பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 30 ஏப்ரல், 2009

சங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அகம் சார்ந்த உணர்வுகளைசங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்-டாக்டர்.மு.பொன்னுசாமி இந்நூல் விரிவாக விளக்குகிறது. மெய்பாடு என்பது உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடாகும். இதனை வெளிப்படுத்துவது, புரிந்துகொள்வது என்னும் இருநிலைகளிலும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன.
உளவியல் என்றால் இன்று யாவரும் அறிவர்.ஆனால் இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உளவியல் குறித்த சிந்தனை எப்படி இருந்தது என நாம் அறிந்துகொள்ள விரும்பினால் சங்க இலக்கியங்களைப் படித்தால் போதும்.சங்க இலக்கியங்களில் பல்வேறு மெய்பாடுகளும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து அகம் சார்ந்த மெய்பாடுகளை மட்டும் விரிவாக ஆய்ந்து கூறும் சிறந்த ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது.

உள்ளடக்கம்
பகுதி- ஒன்றுஅ.மெய்பாடு விளக்கம்
ஆ.வடமொழி இரச சிந்தனையாளர்களின் கருத்து
இ.உளவியலாளரின் கோட்பாடுகள்
ஈ.திறனாய்வாளர்களின் கருத்து

பகுதி- இரண்டு
அ.சங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்.
ஆ.களவுக் கால மெய்பாடுகள்.
இ.பிரிவுக்கால மெய்பாடுகள்.
ஈ.வரைவுக்கு வழிவகுக்கும் மெய்பாடுகள்.
உ.கற்புக்கு வழி வகுக்கும் மெய்பாடுகள்.

என அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்
சித்ரா நிலையம்
7/40 கிழக்குச் செட்டித் தெரு
பரங்கி மலை சென்னை
நூல் வெளியான ஆண்டு-1990.

சங்க இலக்கியத்தில் ஆராய்ச்சி அட்டவணைகள்

டாக்டர்.ந.சஞ்சீவி.அவர்களின்

சங்க இலக்கியத்தில் ஆராய்ச்சி அட்டவணைகள்” என்னும் நூல் சங்க இலக்கியத்தில் ஆய்வுசெய்வோர் படிக்க வேண்டிய அரிய நூலாகும்.இந்நூலில் சங்கப்பாடல்களைப் பாடிய புலவர்கள் பற்றிய பல அரிய செய்திகளையும், சங்க இலக்கியம் குறித்த பல நுண்ணாய்வுச் செய்திகளையும் காணமுடிகிறது.

அட்டவணைப் பொருளடக்கம்

I
1. சங்க இலக்கியம் (பாட்டும்,தொகையும்)
2. பத்துப்பாட்டு
3. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் பற்றிய பழம்பாடல்
4. பத்துப்பாட், எட்டுத்தொகை நூல்களும் அவற்றைப் பாடிய புலவர் எண்தொகை விளக்கமும்
5. எட்டுத்தொகை நூல்களும் பாடல் எண்ணிக்கையும்
6. எட்டுத் தொகை நூல்களின் அடி வரையறை
7. எட்டுத் தொகை நூல்களைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும்
8. எட்டுத்தொகை நூல்களுள் இலங்கும் பாகுபாடுகள்

II

1. சங்கப் புலவர் அகர வரிசை
2. சங்கப் புலவர் பெயர் வேறுபாட்டு விளக்கம்

III
புலவர் பெயர் வகை
1. உறுப்பால் பெயர் பெற்றவர்
2. ஊராற் பெயர் பெற்றவர்
3. ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட புலவர்
4. கோத்திரத்தார் பெயர் பெற்றவர்
5. சமயத்தாற் பெயர் பெற்றவர்
6. தெய்வத்தால் பெயர் பெற்றவர்
7. தொடராற் பெயர் பெற்றவர்
8. தொழில் முதலியவற்றாற் பெயர் பெற்றவர்
9. நாளாற் பெயர் பெற்றவர்
10. பாடல் பொருள் முதலியவற்றாற் பெயர் பெற்றவர்
11. பெற்றாரொடு தொடர்ந்த பெயர் கொண்ட புலவர்
12. மரபாற் பெயர் பெற்றவர்
13. வழக்கவொழுக்கத்தாற் பெயர்பெற்ற புலவர்
14. பெண்பாற் புலவர்
15. அரசர்
16. இளம் என்னும் அடைபெற்ற புலவர்
17. பெரு என்னும அடைபெற்றார்ஷ
18. குறு என்னும் அடைபெற்றோர்
19. நெடு என்னும் அடைபெற்றோர்
20. பாடிய என்ற சிறப்புப் பெற்றோர்
21. கிழார் புலவர்கள்
22. தந்தையும் மகனும் புலவராயிருந்தோர்
23. உடன் பிறப்புப் புலவர்கள்
24. துஞ்சிய புலவர்கள்
25. ஆசிரியன்-ஆசிரியர்
26. தொண்டை நாட்டுப் புலவர்கள்
27. சேர நாட்டுப் புலவர்கள்
28. சோழ நாட்டுப் புலவர்கள்
29. பாண்டி நாட்டுப் புலவர்கள்
30. அழிசி
31. ஆதனார்
32. ஆந்தை
33. எயின்
34. கடுவன்
35. கண்ணன்
36. கந்தரத்தன்
37. கந்தன்
38. காவிதி
39. கீரன்
40. குமரன்
41. குடி
42. குட்டுவன்
43. கூத்தன்
44. கொற்றன்
45. கொல்லன்
46. கோவன்
47. கௌசிகன்
48. சாத்தன்
49. சேந்தன்
50. தத்தன்
51. தமிழ்- தமிழ்க்கூத்தன்
52. தேவன்
53. நப்பசலை
54. நாகன்
55. நெய்தல்
56. பதுமன்
57. புலவன்
58. புல்லன்
59. பூதன்
60. போத்தன்
61. மருதம்
62. மருதன்
63. மள்ளன்
64. மாறன்
65. மோசி
66. வழுதி
67. வெளியன்
68. வேட்டன்

III அ

புலவர் பெயரால் அறியப்படும் ஊர்கள்



இந்நூலின் பின்னிணைப்பாக

சங்க இலக்கிய ஆராய்ச்சி நூலடைவு
தரப்பட்டுள்ளது.இதில் சங்க இலக்கியத்தில் செய்யப்பட்டுள்ள பல ஆய்வு நூல்களின் தொகுப்பினைக் காணலாம்.
புலவர் புரவலர் நிலை,
சங்க கால அரசர் முதலியோர் அகர வரிசை
சங்க கால அரசர் முதலியோர் பெயர் வேறுபாட்டு விளக்கம்
புலவர் புகழ் புலவர்கள்
ஆகியனவும் பின்னிணைப்பில் குறிப்பித்தக்கனவாகவுள்ளன.

நூல் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடு
பதிப்பான் ஆண்டு-1973

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

டமிலன் என்றொரு அடிமை

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.இதனை உணராதாலேயே இன்று வரை தமிழன் அடிமையாக வாழ்ந்து வருகிறான் அவன் அடிமை என்பதற்கான அடையாளம் அவன் பேசும் மொழியிலேயே உள்ளது.ஆங்கிலத்தைத் தனியாகவோ, தமிழுடன் கலந்தோ அவன் பேசும் போது அவன் அடிமை என்று தன்னை அறிவித்துக் கொள்கிறான்.இதில் என்ன கொடுமை என்றால் இந்த அடிமை தமிழ்பேசும் அன்பர்களை இழிவாக நோக்குகிறது....

கவிஞர் தணிகைச் செல்வன் தமிழனின் நிலை பற்றிக் கூறும்போது,

மொழியை விடவும்
மேலானது
மொழி உணர்வு

எனவே
தமிழை விடவும்
தலையாயது
தமிழுணர்வு

மொழி உணர்வு
இறந்த தேசத்தில்
மொழியும் இறந்துபடும்

தமிழுணர்வு
இழக்கும் நாட்டில்
மிஞ்சுவது
தமிழின் சவமே

மொழி உணர்வைக்
கழித்துவிட்டு
மிச்ச உணர்வுகளை
ஊட்டுவது
பிணத்துக்கு ஏற்றும்
ஊசி மருந்துகளே

மொழி உரிமை
மறுக்கப்பட்ட மக்கள்
இன அடிமைகளாவது
இயல்பு

தமிழுரிமை பறிகொடுத்த
மக்களைத்
தளைப்படுத்துவது
எளிது

மொழி உணர்வின்
மறுபக்கம்
இன உணர்வு

இன உணர்வின்
இடப்பாகம்
மொழி உணர்வு

இன உணர்வற்ற
மொழி உணர்வு
காய்க்காத பூ
மொழி உணர்வற்ற
இன உணர்வு
காம்பிழந்த பூ

இரு உணர்வமற்ற
தமிழன் காகிதப்பூ
............
என்பர்.

காலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது.அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான்.

கிபி3 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மணிப்பிரவாளம் தமிழனைப் பெரும்பாடுபடுத்தியது. தமிழுடன் வடமொழியைக் கலந்து பேசுவதை அக்காலத் தமிழன் பெருமையாகக் கருதினான்.
சான்றாக,
“கந்யகா யோக்யனாகிய பர்த்தா ஸஹஸ்ர கூடஜின பவனத்தையடைதலும் சம்பகவிகாசமும் கோகில கோலாஹலமும் தடாகபூர்ணமும் தக்கத குமுத விகாசமும் மதுகர சஞ்சாரமும் கோபுரக வாகட விகடனமுமாகிய அதிசயங்களுள வாகுமென்று ஆதேசித்தனர்”(சீனிவாசர்-வரலாற்றறிஞர்(Tamil studies . p-229)

• அன்றைய தமிழனுக்கும் இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.
• செந்தமிழில் முனைவர் பட்டம் முடித்தவர் கூட தம் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றே இட்டுக்கொள்ள விரும்புகிறார்.
• படிப்பறிவில்லாத கிராமத்துப் பாட்டிகூட இன்று “ட்ரெயின் ஏறி ஸ்டேசன் போய் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்ட்டு அங்கிருந்து போன் பன்றேன்னு சொல்லுது.
• இவ்வளவு ஏன் நம் ஊரிலுள்ள குப்பைத் தொட்டிகள் கூட “யூஸ் மீ” என்று தானே ஆங்கிலம் பேசுகின்றன.

தமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.
போர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன?

பிறமொழியைக் கற்று வை.
உன் தாய் மொழி மீது பற்று வை”

என்பது ஏன் இவனுக்குப் புரியாமல்ப் போகிறது.


இங்கு ஸ்போக்கன் இங்லீஸ் சொல்லித் தரப்படும் என்னும் விளம்பரப் பலகைகளைக் காணும்போது, எதிர்காலத்தில் இங்கு தமிழ் சொல்லித்தரப்படும்” என்னும் பலகை வைக்கும் நிலை வருமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.


இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் என்னும் மொழியைத் தொலைத்து டமிலனாக, தமிங்கிலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை எதிர்காலத்தலைமுறையை உருவாக்கினால் எப்படி இருக்கும். எதிர்காலத்தலைமுறையும் “டமில்”த்தலைமுறையாகவே உருவாகும்...............
என்று மாறும் இந்நிலை?????????????????

தமிழர் தோற்கருவிகள்



ஆர்.ஆளவந்தார்

தமிழிசை சங்க காலத்திலேயே சிறப்பாக வளர்ச்சி பெற்று விளங்கியது. தமிழிசையின் அடிப்படையாக இருந்த கருவியிசையை நரம்பு, தோல், துளை, கஞ்சம் என நான்காகப் பகுப்பர். குரலிசையையும் சேர்த்து ஐந்தாகக் கூறும் மரபு உண்டு.
தோற்கருவிகள் சங்க காலத்தில் மிகுதியான பயன்பாட்டில் இருந்தன. போர்,வேளாண்மை,கூத்து,அறிவிப்பு என பல நிலைகளில் தோற்கருவிகளைப் பயன்படுத்திவந்தனர். அசுணமா என்னும் உயிரியை யாழிசைத்து வரவைழைத்து பறையறைந்து கொல்வார்கள் என சங்க இலக்கியம் வழி அறியமுடிகிறது. இவ்வாறு பல நிலைகளில் பயன்பட்ட தோற்கருவிகளைப் பற்றிய விரிவான ஆய்வாக “தமிழர் தோற்கருவிகள்” என்னும் ஆய்வு நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

தோற்கருவிகள் ஓர் அறிமுகம்
தோற்கருவிகளுக்கு ஏற்ற தோல்
தோற்கருவிகளுக்கு ஏற்ற மரங்கள்
பஞ்ச மரபில் கூறப்படும் செய்திகள்
அட்டவணை
அடியார்க்கு நல்லார்
கருவிகளைப் பற்றிய விளக்கக் குறிப்புகள்
என அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
அடையாறு சென்னை
நூல் வெளியான ஆண்டு – 1981

திங்கள், 27 ஏப்ரல், 2009

தமிழர் உணவு

நூலாசிரியர் சே.நமசிவாயம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. பழங்கால மனிதன் விலங்குகள் போல கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தான்.பின் பதப்படுத்திய உணவுகளை உண்டான்.உணவின் பல்வேறு சுவைகளையும் அறிந்து தன் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்கவும் கற்றுக்கொண்டான். சங்க காலம் என்பது இனக்குழு வாழ்வு நிலவுடைமைச் சமூக வாழ்வு என்னும் இரு வாழ்க்கைமுறைகளின் இணைப்புப்பாலமாகும். இக்காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களின் வாயிலாக பெறப்படும் செய்திகள் அக்கால மக்களின் வாழ்வியலாக அறியமுடிகிறது.அந்த அடிப்படையில் சங்க கால மக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை நமக்கு எடுத்தியம்பும நூலாக “தமிழர் உணவு ” என்னும் நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

நில அடிப்படை
கல்வெட்டுச் செய்திகள்
நிகண்டுச் செய்திகள்
சுவையடிப்படை
திடவுணவு
நீருணவு
உண்ணும் முறை
உணவும் பண்பாடும்
உணவும் தமிழ்ச் சமுதாயமும்


என அமைந்துள்ளது.

இந்நூலின் வாயிலாக சங்க காலமக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை தமிழர் பண்பாட்டுக் கூறுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது.
நூல் கிடைக்குமிடம்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
அடையாறு சென்னை
நூல் வெளியான ஆண்டு-1981.

தேவார,திருவாசக ஒலிக்கோப்புகள்

கணியத்தமிழ் இணையதளத்திலிருந்து எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
”தேவாரம், திருவாசம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வகை ஒலிக்கோப்புகளாகத் தயாரித்துள்ளோம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் (044-43592348)”
என்பது அந்த குறுந்தகவலாகும்.
முன்பே சிம்பொனி முறையில் இளையராஜாவின் திருவாசகம் கிடைக்கிறது.செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம்,மற்றும் சங்கப்பாடல்களை ஓதல் முறையில் ஒலிக்கோப்புகளாக வடிவமைத்துள்ளது.திருக்குறள் மற்றும் பாரதி,பாரதிதாசன் பாடல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவ்வொலிக்கோப்புகள் மிக எளிதாக மனதில் பதியும் தன்மையன.அனைவரும் பயன்பெறுவீர்.

சங்க இலக்கியம் செவ்வியல் பார்வை.

முனைவர்.ச.அகத்தியலிங்கம்
(தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், உலக அளவில் மொழியியல்
துறையில் புகழ்பெற்றவர்)

தமிழ்மொழியின் செம்மொழிப் பண்புகள் பிற செம்மையான மொழிகளைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது.அதனை உலகோர் அறிய சங்க இலக்கியத்தில் உள்ள செம்மைப் பண்புகளை எடுத்தியம்புவதாகவும் பிற உயரிய மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாகவும் இந்நூல் விளங்குகிறது.
தமிழ் மொழி தொன்மையானது, தனிச் சிறப்புடையது, என்று கூறிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பும் சிறந்த நூலாக இந்நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

சங்க இலக்கயம் செவ்வியல் பார்வை
உடன்போக்கு புதிய பார்வை
அவாய் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்
ஒளவையாரின் கவிதைகள்
எண்ணல் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்

என்பதாகும்
நூல் கிடைக்குமிடம்

மணிவாசகர் நூலகம்
12.பி.மேல சன்னதி, சிதம்பரம்
நூல் வெளியான ஆண்டு – 2004.

