வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

இந்தப் பிறவியல் மட்டுமல்ல...



தமிழ் உணர்வாளர்கள் சிலர் தம் திருமண அழைப்பிதழ்களில் திருக்குறளையோ, சங்கப்பாடல்களையோ முன்பக்கத்தில் இடுவதைக் காணமுடிகிறது.

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே“ 
என்ற பாடலையும் திருமண அழைப்பிதழ்களில் காணமுடிகிறது. இப்பாடலின் பொருளை இவர்கள் நன்கு அறிந்து தான் அழைப்பிதழில் அச்சடிக்கிறார்களா? இல்லை மேலோட்டமாகத் தான் புரிந்து கொள்கிறார்களா? என்பது சிந்திக்கத் தக்கதாகவுள்ளது.


பாடலைக் காணலாம் வாங்க,


அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 

இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீ ஆகியர் எம் கணவனை 
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. 


குறுந்தொகை -49

அம்மூவனார்
தலைவன் பரத்தை மாட்டுப் பிரிந்த வழி ஆற்றாளாகிய தலைவி,அவனைக் கண்டதும் ஆற்றாமையை வெளிப்படுத்துவது.


இப்பாடலின் இம்மூன்று அடிகளை மட்டும் பார்க்கும் போது தலைவி தலைவனைப் பார்த்து இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவனாக வேண்டும் நானே உனக்குப் பிடித்த மனைவியாக வேண்டும் எனக் கூறுவது போலத்தான் உள்ளது. இந்த அளவில் புரிந்து கொண்டு இப்பாடலை அழைப்பிதழில் போட்டு விடுகிறார்கள்.

இப்பாடலின் முன்னிரண்டு அடிகளையும் அறிந்தால் இப்பாடலைப் அழைப்பிதழ்களில் பயன்படுத்துவார்களா என்பது ஐயம் தான்.

இப்பாடலின் முழுமையான பொருள்.

நீயாகியர் என் கணவனை- என்றமையால் யானாகியர் நின் மனைவி என்பது விளங்கும்.மனைவியாக இருப்பினும் நெஞ்சு நேர்பளாம் பேறு பரத்தைக்கே வாய்க்கப் பெற்றுள்ளது என்ற தலைவியின் வருத்தம் இப்பாடலின் உள்ளீடாகவுள்ளது.

தலைவன் பரத்தையரிடம் சென்று வருகிறான். மனம் நொந்த தலைவி, தலைவனின் தவறைச் சுட்டிக்காட்டுவது போல, இப்பிறப்பில் தான் நான் உனக்குப் பிடித்தவளாக வாழஇயலவில்லை, அடுத்த பிறவியிலாவது பரத்தையரிடம் செல்லாதவனாக நீயும், உன் மனதுக்குப் பிடித்தவளாக நானும் என நாம் ஒற்றுமையாக வாழ்வோம் என உரைக்கிறாள் தலைவி.

திருமணம் என்பது அடுத்தபிறவிக்குக்கூட தொடர்ந்துவரவேண்டியது என்ற சிந்தனை..


காலையில் திருமணம் செய்துவிட்டு மாலையில் விவாகரத்து செய்யும் இன்றைய தலைமுறையினர் கூடப் புரிந்துகொள்ளவேண்டியதாகவுள்ளது.

திருமண அழைப்பிதழ்களில் இப்பாடலை பதிப்பிக்கவிரும்புவோர் இதன் முழுப் பொருளையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்பாடலின் பொருளை இங்கு பதிவுசெய்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்


திருமண அழைப்பிதழ்கள் மாதிரி

7 கருத்துகள்:

  1. தமிழுணர்வு என்ற பெயரில் நிகழும் அரைவேக்காட்டுத் தனங்களுக்கு நல்லதோர் சவுக்கடி!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கம் முனைவரே... எல்லோரும் திருமண அழைப்பிதழ்களில் போடுகிறார்கள், நாமும் போட்டு விடுவோம் என்று நினைக்கிறார்கள்... அல்லது திருமண அழைப்பிதழ் அச்சிடும் நபர்கள் சொல்வதாகவும் இருக்கலாம்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 5)

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு
  3. அண்மையில் தூய தமிழில் அச்சடிக்கப்பட்ட திருமன அழைப்பிதழ் ஒன்றைப் பார்த்தேன். மிக அருமையாக இருந்த்தது. அவர்கலின் அனுமதியுடன் அதனைப் பற்றி என் வலையில் எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு