பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 30 ஜூலை, 2009

தமிழர் மரபியல் ( பாலியல் நோக்கு)



கால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.
• பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.
என்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.
சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவும், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

சங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.

இன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன.
வலைப்பதிவுகள் வழியே,
தமிழர் மரபு குறித்த தேடல்,
தமிழர் மரபு குறித்த புரிதல்,
தமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்
ஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.
சில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது.

தமிழர் மரபில் பாலியல் நோக்கு.

தமிழர் மரபில் பாலியல் செய்திகள் குறித்த சிந்தனைகள் காலந்தோறும் விவாதிக்கப்பட்டுதான் வந்திருக்கின்றன.

“ பாதாதி கேச வருணணை
கேசாதி பாத வருணனை“
(பாதம் முதல் தலை வரை வருணணை
தலைமுதல் பாதம் வரை வருணனை)

என்பது இலக்கியத்தில் இயல்பாக வருவது. ஒரு பெண்ணை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருணித்தல் என்பது அக்காலத்தில் தவறாகப்படவில்லை. மாறாக ஒரு பெண்ணே தன் உறுப்புகளை வருணிப்பது போன்ற பாடல்களும் தமிழில் அதிகம் உள்ளன.

பக்தி இலக்கியங்கள், இறைவியரைக் கூட விட்டுவைக்கவில்லை.

இறைவியர் என்றால் பாதாதி கேச வருணனையும்,
மானிடகுலப் பெண்கள் என்றால் கேசாதி பாத வருணனையும் இடம் பெறுவது அக்கால மரபாகவே இருந்திருக்கிறது.

இன்று வந்த நாம் பழந்தமிழ் இலக்கியங்கள்......
இப்படி வருணனையைக் கொண்டு விளங்குகின்றனவே....
இது சரியா...?
இது தவறா...?

என்றெல்லாம் கேட்பதில் எவ்விதமான பயனுமில்லை.

இவ்வருணனைகள் இன்று நமக்குத் தவறாகப்படலாம்..
இன்று நமக்குத் தவறாகப்படுவது நாளை வரும் தலைமுறையினருக்கு மிகவும் சரியாகப் படலாம்.
அதனால் இம்மரபுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த சரியான கண்ணோட்டம் நம் தேவையாகிறது.


ஒரு சின்ன நகைச்சுவை.




இந்த நகைச்சுவையில் அந்த சிறுவன் தன் தந்தையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாக மதிப்பிட்டுக் கொள்கிறான்.

பழந்தமிழர் என்பவர் நம் தாத்தாக்களுக்கெல்லாம் தாத்தா...! அவர்களின் தோளில் ஏறித்தான் நாம் அவர்களின் உலகைப் பார்க்கிறோம். அப்படியிருக்கும் நாம் ....

தாத்தா நான் உன்னைவிட உயராமாக இருக்கிறேன்...

நீ என்னைவிட குள்ளமாக இருக்கிறாய் என்றால் அது அறிவுடைமையாகுமா...?

அது போலத் தான் நம் முன்னோர் மரபுகளைக் குறைத்து மதிப்பிடுவதும் அமையும்.
தமிழர்தம் மரபுகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு இன்னும் முதிர்ச்சி வேண்டும்.

தமிழர் மரபுகளை ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் எடுத்தியம்பியவர். மூதறிஞர்.வ.சு.ப.மாணிக்கனார் ஆவார்.

இவர் தம் தமிழ்க்காதல் நூலில், ஒவ்வொருவருக்கும் தமிழர்தம் அகத்திணை மரபுகள் குறித்த பாலியல் அறிவு தேவை என்கிறார்.
இதனை,


பாலியற் கல்வி

அகத்திணை ஓர் பாலிலக்கியம், பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காமநுணுக்கங்களைக் கற்றுக்கொள்கின்றோம். காமம் பற்றிய ஆணுடல்
பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது. அதனைக் கற்பவர்,
அறிவு நிலைபெறுவரன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்; சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். அகத்திணை
வாழ்க்கையிலக்கியம் ஆதலால், உலக நடைமுறைக்கு ஒப்பதாயும் பெயரில்லாதாரின் காதலியல்களைப் புலப்படுத்துவதால், கற்பவர்க்குத் தமது
என்ற உணர்ச்சியை ஊட்டுவதாயும் அமைந்துள்ளது. உடல் நலத்திற்கென உடற்பயிற்சி இருவர் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். ஒருவன்
பயிற்சிப் படங்களைப் பார்த்துப் பயில்கின்றான். மற்றொருவன் தன்முன் நின்று பயிற்சிசெய்யும் பயில்வானைப் பார்த்துப் பயில்கின்றான்.

இவ்விரு நிலைக்கும் பெரு வேறுபாடு இல்லையா? பின்னது சிறந்தது, முறையானது, கெடுதலற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பாலிலக்கண நூல் கற்றுக் காதலுலகிற் புகுவான் இன்ப மரபு அறியாதவனாய்,
சமையல் நூல் கற்றுச் சமைக்கப் புகுந்தாளைப் போல இடர்ப்பட்டுக் காமம் இழப்பான், பசி நீங்கான். அகத்திணை போன்ற பாலிலக்கியம் நூல் கற்பவர்
கற்கும்போதே காதற் பயிற்சி கைவரப் பெறுவர்; அன்னை அருகிருந்து மகள் அடுப்புத் தொழில் பழகிக்கொள்வது போல, அன்புக்கேடும் ஆரவாரமும்
இன்றிக் காதலுலகில் இனிது இயங்குபவர். ஆதலின், பருவம் உற்ற ஆண் பெண் அனைவர்க்கும் அகத்திணைக் கல்வி இன்றியமையாதது. அக்கல்வி.
காமப் பருவத் தொடக்கத்தே கற்கத் தொடங்கவேண்டியது.
அகக்கல்வி கற்கும் நல்லிளைஞர் இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்பாவது கற்பு என்றும், இன்றியமையாத உடல் விளையாவது காமம்
என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர், ஒருவர் காமத்தை ஏனையர் மதித்து ஒழுகுவர், காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச் செய்கையில்
மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விப்பர்.

அகம் கற்ற இளைஞன் தன் இன்பமே பெரிதென எண்ணமாட்டான். தன் கயமலர்க் கண்ணியை இன்புறுத்திப் பெறும் இன்பத்தையே காமம் என்று
எண்ணி, அதற்கேற்றபடி காதற்பள்ளியில் நடந்துகொள்வான். மனைவியின் ஊடலையும் ஊடற் காரணங்களையும், ஊடல் நீட்சிகளையும், ஊடல்
சொற்களையும் இன்ப இகலாகக் கருதாது, இன்ப வாயிலாகக் கருதுவான், தன்
புகழ்ப் பெருமையையும், அறிவுப் பெருமையையும், செல்வப் பெருமையையும், பதவிப் பெருமையையும், பரிசுப் பெருமையையும் எண்ணிச் செம்மாக்காது,
மெல்லியலாளின் காமப்பெருமையையும் ஏற்றுக் கொண்டு இரங்கி மொழிவான்.

அகம் கற்ற இளையாள் காமப்பெருக்கம் கருதி ஊடுவாளேயன்றி, குற்றம் உடைய தலைவனாயினும், அவனை இடித்துரைப்பதற்கு, அதுதான் காலம்
என்று பள்ளிக்கலவியில் ஊடற் புரையோடாள். இன்பக்கொடை அவளது நோக்கம் ஆவதன்றிச் சிறுமைசுட்டி அக்கொடை செய்தல் அவள் கற்புக்குச்
சிறப்பளிக்காது. பெருந்தோள் ஆடவனது பணிவையும் வேண்டுதலையும் கிடப்பையும் கண்டு காமுகன் என்றோ, சிறியவன் என்றோ கருதித் தருக்காது,
கற்பின் வணக்கம் என்று பொருள்புரிந்து இன்ப அருள் செய்வான்.

அகம் கற்ற குடும்பத்தார் தம் ஆண் பெண்மக்களின்
பருவவோட்டங்களை எளிதிற் புரிந்துகொள்வர். பருவக்கோளாறு என்று கருதி மயங்கி, அறிவற்ற அன்பினால் காதற்கோளாறும் கற்புக்கோளாறும் செய்யார்.

அகக்கல்வி பரவிய இனத்தார் காதல் வாழ்வுக்கு மாறான சமுதாயப் போக்குகளை வேரூன்றவிடார். கற்பிற்கு முரணான பரத்தமையை ஆடவர்க்காக வளரவிடார். வளர்ந்த பரத்தமையைக் குலவொழுக்கமென வாழவிடார், பெண்டிரெல்லாம் கற்புப் பெண்டிராகவே வாழ வழிவகுப்பர்.

துறவிக்கும் அகத்திணைக் கல்வி வேண்டற்பாலது. துறவாத இல்லற மக்களுக்குத் தொண்டு செய்யுங்கால், அம்மக்களின் காதற் காமநிலை பற்றிய
அறிவு வேண்டாங் கொல்?
அகத்திணைக்கல்வி தொல்காப்பியத்தாலும் சங்கவிலக்கியத்தாலும் திருக்குறளாலும் அன்றி வேறு எவ்வகையானும் பெறுதற்கில்லை. தமிழ்ப்பிறவி
எடுத்த நாம் இம்முத்திற நூல்களையும் கற்கவேண்டும். கற்பதோடன்றி நம்போல் ஞாலமும் உய்யும்படி கற்பிக்கவேண்டும். இவை செய்யாவிடின்
இப்பிறவியை ஏன் சுமந்தோம்? அகப்பொருள் யாத்த தொல்காப்பியர் ஒல்காப்புலமை வாய்ந்தவர், பல்புகழ் கொண்ட பண்பினர் என்று அறிவோம்.
சங்கச் செய்யுட்கள் பாடியோர் எத்தகையர்? வாய்மை விளங்கும் கபிலரும்,
உலகறம் மொழிந்த கணியன் பூங்குன்றனாரும், அச்சமில்லாத நக்கீரரும்,
அருநெல்லி பெற்ற ஒளவையாரும், நெடுஞ்செழியன் புகழ்ந்த மருதனாரும்,
கரிகாலன் மதித்த கண்ணனாரும், கரிகாலன் மகள் ஆதிமந்தியாரும்,
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியரும், பிசிராந்தையாரின் நண்பர்
கோப்பெருஞ்சோழரும் முதலான எண்ணிலாச் சான்றோர் என்பது அறிவோம்.
காமத்துப்பால் அருளியவரோ தமிழ்த்தாய் உலக நலத்திற்கெனப் பெற்ற வள்ளுவப் பெருமகன். இத்தமிழ்ச் சான்றோர் எல்லாம் அகத்திணைப்
பாடல்கள் யாத்தார்கள் எனின், அகக்கல்வி ஞாலமானிடர்க்கு இன்றியமையாத தலைசால் தூய கல்வி என்பதுவே முடிவு.

சங்கவிலக்கியம் 1862 அகப்பாடல் உடைய காதலிலக்கியம். ஒவ்வொரு பாடலிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளன. இப்பாடல்களைக் கற்பவர்
3727 காதல் உள்ளங்களைப் பற்றிய அறிவு பெறுவர், மேலும்
காதற்றலைமையுடைய இவ்விருவரைப் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார் கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர். திருக்குறட் காமத்துப்பாலின் 250 குறள்களைக் கற்குநர் 500 காம நெஞ்சங்களைக் குறித்த கல்வி பெறுவர். பொருட்பாலால் புறவாழ்க்கையிலும்
காமத்துப்பாலால் அகவாழ்க்கையிலும் செம்மை எய்துவர். அகத்திணைக் கல்வித் தலைவராகிய தொல்காப்பியரது தமிழ் முதல்நூலைக் கற்கும்
அன்புடைத் தமிழ் நங்கையாரும் நம்பியாரும் இருபாலாரின் நுண்ணியல்களை யெல்லாம் பண்போடும் பாங்கோடும் தெளிந்து வாழ்ந்து நன்றியர்களாகப் பொலிவார்காண்.