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நாளை விடியல்

(http://wettipedia.blogspot.com//" )என்னும் நண்பர் யார் தமிழர் ?என்னும் தலைப்பில் இடுகை ஒன்று இட்டார்.அப்பதிவினை தமிழரசி ...(http://ezhuthoosai.blogspot.com//" )அவர்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.அப்பதிவுக்குக் கருத்துரையிட நினைத்தேன்.
யார் தமிழன் ? என்றவுடன் பல்வேறு செய்திகள் என் நினைவுக்கு வந்தன. வரலாற்று அடிப்படையில் கூறுவதா? இலக்கிய அடிப்படையில் கூறுவதா? இலக்கண அடிப்படையில் கூறுவதா? சுவடி,செப்பேடு ,கல்வெட்டு போன்றன அடிப்படையில் கூறுவதா? என்ற ஐயம் தோன்றியது.நாம் கூறும் செய்தி கல்விப்புலம் சாராதவர்களையும் சென்று சேரவேண்டுமே என்ற எண்ணம் வேறு இடையில் ஏற்பட்டது.அந்நிலையில் என் நினைவுக்கு வந்தது கவிஞர்.தணிகைச்செல்வன் என்னும் கவிஞரின் கவிதை . அவரின் கவிதைகள் யாவும் நன்றாக இருக்கும் எனினும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமையும்.யாவரும் புரிந்து கொள்ளுமாறு இருக்கும் என அவரின் கவிதையை மேற்கோள் கருத்துரையாக இட்டேன்....


நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
......................
.....................
....................

நீண்ட நெடிய நாட்களாக என் மனதில் நிலைத்திருந்த கவிதையை பகிர்ந்து கொள்ள வாய்பேற்படுத்திக் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கருத்தரங்கம்

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்
தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ்கள்



3ஆம் கருத்தரங்கம்

(சூன் திங்கள் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது)

அச்சில் வெளிவந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இதழ்கள்,இணையம் சார்ந்த அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த இதழ்கள் குறித்தும் கட்டுரைகள் 5 பக்கங்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

பேராளர் கட்டணம் ரூ.400
ஆய்வாளர்களுக்கு ரூ.300

ஆய்வாளர்களின் சிறந்த 3 கட்டுரைகளுக்குத் தலா ரூ 1000 பரிசாக வழங்கப்படவுள்ளது.

கட்டுரைகள் அனுப்பக் கடைசி நாள் – ஏப்ரல் – 30 -2009

கட்டுரை அனுப்பிவைக்கவேண்டிய முகவரி

முனைவர் தி.நெடுஞ்செழியன்
தலைவர்
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்

92.வெள்ளாந் தெரு, மயிலாடு துறை-609001
அலைபேசி எண் - 9443214142

வியாழன், 16 ஏப்ரல், 2009

சங்க இலக்கிய ஒப்பீடு



தமிழ் மொழி பழமையானது,தனித்தன்மையுடையது.ஞால முதன்மொழி என்று சொல்லிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் பெருமைகளை கிரேக்கம் உள்ளிட்ட பிற மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழிலக்கிய வகைமை அடிப்படையில் ஆய்வு செய்பவர்களும், ஒப்பீட்டு முறை ஆய்வு செய்ய விரும்புபவர்களும் படிக்கவேண்டிய அரிய நூல் சங்க இலக்கியத்தில் ஒப்பீடு ஆகும்
.
சங்க இலக்கிய ஒப்பீடு
இலக்கிய வகைமைகள்
தமிழண்ணல்


நூல் கிடைக்குமிடம்
மீனாட்சி புத்தக நிலையம்
48, தானப்ப முதலி தெரு
மதுரை625001
தொலைபேசி – 045-2345971
நூலின் விலைரூபாய்-75.00

உள்ளடக்கம்


முதற்பகுதி- தமிழும் இலக்கிய வகைமைகளும்
1. இலக்கிய வகைமைக் கோட்பாடுகள்
2. இலக்கிய வகைச் சிந்தனைகள்
3. அடிப்படை இலக்கிய வகைகள்
4. தமிழில் இலக்கிய வகை வளர்ச்சி

இரண்டாம் பகுதி – இலக்கிய வகை ஒப்பீடு

5.வீரயுகப் பாடல்கள்
6.தன்னுணர்ச்சிப பாடல்கள்
7.காப்பியப் பாடல்கள்
8.நாடகப் பாடல்கள்
9.பத்திமைப் பாடல்கள்
10.தத்துவப் பாடல்கள்
11.நீதிப் பாடல்கள்
12.அங்கதப் பாடல்கள்
13.இயற்கைப் புனைவுப் பாடல்கள்
14.முல்லைப் பாடல்கள்
15.கையறுநிலைப் பாடல்கள்


சில நாடுகளில் வீரநிலைப்பாட்டுத் தோன்றி, முழு வளர்ச்சி பெறாமல்ப் போனதுண்டு. பாட்டினை உருவாக்கும் திறன்களினால் இவ்வாறு அது உருமாறும் என்பர். கிரேக்கத்தில் பாடாண்,கையறுநிலை,வீரநிலை மூன்றும் ஒருங்கிணைந்தே வளர்ந்தன. ஆனால் பாடாணும், கையறு நிலையும் குறிப்பிட்ட சமயங்களில் குறிப்பிட்டவர்களைப் பற்றி எழுந்தன.வீரநிலைப் பாட்டோ பொது அவையங்களுக்கு எனப் பாடப்பட்டது அது விழாக்காலங்களில் மக்களுக்குக் கலைநிகழ்ச்சியாகப் பாடிக் காட்டப்பட்டது.
தமிழில் சங்கப் பாடல்களைப் பொது நிகழ்ச்சிக்காகப் பாடிக்காட்டப்பட்டவை என்றோ, நடித்துக் காட்டப் பட்டவை என்றோ நாம் கூறுதல் இயலுமா? ஒருக்கால் அகப்பாடல்கள் அங்ஙனம் நடித்துக்காட்ட, மெய்ப்பாட்டோடு படித்துக் காட்டப்பட்டிருக்கலாம். புறப்பாடல்களில் தனிப்பட்ட வள்ளல்களைப் புகழக் குறிப்பிட்ட சில சமயங்களில் பாடப்பட்டவையாகும்.பக்-74.

'வீரநிலைக் காலப்பாடல்கள் எளிய நரம்புக் கருவியுடனேயே பாடப்பட்டன என்பர்.கிரேக்கர் யாழுடன் (Lyre)செர்பியர் கசிலுடனும் (gusle) ருசியர் பலாலைகாவுடனும் (Balalaika)தாதாரியர் கோபோசுடனும் (Koboz) பாடினராம்.அலபேனியர் லகுதாவுடனும் (Lahuta) பாடினராம் இவையெல்லாம் நரம்புக் கருவிகள், ஹோமர் யாழுடன் பிறந்தார் என்றே கூறுவதுண்டு.சங்கப் பாணர்கள் யாழ்ப்பாணர் என்றே அழைக்கப் பட்டனர்.சங்க காலப் பாடல்கள் யாழிசைக்கேற்பவே பாடப்பட்டன.'
பக்-76


என்பன இந்நூலின் திறனை எடுத்தியம்பத்தக்க கூறுகளாகும்.

புதன், 15 ஏப்ரல், 2009

குருவின் ஐயம்




குருவுக்கு உறக்கத்திலிருந்து திடீரென விழிப்பு வந்தது. சீடர்கள் ஓடி வந்து என்ன குருவே கலக்கமாக இருக்கிறீர்கள்? என வினவினார்கள்.

குரு எனக்கு ஒரு ஐயம் என்று சொன்னார்..
சீடர்கள் சொன்னார்கள் குருவே எங்கள் ஐயத்தையே தாங்கள் தான் தீர்த்து வைக்கிறீர்கள். தங்களுக்கே ஐயமா?
அப்படி என்ன ஐயம் என்றார்கள்.
குரு சொன்னார் வேறு ஒன்றுமில்லை நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்....
அப்போது கனவு வந்தது. அந்தக் கனவில் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து வந்து பல பூக்களில் அமர்ந்து தேனருந்தியது. இது தான் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்திய கனவு என்றார்.
சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
இதில் என்ன ஐயம் குருவே என்றார்கள் சீடர்கள்.
குரு சொன்னார்.....
நான் தூங்கினேன் கனவு வந்தது. கனவில் பட்டாம்பூச்சி வந்தது..

என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா?
இல்லை பட்டாம்பூச்சியின் கனவு தான் என் வாழ்கையா?


இது தான் எனது ஐயம் என்றார் குரு.

குருவுக்கு மட்டுமில்லை எனக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

மாறும் உலகில் மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது. அந்த மாற்றங்களுக்கான காரண காரியத் தொடர்புகளை ஆன்மீகமும், அறிவியலும் விளக்க முற்படுகின்றன. ஆயினும் இது போன்ற சில கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை




மு.வரதராசன்
தமிழுலகம் நன்கறிந்த அறிஞர். தமிழாய்வின் முன்னோடி.சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் இவரின் நூலை படித்துவிட்டுச் சென்றால் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
இயற்கை குறித்த இவரின் நோக்கு சங்ககால வாழ்வியலை நம் கண் முன் நிறுத்துவதாகவுள்ளது.
நூலின் உள்ளடக்கம்

1.இயற்கை பெறுமிடம்
2.பாடிய புலவர்கள்
3.இயற்கையில் பெயர் பெற்ற புலவர்கள்
4.நிலம்
5.வானம்
6.பயிரினமும் உயிரினமும்
7.உவமையில் இயற்கை
8.இயற்கையோடு இயைந்த வாழ்வு
முடிவுரை

என அமைந்துள்ளது.

மனித இனத்தின் பேராற்றல்களாகிய காதல், வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு இயற்கையினிடத்து அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர். இத்துணையளவு இயற்கைக்கு இலக்கியத்தில் இடம் அளித்தும்
“இயற்கை” என்ற சொல்லோ அதற்கு இனமான பிறிதொரு சொல்லோ ஓர் இடத்தும் குறிக்கப்படவேயில்லை. உலக வாழ்வில் மனித வாழ்வு ஒரு கூறு என்றால், அவனுக்கு புறத்தே உள்ளவற்றைப் பிறிதொரு கூறு என்பர். அப்புற வாழ்வின் குறியீடு என்ற அளவில் கூட இயற்கை என்ற சொல்லைக் கூட சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை.



என்ற இவரின் கூற்று இந்நூலின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதாகவுள்ளது. நூலின் பெயரோ “பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” ஆனால் சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற சொல்லே எங்கும் இடம் பெறவில்லை என்கிறார். பின் சங்ககாலத்தில் இயற்கை என்ற சொல்லுக்கு என்ன பொருள் ? சங்க கால வாழ்வில் இயற்கை எத்தகைய இடம் பெற்றிருந்தது? என பல்வேறு கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இந்நூல் விளங்குகிறது.

பண்டைத் தமிழ்ச்சான்றோர் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். காதல் வீரம் என்பவற்றைத் தலைமைக் கூறுகளாகக் கொண்டு பிற பல கூறுகளையும் துணையாகப் பெற்றுள்ளது மனித வாழ்க்கை.அத்தகைய மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்து தெளிவுபடுத்துவதற்காகவே பண்டைத்தமிழ்ச்சான்றோர் இயற்கையைப் பயன்படுத்தினர். சுருங்கச் சொன்னால், மனித இதயத்தின் உணர்வுகளையும் , இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் – இனிய உறவுடையனவாய் இணைத்தனர் என்னும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகவுள்ளது.

நூல் வெளியிடுவோர்

பாரிநிலையம்
184, பிராட்வே, சென்னை -108

கணினி இல்லாமலேயே இணையதளம்.

கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பார்வையிட முடியுமா?
முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்......


“கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பயன்படுத்தும் புதிய கருவி ஒன்றை அய்தராபாத் அய்சிப் நிறுவனப் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். “அட்பாக்ஸ்” எனப் பெயரிட்டுள்ள இக்கருவியைத் தெலைக்காட்சிப் பெட்டியில் பொருத்திவிட்டு இணையத் தேடலில் ஈடுபடலாம். விசைப்பலகை(keyboard) விசைப் பந்து (track ball) ஆகியவற்றுடன் இந்த அட்பாக்ஸ் கருவி ரூபாய் 6990 க்கு விற்கப்படவுள்ளது. உலகிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கருவியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 2500க்கு அளித்திடவுள்ளதாக அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.“
(நன்றி-உண்மை- ஏப்ரல் 1-15-2009 பக்கம் 43)

வியாழன், 9 ஏப்ரல், 2009

சிந்தனையாளர்.பெர்னாட்ஷா.


பத்திரிக்கையாளர் ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவைப் பார்த்து, தங்களை எல்லோம் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்களே ஏன்? தாங்கள் மட்டும் தான் சிந்திக்கின்றீர்களா? மக்கள் யாரும் சிந்திக்கவில்லையா? என்று கேள்வி கேட்டாராம்,

அதற்குப் பெர்னாட்ஷா,
எல்லோரும் சிந்திக்கிறார்கள்.... ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் சிந்திக்கிறார்கள். நான் வாரத்துக்கு இருமுறை சிந்திக்கிறேன். அதனால் தான் என்னைச் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்கள்.என்று விடையளித்தாராம்.

எவ்வளவு சரியான விடை. ஆம் மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு என்பதாலோ என்னவோ,மனித சிந்தனைகள் செக்கு மாடுபோல ஒன்றையே தான் சிந்தித்தவாறு இருக்கிறது.பணம் பணம் பணம் என அதை மட்டுமே மையமிட்டதாக மனித சிந்தனை அமைந்துவிடுவதால் மனிதம் செத்துவிடுகிறது. வேறு எதையும் அவனால் சிந்திக்க இயலவில்லை ஆண்டுக்கு ஒரு முறையோ,இரு முறையோ தான் தாம் செய்வது சரியா? தவறா? எனபதைக்கூட சிந்திக்க முடிகிறது.
தான்,தன் குடும்பம், தன் தலைமுறை என உண்டதையே உண்டு கண்டதையே கண்டு பேசியதையே பேசி..........
புதிதாகச் சிந்திக்க வேறு களம் இன்றி வாழ்ந்து மடியும் மானிடர்களை எவ்வாறு சிந்தனையாளர் என அழைப்பது..? என்ற பெர்னாட்ஷாவின் கேள்வி மிகவும் சரியாகவே எனக்குப் படுகிறது.

புதன், 8 ஏப்ரல், 2009

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை

மானம் என்றால் என்ன என்று பல மாக்களுக்குத் தெரியவில்லை.அத்தகைய மாக்களை நம் வாழ்க்கையில் பல சூழல்களில் காண்கிறோம். அம்மாக்களைக் காணும் போது இப்பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
(புறநானூறு -204)
இது சங்க கால மரபு
பிச்சை கேட்பது இழிவானது.அவ்வாறு கேட்பவர்க்கு இல்லை என்று கூறுவது அதைவிட இழிவானது. ஒருவரிடம் பொருளை கொள் எனக் கொடுத்தல் உயர்வானது.அவ்வாறு கொடுப்பவரிடம் கொள்ளேன் எனக் கூறுவது அதைவிட உயர்வானது.என்பது இவ்வடிகளின் பொருளாகும்.

பிச்சை எடுத்தலைவிட இழிவான செயல் ஒன்று உலகத்தில் உள்ளதா?
உள்ளது என்கிறார் ஔவையார்,

(மானமே உயிரினும் சிறந்தது)

14. பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

என உரைக்கிறார்.

பிச்சை எடுத்து உடல் வளர்ப்பதே இழிவானது.அதைவிட இழிவானது ஒருவரைப் புகழ்ந்து அவர்களின் கீழ் நெருங்கி வாங்கி உண்டு வயிறு வளர்ப்பதாகும். சிச்சீ-சீ சீ இப்படி வயிறு வளர்ப்பதை விட உயிரை விடுதல் மிகவும் மேலானது என்கிறார்.

பசி

தினமும் சாப்பிடுகிறோம் பசி அடங்கிவிடுகிறதா? மீண்டும் மீண்டும் பசிக்கிறது. என்ன கொடும சார் இது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பசி என்றால் என்ன? என்று கேட்கும் மக்கள் ஒரு புறம் இருக்க.இன்னொரு பக்கம் தன் வயிற்றோடு போராட்டம் நடத்தும் கூட்டம் என்ன உலகம் இது...!
தமிழிலக்கியங்கள் பசியை மிகுதியாகப் பாடியுள்ளன. ஆற்றுப் படை இலக்கியங்கள், மணிமேகலை, திருமந்திரம்,என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கு.
இங்கு ஔவையார் நல்வழி என்னும் நூலில், வயிற்றோடு ஒரு வாக்கு வாதம் நடத்திப் பார்த்துள்ளார்.

பசி கொடியது

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


துன்பம் மிகுந்த என் வயிறே உணவு கிடைக்காத போது ஒரு நாளைக்கு உணவு உண்ணாமல் ஒழி என்றால் கேட்கமாட்டாய். உணவு கிடைக்கும் போது இருநாளைக்கு உணவினை உண்டு கொள் என்றால் அதுவும் உண்ணமாட்டாய்.
ஏ.... வயிறே உன்னோடு சேர்ந்து வாழ்ந்து காலம் தள்ளுதல் அரிது.
என்பது பாடலின் கருத்தாகும். இப்பாடல் நான் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் நினைவுக்கு வருகிறது.அப்போது பசி என் வரமா? சாபமா? என்ற வினா எனக்குள்ளே வந்து வந்து போகிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2009

எழுத்துக்களை எம்பி3 ஆக்க



எழுத்துருக்களை ஒலி (எம்பி3) வடிவில் மாற்றிக்கொள்ள (http://spokentext.net//" )
இத்தளத்துக்குச் சென்று ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.பின் தாங்கள் மாற்ற வேண்டிய எழுத்துக்களை தெரிவு செய்து அங்கு இட்டால் சில நொடிகளில் தங்கள் ஒலிக்கோப்பு தயாராகிவிடும்.இந்த ஒலிக்கோப்புகளை நம் வலைப்பதிவுகளில் பதிவு செய்ய இயலும்.இந்த சேவை ஆங்கில மொழிக்கு மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. இந்த சேவை தமிழுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்...........

விருந்து

வீட்டுக்கு விருந்தினர் வருகை
எதிர் வீட்டுக் கோழி
உயிர் தப்பி ஓட்டம்

சனி, 4 ஏப்ரல், 2009

மனதில் நின்ற நினைவுகள்

ஒரு மனிதனின் உடலில் மூன்று எறும்புகள் ஊர்ந்து சென்றன. அவை அம்மனிதனின் மூக்கில் சந்தித்துப் பேசிக்கொண்டன. முதல் எறும்பு சொன்னது, நான் என் வாழ்க்கையில் சந்தித்த பாலைவனத்திலேயே மிகப் பெரிய பாலைவனம் இதுதான் எங்கும் ஒரே வறட்சி என்றது.இரண்டாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய மலை இதுதான் பெரிய பெரிய மேடு பள்ளங்கள் என்று கூறியது.மூன்றாவது எறும்பு சொன்னது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய காடு இதுதான் அடர்ந்த மரங்கள் எங்கெங்கும் இருந்தன என்று சொன்னது அப்போது அம்மனிதன் திரும்பிப் படுக்கும் போது தன் மூக்கை தேய்த்துக் கொண்டான்.அப்போது அந்த மூன்று எறும்புகளும் இறந்து போயின .........

இது எப்போதோ படித்த ஜென் கதை.

இந்த கதை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
நான் பெரியவன் என்ற எண்ணம் எனக்கு வரும்போதும், யாராவது தன்னைப் பெரியவன் என்று கூறுவதைப் பார்க்கும்போதும் இக்கதையைத்தான் எண்ணிக்கொள்கிறேன்.


இந்தக்கதையில் வரும் எறும்புகள் பேசியது எல்லாமே தவறானவை தான். என்றாலும் அவை சாகும் வரை தாம் பேசியது தவறு என்று தெரிந்து கொள்ளவில்லை.தனக்குத் தெரிந்தது தான் சரி என்று எண்ணிக்கொண்டன.அந்த எறும்புகள் போலத் தான் மிகப்பெரிய பூமிப்பந்தில் மனிதர்கள் என்பவர்கள் எறும்புகளை விட சிறிய உயிரினங்கள் என்பது ஏனோ நமக்குப் புரியாமல்ப் போகிறது.

மனதில் நின்ற நினைவுகள்.

எனக்கு வந்த குறுந்தகவல்களுல் என் மனதில் நின்று விட்ட குறுந்தகவல்கள்

மனிதக் காட்சி சாலை

விலங்குகள் வந்து
இங்கு மனிதர்களைப்
பார்த்துப் போகும்
முதியோர் இல்லம்

பென்சன்
எனக்கு இரண்டு சன்
இன்று என்னைக் காப்பாற்றுவதோ
என் பென்சன்

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

தமிழ்க் காதல்



காதல் என்ற சொல்லை யாவரும் அறிவர். ஆனால் தமிழர் தம் காதலின் மரபு, தனித்தன்மை ஆகியவற்றை முழுமையாக அறிய விரும்புவோரும். சங்க அக இலக்கியங்களை ஆய்வு செய்ய விரும்புவோர் படிக்கவேண்டிய ஆய்வு நூல் தமிழ்க்காதல்.

