சங்கப் புலவர்களில்
தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் இதுவரை ஒன்பது புலவர்களின் பெயர்களுக்கான
காரணங்களை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் பத்தாவதாக இன்று காண இருப்பது மீனெறி
தூண்டிலார்....
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொ ஆண்டு ஒழிந்தன்றே.
குறுந்தொகை – 54
குறிஞ்சி.
( மீனெறி தூண்டில் – மீனை எறிந்த தூண்டில், மீனால் எறியப்பட்ட தூண்டில்) (வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)
தலைவன் தலைவியைத்
திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறான். அதனால் தலைவி அத்துயரை
ஆற்றாமல்த் தவிக்கிறாள். இந்நிலையில் தோழிக்குத் தன் மன உணர்வுகளைத் தெரிவிப்பது
போல இப்பாடல் அமைந்துள்ளது.
நான் மட்டும் இங்கு
உள்ளேன். தினைப் புனத்தில் தினையைக் காவல் புரிபவர் விடுகின்ற கவண் ஒலிக்கு அஞ்சி
காட்டு யானையானது உண்டு கொண்டிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டது.
அது மீனைக் கவர்ந்து
கொண்ட தூண்டிலைப் போல விரைவாக மேலே சென்றது. அத்தகைய நாட்டின் தலைவன் என்னை
நீங்கிய போது என் நலமும் என்னை விட்டு நீங்கிச் சென்றது என்கிறாள் தலைவி..
தலைவனின் பிரிவினைத்
தலைவியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனை இவ்வாறு கூறுகிறாள். யானை வளைக்கும் போது
வளைந்து, அது கைவிடத் தானும் நிமிரும் மூங்கில். அது மீனெறியும் தூண்டில்
நிமிர்வது போல இருக்கும். தலைவன் தன் நெஞ்சத்து அன்பு வந்தபோது நெகிழ்ந்தும்,
அன்பற்ற காலத்தில் மறந்தும் வாழ்கிறான் என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துவதாக
உள்ளது.
இதில் யானை மூங்கிலை
உண்பதற்கு விரும்பி வளைத்து தினைப் புனங்க காப்பவர் எழுப்பிய கவண் ஒலி கேட்டு
அஞ்சி அதனைக் கைவிட்டது.
மீன் பிடிப்பவன் மீன்
அகப்பட்டவுடன் விரைவாகத் தூண்டிலை மேலே தூக்குவான். அந்த தூண்டில் நிமிர்வது போல
யானை கைவிட்ட மூங்கிலும் நிமிர்ந்தது என்று மீனெறி தூண்டிலோடு ஒப்பிட்டு
உரைத்தமையாலும். அந்த ஒப்புமை மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும், பாடலுக்கு மேலும்
சிறப்பு சேர்ப்பதாகவும் அமைந்து விட்டதாலும் இப்புலவர் மீனெறி தூண்டிலார் என்று
அழைக்கப்படலானார்.
இதனை மீனை எறிந்த
தூண்டில் என்னாமல், மீனால் எறியப்பட்ட தூண்டில் என எறிதலை மீனின் வினையாக்கி
ரா.இராகவையங்கார் உரை வகுத்துள்ளார். தூண்டிலில் இரையை மீன் விழுங்கி அகப்படுதலும்
உண்டு. அகப்படாது இரையை எறிந்து தப்பிப் போதலும் உண்டு.
மீனெறி தூண்டில் என்ற
தொடரில் எறிதல் மீனின் வினையே அன்றி தூண்டில் வினையாகாது. மீன் இரையைக் கொள்ளாதவரை
தூண்டில் வளைந்து தான் கிடக்கும். இரையைக் கொண்டவுடன் தான் வளைந்து கிடக்கும்
தூண்டில் நிமிரும். அது போல யானை விட்டவுடன் தான் மூங்கில் நிமிர்கிறது. இவ்வுவமை
இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமானதாகவுள்ளது.
மீனெறி தூண்டில்
என்பது யானையின் செயலையும் தலைவியின் நிலையையும் ஒரு சேரக் குறிப்பது பாடலின்
சிறப்பாவுள்ளது. மீனை எறிந்த தூண்டில் மீனால் நிமிர்வது
போல, தலைவனுக்காக வைத்திருந்த தம் அழகுநலம் அவனாலேயே அழிந்து போகிறது என்ற
நிலையிலும் இவ்வுவைமை சிறப்புப் பெறுகிறது.
அருஞ்சொற் பொருள்
ஈண்டையேன் = இங்கு இருக்கின்றேன்.
நலன் = பெண்மை நலம், அழகு, சிந்தனை, உணர்வு ஆகியவை;
ஏனல் = தினைப்புனம்;
வெரீஇ = பயந்து;
பசும்கழை = பச்சை மூங்கில்;
நிவக்கும் = உயரும்;
ஆண்டு = அங்கு.
நல்ல தமிழ்ப்பாடல். அதற்குரிய எளிமையான விளக்கங்கள். வாழ்த்துகள் நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே........
பதிலளிநீக்குகுணா காலையிலேயே படிச்சிட்டு ஓட்டுப் போட்டுட்டு போயிட்டேன் பின்னுட்டம் இப்பத்தான்..
பதிலளிநீக்குஎன்னே தமிழின் சுவை...என்னே சங்கக்கால காதல்...
//
யானை வளைக்கும் போது வளைந்து, அது கைவிடத் தானும் நிமிரும் மூங்கில். அது மீனெறியும் தூண்டில் நிமிர்வது போல இருக்கும்.
