வியாழன், 2 ஏப்ரல், 2009
ஓரிற்பிச்சையார்
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது? என்றி
அக்கால் வருவர் எம் காதலோரே
(குறுந்தொகை-277)
தலைவன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவைத் தோழி அறிவரைக்கண்டு வினாவியது.
பிச்சைக்காரர்கள் என்றாலே பல வீடுகளில் பிச்சையெடுத்து வாழ்பவர்கள் என்றே யாவரும் அறிவர். ஆனால் இங்கு சங்கப் புலவர் ஒருவருக்கு ஓரிற்பிச்சையார் என்று ஒரு பெயர் உள்ளது. இப்பெயர் எவ்வாறு இவருக்கு வந்தது என்ற கேள்விக்கு இப்பாடல் விடையளிக்கிறது.
தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றவிட்டான். அவன் வருகையை எண்ணித் தலைவி காத்திருக்கிறாள். இந்நிலையில் தலைவி படும் துன்பங்களைக் கண்டு தோழி வருந்துகிறாள். அதனால் தலைவனின் வருகையைத் தோழி அறிவரிடம் வினவுகிறாள்.
(அறிவர் என்பவர்கள் துறவுள்ளம் கொண்டு வாழ்பவர்களாவர். முக்காலமும் அறிந்தவர்களாக இவர்கள் இருந்தனர். தலைமக்களை நன்கு அறிந்தவர்களாகவும் அவர்களை நெறிப்படுத்துபவர்களாகவும் இவர்கள் இருந்தனர். பிறர் இல்லங்களில் இரந்து உணவு உண்ணுவது இவர்தம் வாழ்க்கை முறையாகும்)
தலைவனின் வருகையை வினவிய தோழிக்கு அறிவர், “வாடைக் காலத்தில் தலைவன் வருவான்“ என உரைத்தார்.
தலைவனின் இனிய வரவை உரைத்தமையால் மிகவும் மகிழ்ந்த தோழி, அறிவரிடம்,
“ பொய், களவு, கள், காமமாகிய, குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில், நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றோடு, வெண்ணெயும், பனிக் காலத்துக்கு ஏற்ற வெண்ணீரும் எட்டு வீடுகளில் பெறாமல் எம்முடைய ஒரே வீட்டில் பெற்று வாழ்வாயாக“ என்கிறாள்.
அறிவர் எட்டு இல்லங்களில் இரந்து உணவு பெற்றுத் துன்புறாமல் தம் ஒரே வீட்டிலேயே அவ்வுணவைப் பெற்றுக்கொள்ளுமாறு தோழி கூறியமையால் இப்புலவர் ஓரிற்பிச்சையார் எனப் பெயர்பெற்றார்
அறிவருக்கு பிச்சைபெற்று, உணவு உண்பது, உடல் வளர்ப்பது என்பது வாழ்க்கை நோக்கமல்ல முக்காலமும் அறிந்தவராதலின் தலைவனின் வரவை உரைத்தார். அதற்குத் தோழி தலைவியின் துன்பம் தீர்ந்துவிடும் என மகிழ்ந்தாள். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே அவ்வாறு அறிவரிடம் கூறினாள். அவள் அவ்வாறு கூறியதால் அறிவர் பெரிதும் மகிழ்ந்திருக்கவும் மாட்டார். இது இயற்கையான சங்ககால வாழ்வியல் நிகழ்வாகும்.இப்பாடலில் தோழியின் மகிழ்ச்சியையும் அதன் வெளிப்பாட்டையுமே காணமுடிகிறது. அறிவர் என்பவர்கள் இன்றைய பிச்சைக்காரர்களுடன் ஒப்பிடத்தக்கவர்களல்லர். அறிவர் என்பவர்கள் ஞானிகளாவர்.இன்பம், துன்பம் என்னும் நிலைகளைக் கடந்தவர்களையே அறிவர் எனச் சங்கப் பாடல்கள் இயம்புகின்றன.
இப்பாடலில் பிச்சை பற்றிய விளக்கம் புதுமையாகவும், பாடலுக்கு ஏற்பப் பொருத்தமாகவும் இருந்தமையால் இப்புலவர் ஓரிற்பிச்சையார் என்னும் பெயர் பெற்றார்
பாடல் வழியே.
வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ என்ற அடிகளில் சுட்டப்படும் சேமச் செப்பு இன்று சூடான தேநீரையோ, பாலையோ சூடாகவே வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம்போல (பிளாசுகு) இருப்பதன் வழி சங்ககால மக்களின் அறிவியல் அறிவு புலனாகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிச்சை பற்றி நல்ல ஒரு பார்வை.
பதிலளிநீக்குஇதில் தோழமையின் உன்னதமும் விளங்குகிறது
கருத்துரைக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு