப்போது உன் வீட்டுக்கே வந்துவிட்டானா.........?

தலைவி : ஆமாம்...
வந்தவன் என்ன செய்தான் தெரியுமா....?

தோழி : என்ன செய்தான்....

தலைவி : அவன் தண்ணீர் கேட்டவுடன் என் அன்னை ..
என்னிடம் அழகிய பொன்னாலான கலத்தில் நீர் கொடுத்து வா என்றாள்...

தோழி : சரி.....

தலைவி : வந்திருப்பவன் இவன் என்பதை அறியாமல் நானும் நீர் எடுத்துச் சென்றேன்...
இவன் என்று அறிந்ததும் திகைப்புற்றேன்...
ஆயினும் சரி தண்ணீர் தானே கேட்கிறான் என்று கொடுத்தேன்.

தோழி : சரி......

தலைவி : தண்ணீரை வாங்குவது போல அவன் என் வளையணிந்த முன்கையையும் பற்றி இழுத்துவிட்டான்.....


தோழி : ஐயோ ...!
பின் என்ன நடந்தது..

தலைவி : நான் அன்னாய் ....
இவன் செய்த செயல் பார்த்தாயா....
என்று கத்திவிட்டேன்.....

தோழி : சரி.....

தலைவி : அன்னையும் அலறிக்கொண்டு என்ன நடந்தது என்று அறியாது விரைந்து அவ்விடத்துக்கு வந்தாள்...

தோழி : ம்....
நீ அவன் செய்ததை உன் தாயிடம் கூறிவிட்டாயா...?

தலைவி : இல்லை...

தோழி : ஏன்...?

தலைவி : ஏனென்று தெரியவில்லை....
அவனை என் தாயிடம் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை....

தோழி : சரி .. சரி ...

பின் நீ கத்தியதற்கு என்ன காரணம் கூறினாய்...?

தலைவி : அவன் உண்ணு நீர் விக்கினான் என்றேன்.....
அவன் செய்கை அறியாது என் தாயும் அவன் உண்மையிலேயே உண்ணு நீர் விக்கினான் என்று அவன் முதுகினைத் தடவிக்கொடுத்தாள்...

தோழி : அவன் என்ன செய்தான்.....

தலைவி :கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

தோழி : சரி எனக்கு எல்லாம் புரிந்து விட்டது...

தலைவி : என்ன புரிந்து விட்டது...?

தோழி : நீ ஏன் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்கவில்லை..
அவன் ஏன் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
உன்னைப் பார்த்து சிரித்தான்... என்பது எனக்குப் புரிந்து விட்டது....

தலைவி : அப்படியா ...
அப்படி என்ன புரிந்து கொண்டாய்.....?

தோழி : நீ நினைத்திருந்தால் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுத்திருக்கலாம்..

ஆனால் நீ ஏன் காட்டிக் கொடுக்கவில்லை ...
உன்னையும் அறியாது நீ அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாய்......

அதனை அவனும் அறிவான்....
அவன் உன்னைக் காதலிக்கத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
அவன் சிரிப்பின் பொருள் என்ன என்று உனக்குத் தெரியாதா...?

தலைவி : என்ன பொருள்..?

தோழி : நீ தான் கள்ளி என்று அவன் எண்ணியிருப்பான்.....

தலைவி : என்ன சொல்கிறாய்...?

தோழி : ஆமாம்....

அவன் செயலை உன் தாயிடம் கூறாது கள்ளத் தனம் செய்தவள் நீ தானே...
அதனால் தான் அவன் உன்னைப் பார்த்து சிரித்திருக்கிறான்.....

அவன் முடிவு செய்திருப்பான்....

தலைவி : என்ன முடிவுசெய்திருப்பான்...?

தோழி : நீ அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்காமல் இருந்ததிலிருந்து நீயும் அவனைக் காதலிக்கிறாய் என்பதை முடிவு செய்திருப்பான்...


தலைவி : நீ என்ன என்னென்னவோ கற்பனை செய்து கொள்கிறாய்..
அப்படியெல்லாம் எதுவும் இல்லை....


தோழி : இல்லை என்று உன் உதடுகள் மட்டும் தான் சொல்கிறது..
உனது கண்களோ அதைப் பொய் பொய் என்று கூறுகிறதே ...

எனக்குத் தெரியாதா...

எத்தனையோ பெண்களிருக்க அவன் உன்னை மட்டும் சுற்றி வருகிறான், எத்தனையோ வீடுகளிருக்க அவன் உன் வீட்டில் மட்டும் ஏன் நீர் வேண்டி வருகிறான்...?

என்னிடம் மறைக்கலாமா....?

தலைவி : உன்னிடம் மறைக்கமுடியுமா.....?

இது தான் பாடலின் உட்பொருள்.....

இதனை உணர்த்தும் பாடல்...,


51 சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!


கலித்தொகை-51.
இப்பாடல் வழி தலைமக்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழல் உணர்த்தப்படுகிறது. மேலும் தலைமக்கள் இருவரும் வெளியே சண்டையிட்டுக் கொண்டாலும் மனதளவில் ஒருவரை ஒருவர் காதலித்தமையும் அறியமுடிகிறது.....

காட்சியைக் கண்முன் கண்டது போன்ற நிறைவு இப்பாடலின் முடிவில் கிடைக்கிறது.

26 கருத்துகள்:

  1. அந்த படம் என்னை ரொம்ப நேரம் கட்டி போட்டு விட்டது ...

    பதிலளிநீக்கு
  2. கூகுளில் எடுத்தேன் நண்பரே...
    வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. ஆயினும் இயல்பாக ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல நடந்து வந்தனர்..\\

    நல்லா சொன்னீங்க ...

    பதிலளிநீக்கு
  4. சங்க கால எழுத்துகளுக்குள் கொண்டு போய்விட்டது உரைநடை ...

    அருமை.

    பதிலளிநீக்கு
  5. சங்ககால பாடல்களை சமீபமாய் நீங்கள் விளக்கும் விதம் அருமை குணா....ரொம்ப எளிய நடை என்னை மாதிரி மக்குக்கு உதவும்...சங்க காலத்திலும் காதலில் கள்ளத்தனம் சுவையான பதிவு என்றும் காதலின் நிலை இதானோ என எண்ணத்தோன்றுகிறது... நாளுக்கு நாள் சுவை கூடுகிறது வேர்களைத்தேடி...

    பதிலளிநீக்கு
  6. /நல்லா சொன்னீங்க .../

    கருத்துரைக்கு நன்றி ஜமால்...

    பதிலளிநீக்கு
  7. /சங்ககால பாடல்களை சமீபமாய் நீங்கள் விளக்கும் விதம் அருமை குணா....ரொம்ப எளிய நடை என்னை மாதிரி மக்குக்கு உதவும்...சங்க காலத்திலும் காதலில் கள்ளத்தனம் சுவையான பதிவு என்றும் காதலின் நிலை இதானோ என எண்ணத்தோன்றுகிறது... நாளுக்கு நாள் சுவை கூடுகிறது வேர்களைத்தேடி.../

    கருத்துரைக்கு நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. தோழி : நீ ஏன் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்கவில்லை..
    அவன் ஏன் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
    உன்னைப் பார்த்து சிரித்தான்... என்பது எனக்குப் புரிந்து விட்டது!!//

    காதல் கள்ளர்கள் அப்போதே அதிகம் போல் உள்ளதே!!

    பதிலளிநீக்கு
  9. தொடந்து செய்யும் உங்கள் தமிழ்ப்ப்பணி வளர்க!

    பதிலளிநீக்கு
  10. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  11. அந்த பாடலை நீங்கள் விளக்கிய வசனங்களில் லயித்துப் போனேன். மிக்க நன்றி குணா.

    பதிலளிநீக்கு
  12. /வசனங்களில் லயித்துப் போனேன்/

    நன்றி அன்புமணி

    பதிலளிநீக்கு
  13. பாடல்களை நீங்கள் விளக்கும் விதம் எங்களை கட்டிப்போடுகிறது.
    இன்று சிலர் இலக்கியம் படிக்க விரும்பாததற்கு காரணம். இலக்கியப்பாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள் அது எந்த அளவில் பொய் என்பது புரிகிறது. எல்லோரும் இலகுவாக விளங்கும் படி எழுதி இருக்கிறிர்கள்.

    நன்றி தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  14. இலக்கியப்பாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள் அது எந்த அளவில் பொய் என்பது புரிகிறது. எல்லோரும் இலகுவாக விளங்கும் படி எழுதி இருக்கிறிர்கள்/

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு..

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் எழுதியதைப் பார்க்காமல் இதே பாடலை நானும் எழுதியுள்ளேன்.உங்கள் உரையாடல் நன்று குணா.

    பதிலளிநீக்கு
  16. அப்படியா...
    மகிழ்ச்சி.......
    சங்கப்பாடல்களை எத்தனை முறை எத்தனை பேர் சொன்னாலும் சுவை குன்றாது அல்லவா...!

    பதிலளிநீக்கு
  17. இந்தப் பாடலை நான் முன்னர் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் தந்திருக்கும் விளக்கத்தால் ஒவ்வொரு சொல்லும் மிக எளிமையாகப் புரிகிறது. நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் கருத்துரை என்னை மேலும் மகிழ்விப்பதாகவுள்ளது..
    கருத்துரைக்கு நன்றிகள்.......

    பதிலளிநீக்கு
  19. அருமை முனைவரே! கலித்தொகை வழிக் காதல் அருமை. அந்த காலத்தில் மக்கள் எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருக்கின்றனர். பழந்தமிழர் காதல் வாழ்வெண்ணி உளம் நெகிழ்கிறேன். அவர்தம் மாண்பை எண்ணி வியக்கிறேன். இலக்கியத் தேநீர் அருந்திய என் மனக்குரங்கு கூத்தாடிக்கொண்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களின் ஊக்கமே நான் தொடர்ந்து எழுதக் காரணமாக அமைகிறது அன்பரே..

      நன்றி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி சீனி.

      நீக்கு
  21. அழகு... அழகு... காதலில் இதுவும் ஒரு விளையாட்டுத்தானே... அதை எடுத்துக்காட்டியப் பாடலும் அதற்கானத் தங்கள் விளக்கமும் எந்தக் காலத்தும் நினைவிலாடும். நன்றியும் பாராட்டும் முனைவரே.

    பதிலளிநீக்கு
  22. காதல் குறித்து நம் இலக்கியங்களில் அவ்வளவு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்! பாடலின் விளக்கம் உரைநடையாக இல்லாமல்ம் சம்பவமாக கொடுத்துள்ளது மிகவும் ரசிக்கவைக்கிறது!

    பதிலளிநீக்கு
  23. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதா, நன்றி நம்பிக்கை பாண்டியன்.

    பதிலளிநீக்கு
  24. ஐயா மிகவும் அருமையான விளக்கம்.அரும்பணி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு