பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 25 மே, 2009

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு


தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே”

(தொல்-1526)
என இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’

(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.


ஓர் அறிவுடையன

புல்,மரம்,செடி,கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,


‘புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.


ஈர் அறிவுடையன



நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.


மூன்று அறிவுடையன
கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

‘சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.


நால் அறிவுடையன

‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.


ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும்,விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

‘மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.


ஆறு அறிவுடையன


மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர்.இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,


மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.


உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)


Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது.பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின.அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன.முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர்.இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இவ்;வுருமலர்;ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;


ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம்.இது ஒருசெல் உயிரியாகும்.இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது.தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.


செல்பிரிதல்

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன.பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது.இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி


ஒருசெல் உயிரியை புரோட்டோசோவா என அழைப்பது போல பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர்.பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம். 1.முதுகுத்தண்டற்றவை,2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை.


கடற்பஞ்சு,புழுவினங்கள்,நண்டு,சிலந்தி,நத்தை,நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும்.தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை,மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன.இவை உற்றறிதலோடு,நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன,நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன,பறப்பன,பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்


ஊர்வன

கரையான்,எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர்.இவை உற்றறிதல்,சுவையுணர்வு,நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.


பறப்பன

வண்டு,தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு,சுவை,நுகர்ச்சி,பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர்.அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.


மனித நிலை

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான்.ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இ;து தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது

11 கருத்துகள்:

  1. அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.
    ///
    உண்மையில் ஆச்சரியமாக உள்ளது!

    பதிலளிநீக்கு
  2. மிக நன்று ஐயா!

    தமிழை மீண்டும் கற்க உதவுகின்றீர்கள்

    வாழ்க உமது தொண்டு ...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27 மே, 2009 அன்று 11:42 AM

    மிகச் சிறந்த பதிவு,,,ஆனால் பலமுறை படித்தேன் இன்னும் முழுசா புரியலை..ஏன் என்றால் இந்த அளவு அறிவுத்திறன் இன்னும் வளரலை...ஆனால் மீண்டும் மீண்டும் படிப்பேன்...குணா உங்களோட இந்த பதிவு யூத்புல் விகடனில் குட்ப்லாக்கில் வெளிவந்துள்ளது.....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. கருத்துரை வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //
    கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை

    நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை
    //

    ஆஹா.. அப்போ கரையான்,எறும்புக்கு எல்லாம் பார்வை கிடையாதா.. புதிய தகவல்பா.. :)

    பதிலளிநீக்கு
  6. கருத்துரை வழங்கிய அன்பர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. ஒன்றறிவு, இரண்டறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு ஆகியவற்றைப் பேசும் இடங்களில் 'பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே' என்பது விளங்குகின்றது. அக்கிளையில் உள்ள எல்லா உயிர் வகைகளையும் சொல்லாததால் அப்படி சொன்னார் என்று புரிகிறது. ஆனால் 'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என்றதன் பின்னரும் ஏன் 'பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே' என்றார் என்று புரியவில்லை; மக்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் உயிர் வகை ஆறறிவுடன் உள்ளதா? அவை எவை என்று தொல்காப்பியர் வேறெங்கேனும் கூறியிருக்கிறாரா? உரையாசிரியர்களின் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
  8. 'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என்றதன் பின்னரும் ஏன் 'பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே' என்றார் என்று புரியவில்லை; மக்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் உயிர் வகை ஆறறிவுடன் உள்ளதா? அவை எவை என்று தொல்காப்பியர் வேறெங்கேனும் கூறியிருக்கிறாரா? உரையாசிரியர்களின் கருத்து என்ன?

    நல்ல கேள்வி நண்பரே....
    ஆறறிவு உள்ளவர்கள் யாவரும் மக்கள் என்று தொல்காப்பியர் கூறவில்லை.

    மாறாக
    மாவும் மாக்களும் ஐயறிவினவே என்றும் குறிப்பிடுகிறார்.
    விலங்கு உருவில் மனிதப்பண்புகளும் உண்டு
    மனித உருவில் விலங்குப் பண்புகளும் உண்டு என்பதையே இக்கருத்து உணர்த்துகிறது.

    மேலும்

    மனிதர்களுள் உயர்ந்தோரை தெய்வ நிலையில் வைத்து எண்ணுகிறோம் சான்றாக காந்தி இவரை மாகாத்மா என்று கூறுகிறோம்.
    இன்னும் மக்களுள் சிறந்தாரை ஞானம் பெற்றவர்களாகவே நாம் எண்ணுகிறோம்.

    ஆறறிவு மனிதர்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட மனிதப்பண்புகள் வாய்க்கப்பெற்றவர்களை

    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

    என்று தொல்காப்பியர் கூறியிருப்பார் என்பது எனது கருத்து...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்,

    இந்த பரிணாம வளர்ச்சியில் (உருமலர்ச்சிக் கொள்கை) adaptation என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

    Adaptation இல்லாமல் டார்வினின் உருமலர்ச்சி நடைபெறாது.

    இத்தகய Adaptation க்கு நல்ல தமிழ் வார்த்தை என்ன ?

    இயைதல், இசைதல் என்பதெல்லாம் சமூகவியலில் கச்சிதமாகப் பொருந்துகின்றன. ஆனால், உயிரியல் என்று வரும்போது சரியாக பொருந்திவரவில்லை என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள், உலகம் விழிக்கும் முன்பே விழித்துவிட்டார்கள், என்பதை உணர்த்தும் பதிவு. பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு