வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 ஜூன், 2009

ஈமத்தாழி



(ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.)

தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது.

சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


இறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. கிடைத்த ஈமத்தாழிகளின் கழுத்துப்பகுதியில் தொப்புள்கொடிபோன்ற வடிவமைப்பு அக்கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


சான்று – 1.

(இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்பது சங்கத்தமிழர் மரபு. )

ஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா? என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று அமைந்துள்ளது.

மண்ணில் கலங்கள் செய்யும் குயவனே....!
இருள் திரண்டு ஓரிடத்தே நின்றது போன்ற ஆகாயத்தில் சென்று தங்கும் சூளை ஒத்த இடமகன்ற பழைய ஊரில் கலங்களைச் செய்கின்ற குயவனே.......!
நீ இரங்கத்தக்கவன்....!
நீ எவ்வளவு வருந்தப் போகிறாய்............?

பெரிய போர்ப்படையை உடையவன்,
அறிவுடைய மாந்தர்களிடம் புகழ் பெற்றவன்,
சூரியனைப் போல தலைமைப் பண்புடையவன்,
செம்பியன் மரபினன்,
கொடிகள் அசையும் யானைகளுக்குச் சொந்தக்காரன்,
எனப் பல்வேறு பெருமைகளையும் கொண்டவன் சோழன் அத்தகைய அரசன் இறந்துவிட்டான்.......
அவன் புகழுக்கு இணையான பெரிய தாழியைச் செய்ய நீ எங்கு போவாய் ..........

உன்னைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது........
என்கிறார் புலவர்.

இப்பாடல் வாயிலாக சங்க காலத்தில் இறந்தவரின் புகழுக்கு இணையான பெரிய தாழியை செய்து அவரைப் புதைக்கவேண்டும் என்ற மரபு புலனாகிறது.
இதனை,



“கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?“

புறநானூறு 228.
என்னும் பாடல் இயம்புகிறது.





சான்று – 2

பெண் ஒருத்தி தன் கணவனுடன் சுரத்திடையே வந்துகொண்டிருந்தாள். அப்போது உண்டாகிய போரில் விழுப்புண் பட்ட கணவன் இறந்து போனான். அதனால் தனிமையுற்ற தலைவி ஊர்க்குயவனிடம் பேசுவதாக இப்பாடல் உள்ளது.

கலம் செய்யும் குயவனே.......!
பெரிய இடத்தைக் கொண்ட தொன்மையான இவ்வூரில் கலம் செய்யும் குயவனே.......!

வண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல நான் தலைவனுடன் இன்ப, துன்பங்களில் ஒன்றாகவே வாழ்ந்துவிட்டேன். இப்போது அவன் மட்டும் என்னை நீங்கி இறந்து போனான். நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை.

அதனால் நானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக....
என்கிறாள் தலைவி..
தன் கணவன் இறந்துவிட்டாலும் தானும் அவனோடு இறந்துவிடவேண்டும் என்ற தலைவியின் அன்போடு
இறந்தவரைத் தாழிகளில் வைத்துப் புதைக்க வேண்டும் என்ற தமிழர் மரபும் இப்பாடல் வழிப் புலனாகிறது
.இதனை

“கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!“

(புறநானூறு -256)
என்னும் பாடல் உணர்த்துகிறது.

இப்பாடல்கள் வழியாகப் பழந்தமிழர் இறந்தவர்களை பெரிய ஈமத்தாழிகளில் வைத்துப் புதைக்கும் மரபினை அறியமுடிகிறது.

17 கருத்துகள்:

  1. இறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது.///

    ஈமத்தாழிகள் முதுமக்கள் தாழி என்றும் கூறுவார்கள்தானே!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான எழுத்து நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள் குணசீலன்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. http://www.gunathamizh.tk/ மூலமாக வந்தேன்.

    தமிழ்ப்பாடல்களின் பொருட்செறிவை, அழகாகச் சொல்லி, பலர் அறிய செய்வது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. ஆம் மருத்துவரே முதுமக்கள் தாழி என்றும் இதனை அழைப்பதுண்டு.........

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கலை..........

    பதிலளிநீக்கு
  6. கருத்துரைக்கு நன்றி சுமஜ்லா அவர்களே

    பதிலளிநீக்கு
  7. இன்று ஓர் தகவல் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி நண்பரே! தொடருங்கள்... தொடர்வோம்.!

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் முனைவரே, எனக்கும் புரியவில்லை, ஏன் ஓட்டு தப்பு தப்பாக தெரிகிறது என்று! முதலில் சரியாகத் தெரிந்தது, ‘ஈமத்தாழி’ என்ற தலைப்பை சுட்டியவுடன், தவறாகக் காண்பிக்கிறது. ஆராய்ந்து பார்த்து தெரிந்தால் சொல்கிறேன்.

    எனக்கு தமிழ் இலக்கியத்தின் மேல் மட்டும் அல்ல, பொதுவாக இலக்கியத்தின் மேல் தீராத காதலுண்டு. படிக்கும் காலத்தில், தொடர்நிலைச் செய்யுள் உட்பட, அனைத்து செய்யுள்களையும் மிகவும் ரசித்து, அதன் சுவைக்காகவே முழுவதும் மனனம் செய்துவிடுவேன்.

    பின்னாளில், ஆங்கிய இலக்கியம் படித்தாலும், தமிழ் வகுப்புகள், மனதில் இன்னமும் பசுமரத்தாணியாய்!

    இவ்வளவு நாளாக தொலைத்து விட்டேன், தங்கள் தளத்தை; இனி அடிக்கடி வருவேன், தமிழின் இனிமைக்காக!!

    வாழ்க நும் சேவை!

    பதிலளிநீக்கு
  9. //ஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா? என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று ///

    இணையம் மூலம் எங்களுடைய வேர்களைத்தேடிட முடிகிறது..

    தொடருங்கள்
    பகிர்விர்க்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்களுக்கு நன்றி சுமஜ்லா..........

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி மருத்துவரே......

    பதிலளிநீக்கு
  12. செம்பியன் மருகன் என்று தானே 228ம் புறப்பாடல் சொல்கிறது? அதற்குச் செம்பியன் மரபினன் என்று பொருள் வருமா? மருகன் என்றால் மகனை மணந்தவன்; உடன் பிறந்தாளுக்குப் பிறந்தவன் என்ற இரு பொருட்கள் தானே உண்டு; இரண்டுமே வேற்று மரபினன் என்று தானே பொருள் தரும்? விளக்கம் தாருங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. மிக்க மகிழ்ச்சி நண்பரே.....
    தொழில் நுட்பத்துறையிலிருந்தாலும் தமிழ் மொழி மீது தாங்களுக்கு இருக்கும் பற்றும் ஆற்றலும் வியப்பளிப்பதாக உள்ளது....

    மருகன் என்றால்...... வழித்தோன்றல் என்றொரு பொருளும் உண்டு .. உவேசா உள்ளிட்ட பல உரையாசிரியர்களும் மரபினுள்ளோய் என்று தான் விளக்கிச் செல்கின்றனர்..

    மரபின் வழி வந்த அரசர்களை மருகன் என அழைப்பதைப் பல சங்கப் பாடல்களிலும் காணமுடிகிறது...

    புறநானூறு-46
    விடுத்தோன் மருகனை...

    புறநானூறு - 126
    உரவோன் மருக....


    எனப் பல பாடல்களையும் சான்று காட்டலாம்..
    இவற்றிலெல்லாம் மருகன் என்பதற்கு
    மரபினுள்ளான்.. மரபு வழி வந்தவன்... வழித்தோன்றல் என்னும் பொருள்தான் உள்ளது..

    தங்கள் ஐயம் தமிழ் மீது தாங்கள் கொண்ட ஈடுபாட்டைக் காட்டுவதாகவுள்ளது.

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான பதிவு அண்ணா இன்று தான் படித்து தெரிந்து கொண்டேன் அற்புதம்

    பதிலளிநீக்கு