தலைவன் தன் நெஞ்சத்து அன்பு வந்தபோது நெகிழ்ந்தும், அன்பற்ற காலத்தில் மறந்தும் வாழ்கிறான் என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துவதாக உள்ளது.//
சொல்வதற்கே ஒன்றுமில்லை..உவமையை யானை வளைத்த மூங்கிலை கவனித்த தலைவி அதை தன் காதலுக்கு உவமையிட்டு கூறுவது...அருமையான பதிவு.....
//
மீனை எறிந்த தூண்டில் மீனால் நிமிர்வது போல, தலைவனுக்காக வைத்திருந்த தம் அழகுநலம் அவனாலேயே அழிந்து போகிறது என்ற நிலையிலும் இவ்வுவைமை சிறப்புப் பெறுகிறது.//
பொருள் சுவைக்கூட்டுகிறது....
கருத்துரைக்கு நன்றி தமிழ்....
பதிலளிநீக்குஆஹா!
பதிலளிநீக்குகொஞ்சம் விட்டுவிட்டேனே!!
நல்ல தொடர்!!
உங்கள் வலைப்பதிவுக்கு நான் புதியவன் உங்கள் பதிவுகள் அருமை இனிமேல் தினம் உங்கள் வலைப்பக்கம் வந்து போக தூண்டுகிறது என் மனது.....
பதிலளிநீக்கு/ஆஹா!
பதிலளிநீக்குகொஞ்சம் விட்டுவிட்டேனே!!
நல்ல தொடர்!!
/
தாங்கள் தவறவிடவில்லை மருத்துவரே....
இவ்வலைப்பதிவில் உள்ளடக்கத்தில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் என்னும் தலைப்பில் இந்த தொடர் கட்டுரைகள் உள்ளன. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துக் கொள்ளலாம்...
தினமும் வாங்க சந்ரு......
பதிலளிநீக்குதங்கள் வருகை மகிழ்வளிப்பதாகவுள்ளது.
எளிமையான விளக்கம்.நன்று
பதிலளிநீக்குகுணசீலன்,
பதிலளிநீக்குபதிவு சிறப்பாக உள்ளது.
நன்றி.
"நானொடு" என்ற சொல்
"நாடனொடு" என்று இருக்கவேண்டுமே!
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
அன்பு முனைவர் குணசீலன்,
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
உங்கள் விளக்கம் மகிழ்வளித்தன.
மேலும்,
"என் நிலை,
கவண் ஒலி வெரீஇ, யானை கைவிடுவதைப்போல் தலைவன் சென்றனன். பசுங்கழை போல் யானே ஈண்டையேனே. அதுமட்டுமல்ல;
மீன் எறி தூண்டிலின் போன்ற நிலை, இறை துய்த்த மீன் துடிப்பதைப் போல்
கானக நாடனொடு ஆண்டு (இணைந்து) ஒழிந்தன்றே என் நலனே.
எனத் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கருத இடம் உண்டா!!!
அன்புடன்
ரா. ராதாகிருஷ்ணன்
ஹூஸ்டன்
ஜூலை 4, 2009
/எளிமையான விளக்கம்.நன்று/
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி முனைவரே.....
/குணசீலன்,
பதிலளிநீக்குபதிவு சிறப்பாக உள்ளது.
நன்றி.
"நானொடு" என்ற சொல்
"நாடனொடு" என்று இருக்கவேண்டுமே!
அன்புடன்
ராதாகிருஷ்ணன்/
ஆம் நண்பரே சிறு எழுத்துப்பிழை ...
தகவலுக்கு நன்றி.....
பாடலை எழுதிய புலவருக்கு வேண்டுமானால் இந்த உவமையினால் பெயரும் புகழும் கிடைத்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தும் தலைவனின் குணத்தை மூங்கிலோடு ஒப்பிட்ட உள்ளுறைப் பொருள் தான் எனக்குப் பிடித்திருக்கிறது. யானையால் உண்ணப்படும் மூங்கில் - தலைவியால் உண்ணப்படும் தலைவன்; அவன் மூங்கிலைப் போல் இளமையும் மென்மையும் கொண்டிருக்கிறான். ஒலி கேட்டு யானை விட்டது போல் உறவினர் செயல்களால் தலைவியும் தலைவனை விட்டாள்; மீனெறி தூண்டிலைப் போல் உயர்ந்தது மூங்கில் - தலைவனும் கண்ணுக்குத் தென்படாதவன் ஆனான்.
பதிலளிநீக்குதங்கள் எண்ணம் நன்றாகவுள்ளது. உள்ளுறையாகத் தாங்கள் கொண்ட பொருள் இனிமை குமரன்...........
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி
/அன்பு முனைவர் குணசீலன்,
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
உங்கள் விளக்கம் மகிழ்வளித்தன.
மேலும்,
"என் நிலை,
கவண் ஒலி வெரீஇ, யானை கைவிடுவதைப்போல் தலைவன் சென்றனன். பசுங்கழை போல் யானே ஈண்டையேனே. அதுமட்டுமல்ல;
மீன் எறி தூண்டிலின் போன்ற நிலை, இறை துய்த்த மீன் துடிப்பதைப் போல்
கானக நாடனொடு ஆண்டு (இணைந்து) ஒழிந்தன்றே என் நலனே.
எனத் தோழியிடம் தலைவி கூறுவதாகக் கருத இடம் உண்டா!!!
அன்புடன்
ரா. ராதாகிருஷ்ணன்
ஹூஸ்டன்
ஜூலை 4, 2009/
தங்கள் கருத்துரையைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே....
மிகவும் ஆழமாக இவ்விடுகையைப் படித்தது தாங்கள் கேட்ட கேள்வியின் வாயிலாகவே தெரிகிறது...
தாங்கள் எண்ணுவது போலக் கருதுவதற்கு இடம் உண்டு நண்பரே.......
நவில்தொறும் நூல்நயம்போல் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுவது இயற்கை தான் நண்பரே........
விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்கு