பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 14 மே, 2009

அறத்தொடு நிற்றல் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 23

குறுந்தொகை 23


தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்  என்பது இதன் பொருளாகும். 
இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். 
ஆனால் சங்க காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.

பகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.
தலைவன், தலைவியைச் சந்திக்க வரும் (காட்டு) வழி ஆபத்து மிகுந்தது என்று தலைவி அஞ்சுதல் ; அன்புகொண்ட தலைவனை விடுத்து வேறு ஒருவனுக்குத் தலைவியை மணம் முடிக்கப் பெற்றோர் முயலுதல் ; தலைவி தலைவனைச் சந்திக்க இயலாதவாறு வீட்டுக் காவல் அதிகமாதல் முதலான காரணங்களால் அறத்தொடுநிற்றல்
நிகழும்.

தலைவி - தோழிக்கும்,
தோழி - செவிலிக்கும்,
செவிலி - நற்றாய்க்கும்,
நற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை
உணர்த்தி அறத்தொடு நிற்பர். (நற்றாய் = பெற்ற தாய்)


என அறத்தொடு நிற்றல் அமையும்.

முதலில் தலைவி தன் காதலை தன் உயிர்த்தோழிக்கு வெளிப்படுத்துவாள்,
பின் தோழி, செவிலித்தாய்க்கும்,
செவிலித்தாய் நற்றாய்க்கும்,நற்றாய் தந்தை மற்றும் தமையன்மாருக்கும் தலைவியின் காதலைத் தெரிவிப்பாள்....
இதுதான் சங்ககாலத்தில் காதலை வெளிப்படுத்தும் முறை...

இதற்குச் சான்றாக எட்டுத்தொகையில்,குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்.....

குறிஞ்சி

அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே -அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

குறுந்தொகை – 23
-ஒளவையார். 
கட்டுக் காணிய நின்றவிடத்து,தோழி அறத்தொடு நின்றது.


(கட்டு காணுதல் – குறி சொல்லுதல். பிற்காலத்தில் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் தோன்றக் காரணமான கூறு
அகவன் மகள் – கட்டுவிச்சி,குறிசொல்பவள்.
குன்றம் மலை.(குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த பகுதியும்)


தலைவனின் பிரிவால் தலைவி உடல் வாடித் தோற்றமளிக்கிறாள். இவளுக்கு என்ன குறை நேர்ந்ததோ என பெற்றோர் குறி பார்க்கிறார்கள்.தெய்வங்களையும்,குலத்தோரையும் அழைத்துப் பாடிக் குறிசொல்லும் மங்கையிடம் குறிகேட்கிறார்கள். செவிலித் தாய் அருகே இருக்க குறி சொல்லிக் கொண்டிருக்கிறாள் கட்டுவிச்சி. கட்டுவிச்சி குறி சொல்லும் போது தலைவியின் முகத்தில் பெரிய மாற்றம்...
தலைவியை நன்கறிந்த தோழி கட்டுவிச்சியிடம் மலை பற்றி பாடிய பாடலை மீண்டும் மீண்டும் பாடு என்று சொல்கிறாள்...

(சங்கு மணிகளால் ஆகிய கோவையைப் போன்ற வெண்ணிறமுடைய,நல்ல நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே பாடுக பாட்டே, இன்னும் பாடுக பாட்டே அவருடைய நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே)


கட்டுவிச்சி இயல்பாகவே குறிசொல்லும் போது தெய்வங்களையும்,தம் மலைச்சிறப்பும் பாடுவது மரபு. 
தலைவி காதலிக்கும் தலைவன் வாழும் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள். 
அதனால் கட்டுவிச்சியின் பாடல் தலைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 
அதனை அறிந்தே தோழி அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்கிறாள்.


இது தான் சூழல் இதற்குப் பெயர் தான் அறத்தொடு நிற்றல்.
ஆம் இவ்வாறு கட்டுவிச்சி மலைபற்றிப் பாடிய பாடலைத் தலைவி விரும்பிக் கேட்கிறாள் என்பதையும், 
அதை தோழி மீண்டும் மீண்டும் பாடச் சொல்கிறாள் என்பதையும் அருகே இருந்த செவிலி அறிந்துகொள்வாள்.

ஓ தலைவி காதலிக்கிறாள், தலைவனின் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள், தலைவியின் காதலைத் தோழியும் அறிந்துவைத்திருக்கிறாள் என்பதை அருகிருக்கும் செவிலி அறிந்துகொள்வாள்.இவையெல்லாம் இந்த ஐந்து அடிகளுக்குள் முடிந்துவிட்டது.

இனி செவிலி தலைவியின் காதலை நற்றாயிடம் சென்று கூறுவாள்.நற்றாய் தந்தை மற்றம் தமையன்மாரிடம் கூறுவாள். பெற்றோர் சம்மத்துடன் வரைவு(திருமணம்) நிகழ்வதுமுண்டு.அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உடன் போக்கு நிகழ்வதும் உண்டு..
இது தான் சங்க கால வாழ்வில் அறத்தொடு நிற்றல்..
இன்று ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தும் மரபையும்,
சங்க காலத்தில் ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்திய முறையையும் ஒப்புநோக்கிக் கொள்க.

எத்தகைய பண்பட்ட பண்பாட்டு மரபு தமிழர் மரபு.............
சங்கப் பாடல்களில் இவ்வாறு ஒவ்வொரு மாந்தரும் அறத்தொடு நின்றமையும்,
காதல் வெளிப்பட்ட முறையும் புலவர்கள் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பத்துப் பாட்டில் குறிஞ்சிப்பாட்டு முழுவதும் அறத்தொடு நிற்றல் முறையில் அமைந்தது தான்..

10 கருத்துகள்:

  1. மீண்டும் பள்ளிக்கால நினைவுகள் மற்றும் மீண்டும் படிப்பதுபோல் நினைவுகள்

    நல்ல விளக்கம்.. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. தலைவி காதலிக்கிறாள், தலைவனின் மலையைத் தான் கட்டுவிச்சி பாடுகிறாள், தலைவியின் காதலைத் தோழியும் அறிந்துவைத்திருக்கிறாள் என்பதை அருகிருக்கும் செவிலி அறிந்துகொள்வாள்.இவையெல்லாம் இந்த ஐந்து அடிகளுக்குள் முடிந்துவிட்டது.

    அழகான விளக்கம்

    பதிலளிநீக்கு
  3. இனி செவிலி தலைவியின் காதலை நற்றாயிடம் சென்று கூறுவாள்.நற்றாய் தந்தை மற்றம் தமையன்மாரிடம் கூறுவாள். பெற்றோர் சம்மத்துடன் வரைவு(திருமணம்) நிகழ்வதுமுண்டு.அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உடன் போக்கு நிகழ்வதும் உண்டு..

    அழகிய பண்பாடு

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சக்தி

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா14 மே, 2009 அன்று 7:13 PM

    சங்கக்கால காதல் கதை மிகவும் சுவை...கதாபாத்திரங்களுக்கு அக்கால தமிழ் பெயர்கள் அறிந்தோம்..ஒன்றிப்போனேன்...இன்னும் அறிய ஆவல்...இப்படி ஒரு பாடல் பொருள் படிப்பதற்கு நன்றாக இனிமையாகவும் அறிவதற்கு எளிதாகவும் உள்ளது....கடையேழு வள்ளல்கள் அவர்கள் வாழ்ந்தகாலம் அவர்களை போற்றி பாடிய தமிழ் புலவர்கள் அக்காலத்தில் தமிழின் நிலை தமிழ் மொழியின் வடிவம் இதை குறித்து நேரம் இருப்பின் விளக்குங்களேன் சில தொகுப்பாய்....

    பதிலளிநீக்கு
  6. இனிவரும் பதிவுகளில் அப்படி ஒரு பதிவு எழுதுகிறேன் தமிழ்..

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா15 மே, 2009 அன்று 11:46 AM

    உண்மையாகவே நன்றி குணா......

    பதிலளிநீக்கு
  8. ஆ....இதுவல்லவோ தமிழ் பண்பு! இதனைக் கண்ணுறூம் கால், நம் முன்னோர் நம்மை விட நயம் பட வாழ்ந்தார் என்பது திண்ணம் எனும் எண்ணம் என்னுள் மேலிட.....
    அன்பன் ’ஆரண்ய நிவாஸ்’ ஆர் ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
  9. நான்கு அடிகளைக் கொண்ட பாடலுக்கு நல்ல விரிவாக்கம்.நன்று.உங்கள் உழைப்பு தொடர வாழ்த்துக்கள்
    அன்புடன் சி.சங்கீதா

    பதிலளிநீக்கு