என்னும் இக்கருத்துக்கள் வழி பழந்தமிழர்தம் மரபியலின் உயர்வு புலப்படுகிறது..

புதன், 29 ஜூலை, 2009

ஏழு வள்ளல்களில் சிறப்பு.



கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........
வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............
பிற உயிர்களையும் தன்னுயிர் போல மதித்தவர்கள்......
எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் கடையேழு வள்ளல்களாவர்................

இன்றெல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்திக்கொள்வோரையே அதிகம் காணமுடிகிறது.........

ஒரு கோயிலுக்கு ஒருவர் மின்விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவுக்கு அதில் தன் பெயரை எழுதிவைத்துவிடுகிறார்.............

காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்குத் தெரியவேண்டும் என் எண்ணம்.......

இன்று மட்டுமல்ல காலந்தோறும் இவ்வாறு தான் மக்களின் மனநிலை இருந்திருக்கும். இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர்பார்க்காமல் கொடை கொடுத்ததால் புகழ்பெற்றனர் கடையேழு வள்ளல்கள், கால வெள்ளத்தில் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் கொடைத்திறம் மறைந்து விடாது போற்றப்பட்டுதான் வருகிறது.
கடையேழு வள்ளல்களைப் பற்றி,
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படையில் குறிப்புள்ளது...


வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்
( சிறுபாணாற்றுப்படை)-பத்துப்பாட்டு.

வள்ளல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் கர்ணர், தர்மர்,
அவர்களுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர்கள் கடையேழு வள்ளல்களாகவர்.

பேகன்,பாரி,காரி,ஆய்,அதிகன்,நள்ளி,ஓரி ஆகிய ஏழு வள்ளல்கள் செய்த கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.

1.பருவமழை தவறாது பொழிவதால் காட்டு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கியது என எண்ணி இரக்கமுற்று தம் போர்வையைக் கொடுத்தான் பேகன்.

மயிலுக்குப் போர்வையைத் தருவது அறிவுடைமையா?
அது சரியா? தவறா?
போர்வை கீழே விழுந்தால் மயில் அதனை மீண்டும் எடுத்துப் போர்த்திக் கொள்ளுமா?
எனப் பல ஐயங்கள் தோன்றுவது இயற்கையே....

தோகை விரித்து ஆடுவது என்பது இயற்கை என்று பேகனின் அறிவு சொல்கிறது..
இல்லை அது தன்னைப் போலக் குளிரால் நடுங்குகிறது..........
என்கிறது பேகனின் உணர்வு....
உணர்வு ,அறிவை வெல்கிறது......
இதையே கொடை மடம் என்கிறோம்.....

2.முல்லைக் கொடி படர தம் பெரிய தேரினை ஈந்தான் பறம்பு மலைக்கு அரசனான பாரி.

முல்லைக் கொடி படர சிறுபந்தல் போதுமே....
ஆனால் அந்த கண்ணோட்டத்தில் முல்லைக் கொடியைப் பாரியால் பார்க்க முடியவில்லை.

முல்லைக் கொடி, தான் படர்வதற்கு வழி இல்லையே என்று வாடுவது போல பாரிக்குத் தோன்றுகிறது.

அடுத்த நொடியோ அக்கொடியின் துயர்நீக்க,தன்னால் என்ன செய்ய இயலும் என்று சிந்திக்கிறான்..

தன்னிடமிருந்த தேரினை அக்கொடி படர்வதற்காக அவ்விடத்தே விட்டுச்செல்கிறான்..

3.வலிமை மிக்க குதிரையையும்,நல்ல சொற்களையும் கொடையாக இரவலர்க்கு வழங்கியவன் காரி.

துன்பத்துடன் வாடிவரும் கலைஞர்களுக்கு வலிமைமிக்க குதிரையும் நல்ல சொற்களும் வழங்கியதால் வள்ளல் எனப்பட்டவன் காரி...
பொருள் கொடுத்துத்து துயர் நீக்குதல் ஒரு வகை,
நல்ல துயர் நீக்கும் சொற்களால் துயர் நீக்குதல் இரண்டாவது வகை..
அவ்வகையில் நல்ல சொற்கள் வாயிலாகவே கலைஞர்களைக் கவர்ந்தவன் காரி.

4.ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்க்குக் கொடுத்தவன் ஆய்.
தான் மிகவும் உயர்வாகக் கருதும் நீலமணியையும், நாகம் தனக்குத் தந்த கலிங்கம் என்னும் ஆடையையும் இரவலர்களுக்கு அளித்து மகிழ்வித்தவன் ஆய்.

5.அமிழ்தம் போன்ற நெல்லிக் கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன் அதியன்.

நீண்ட நாள் உயிர் வாழ்க்கையளிக்கும் அரிய நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தபோது...
சிந்தித்தான் அதியன்...
இக்கனியைத் தான் உண்டால் இன்னும் தன் நாட்டின் பரப்பு அதிகமாகும்.. பல உயிர்கள் மேலும் அழியும்..

ஆனால் இக்கனியை ஔவையால் உண்டால் நீண்ட காலம் அவர் உயிர் வாழ்வார் ...
தன்னை விட இவ்வுலகில் அதிக காலம் வாழ வேண்டியவர் புலவரே...
அவரால் தமிழ் மேலும் சிறப்புப் பெறும்...
என்று கருதிய அதியன் கனியை ஒளைக்குத் தந்து வள்ளள் என்னும் பெயர் பெற்றான்...

6.இரவலர்க்கு வேண்டிய பொருள்களை அதிகமாக வழங்கி ஆவர்கள் மனநிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி.
பசிப்பிணியோடு வாடி வந்த இரவலர்களுக்கு அதிகமாகப் பொருள் வழங்கி அவர்களின் மன நிறைவு கண்டு மகிழ்ந்தவன் நள்ளி..

7.கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்தவன் ஓரி.
கூத்தாடும் கலைஞர்களின் கலைத்திறனை மதித்து வளமான பல நாடுகளை வழங்கி மகிழ்ந்தவன் ஓரி.

மண்ணில் எத்தனையோ பேர் வள்ளல்களாக வாழ்ந்து மறைந்திருந்தாலும். இன்றளவும் கடையேழு வள்ளல்கள் என நாம் இவர்களை மதிக்கிறோம் என்றால் அதற்கு அவ்வள்ளல்களிடம் இருந்த சிறந்த பண்புளான,
அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதல்,
கலைஞரைப் போற்றுதல்
இரவலரை ஓம்புதல்
ஆகியவையே காரணமாகும்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

வரை பாய்தல்




சங்க காலத்தில் தலைவன் தன் காதலியைப் பெற மானத்தை
விட்டு மடலூர்ந்து வருவான். அவ்வாறு வந்தால் தலைவியின் பெற்றோர் அஞ்சி தன் மகளைத் தலைவனுக்கு மணமுடித்து வைப்பர். இது தமிழர் தம் மரபு. ஐந்திணையில் மடல்கூற்று மட்டுமே நிகழும். பெருந்திணையில் ஏறிய மடல்திறமும் நிகழும். மடலூர்தலின் ஒரு கூறாக வரை பாய்தல் அமைகிறது.

வரைபாய்தல் என்பது மலையிலிந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுதலைக் குறிப்பதாக அமைகிறது. காதல் கை கூடாத நிலையில் இன்றும் காதலர் மலையிலிருந்து குதித்தத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

வரைபாய்தல் என்பதை ஒரு சங்க காலத்திலிருந்த சமூக வழக்காகவே அறிஞர்கள் கருதுவர்.

தமிழர்தம் மரபினை அறிந்து கொள்வதற்காக,
வரை பாய்தல் பற்றிய குறிப்புடைய அகநானூற்றுப் பாடலைக் காண்போம்.


வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
5. பாம்பெறி கோலிற் றமியை வைகித்
தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்
களிறுகண் கூடிய வாண்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேற் றானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
10. பிழையுறழ் மருப்பிற் கடுங்கட் 1பன்றிக்
குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் 2போலப்
15. பெறலருங் குரையணம் அணங்கி யோளே.

- பரணர்.


கூற்று : அல்ல குறிப்பட்டுப் போகும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது.

( தலைவியை தாம் சந்திப்பதற்காக ஏற்படுத்தும் அடையாள ஒலியைக் குறிப்படுத்தல் என்பர். அவ்வொலி இயற்கையிலே எழுவதுண்டு அவ்வேளையில் தலைவி அவ்வொலியைத் தலைவன் ஏற்படுத்தினான் என்று எண்ணி வந்து ஏமாந்து திரும்பிவிடுவாள். பின் தலைவன் வந்து உண்மையிலேயே ஒலி எழுப்பியும் அவ்வொலி இயற்கையிலேயே எழுவது தலைவன் ஏற்படுத்துவது அல்ல என்று தலைவி தவறாக எண்ணி அவ்விடம் வாராது இருப்பாள்.

இதனை அல்லகுறிப்படுதல் என்றழைத்தனர்.)


இன்றெல்லாம் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது மிகவும் எளிதாக உள்ளது. சந்திக்கவே இயலாத நிலையில் செல்லிடப்பேசி, இணையவழி சாட்டிங் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளின் துணையால் ஒருவரோடு ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர்.

சங்க காலத்தில் தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது அரிதான செயலாகவே இருந்தது. தலைமக்கள் பகலில் சந்தித்தால் அதனைப் பகற்குறி, என்றும் இரவில் சந்தித்து மகிழ்ந்தால் அதனை இரவுக்குறி என்றும் அழைத்தனர். இரவுக்குறி தலைவியின் வீட்டின் அருகிலேயே நிகழும்.

தலைவன் தன் வருகையைப் பறவைகள் போலவோ, அல்லது வேறு வகையான இயற்கையில் எழும் ஒலிகளைப் போல எழுப்புவான். அவ்வொலி கேட்டுத் தலைவி, தலைவனைச் சந்தித்து மகிழ்வாள்.

அவ்வாறு தலைவியை அழைக்கத் தலைவன் ஒலி எழுப்பினான். இதைப் போன்ற ஒலி முன்பே இயற்கையில் எழுந்தமையால் தலைவி முன்பே வந்து பார்த்துச் சென்று விட்டாள்.
பின் தலைவன் ஒலி எழுப்பும் போது அதனைத் தலைவி இவ்வொலி இயற்கையில் எழுவது என்று தவறாக உணர்ந்துவிட்டாள்...

இந்நிலையில் தலைவியைக் காண இயலாது அல்லகுறிப்பட்டுத் தலைவன் வருந்தித் தன் நெஞ்சுச் சொல்லிப் புலம்புவது போல இப்பாடல் அமைகிறது.

பாடலின் பொருள்

திதியன் என்பான் இடியென முழங்கும் களிறுகளையும்,
வாளொடு போரிடும் போர்ப்படைகளையும்,
விரைந்தோடும் தேர்ப்படைகளையும் கொண்டவன்.

அவனது மலையானது செறிவான மரங்களைக் கொண்டு விளங்குகிறது.
அங்கு எதற்கும் அஞ்சாத தன்மை வாய்ந்த காட்டுப்பன்றியை அடித்துத் தின்ற வலிமை வாய்ந்த கொடிய புலிகள் முழக்கமிடும்.
உச்சிப் பாறைகளில் உள்ள தேனை ஏறி எடுக்கமுடியாமல் குறவர்கள் வருந்துவர்.

இத்தகைய அரிய, பெரிய மலை போல என் தலைவி......
கிடைத்தற்கு அரியவளாக விளங்குகிறாளே என்று தன் நெஞ்சில் எண்ணிக்கொள்கிறான்.

தலைவன், தலைவி மீது மிகுந்த அன்புடையவனாக விளங்குகிறான்.
இப்பிரிவைத் தலைவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை........
இப்பிரிவின் வலி கொடுமையானது...
அதனை அடுத்தவருக்குப் புரியவைப்பது கடினம்....
ஆனால் புலவர் அதனை அழகாக வெளிப்படுத்திப் புரியவைக்கிறார்...


தலைவன் தன் நெஞ்சிடம் ...............

ஏ நெஞ்சே ................
நள்ளிரவில் அடங்காக் காமம் வருத்துவதால் மலை உச்சியிலிருந்து வீழ்பவரைப் போலவும்.....

கோலால் அடிபட்ட பாம்பைப் போலவும்...........

நீ ஏன் வருந்துகிறாய் என்று கேட்கிறான்.....

தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் நெஞ்சம்...
அதன் வலியை இவ்வாறு உணர்கிறது
.

இப்பாடல் வழியாக ....

“ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின்“

என்னும் அடிகள் வாயிலாக......

அல்லகுறிப்படுதல் என்னும் அகத்துறை விளக்கம் பெறுகிறது.

• மலையிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் சங்ககாலத் தமிழர் மரபு அறியப்படுகிறது.
• காமம் என்ற சொல் இன்று வழங்கும் பொருளில் வழங்காமல் அன்பின் மிகுதிப்பாட்டையே புலப்படுத்துவதாக உள்ளது.
• தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் தலைவனின் நெஞ்சம் மலையிலிருந்து வீழ்வோரின் மன நிலையையும், அடிபட்ட பாம்பின் வலியை உணர்வது.......
காதலின் ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது.

திங்கள், 27 ஜூலை, 2009

இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...

வலைப்பதிவில் தமிழ் எழுதுதல் தொடர்பாக நீண்ட காலமாக இருந்த சிக்கல் யுனிகோடு முறை வாயிலாக நீங்கியது. விண்டோஸ் 2000, மற்றும் எக்ஸ்.பி இயங்குதளங்களில் யுனிகோடு எவ்வித சிக்கலுமின்றி இயங்குகிறது. இவ்வியங்குதளங்களில் சில நேரங்களில் யுனிகோடு சரியாக இயங்காமல் உள்ளது. இச்சூழலில் லதா எழுத்துருவை
நிறுவினால் இச்சிக்கல் தீர்ந்து விடுகிறது.

புதிதாக வலைப்பதிவு எழுதுவோர் எந்த எழுத்துருவைப் பயன்படுத்துவது?
எந்த எழுத்துரு மென்பொருளைப் பயன்படுத்துவது
?

என்ற கேள்விக்கு பெரும்பாலோனவர்களின் பதில் என்.எச்.எம் என்பதாகவே இருக்கும்.

ஆம்...
என்.எச்.எம் என்னும் தளத்துக்குச் சென்று என்.எச்.எம் ரைட்டரை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். கணினியை ரீ ஸ்டார்ட் செய்தவுடன். கணினித் திரையில் வலது கீழ் பகுதியில் மணி போன்ற வடிவம் தோன்றும். அதனை அழுத்தினால் ஐந்து எழுத்துரு முறைகள் தோன்றும்.




இதில் முறையான தட்டச்சுமுறை, தமிங்கில முறை, பாமினி ஒருங்குறி முறை ஆகியனவும் அடங்கும்...
இவற்றில் ஒரு முறையைப் பின்பற்றி வலைப்பதிவில் சுலபமாக எழுதலாம்..



அதில் ஒவ்வொரு எழுத்துரு முறையிலும் எவ்வாறு எழுத்துருக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை திரையின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள மணியை வலது பக்கம் சொடுக்கினால் ஆன்ஸ்கிரின் கீ போர்டு தெரியும் அதனைப் பின்பற்றினால் எளிய முறையில் தட்டச்சிட்டுப் பழகலாம்.


இதன் தனிப்பட்ட சிறப்பு.........
வலைப்பதிவு எழுதுதல், மின்னஞ்சல், தேடுதல் என எல்லா நிலைகளிலும் இம்மென்பொருள் பேருதவியாக உள்ளது.
இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...



என்.எச்.எம், அழகி போன்ற யுனிகோடு மென்பொருள்கள் வந்த பின்னர் எழுத்துருச் சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்தது.
இதற்கு முன்னர் பலரும் பொங்குதமிழ் போன்ற எழுத்துரு மாற்றிகளையே நம்பி வந்தனர்....


சாதாரணமான எழுத்துருக்களில் நம் வேர்டு கோப்புகளை உருவாக்கிய பின்னர்,
அதனைக் காப்பி செய்து பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் இட்டு யுனிகோடு முறைக்கு மாற்றி அதனைக் காப்பி செய்து நம் வலைப்பதிவுகளிலும் மின்னஞ்சல்களிலும் பயன்படுத்தி வந்தோம்..... பயன்படுத்தி வருகிறோம்..

தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை இணைய இணைப்பின்றி மாற்ற...பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி சாதாரணமான எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றவும் – யுனிகோடு எழுத்துருக்களை சாரணமான எழுத்துருக்களாக மாற்றவும் பயன்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....

எனது நண்பர் ...............
இணைய இணைப்பின்றி பிடிஎப் கோப்புகளை மாற்ற வேண்டும் என்றார் நானும் இந்த மென்பொருளைக் கூறினேன்...
அவர் பொங்குதமிழையே இணைய இணைப்பின்றிபப் பயன்படுத்தலாமா...?

என்று கேட்டார்.....

நானும் அத்தளத்தில் தேடிப்பார்த்தபோது அதற்கு வழி இருந்தது அறிந்து மகிழ்ந்தேன்.....

மிக எளிய வழியில் பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியை நம் கணினியில் சேமித்துக்கொள்வதால் இது சாத்தியமாகிறது...

வழிமுறை....

முதலில்

பொங்குதமிழ் இணையதளத்துக்குச் செல்லவும்..




படத்தில் உள்ளது போல (பைல் – சென்று சேவ் அஸ்) செய்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்க முடியும்...

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் பிடிஎப் கோப்புக்களை எழுத்துரு மாற்றிக் கொள்ளமுடியும்.....

சனி, 25 ஜூலை, 2009

நொதுமல் வரைவு




மாறிவரும் உலகில் மாறாத ஒன்று காதல். காலந்தோறும் காதல் பற்றிய மதிப்பீடு மாறலாம், ஆனால் காதல் மாறுவதில்லை. சங்க இலக்கியங்கள் வழி தமிழர் தம் காதல் மரபுகளை அறியமுடிகிறது.

இற்றைக் காலத்தில், ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல் காதலிக்கிறாள். தன் மகள் காதலிக்கிறாள் என்பதை அறியாது அவள்தம் பெற்றோர் தன் பெண்ணுக்கு மணம் பேசுகின்றனர். அந்நிலையில் அப்பெண் தன் காதலைப் பெற்றோருக்குத் தெரிவித்து நடைபெறவிருக்கும் திருமணத்தைத் தடுக்கிறாள்..

இது போன்ற நிகழ்வுகள் இன்று மட்டுமல்ல. இனி வரும் காலங்களிலும் நிகழும். இதே நிகழ்வு சங்க காலத்தும் நிகழ்ந்தது. அதற்குச் சங்கத் தமிழர் இட்ட பெயர் நொதுமல் வரைவு.

நொதுமல் வரைவு என்பது………

தலைவியை மணம் பேசி அயலவர் வருவார்கள். அவ்வாறு வரும் மணமகன் வீட்டாரை பெண்வீட்டார் முகமலர வரவேற்பர். சில நேரங்களில் அவ்வாறு மணம் பேச வருவோர் தலைவி காதலிக்கும் தலைவனின் வீட்டாராக அமைதலும் உண்டு. அவ்வாறு அமைந்தால் தலைவியும், தோழியம் பேருவகை அடைவர்.
தலைவனின் பெற்றோர் மணம் பேச வரும் போது தலைவியின் பெற்றோர் அதற்கு உடன்படுவதும் உண்டு, மறுத்து மொழிதலும் உண்டு.

பெற்றோர் உடன்பட்டால் மகிழும் தலைவி, மாறுபட்டால் எதிர்த்துப் போராடுவாள். தலைவிக்குத் துணையாகத் தோழியும் உடனிருப்பாள்.

தலைவியின் கற்பைக் காக்கத் தோழி, தலைவியின் காதலைச் செவிலிடம் கூறி அறத்தொடு நிற்பாள்.

இவ்வாறு நொதுமல் வரைவு பற்றி இயம்பும் பாடல்கள் சங்கஇலக்கியத்தில் பல உள்ளன. சான்றாக நற்றிணையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்….


207 நெய்தல் - (நற்றிணை)

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே



(நொதுமல் வரைவுழித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.)

தலைவியை மணமுடிக்க விரும்பி அயலார் பெண்கேட்டு வந்தமையைத் தோழி அறிந்தாள். அதனால் தோழி, செவிலியிடம் சென்று தலைவி ஒருவனைக் காதலிக்கிறாள். அவனை அவள் மணத்தலே சிறப்பு என்று தலைவியின் காதலை வெளிப்படுத்தி அறத்தொடு நிற்கிறாள்.


இனி பாடலை உரையாடல் வடிவில் காண்போம்…..

தோழி : அன்னையே………!

செவிலி : என்னடி……..?
இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்……?
தலைவியைப் பெண்பார்க்க வந்திருக்கிறார்கள்…
உனக்குத் தெரியாதா….
நீ இங்கு இருக்கிறாய் ….
நீ போய் தலைவியுடன் இருப்பது தானே முறை….

தோழி : உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அதற்குத் தான் உன்னைத் தேடி வந்தேன்…

செவிலி : என்ன செய்தி….?

தோழி : கடல் சூழ்ந்த நம் பரதவர்கள் குடில்கள் உள்ள நம் பாக்கத்துக்குத், தினமும் தேரில் ஒருவன் வந்து செல்கிறான் என்பதைத் தாங்கள் அறிவீர்களா………?

செவிலி : அப்படியா ….?
யாரது……….?
எனக்குத் தெரியாதே……..?

தோழி : தலைவியைக் காதலிக்கும் தலைவன்…

செவிலி : என்னடி சொல்ற…..?
மணம் பேச வந்திருக்கும் இந்த நிலையில என்ன பேசற..
உண்மைதானா……..?

தோழி : உண்மை தான்….
அவன் தலைவி மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறான். அவளும் அவனை உயிராகக் காதலிக்கிறாள்….
அதனால் அவர்களைச் சேர்த்து வைப்பதே முறை….

செவிலி : சரி அதை இப்ப வந்து சொல்ற…
இதை நான் எப்படி அவள் பெற்றோருக்கு உரைப்பது..
இந்நிலையில் அவர்கள் மனம் என்ன பாடுபடும…..?

தோழி : தலைவியின் நலம் கருதி இதை தாங்கள் அவள் பெற்றோருக்கு எடுத்துரைக்கத் தான் வேண்டும்.

இளையோரும், முதியோரும் தம் சுற்றத்துடன் குழுமியவராய், கொல்லும் தன்மையுடைய
சுறா கிழித்ததால் உண்டான அகன்ற துளைகளைச் சுருங்கிய, மெல்லிய கொடியால் முடிச்சிடுவர்.

