பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நாளை விடியல்

(http://wettipedia.blogspot.com//" )என்னும் நண்பர் யார் தமிழர் ?என்னும் தலைப்பில் இடுகை ஒன்று இட்டார்.அப்பதிவினை தமிழரசி ...(http://ezhuthoosai.blogspot.com//" )அவர்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.அப்பதிவுக்குக் கருத்துரையிட நினைத்தேன்.
யார் தமிழன் ? என்றவுடன் பல்வேறு செய்திகள் என் நினைவுக்கு வந்தன. வரலாற்று அடிப்படையில் கூறுவதா? இலக்கிய அடிப்படையில் கூறுவதா? இலக்கண அடிப்படையில் கூறுவதா? சுவடி,செப்பேடு ,கல்வெட்டு போன்றன அடிப்படையில் கூறுவதா? என்ற ஐயம் தோன்றியது.நாம் கூறும் செய்தி கல்விப்புலம் சாராதவர்களையும் சென்று சேரவேண்டுமே என்ற எண்ணம் வேறு இடையில் ஏற்பட்டது.அந்நிலையில் என் நினைவுக்கு வந்தது கவிஞர்.தணிகைச்செல்வன் என்னும் கவிஞரின் கவிதை . அவரின் கவிதைகள் யாவும் நன்றாக இருக்கும் எனினும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமையும்.யாவரும் புரிந்து கொள்ளுமாறு இருக்கும் என அவரின் கவிதையை மேற்கோள் கருத்துரையாக இட்டேன்....


நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
......................
.....................
....................

நீண்ட நெடிய நாட்களாக என் மனதில் நிலைத்திருந்த கவிதையை பகிர்ந்து கொள்ள வாய்பேற்படுத்திக் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

6 கருத்துகள்:

  1. குணா அவர்களுக்கு நன்றி.. என் கோரிக்கை ஏற்று அந்த வலிபூவில் பதில் அளித்தமைக்கு கருத்து பயனுள்ளதாக அமைந்தது...இந்த பதிவு என் பார்வைக்கு உங்களை முதல் முதலாய் முற்றிலும் மாறாய் நோக்க செய்தது இந்த ஆசிரியர் வெறும் நூல்களின் உரையும் அதன் அடிப்படையில் மட்டும் எழுதுவார் போல என்று நினைப்பேன்...இன்று இந்த பதிவு மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது..மொழிக்கு முக்கியத்துவம் தராத வேதனை உண்மையான வலியே ...ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிரதம் தெலுங்கு என வருந்தியிருந்த வருத்தம் உண்மையே...என்ன செய்ய பிறந்த வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை என்று புலம்பும் பெண் மாதிரி ஆனது தமிழ் தாயின் நிலை....இது போன்ற ஆக்கம்கள் இனி அடிக்கடி பிரசவிக்கவும் தமிழுக்காகவும... தமிழுக்காகவும்...தமிழ் தாய்க்காகவும்... நன்றி

    பதிலளிநீக்கு
  2. உங்களின் வருகைக்கும், எனது சந்தேகத்திற்கான விளக்கத்திற்கும், இதற்கென உங்கள் வலைப்பூவில் இடமொதுக்கி விளக்கியமைக்கும் நன்றி குணா..

    மேலும் உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தமிழரசி அவர்களுக்கும் நன்னி மக்கா நன்னி..

    பதிலளிநீக்கு
  3. நன்றி நல்கியமைக்கு நன்றி சுரேஷ் நட்பு தொடர வாழ்த்தி விழைகிறேன்...எம் கோரிக்கைக்கு செவி சாய்த்த குணா அவர்களுக்கும் நன்றி இன்றைய இடுகையை ஒரு தண்டனையா நினைச்சாவது படியுங்க....ezhuthoosai.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஐயா
    நிறைய தருணங்களில் தமிழன் தமிழனாக இருக்க தவறுகிறான்.
    உறைக்கிறது. ஏனெனில் தவறு செய்தது நானும்தான்.

    பதிலளிநீக்கு