பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 17 மே, 2009

புள்ளோப்புதல்

சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்.

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்


சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றி குறிப்பு உள்ளது. சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை மகளிர் தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர். அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

இப்பாடலடிகள் வழியாக புள்ளோப்புதல்,
தங்கத்துக்கு சங்க காலத்தில் இருந்த மதிப்பு,
சங்க காலச்செல்வ நிலை,
சிறுவர்கள் சிறுதேர் ஓட்டுதல் உள்ளிட்ட பல மரபுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.


இன்றைய சூழலில்….

புள்ளினங்களையே அனிமல் பிளானட்,டிஸ்கவரி சேனல்களில் தான் காணமுடிகிறது. ஏனென்றால் நாம் வாழும் ஒலி நிறைந்த நகர(நரக) வாழ்வு அப்புள்ளினங்களுக்குப் பிடிப்பதில்லை.

சங்க காலத்தில் தங்கத்தை ஒரு அணிகலனாக மட்டுமே எண்ணினார்கள்.இன்று தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்குக் கூட இருப்பதில்லை....
குழந்தைகள் சங்க காலத்தில் முக்காற் சிறு தேர் ஓட்டினார்களாம். இன்று எந்தக் குழந்தையாவது அப்படி ஓட்டுகிறதா. இவையெல்லாம் நமது தமிழர் தம் மரபுகள் என்றாவது அறிந்து கொள்வோம்.

13 கருத்துகள்:

  1. பெயரில்லா17 மே, 2009 அன்று 10:35 AM

    இதை படிக்க படிக்க காட்சிகள் மனக்கண்ணில் படமாய் ஓடுகிறது....பொன்னலான அணிகலன்களில் பறவைகளை விரட்டினர் என்பது அக்கால செல்வச் சொழிப்பினை எடுத்தியம்புகிறது....முக்காற் சிறு தேர் இவை எல்லாம் வெறும் கேள்வி ஞானத்திற்க்கு கூட இன்றைய் சிறார்கள் அறிய இயலாது...அக்கால காலகட்டத்தையும் இன்றைய சூழலையும் ஒருமித்து காணும் போது எதை எல்லாம் இழந்திருக்கின்றோம் என அறிய முடிகிறது...அப்படியே இன்றும் வழக்கப்படி சில தமிழ் வார்த்தைகளை அறிமுகபடுத்தியிருக்கிறீர்கள்.. நன்றி எப்போதும் போலவே சுவையான பதிவு....வாழ்த்துக்கள் குணா........புணர்ந்தேன் புள்ளோப்புதலை.....

    பதிலளிநீக்கு
  2. கருத்துரை நல்கிய நெல்லைத்தமிழ்,தமிழரசி ஆகியோருக்கு மனம் நிறைநத் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை மகளிர் தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர்.
    சங்ககாலத்தில் பொன்னகைகள் அத்தனை எளிதாய் புள்ளினங்கள் விரட்ட பயன்பட்டிருக்கின்றது

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான இலக்கிய பதிவு தங்களுடையது

    தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவுகளுக்கு வந்தால் புதிய வார்த்தைகள் நிறைய தெரிந்து கொள்ளலாம் போல..

    பள்ளிக் காலங்களில் படித்த 'புள்ளினம்' என்ற வார்த்தை இப்போது தான் நினைவுக்கு வருகிறது.

    நன்றி முனைவரே !!!!

    பதிலளிநீக்கு
  6. சங்கால பாடல்களை படிக்க, அர்த்தம் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு தங்களைப் போன்றவர்களின் பதிவுகள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. இதற்காகவே இலக்கிய கூட்டங்களுக்கும் சென்று வருகிறேன். பாராட்டுக்கள் குணா!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமு செய்யது, அவர்களே

    பதிலளிநீக்கு
  8. கருத்துரை நல்கியமைக்கு நன்றி அன்புமணி..
    சங்கப்பாடல்கள் என்பவை நமது மரபு அதை எண்ணிப்பார்க்க வேண்டியதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதும் நமது கடன் ......

    பதிலளிநீக்கு
  9. இப்பாடலில் புள்ளோப்புதலும் சிறுதேர் உருட்டுதலும் உண்மை நிகழ்வுகளாக இருக்கலாம்; ஆனால் பொன்னணி வீசி புள்ளோப்பியது என்பது புலவரின் கற்பனை என்றே தோன்றுகிறது. அப்படியே செல்வச் செழிப்பு இருந்திருந்தாலும் தமிழகத்தில் 100 விழுக்காடு எல்லோரும் இப்படிப்பட்ட செல்வச் செழிப்பில் இருந்தார்கள் என்று எண்ணுவது தவறு. பிறகு ஆற்றுப்படை நூல்களின் தேவை தான் என்ன? ஆற்றுப்படை நூல்களே நிறைய இருப்பதுவே இப்படிப்பட்ட செல்வச்செழிப்பு முழுக்க கற்பனை என்றோ இருந்திருந்தால் ஏதேனும் ஒரு சிறு விழுக்காட்டு மக்கள் மட்டுமே அப்படி இருந்தனர் என்றோ தான் சொல்கிறது. சரி தானா முனைவர் ஐயா?

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் கருதுவது உண்மைதான் நண்பரே..

    வறுமையும் புலமையும் காலகாலமாகவே சேர்ந்தே இருந்திருக்கிறது..

    அதே வேளையில் செல்வச்செழிப்பும் இருந்திருக்கிறது..

    பெரியபெரிய கப்பல்கள் பொன்னோடு வந்து கரியோடு(மிளகு) பெயரும் என்னும் குறிப்புகளின்வழி தமிழன் வணிகத்தில் சிறந்திருந்திருக்கிறான் என்பதையும் அறியமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  11. குமரன் (Kumaran) said...

    ஆற்றுப்படை நூல்களே நிறைய இருப்பதுவே இப்படிப்பட்ட செல்வச்செழிப்பு முழுக்க கற்பனை என்றோ இருந்திருந்தால் ஏதேனும் ஒரு சிறு விழுக்காட்டு மக்கள் மட்டுமே அப்படி இருந்தனர் என்றோ தான் சொல்கிறது. சரி தானா முனைவர் ஐயா?

    பத்துப்பாட்டில் செம்பாதி அதாவது ஐந்து ஆற்றுப்படை நூல்களும் எட்டுத்தொகைப்பாடலில் சில ஆற்றுப்படையின் கூறுகளையும் காணமுடிகிறது.

    காலவெள்ளத்தில் பல தமிழ்ச்செல்வங்கள் அழிந்துவிட்டன..

    கிடைத்தநூல்களில் ஆற்றுப்படை அதிகமாக இரு்ககிறது..

    இவற்றை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு எல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது நண்பரே..

    நம் நாட்டில் அன்று செல்வம் அதிகமாக இருந்தது உண்மைதான்..

    அதனால் தானே இத்தனை படையெடுப்புகள் நிகழ்ந்தன..

    அதற்காக வறுமையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன்..

    சிறுவிழுக்காடு மக்கள் வறுமையில் இருந்தனர் என்பதும் உண்மைதான்.

    பதிலளிநீக்கு