இவ்வாறு தொழில்புரியும் பரதவர் குலத்துத்தோன்றிய நம் தலைவி,

அவள் விரும்பும் தலைவனுடன் வாழ்ந்தாள் மனம் மகிழ்வுடனிருப்பாள். அவனும் அவளை நன்கு பார்த்துக்கொள்வான்…
இப்போது மணம் பேசி வந்திருப்பவர்களோடு ஒப்பிடும் போது, தலைவன் செல்வ நிலையிலும் மிகவும் உயர்ந்தவன்…

நான் இவ்வளவு தூரம் சொல்லியும்…
இந்த செய்தியை அவள் பெற்றோர் அறியாது அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

செவிலி : என்ன நடக்கும்..?

தோழி : முதலில் அவள் விரும்பும் தலைவனுடன் அவள் வாழ இயலாவிட்டாள் உயிர் துறந்துவிடுவாள்…………
அன்றி வாழும் நிலை வந்தாலும்,

பெருங்காற்று வீசும் கடலுக்குச் செல்லும் கொல்லும் தொழில் வெய்ய பரதவராகிய சிறுமையாளரிடம் அகப்பட்டு அழிந்து போவாள்…………

செவிலி : சரி….
நடப்பது நடக்கட்டும்………
தலைவியின் காதலை அவள் பெற்றோருக்குத் தெரிவிக்கிறேன்…….
போதுமா………?

தோழி : மிக்க மகிழ்ச்சி……….!

செவிலி : தலைவியின் நலம் தானே நாம் விரும்புவது…

இவ்வாறு தலைவியை அயலவர் பெண் கேட்டு வருதல் நொதுமல் வரைவு எனப்படும்.

தலைவியின் காதலைத் தோழி செவிலிக்கு எடுத்துரைத்தல் அறத்தொடு நிற்றல் எனப்படும்..

செவிலி தலைவியின் காதலை அவள்தம் தாயான நற்றாக்கு எடுத்துரைப்பதும், நற்றாய் தம் கணவருக்கு உரைப்பதும் அறத்தொடு நிற்றல் என்றே அழைக்கப்பட்டது.

இவ்வாறு சங்க காலத் தலைவியர் தம் காதலுக்காகவும், கற்புக்காகவும் போராடினர் என்பதை பாடல்கள் சுவை பட இயம்புகின்றன..

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)




மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆனது.

தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சியில் சங்க இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது.

காமம் மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறை அகம் சார்ந்த தூது இலக்கியம் தோன்றக் காரணமானது.

புறம் சார்ந்த தூதுக்குச் சான்றாக இப்பாடல் அமைகிறது. சங்க காலத்தில் பெண்டிரும் தூது சென்றமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

(அவன் தூது விட, தொண்டை மானுழைச் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.)

அதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும்.
ஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான்.

அதியனோ மாவீரன்,
தொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.

தூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..
பாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.

புறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..
இனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...
வாருங்கள்...
பாருங்கள்.......
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?


ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.


தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

தொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...


உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.

இந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

இப்பாடல் வழி புறத்தூது மரபினையும், வாள்மங்கலம் என்னும் புறத்துறையையும் அறியமுடிகிறது..

புகழ்வது போல இகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி அழகாக விளக்கம் பெறுகிறது.


வியாழன், 23 ஜூலை, 2009

செம்மொழி ஆய்வுக்கோவை.

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல கல்லூரியில் முதலாவது செவ்வியல் மொழி மாநாடு 14.06.09 அன்று நடைபெற்றது. பன்னாட்டு அளவில் நடைபெற்ற இம்மாநாட்டின் கட்டுரைகள் ஆய்வுக்கோவையாக விழாவிலேயே வழங்கப்பட்டன. செம்மொழி குறித்த 141 ஆய்வாளர்கள் கட்டுரை வழங்கினர். தமிழ் மொழியின் பல்வேறு செம்மைத் தன்மைகளையும் ஆய்ந்துரைப்பனவாகக் கட்டுரைகள் அமைந்தன. அக்கட்டுரைகள் யாவும் உலகு பரவி வாழும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு........ ஆய்வுக் கோவையை மின்னூலாக்கி ஸ்க்ரைப்ட் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... ஆய்வுக்கோவையில் இடம்பெற்ற கட்டுரைகளைப் படிக்க இங்கு சுட்டவும்.... மாநாடு பற்றி திண்ணை இணையதளத்தில் வெளியான செய்தியைப் படிக்க இங்கு சுட்டவும்.. கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை வலைப்பதிவைப் பார்க்க இங்கு சுட்டவும்.

புதன், 22 ஜூலை, 2009

இசை மருத்துவம்.



இசையால் நோய்கள் குணமாகும் என்பது அறிவியல் ஒப்பிய முடிவு. இசைமருத்துவக் கூறுகள் பலவற்றையும் சங்க இலக்கிய வழியாக அறியமுடிகிறது. சங்க கால மக்களின் இசைமருத்துவ அறிவை இனி “ இசைமருத்துவம்“ என்னும் தொடர் இடுகை வழி அறியலாம்...

இசை மருத்துவக் கூறு – 1

சங்க காலத்தில் போரில் புண்பட்ட வீரனின் வலி குறைய காஞ்சிப்பண் பாடினர்.



தன் வேந்தனை எதிர்த்து எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான். தன் மன்னனுக்காகத் தான் முன்னின்று போரிட்டு மன்னனைக் காத்தான். ஆயினும் அவ்வீரனின் உடலில் புண் ஏற்பட்டுவிட்டது. இற்றைக் காலத்தைப் போல அன்று மருத்துவ முறைகள் இல்லை....

இருப்பினும் புண்பட்ட வீரனை அவர்கள் காத்தவிதம் வியப்பளிப்பதாகவும், அவர்களின் மருத்துவ அறிவைப் பறைசாற்றுவதாகவும் இருக்கிறது.

புண்பட்ட வீரனின் வீட்டில் இரவமரத்தின் தழையோடு, வேப்ப மரத்தின் தழையையும் சேர்த்துச் செருகினர்.....

பேய்களிடமிருந்து புண்பட்ட வீரனைக் காக்க என்று உரைகள் கூறினாலும், வேம்பின் மருத்துவ குணத்தைச் சங்கத்தமிழர் அறிந்திருப்பார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

புண்பட்ட வீரன் கேட்பதற்காக நல்ல இனிமையான யாழிசை, குழலிசை, மணியிசையோடு பெண்கள் காஞ்சிப்பண் பாடினர்.

இசை வலியைக் குறைக்கும் என்று சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றாக இச்செய்தி அமைகிறது.


இதனை,

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ-காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!

281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி



தன்னோடு போர் செய்ய பகை மன்னனை அம்மண்ணுக்குரிய அரசன் காஞ்சி என்னும் மலர் சூடி காக்க முனைவது காஞ்சித் திணை.


பேய்காஞ்சி :

போர்க்களத்தில் புண்பட்டு வீழ்ந்தாரைப் பேய் மிகவும் அச்சுருத்துவது பேய்க்காஞ்சியாகும்.


இப்பாடல் உணர்த்துகிறது.

சங்க காலத்தில் புண்பட்ட வீரரைப் பேயிடமிருந்து காக்கக் காஞ்சிப்பண் பாடினர் என்று மேலோட்டமான செய்தி கிடைக்கிறது...

இப்பாடலை நன்று உற்று நோக்கினால்,


பேய் குறித்த அச்சம் அவர்களிம் இருந்தாலும்,


நோய் தடுப்பு முறை,

நோய் நீக்கும் முறை,

வலியை இசை வாயிலாக நீக்கும் முறை


ஆகியவற்றை சங்கத்தமிழர் நன்கறிந்திருந்தனர் என்பது புலனாகிறது.

காமம் மிக்க கழிபடர் கிளவி



தூது தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர் பிரிவு பற்றிக் கூறும் போது ஓதற் பகையே தூது இவைப் பிரிவே என்றுரைப்பர். தூது இலக்கியத்தின் தோற்றக்கூறுகளுள் முதன்மையானதாகவும் அடிப்படையானதாகவும் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறை அமைகிறது.

தூது அகத்தூது, புறத்தூது என இரு வகைப்படும். அகத்தூது, தலைவி தன் அன்பின் மிகுதியை அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தன்னிலையைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுவதாக அமையும். இவ்வடிப்படையில் தமிழ்ச்சிற்றிலக்கிய வரலாற்றில் பல தூது இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தூது வகையுள் தமிழ்விடு தூது சிறப்பானதாக மதிக்கப்படுகிறது. ஆசிரியர் தன்னைத் தலைவியாகவும், சிவபெருமானைத் தலைவனாகவும் கொண்டு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக இவ்விலக்கியம் அமைகிறது. இத்தமிழ்விடு தூது வாயிலாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

இன்றைய தூது இலக்கியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக காமம் மிக்க கழிபடர் கிளவி அமைகிறது. இதன் பொருள் அன்பின் மிகுதி என்பதாகும்.

காமம் என்ற சொல்லைத் தரம் தாழ்ந்த சொல்லாகக் கருதும் நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். சங்க காலத்தில் காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருளாக இருந்தது. கமம் என்ற சொல்லிருந்து தான் காமம் என்ற சொல் உருவானது. கமம் என்றால் நிறைவு என்பது பொருளாகும். அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர்.

காமம்மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறையை நற்றிணைப் பாடல் அழகாக விளக்குகிறது.

பகலும், இரவும் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன், ஏதோ சில காரணங்களால் அவளைச் சந்திக்க வரவில்லை. பிரிவோ தலைவியை வாட்டுகிறது. திருமண வேட்கை கொண்ட தலைவி நாரையை நோக்கித் தன்னிலை கூறி அதனைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுகிறாள்....

( நாரை இவள் கூறுவதைக் கேட்காது. அவ்வாறு கேட்டாலும் அதைத் தலைவனிடம் சென்று கூறாது. இது தலைவிக்கும் தெரியும். ஆயினும் தன் குறையை எப்படியாவது ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தித் தானே தீர வேண்டும்.

உளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் முறையாக இதனைக் கொள்ளமுடிகிறது)

தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவி நாரையை நோக்கி...................


சிறிய வெண்மையான குருகே .......
நீர்த்துறைகளில் துவைத்து வெளுத்த ஆடை போன்ற நல்ல நிலம் பொருந்திய சிறிய வெண்மையான குருகே.....


நீ தலைவன் வாழும் நிலத்திலிருந்து தினமும் எம் நிலத்துக்கு வருகிறாய்,
இங்குள்ள நீர்நிலைகளிலே மீன் உண்கிறாய்,
பின் அவர் ஊருக்குப் பெயர்ந்து சென்று விடுகிறாய்,
தினமும் தான் என்னிலையை நீ பார்க்கிறாயே.........

நான் அணிந்த அணிகலன்கள் அவன் பிரிவால் என் உடலைவிட்டு நெகிழ்ந்து கீழே விழுகின்றன. எனது துன்பத்தை நீ அவனிடம் கூறமாட்டாயா.....?

எம் ஊர் வந்து மீன் உண்ட நீ ... இந்த நன்றியை மறக்கலாமா.....?

ஒருவேளை என்மீது அன்பிருந்தும் ,
என் நிலையைத் தலைவனிடம் சொல்ல வேண்டும் என எண்ணியும் உன் மறதி காரணமாகச் சொல்லாது விட்டுவிடுகிறாயா...?

என்று புலம்புகிறாள் தலைவி.
பாடல் இது தான்....

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே


( மருதம்)
நற்றிணை - 70(காமம் மிக்க கழிபடர்கிளவி )
வெள்ளி வீதியார்

இப்பாடலின் மெய்பாடு அழுகை....
அதன் பயன் அயாவுயிர்த்தல் ..........( பெருமூச்சு விடுதல், தன்னைத் தானே நொந்து கொள்ளுதல்,)

இப்பாடல் வழி தலைவன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தலைவி குருகிடம் புலம்பியமையும், இதுவே பிற்காலத் தூது இலக்கியங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதும் புலனாகிறது.

திங்கள், 20 ஜூலை, 2009

எமன் பெற்ற சாபம்...




போருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.

(கூற்றுவன்- எமன்)

ஐயோ........! என்று நான் வாய்விட்டு அழுவதற்கும் பயமாக இருக்கிறது..
ஏனென்றால் இவ்விடமோ கொடிய புலிகள் வாழும் காடு.
என் குரல் கேட்டு புலி வந்தால் என்னையும் அடித்துக் கொன்றுவிடும்.
சரி உன்னையாவது தூக்கிக்கொண்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குச் செல்லலாம் என்றால் உன்னுடைய அகன்ற மார்பு பெரிதாகையால் உன்னை நான் தூக்கிச் செல்வதும் இயலாததாகிறது.

எனது நிலை யாருக்கும் வரக்கூடாது....
என்னை இந்த கொடிய காட்டில் இவ்வாறு பெறு விதிர்ப்புற்றுப் புலம்ப வைத்தவன் எமன்....
அவனும் யான் பெற்ற இதே போன்ற துன்பத்தை பெற்று வருந்தவேண்டும்.....
என்று எமனுக்கே சாபம் இடுகிறாள்.

கூற்றுவனாகிய எமன் அறனில்லாதவன்..
வாழவேண்டிய வயதில் எம்மைப் பிரித்தானே...
அவனும் நான்பெற்ற துயரைப் பெறவேண்டும் என்று சாபமிடுகிறாள் தலைவி..

இறந்துகிடக்கும் தலைவனைப் பார்த்து நீ எனது வளையணிந்த முன்கையைப் பற்றி மெல்ல நடந்து வா...
நாம் இம்மலையின் நிழலை அடைவோம் என்று கூறினாள்............

தன் கணவன் இறந்துவிட்டான்........
இச்செய்தியை அறிந்தவுடன் தலைவியின் அறிவு வேலை செய்யவில்லை....

உணர்வு செயல்பட ஆரம்பித்துவிட்டது......

அறிவு வேலை செய்திருந்தால் ..................
சரி பிறப்பதும் இறப்பதும் இயல்பு என்று அவனை அடக்கம் செய்யப் போயிருப்பாள்.........................

அவ்வேளையில் உணர்வு வேலை செய்ய ஆரம்பித்தது.....
இவ்வுணர்வுதான் விலங்கினமிருந்து மனித இனத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது...
கணவன் இறந்துவிட்டான் என்றவுடன் அழுது புலம்புவது இயற்கைதான்....
ஆனால் அதற்குக் காரணமாகக் கருதும் எமனை எண்ணி ...
அறனில்லாத கூற்றுவனே நீயும் இத்துயரைப் பெறுவாயாக என்ற சாபமிடுகிறாளே.................
அங்கு அவள் அவன் மீது கொண்ட அன்பு புலனாகிறது....

கணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...
இல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது..........


அதையும் உன்னால் நடக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை எனது வளையணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டாவது நடந்து வந்துவிடு என்று கூறும் போது மனிதம் உள்ள மனங்கள் யாவும் வலியை உணர்கின்றன....

மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிக்கவும் அழுகவும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...
அவ்வேலையில் உணர்வு என்றால் என்ன? என்று எடுத்தியம்ப இது போன்ற சங்கப் பாடல்கள் துணைநிற்கும்,

பாடல் இது தான்...


ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!


பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை
புறநானூறு-255.

எல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால் வெளிப்படுத்த முடியாது.
சங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது..
எத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

வெள்ளி, 17 ஜூலை, 2009

நோக்கு ( நூறாவது இடுகை )

( வலைப்பதிவு குறித்த தன்மதிப்பீடு, பட்டாம்பூச்சி விருது வழங்குதல்)

வேர்களைத்தேடி..........

இதுவரை 71 நாடுகளிலிருந்து 11535 பார்வையாளர்கள் 500க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 62பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு எழுதுவது எனது கனவாகவே இருந்தது.சோதனை முயற்சியாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் வலைப்பதிவை ஆரம்பித்தேன்...

கடந்து வந்த பாதை...........

எழுத்துருச்சிக்கல்....


o வலைப்பதிவில் எழுதுவது எனக்கு மிகப்பெரிய சிக்கலாகவே இருந்தது. முதலில் தமிங்கில முறையில் வலைப்பதிவுப்பக்கத்திலேயே எழுதினேன். அவ்வாறு எழுதுவதில் ஒரு சிக்கல் இருந்தது. இணையதளத் தொடர்பு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையில் தொடர்ந்து அதிகசெய்திகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டது...

o பொங்கு தமிழ் என்னும் எழுத்துரு மாற்றியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பாமினி எழுத்துருவில் வேர்டு கோப்புகளை உருவாக்கி, அதனை பொங்குதமிழ் வழியாக யுனிகோடாக மாற்றி பயன்படுத்தி வந்தேன்..

o எழுத்துருச்சிக்கலுக்கு மிகப்பெரிய தீர்வாக என்.எச்.எம் எழுதியை இணையவழியே அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன்.இயல்பாகவே பாமினி எழுத்துருக்களை தட்டச்சு செய்யத்தெரிந்த எனக்கு என்.எச்.எம் எழுதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் இருந்தது.

o எனது கருத்துக்களை எழுதுவதில் ஒரு வழியாக சிக்கல் தீர்ந்தது.

வேர்களைத்தேடி...............

வலைப்பதிவுப் பயன்பாடு அதிலுள்ள தொழில்நுட்பங்கள்
ஆகியவற்றை ஓரளவுக்கு அறிந்து கொண்ட பிறகு....
என்ன எழுதுவது என்று சிந்தித்தேன்...
வலைப்பதிவுகள் பலவற்றையும் பார்த்த போது...
அவற்றுள் இலக்கியப் பதிவுகள் குறைவுபட இருப்பதை உணர்ந்தேன்.

நகைச்சுவை,சமூகம்,தொழில்நுட்பம், அரசியல் பொழுது போக்கு, விளையாட்டு ஆகியவையே பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன...

இலக்கியம் குறித்த தேடல் சார்ந்த வலைப்பதிவுகள் பற்றாக்குறையுடனேயே உள்ளன....

நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது பல தமிழாய்வுத் தரவுகளையும் இணையத்தில் தேடி கிடைக்காமல்த் தவித்தேன். அதனால் இலக்கியப் பதிவுகள் எழுதுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

சங்க இலக்கியம் சார்ந்த செய்திகளை முதன்மையாகவும், இணையதள தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை துணையாகவும் கொண்டு பதிவிட்டு வருகிறேன்....

இன்றைய தமிழர்கள் தம் மொழி, மரபு, பண்பாடு உள்ளிட்ட பல கூறுகளையும் தொலைத்து தமிங்கிலர்களாக வாழும் அவலம் கண்டு மனம் வருந்தினேன்..
அதனால் தமிழரின் மொழி, மரபு, பண்பாட்டுக்கூறுகளின் வேர்களைத்தேடவேண்டும் என்னும் ஆசை மேலிட்டது....
அதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......
என்று பெயரிட்டு மகிழ்ந்தேன்..


திரட்டிகள் ஏற்படுத்திய திருப்பம்.





ஆரம்பத்தில் எனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. பின் தமிழ்மண உறுப்பினர் ந.கணேசன் ஐயா அவர்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தேன்..

தமிழ்மணம் வாயிலாக பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகம் கிடைத்தது..

அடுத்து தமிழிஷில் இணைத்தேன்....
ஒரே நாளில் 600 பார்வையாளர்கள் வந்தனர். எனக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது..

தமிழிஷில் பிரபல இடுகையாக
இணையதளத் தொழில்நுட்பம், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல இடுகைகளையும் ஓட்டளித்துப் பிரபல இடுகையாக்கிய நண்பர்கள் யாவருக்கும் மிகுந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

முதல் திருப்பம்...

திரட்டி இணையதளத்தில் நட்சத்திர வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வலையுலக வாழ்வில் மறக்கமுடியாததாக அமைந்தது.


பிற இணையதளங்களில்

படிக்கும் காலத்தில் இணையதளங்களில் எனது கட்டுரைகளை வெளியிடுவதற்கு பல முறை முயன்றும் இயலாது போனது...
அந்த நிறைவேறாத ஆசைகள் கடந்த இரு ஆண்டுகளில் நிறைவானபோது மிகுந்த மகிழ்வெய்தினேன்..

திண்ணை , முத்துக்கமலம் , தினகரன்
பதிவுகள்

தமிழ் ஆதர்ஸ் ( 6 கட்டுரைகள்)

1.தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

2. காதலின் அகலம்- உயரம் – ஆழம்

3.பழந்தமிழர் விளையாட்டுக்கள்


4. ஈமத்தாழி

5.பெண்களும் மலரணிதலும்

6. சகோதரியான புன்னைமரம்


இளமை விகடன் குட்பிளாக்ஸில்

ஐந்திணைப்பெயர் மூலம்

ஓரிற்பிச்சையார்

கவைமகனார்

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

பழந்தமிழரின் விளையாட்டுகள்

ஈமத்தாழி

உள்ளிட்ட 6 இடுகைகள் வெளிவந்துள்ளது.


கருத்துரைகள்.............

வேர்களைத்தேடி.........

வந்து கருத்துரையிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் என் நன்றிகள் உண்டு..
எனது எழுத்துக்கு உயிரூட்டி மேலும் மேலும் எழுதத்தூண்டியவர்கள் கருத்துரையாளர்களே....

கருத்துரையாளர்கள் பல வகை....
பாராட்டிச் செல்பவர்கள்.....
வாழ்த்திச் செல்பவர்கள்.....
குறை கூறிச் செல்பவர்கள்....
அறிவுரை கூறிச் செல்பவர்கள்...
சந்தேகம் கேட்கக் கூடியவர்கள்....

என இவர்கள் பலவகைப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கருத்துரைகளை அவர்களின் நோக்கிலிருந்து பார்த்து எனது வலைப்பதிவை பயனுள்ளதாக்க முயற்சி செய்து வந்திருக்கிறேன்.


இந்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் முதிர்ச்சி பெறச் செய்தன...

ஆரம்பத்தில் இலக்கிய நயத்தோடு எழுத ஆரம்பித்த எனக்கு உலகு பரவி வாழும் தமிழர்களின் நிலைகண்டு இன்னும் எளிமைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று சிந்தனை வந்தது. அதனை கருத்துரை வாயிலாக தெரிவித்த அன்பு நெஞ்சங்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மேலும் எனது எழுத்துக்களை எளிமைப்படுத்தி்க்கொண்டேன்....

மறக்க முடியாதவர்கள்.....


தமிழரசி ............
எனது வலைப்பதிவின் மீது தீராத பற்றுடையவர்...
இவரது கருத்துரைகளில் தமிழின் மீது அவர் கொண்ட தீராத காதல் புலனாகும்..
எழுத்தோசை என்னும் வலைப்பதிவு வாயிலாக நாளும் கவியோசை எழுப்பி வருகிறார்
இவர் தம் வலைப்பதிவில் வேர்களைத்தேடி..........
என்ற எனது வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்ததோடு
பட்டாம்பூச்சி விருது வழங்கியும் பாராட்டினார். அதோடு நில்லாமல், அவர் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றியபோதும் மற்றொரு முறை எனது பதிவினை அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தார்....
தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தேவன் மாயன்...
தமிழ்த்துளி என்னும் தம் வலைப்பதிவு வாயிலாக மருத்துவம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, பொது அறிவு என பல செய்திகளையும் அளித்து வருகிறார்.....
அவரைப் பார்த்து பல நேரங்களில் வியந்ததுண்டு.......
ஏனென்றால் எப்போது ஜிமெயிலைத் திறந்தாலும் அவர் இணையதள தொடர்பில் இருப்பார்...

கருத்துரை வழியே நண்பரான இவர் வாழ்வது காரைக்குடி என்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்து போனேன்..........

நான் பத்துவருடங்களாக எனது பல்கலைக்கழகக் கல்வி பயின்றது காரைக்குடி....

அதனால் இவர் பதிவினைப் படிக்கும் போது ஒரே ஊர்காரர் என்னும் மனநிலை ஏற்படுவதுண்டு...




தமிழ் நெஞ்சம்....

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இவரைப் பார்த்து மலைத்ததுண்டு....
தொழில்நுட்பக் கடல் என்றே இவரை அழைக்கலாம். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தகவல்களை இவர்தம் வலைப்பதிவில் தந்துள்ளார்..
எனது வலைப்பதிவுக்கு ஆரம்ப காலங்களில் இருந்தே கருத்துரையிட்டும்.. தமிழிஷில் ஓட்டளித்தும் என்னை ஊக்கப்படுத்தி வரும் இவரின் அன்பை என்றும் மறவேன்..


இன்னும் வலைப்பதிவு வாயிலாக எனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆயினும் பக்க நீட்சி கருதி....
இத்துடன் நிறைவு செய்கிறேன்..
அதற்கு முன்னர்......




ஐவருக்குப் பட்டாம்பூச்சி விருதளிக்க விரும்புகிறேன்....
எனது நண்பர்கள் பலர் பிரபல பதிவர்களாக உள்ளனர். அவர்கள் பல முறை இவ்விருதைப் பெற்றுள்ளனர். அதனால் இவ்விருதினைப் பெறாதவர்களுக்கு இதனை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்...

முதலாவதாக....

முனைவர்.சே.கல்பனா (தமிழ்விரிவுரையாளர்)

இளங்கலை வேறு துறை பயி்ன்றவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்பவர்...
அவரது வலைப்பக்கத்தில்
இலக்கியம், இலக்கணம், வரலாறு, அகராதி என பல்துறைத் தகவல்களையும் காணமுடியும். ஒவ்வொரு இடுகையின் போதும் கருத்துரையிட்டு எனது பக்கத்தை வளமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு எனது முதலாவது விருதினை அளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

இரண்டாவதாக......


எம்.ஏ.சுசீலா
சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன.தமிழ்இலக்கியத்தில்,முனைவர்(Ph.d)பட்டம்பெற்று,மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி.(1970-2006);அதிலிருந்து ஓய்வு பெற்றவர்.


மூன்றாவதாக....
குமரன்..

இவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.
இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.
எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...
இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானா?
தமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா? என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....
அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...
அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அவருக்கு எனது இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன்..


நான்காவதாக.........
சுமஜ்லா

கடந்த சில நாட்களாகவே இவரை அறிவேன்....
தொழில்நுட்பம் சார்ந்த பல செய்திகளையும் அயராது கண்டறிந்து கூறுபவர். இவரின் வலைப்பதிவுக்குச் சென்றாலே அவரது கடின உழைப்புத் தெரியும். வலைப்பதிவுகளைப் பகலில் ஒரு வடிவிலும், இரவில் வேறொரு வடிவிலும் காண்பது போன்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட பல அரிய செய்திகளை இவரது பக்கத்தில் காணலாம். அவருக்கு எனது மூன்றாவது விருதினை அளித்து பெருமிதம் கொள்கிறேன்.

ஐந்தாவதாக........

சந்ரு..
தமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த காதல் கொண்டவர். அதனால் எனது வலைப்பதிவைத் தன் பதிவில் இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு என்று அறிமுகம் செய்து மகிழ்ந்தார். அவரது வலைப்பதிவைக் காணும் போது சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பினைக் காணமுடிந்தது. கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நிழற்படங்கள் என தினம் பல இடுகைகள் இட்டு வரும் நண்பர் சந்ரு அவர்களுக்கு ஐந்தாவதாக விருதளித்து மகிழ்கிறேன்.


வலைப்பதிவு அறிமுகத்துக்குப் பின்னர் இவ்வையகமே சிறு கிராமம் போல ஆகிவிட்டது. உலகு பரவி வாழும் தமிழர்கள் யாவரும் ஒரே கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான பொருள் எனக்கு இப்போது தான் முழுமையாகப் புரிந்தது....

ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

புதன், 15 ஜூலை, 2009

நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.


காதல் வெளிப்படும் அழகான சூழல்...


தலைவி தோழிக்குச் சொல்லியது.....

தலைமக்கள் இருவரும் ஒருவரை அறியாமல் அவரவர் மனதிற்குள்ளேயே காதல் கொண்டிருந்தனர்.ஆயினும் இயல்பாக ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல நடந்து வந்தனர்..

இந்நிலையில் அவர்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழலைக் காட்சிப்படுத்துகிறது கலித்தொகைப் பாடல்..........

தலைவி : ஒளி பொருந்திய வளையினை அணிந்த என்னுயிர்த் தோழியே நான் சொல்வதைக் கேட்பாயாக....

தோழி : ம்.. சொல் கேட்கிறேன்....

தலைவி : முன்னொரு நாள் நானும் என் அன்னையும் வீட்டில் இருந்தோமா....

தோழி : ம்.....

தலைவி : அப்போது வீட்டு வாசலில் ஒரு குரல்...

தோழி : என்ன குரல்...?

தலைவி : வீட்டில் இருப்பவர்களே....
உண்ணும் நீர் வேட்கையால் தங்கள் வீடு தேடி வந்திருக்கிறேன்....
யாராவது தண்ணீர் தருவீர்களா..........?
என்று.

தோழி : சரி...
யார் உங்களுக்குத் தெரிந்தவர்களா....?

தலைவி : எங்களுக்கு மட்டுமில்லை ...
உனக்கும் அவனைத் தெரியும்...

தோழி :அப்படியா... எனக்கும் தெரியுமா...?
யார் அவன்....?

தலைவி : நாம் மணலால் சிறு வீடு கட்டியபோது அதனை வந்து காலால் எட்டி உதைத்துச் சிதைத்ததோடு அல்லாமல்,
என் கூந்தலை பிடித்து இழுத்து, நாம் விளையாடிய வரிப்பந்தனை எடுத்துக்கொண்டு ஓடினானே ஒருவன்....
உனக்கு நினைவிருக்கிறதா...?

தோழி : ஆமாம்...

தலைவி : அவனே தான்....

தோழி : அவன் தெருவில் நமக்குத் துன்பம் செய்தது போதாது என்று இப்போது உன் வீட்டுக்கே வந்துவிட்டானா.........?

தலைவி : ஆமாம்...
வந்தவன் என்ன செய்தான் தெரியுமா....?

தோழி : என்ன செய்தான்....

தலைவி : அவன் தண்ணீர் கேட்டவுடன் என் அன்னை ..
என்னிடம் அழகிய பொன்னாலான கலத்தில் நீர் கொடுத்து வா என்றாள்...

தோழி : சரி.....

தலைவி : வந்திருப்பவன் இவன் என்பதை அறியாமல் நானும் நீர் எடுத்துச் சென்றேன்...
இவன் என்று அறிந்ததும் திகைப்புற்றேன்...
ஆயினும் சரி தண்ணீர் தானே கேட்கிறான் என்று கொடுத்தேன்.

தோழி : சரி......

தலைவி : தண்ணீரை வாங்குவது போல அவன் என் வளையணிந்த முன்கையையும் பற்றி இழுத்துவிட்டான்.....


தோழி : ஐயோ ...!
பின் என்ன நடந்தது..

தலைவி : நான் அன்னாய் ....
இவன் செய்த செயல் பார்த்தாயா....
என்று கத்திவிட்டேன்.....

தோழி : சரி.....

தலைவி : அன்னையும் அலறிக்கொண்டு என்ன நடந்தது என்று அறியாது விரைந்து அவ்விடத்துக்கு வந்தாள்...

தோழி : ம்....
நீ அவன் செய்ததை உன் தாயிடம் கூறிவிட்டாயா...?

தலைவி : இல்லை...

தோழி : ஏன்...?

தலைவி : ஏனென்று தெரியவில்லை....
அவனை என் தாயிடம் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை....

தோழி : சரி .. சரி ...

பின் நீ கத்தியதற்கு என்ன காரணம் கூறினாய்...?

தலைவி : அவன் உண்ணு நீர் விக்கினான் என்றேன்.....
அவன் செய்கை அறியாது என் தாயும் அவன் உண்மையிலேயே உண்ணு நீர் விக்கினான் என்று அவன் முதுகினைத் தடவிக்கொடுத்தாள்...

தோழி : அவன் என்ன செய்தான்.....

தலைவி :கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

தோழி : சரி எனக்கு எல்லாம் புரிந்து விட்டது...

தலைவி : என்ன புரிந்து விட்டது...?

தோழி : நீ ஏன் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்கவில்லை..
அவன் ஏன் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
உன்னைப் பார்த்து சிரித்தான்... என்பது எனக்குப் புரிந்து விட்டது....

தலைவி : அப்படியா ...
அப்படி என்ன புரிந்து கொண்டாய்.....?

தோழி : நீ நினைத்திருந்தால் அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுத்திருக்கலாம்..

ஆனால் நீ ஏன் காட்டிக் கொடுக்கவில்லை ...
உன்னையும் அறியாது நீ அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாய்......

அதனை அவனும் அறிவான்....
அவன் உன்னைக் காதலிக்கத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
அவன் சிரிப்பின் பொருள் என்ன என்று உனக்குத் தெரியாதா...?

தலைவி : என்ன பொருள்..?

தோழி : நீ தான் கள்ளி என்று அவன் எண்ணியிருப்பான்.....

தலைவி : என்ன சொல்கிறாய்...?

தோழி : ஆமாம்....

அவன் செயலை உன் தாயிடம் கூறாது கள்ளத் தனம் செய்தவள் நீ தானே...
அதனால் தான் அவன் உன்னைப் பார்த்து சிரித்திருக்கிறான்.....

அவன் முடிவு செய்திருப்பான்....

தலைவி : என்ன முடிவுசெய்திருப்பான்...?

தோழி : நீ அவனை உன் தாயிடம் காட்டிக் கொடுக்காமல் இருந்ததிலிருந்து நீயும் அவனைக் காதலிக்கிறாய் என்பதை முடிவு செய்திருப்பான்...


தலைவி : நீ என்ன என்னென்னவோ கற்பனை செய்து கொள்கிறாய்..
அப்படியெல்லாம் எதுவும் இல்லை....


தோழி : இல்லை என்று உன் உதடுகள் மட்டும் தான் சொல்கிறது..
உனது கண்களோ அதைப் பொய் பொய் என்று கூறுகிறதே ...

எனக்குத் தெரியாதா...

எத்தனையோ பெண்களிருக்க அவன் உன்னை மட்டும் சுற்றி வருகிறான், எத்தனையோ வீடுகளிருக்க அவன் உன் வீட்டில் மட்டும் ஏன் நீர் வேண்டி வருகிறான்...?

என்னிடம் மறைக்கலாமா....?

தலைவி : உன்னிடம் மறைக்கமுடியுமா.....?

இது தான் பாடலின் உட்பொருள்.....

இதனை உணர்த்தும் பாடல்...,


51 சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!


கலித்தொகை-51.
இப்பாடல் வழி தலைமக்களின் காதல் வெளிப்பட்ட அழகான சூழல் உணர்த்தப்படுகிறது. மேலும் தலைமக்கள் இருவரும் வெளியே சண்டையிட்டுக் கொண்டாலும் மனதளவில் ஒருவரை ஒருவர் காதலித்தமையும் அறியமுடிகிறது.....

காட்சியைக் கண்முன் கண்டது போன்ற நிறைவு இப்பாடலின் முடிவில் கிடைக்கிறது.

திங்கள், 13 ஜூலை, 2009

சகோதரியான புன்னை மரம்…....



பகற்குறி வந்த தலைமகனைத் தோழி
வரைவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்



பகலில் தலைவன் தலைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டின் அருகே உள்ள புன்னை மர நிழலில் வந்து காத்திருந்தான். தோழியோ அவன் இதுவரை காதலித்தது போதும் தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தூண்டவேண்டும் என எண்ணினாள்..

அதனால் தலைவனிடம் தோழி கூறுவாள்........

நீயோ தலைவியைச் சந்தித்து மகிழ்வதற்காக இங்கு வந்திருக்கிறாய். ஆனால் தலைவியோ இவ்விடத்தில் உன்னுடன் மகிழ்ந்து உறவாட விரும்பவில்லை. ஏனென்றால்....

யாரவது தம் தங்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா?
ஆம்... நீ நிற்கும் இந்த புன்னை மரம் எங்களுக்குத் தங்கை உறவாகும். அதனால் நீ வேறு மர நிழல் உண்டா என்று பார் என்கிறாள்....

இதுவே தலைவனிடம் தோழி கூறியது....

இப்பாடல் வழி சங்க காலத்தில் மரங்களையும் உறவாக, உயிராக மதித்தமை புலனாகிறது...

பழந்தமிழர் இயற்கையோடு கலந்து வாழ்ந்தமை, இயற்கையோடு உறவு கொண்டிருந்தமை ஆகியன இதனால் அறியமுடிகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேட்டில் வாழும் நமக்கு சங்க கால மக்களின் வாழ்வியல் ஒரு பாடமாக அமைகிறது...

இதனை,

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
172 நெய்தல்


இப்பாடல் அடிகள் உணர்த்தும்...

இப்பாடலை உரையாடல் வடிவில் இங்கு காண்போம்.....

தோழி : வாங்க சரியா நேரத்துக்கு வந்துவிடுகிறீர்களே எப்படி?

தலைவன் : அவளைப் பார்க்காமல் ஒருவேலையும் செய்யமுடியவில்லை. விழித்திருக்கும் போது ...
எந்தப் பக்கம் திரும்பினாலும் அவள் முகம் தான் தெரிகிறது.. கண்மூடித் தூங்கினாலும் கனவிலும் அவள் முகம் தான் தெரிகிறது நான் என்ன செய்வது...

தோழி : போதும் போதும்.....

தலைவன் : தலைவி எங்கே...?

தோழி : அருகில் தான் இருக்கிறாள்....
ஆனால்......

தலைவன் : என்ன ஆனால்.........?

தோழி : நீங்கள் நிற்கும் இந்த புன்னை மரநிழலில் உங்களைச் சந்தித்து உறவாட அவளுக்கு விருப்பமில்லை..

தலைவன்
: ஏன் இது அவர்கள் வீட்டு மரம் தானே... இங்கு என்னைச் சந்தித்துப் பேச அவளுக்கு என்ன தயக்கம்....?

தோழி : அவள் வீட்டு மரம் தான் ஆனால், இதனை நாங்கள் யாரும் மரமாகக் கருதவில்லை.....

தலைவன் : பிறகு...?

தோழி : எங்கள் தங்கையாகக் கருதுகிறோம்.....

தலைவன் : என்ன இது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது...
மரத்தை தங்கையாகக் கருதுகிறீர்களா...? இது என்ன வேடிக்கையாக இருக்கிறது...?

தோழி
: இது ஒன்றும் வேடிக்கையல்ல....
இதற்கான காரணத்தைத் தாங்கள் அறிந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள்....

தலைவன் : அப்படியா...! அப்படி என்ன காரணம்.....?

தோழி : முன்பு ஒரு நாள் புன்னை விதையை வைத்து மண்ணுள் புதைத்து விளையாடினோம்..

தலைவன் : சரி...

தோழி : அப்போது எம் அன்னை எம்மை அழைத்தாள்...
நாங்களும் மண்ணுள் புதைத்த விதையை மறந்து அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டோம்...

தலைவன் : பிறகு...?

தோழி : பின் மழை வந்ததில்.. மண்ணுள் இருந்த புன்னை விதை வளர ஆரம்பித்தது...

தலைவன் : அட...!

தோழி : நாங்களும் மகிழ்வோடு அதனை வளர்க்கலானோம்....
சாதாரணமாக வளர்க்கவில்லை....

தலைவன் : வேறு எப்படி வளர்த்தீர்கள்...?

தோழி : அந்தப் புன்னைச் செடிக்கு... பால்.... தேன் என்று ஊற்றி வளர்த்தோம்.....

தலைவன் : செடிக்கு யாராவது பாலும் தேனும் ஊற்றுவார்களா...............?

தோழி : நாங்கள் அதனை ஒரு செடியாக மட்டும் மதிக்கவில்லை...
எங்கள் சகோதரியாகவே மதித்தோம்... அதனால் தான் பாலும் தேனும் ஊற்றி வளர்த்தோம்.

தலைவன் : சரி...

தோழி : எம் அன்னை பல நேரங்களில் கூறுவாள்.....
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று....

தலைவன் : அப்படியா.........?

தோழி : ஆம் நாங்கள் தவறு செய்யும் சூழல்களில் இந்த புன்னை மரத்தைத்தான் காட்டி
உரைப்பாள்....
உங்களைக் காட்டிலும் இந்த புன்னை மரம் எவ்வளவோ பரவாயில்லை....அமைதியாக உள்ளது....
சொல்வதைக் கேட்டுக்கொள்கிறது என்று பலவாறு கூறுவாள்...

தலைவன் : சரி இந்தப் புன்னை மரம் உங்கள் சகோதரியாகவே இருக்கட்டும்....
தலைவி இங்கு வந்து என்னைக் காண்பதில் என்ன சிக்கல் உள்ளது...?

தோழி : யாரவது தங்கைக்கு முன்னர் காதலித்து மகிழ்வார்களா...?
இந்தப் புன்னை,
மரம் மட்டுமல்ல எங்கள் தங்கையும் கூட...
அதனால் வேறு மர நிழல் ஏதும் உள்ளதா என்று பாருங்களேன்....

தலைவன் : (மனதில் எண்ணிக் கொள்கிறான்)

தோழி அதற்காக மட்டும் மறுக்கவில்லை....
நான் தலைவியை விரைவில் மணந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடும்..,
பகற்குறி வந்தால் ஊரார் பார்த்துப் பழி தூற்றுவர் என்று அஞ்சியும் தான் தலைவியைப் பார்ப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறாள்...

சரி இனியும் காலம் தாழ்த்தாது தலைவியை மணந்துகொள்ள வேண்டியது தான்..)

இதுவே அப்பாடலின் பொருளும் உட்பொருளும்...

இப்பாடல் வழி நாமறிந்து கொள்ள வேண்டியது..

தாவரங்கள் உறவாக மதிக்கப்பட்ட காலம் சங்ககாலம் என்பதையும்............


மரங்களை நாம் உறவாக மதிக்காவிட்டாலும் உயிராகவாவது மதிக்கவேண்டும் என்பதும் தான்...

வியாழன், 9 ஜூலை, 2009

பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)




இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம்

ஏன் மலரணிகிறீர்கள்?
என்று கேட்டால்.......
அவர்கள் சொல்வார்கள்.....

அழகுக்காக அணிகிறோம்.....
மணத்துக்காக அணிகிறோம்.....
என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்.....

எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்.....

நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்.............

அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும்.

ஆம்....

சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை.

அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தான் இது என்று ஊரார் பேசிக்கொள்வார்கள்.......


இம்மரபினை பல்வேறு சங்கப்பாடல்களும் சுட்டுகின்றன... அம்மரபினைச் சுட்டும் கலித்தொகைப் பாடல் ஒன்று இங்கே விளக்கம் பெறுகிறது.....

( எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதால் உரையாடல் வடிவில் இப்பாடலை விளக்கியுள்ளேன்)

களவு வெளிப்பட்டது என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல நமர் நின்னை அவர்க்கே கொடுக்கச் சூழ்ந்தார் என்று சொல்லி அச்சம் நீக்கியது.

இதன் பொருள் – தலைவியின் காதல் அவள்தம் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. அதனால் கலங்கிய தலைவி தம் கலக்கத்தைத் தோழியிடம் கூறினாள். தோழியோ தலைவியை, நீ கலங்காதே உன் பெற்றோர் நீ விரும்பியவாறே உன் தலைவனுக்கே மணம் முடித்துவைப்பர் என்று சொல்லி அச்சம் நீக்கினாள்.....
இதுவே தலைவியும் தோழியும் பேசிக் கொண்டது. இப்பாடலில் தலைவியின் காதல் வெளிப்பட்ட விதம் தமிழர்தம் மரபினை வெளிப்படுத்துவதாக உள்ளது........

தலைவி : நேற்று எங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
தோழி : என்னடி நடந்தது?

தலைவி : புதிசா கள்ளருந்தியவன் எப்படி உண்மையெல்லாம் உளறிக் கொட்டிவிடுவானோ... அதுபோல ஆகிப்போச்சுடி என் நிலை.

தோழி : என்னடி சொல்ற....?

தலைவி : நேற்றிரவு என் தலைவனைச் சந்தித்தேன் அவன் தலையில் முல்லை மலர் சூடியிருந்தான்... எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மலரை நானும் எடுத்து என் கூந்தலில் சூடிக்கொண்டேன். அவனை விட்டுப் பிரியும் போதும், என் வீட்டுக்குச் செல்லும் போதும் அம்மலரை எடுத்து எறிய எனக்கு மனம் வரவில்லை அதனால் கூந்தலுக்குள் வைத்த மலருடனேயே வீட்டுக்குப் போய்விட்டேன்..

தோழி : உனக்கு என்ன துணிவு.... சரி.....
பின் என்ன நடந்தது?

தலைவி : வீட்டுக்குச் சென்ற பின்னர் கூந்தலுக்குள்ளே வைத்த மலரை மறந்துவிட்டேன்...

தோழி : ம்

தலைவி : வீட்டில் நற்றாயும் பெற்றோரும் இருக்கும் போது செவிலித்தாய் வந்து என் கூந்தலில் எண்ணை தேய்த்து முடிந்துவிடுகிறேன் என்றாள்....
( நற்றாய் – தலைவியைப் பெற்ற தாய்.
செவிலி – தலைவியை வளர்த்த தாய்)
நானும் மலரைக் கூந்தலில் வைத்த நினைவில்லாமல் அவள் முன் நின்றேன்...

தோழி : சரி....

தலைவி : என் தலைமுடியை அவிழ்த்தாள் செவிலி....
அதன் உள்ளே வைத்திருந்த முல்லை மலர் கீழே விழுந்தது.....

தோழி : அடடா....
அப்புறம் என்ன ஆச்சு....? வீட்டில என்ன சொன்னாங்க? உன் கூந்தலில் முல்லை மலர் எப்படி வந்தது..? யார் தந்தது? என்றெல்லாம் கேட்டு உன்னை துன்புறுத்தியிருப்பார்களே....?


தலைவி : நீ நினைக்கிறது மாதிரி அங்கு அப்படி எதுவும் நடக்கல...

தோழி : என்னடி சொல்ற............! யாரும் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா...........! நம்பமுடியலயே.........!

தலைவி : என்னாலும் தான் நம்பமுடியல..என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை.
என் கூந்தலில் இருந்து முல்லை மலர் விழுந்ததைப் பார்த்ததும் செவிலித்தாய் ஏதோ நெருப்பைத் தொட்டவர் போலப் பதறி அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்... நற்றாயும், தந்தையும் கூட எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிப் வீட்டின் பின்பக்கம் சென்று விட்டனர்.


தோழி : ம் ........ அப்புறம் நீ என்ன செய்தாய்.......?


தலைவி : எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.... கூந்தலை முடித்து விட்டு வீட்டின் அருகே உள்ள கானத்துக்குச் சென்றுவிட்டேன்....

தோழி : சரி ..... அது தான் உன் பெற்றோர் எதுவும் சொல்லவில்லையே. பிறகு எதற்கு பயப்படுகிறாய்........?

தலைவி : அது தானடி எனக்குப் பயமாக இருக்கிறது.....
இனி அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை.

தோழி : அவங்க அடுத்து என்ன செய்யப்போறாங்கன்னு நீ நினைக்கிற....?

தலைவி : என்னை வீட்டை விட்டு வெளியே விடாமல்.... இற்செறிக்கலாம்..
வேறு ஒருவருக்குக் கூட திருமணம் செய்த வைக்கலாம்......

தோழி : ஓ அது தான் உனது பயத்துக்குக் காரணமா?
நீ நினைக்கிறது மாதிரி எதுவும் நடக்காது...
பயப்படாத......
உன் பெற்றோர் உன்னை அப்பொழுதே.....
கோபப்பட்டுப் பேசியிருந்தால் நீ சொல்வது போல என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...
ஆனால் ....
அவங்க கோபப்பபடாம இருக்கிறதப் பார்த்தா.........
எனக்கென்னமோ.... அவங்க உன் விருப்பப்படி நீ விரும்பியவனுக்கே உன்னை மணம் முடிப்பார்கள் என்று தான் தோன்றுகிறது...

தலைவி : என்னடி சொல்ற........
நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்குமா?

தோழி : பயப்படாத........
நான் சொல்றது மாதிரி தான் நடக்கும்...
உன் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கமாட்டார்கள்...
உன் மகிழ்ச்சி தானே அவர்களுக்கு தேவை....
அதனால் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இரு

தலைவி : அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்..

தோழி : அப்படியே நடக்கும் கலங்காதே.......

சங்கத்தமிழர் மரபுகளில் மலரணிதல் குறிப்பிடத்தக்கதாகும்..
ஆடவரும், பெண்டிரும் மலரணிந்தனர்....
ஒவ்வொரு நிலையிலும் மலரணிதலுக்கெனப் பல காரணங்கள் இருந்தன. மகளிர் மலரணிதல் பற்றி பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன..... அவற்றுள்,

தலைவி கூற்றும் தோழி கூற்றும்
'தோழி! நாம்இ காணாமை உண்ட கடுங் கள்ளைஇ மெய் கூரஇ
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குஇ
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும்இ மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடேஇ
அன்னையும் அத்தனும் இல்லராஇ யாய் நாணஇ
அன்னை முன் வீழ்ந்தன்றுஇ அப் பூ
அதனை வினவலும் செய்யாள்இ சினவலும் செய்யாள்இ
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டுஇ
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும்இ என்
சாந்து உளர் கூழை முடியாஇ நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇஇ தளர்பு ஒல்கிஇ
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்குஇ எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின்இ நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார்இ நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்துஇ திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்இ
அல்கலும் சூழ்ந்த வினை.'

கலித்தொகை-115


இப்பாடல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இப்பாடல் வழி சங்க காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே மலரணிந்தனர் என்பதும், திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை என்பதும் புலனாகிறது. அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் மலர் அணிந்தால் அப்பெண் யாரையோ காதலிக்கிறாள் என்று பொருள்கொள்ளப்பட்டது...

செவ்வாய், 7 ஜூலை, 2009

நெடுவெண்நிலவினார்



இவ்விடுகை என்னும் கால எந்திரம் உங்களை சங்க காலத்துக்கு அழைத்துச் செல்கிறது........

சங்கப் புலவர் ஒருவருக்கு “நெடுவெண்நிலவினார்“ என்று பெயர் உள்ளது. இது இவரின் இயற்பெயர் இல்லை. இவர் பாடலில் கையாண்ட தொடரால் பெற்ற பெயராகும். இப்பெயருக்கான காரணத்தை ஆய்வதாக இவ்விடுகை அமைகிறது.

47. குறிஞ்சி - தோழி கூற்று

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.


-நெடுவெண்ணிலவினார்.



இப்பாடலில் தோழி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள்..அதனால் இப்புலவர் நெடுவெண்நிலவார் என்று பெயர் பெற்றார்.

(நிலவு பேசாது.....
பேசினால் என்ன பேசும் என்பது இப்பாடலின் புரிதலுக்காக் கையாண்ட கற்பனை....)


சூழலில் உள்ள மாந்தர்கள்( மக்கள் )

தலைவன், தலைவி, தோழி, நிலவு.



தலைவனைப் பார்த்துத் தோழி நீ காதலித்தது போதும் திருமணம் செய்து கொள் என்கிறாள் ....
இதனை நேரிடையாகத் தலைவனிடம் கூறாமல் நிலவிடம் கூறுகிறாள் அதனால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்னும் பெயர் வந்தது
இனி பாடலுக்குச் செல்வோம்.....


(இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது)

களவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். வரைந்து ( திருமணம் ) கொள்ள முயலவில்லை. இந்நிலையில் தலைவன் கேட்ப நிலவைப் பார்த்துத் தோழி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் அருகில் இருந்தாலும் அவனிடம் நேரிடையாக உரைக்காமல் நிலவிடம் உரைக்கிறாள் தோழி.

தோழி : நெடும் பொழுது ஒளி வழங்கும் வெண்ணிலாவே, நீ தலைவனின் களவு வாழ்வுக்கு நன்மை செய்யவில்லை. தீமைதான் செய்கிறாய்..

நிலவு : என்ன நான் தீமை செய்கிறேனா? நான் யாவருக்கும் பொதுவாகத் தானே ஒளி வழங்குகிறேன்.....

தோழி : நீ பொதுவாகத் தான் ஒளி வழங்குகிறாய் ஆனால் உன் ஒளி காதலிப்பவர்களுக்குத் துன்பமும், திருமணம் செய்து வாழ்வோருக்கு இன்பமும் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா?

நிலவு : அப்படியா......? எனக்கு புரியவில்லையே .....
இன்னும் விளக்கமாகச் சொல்வாயா?

தோழி :சரி இன்னும் விளக்கமாகவே சொல்கிறேன்.
கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் மலர்கள் பாறையில் உதிர்ந்து கிடக்கும். அதனை இரவில் நிலவொளியில் காணும் போது புலியின் குட்டிபோல இருக்கும். இத்தகைய கொடிய காட்டிலும் தலைவன், தலைவியிடம் இன்பம் நுகர்தலே நோக்கமாகக் கொண்டமையால் அச்சமின்றி வருகிறான். உன் ஒளி தலைவனுக்கு, ஒருவகையில் அச்சத்தையும்,ஒருவகையில் அச்சமின்மையையும் வழங்குகிறது..

நிலவு : அப்படியா?

தோழி :ஆம்,
சாதாரணமான வேங்கை மலர்கள் புலிபோலக் காட்சியளிப்பதால் தலைவனுக்கு அச்சம் ஏற்படுவதுண்டு.
உன் ஒளியின் துணையால் பாதை தெளிவாகத் தெரிவதால் வேறு பயமின்றி வந்து செல்கிறான்..
உன்னை நினைத்தால் எனக்குக் கோபமாக வருகிறது.

நிலவு :ஏன்? நான் என்ன தவறு செய்தேன்...

தோழி : காதலர்கள் ஊருக்குத் தெரியாது இரவுக் குறியில் சந்திக்கிறார்கள். நீயோ உனது ஒளியில் அவரிகளின் சந்திப்பை காட்டிக் கொடுத்து விடுகிறாயே....

நிலவு : என்ன சொல்கிறாய்...?

தோழி :ஆமாம் ஊரில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். தலைவியின் அருகிலேயே இருக்கும் தாயும் தூங்கிவிட்டாள். ஓயாது குரைத்துக்கொண்டிருக்கும் நாயும் தூங்கிவிட்டது. ஆனால் நீ மட்டும் தூங்காது விழித்துக் கொண்டிருந்தாய். அதனால் அவர்களின் காதல் ஊருக்கு வெளிப்பட நீயும் ஒரு காரணமானாய்.
மேலும் உன் ஒளியின் துணையால் தலைவன் தடையின்றி தலைவியைச் சந்தித்து காதலித்து மகிழ்கிறான். காதலுக்கு இடையூறு இல்லாமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் நீ தான்..

நிலவு : அப்படியா? எனது வருகை யாருக்கும் நன்மையே செய்யவில்லையா?

தோழி : ஏன் ? கற்பு நெறியில் திருமணம் செய்து வாழ்வோருக்கு உன் ஒளி மிகவும் மகிழ்வளிப்பதாகவே உள்ளது.

நிலவு : அப்படியா மகிழ்ச்சி...
சரி எனது வருகையும், எனது ஒளியும் ஒருவருக்கு நன்மையும், ஒருவருக்குத் தீமையும் செய்வதாக நீ கூறுகிறாய்...
நான் என்ன தான் செய்யட்டும்....
வரவா? வேண்டாமா?

தோழி : நீ வராமல் இருந்தால் என்னாவது...
நீ என்ன செய்வாய் பாவம்...
ஏதோ நான் தலைவியின் துயரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் மனக்குறையை எல்லாம் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிட்டேன்.....
திருந்த வேண்டியவன் தலைவன் தான்...
அவனுக்குத் தான் தெரியவேண்டும்..
களவு வாழ்வை விட கற்பு வாழ்வே சிறந்தது என்று....
ஊருக்குத் தெரியாது மறைந்து நிலவின் உதவியுடன் இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து காதலித்து வாழ்வதை விட, ஊரறிய மணம் புரிந்து நிலவின் பயன் கொண்டு வாழ்வதே மேலென்று..... உணரவேண்டியவன் தலைவன் தான்.....

இப்பாடலில் நிலவிடம் இப்படியொரு உரையாடல் நடத்தியமையால் இப்புலவருக்கு நெடுவெண்நிலவினார் என்றே பெயர் வந்தது.

சனி, 4 ஜூலை, 2009

விட்ட குதிரையார்




விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம் தற்படர்நதமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.


குறுந்தொகை – 74.

தலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...

தலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.

ஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..

சென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.

அது போலவே, இப்பாடலிலும்........

நெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன்,

யாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..

தலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.

மூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.

நெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

விட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு “ விட்ட குதிரையார் “ எனப் பெயரிட்டனர்.

இப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.
விட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.

இப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.

வெள்ளி, 3 ஜூலை, 2009

மீனெறி தூண்டிலார்

சங்கப் புலவர்களில் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் இதுவரை ஒன்பது புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் பத்தாவதாக இன்று காண இருப்பது மீனெறி தூண்டிலார்....

யானே ஈண்டையேனே என் நலனே

ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்

கான யானை கைவிடு பசுங்கழை

மீன் எறி தூண்டிலின் நிவக்கும்

கானக நாடனொ ஆண்டு ஒழிந்தன்றே.

குறுந்தொகை – 54

குறிஞ்சி. 

( மீனெறி தூண்டில் – மீனை எறிந்த தூண்டில், மீனால் எறியப்பட்ட தூண்டில்) (வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)