இந்நூலில் அகம் பற்றிய இவரின் புதிய ஆய்வு நோக்கு, உரையாசிரியர்களால், திறனாய்வாளர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மரபுகளை நாகரிகமாக மறுக்கும் மாண்பு ஆகியன எனக்கு இந்நூலின் மீது பெருமதிப்பை ஏற்படுத்தியது. கைக்கிளை, பெருந்திணை குறித்த பார்வை திருமணம் குறித்த நோக்கு ஆகியன தமிழர் மரபை எடுத்தியம்பும் கூறுகளாக உள்ளன. இந்நூலைப் படிக்காது செய்யப்படும் அகம் சார்ந்த ஆய்வு முழுமையாக இருக்காது.இந்நூல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில்(http://tamilvu.org//" ),

நூலகம் (இலக்கியத் திறனாய்வு) பகுதியில் கிடைக்கிறது. இவ்விணையதளத்தைப் பயன்படுத்த அவர்கள் தரும் டாம், டாப் எனும் எழுத்துருக்களைப் பதிவிறக்கித் தங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.படித்துப்பயன் பெறுங்கள்.

(இப்பகுதியில் தினம் ஒரு சங்க இலக்கிய ஆய்வு நூல்கள் பற்றி குறிப்பனை அளிக்க இருக்கிறேன்)

குப்பைக் கோழியார்



கண்தர வந்த காம ஒள் எரி
என்புஉற நலியினும், அவரோடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடார் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
களைவோர் இலை- யான் உற்ற நோயே.
(குறுந்தொகை-305)


காப்பு மிகுதிக்கண் தோழி அறத்தோடு நிற்பாளாக தனது ஆற்றாமை தோன்ற தலைமகள் தன்னுள்ளே கூறியது

கண்ணால் இந்த காமமாகிய ஒள்ளிய தீ பற்றிக் கொண்டது.அது உள்ளத்தளவில் நில்லாது என்பு வரை சென்று அகத்தையும் நலிவடையச் செய்தது. எனத் தலைவி தனக்கு வந்த காமநோயைச் சுட்டுகிறாள்.
தன் நிலை உணர்ந்து தலைவனும் வரைவு மேற்கொள்பவனாக இல்லை. தோழி அறத்தொடு நின்று தன் துயர் போக்குபவளாகவும் இல்லை என்ற வருத்தம் தலைவியின் கூற்றில் உள்ளது.
தலைவி தன் நிலையை குப்பைக் கோழியின் போருடன் ஒப்புமைப்படுத்திக் கூறுகிறாள்.

“குப்பைக் கோழிகள் சண்டையிட்டுக் கொண்டால் அதனைக் காண்பார் மகிழ்ச்சியும் துயருமின்றி அயன்மையுடனேயே நோக்குவர். அது போல, தலைவியும் காமநோயும் நிகழ்த்தும் போரினைத் தோழி கூடத் தொடர்பில்லாதவள் போல பார்க்கிறாளே என நொந்துகொள்கிறாள் தலைவி.
சேரிக்கோழிகளின் சண்டையைக் கூட பார்ப்பவர்கள் விலக்கி அவற்றைக் காக்க முற்படுவர்.ஆனால் குப்பையில் வாழும் கோழிகளின் போரைக் கண்டு அவற்றைக் காப்பவர்கள் யார் உளர் என கையற்றுப் புலம்புகிறாள் தலைவி. குப்பைக் கோழிகள் தம்முள்ளே போரிட்டு அழிந்து போகும் அதுபோல தன் உயிரும் அழியும் என்பது தலைவியின் மனத் துயராகும்.

இப்பாடலில் தலைவியின் மனநிலையைக் குப்பைக் கோழியின் போருடன் ஒப்பிட்டு போரைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் குப்பைக் கோழியார் எனப் பெயர்பெற்றார்.

கங்குல் வெள்ளத்தார்

'எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி? – தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே'

குறுந்தொகை-387.


பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கித்தி வன்புறை எதிரழிந்து கூறியது.

தலைவனின் பிரிவால் தலைவி துன்புற்றிருக்கிறாள். தோழி ஆற்றியிருக்கவேண்டும் என்று கூறிகிறாள். அதற்குத் தலைவி,
மாலைப் பொழுதிலாவது ஒருவாறு ஆற்றியிருக்கலாம். ஆனால் அம்மாலையின் முடிவில் வரும் இரவு என்னும் ஊழி வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியதாகவுள்ளது.அவ்வெள்ளத்தை எவ்வாறு நீந்திக் கடக்க முடியும் எனப் புலம்புகிறாள்.

தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு இரவுப் பொழுது “கங்குல் வெள்ளமாக“ கடலைவிடப் பெரிய பரப்பாக இருந்தது எனத் தலைவியின் மனநிலையைக் கங்குல் வெள்ளத்தோடு இயைபு படுத்திப் பாடியமையால் இப்புலவர் கங்குல் வெள்ளத்தார்  எனப் பெயர் பெற்றார்.
(கங்குல் வெள்ளம்-இரவாகிய ஊழிவெள்ளம்)

சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவருக்கான பெயர்காரணத்தை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைந்தது.

நம் கருத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன...


இன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன. சென்ற மாதம் கூட என் அனுமதியின்றி கொழும்பிலிருந்து வெளியாகும் தினகரன் என்னும் நாளிதழ் என் கட்டுரையை வெளியிட்டிருந்தது.ஆயினும் கட்டுரையின் கீழே நன்றி முனைவர்.இரா.குணசீலன் என்று குறிப்பிட்டிருந்தது.
இத்தகைய நாகரிகங்களைக் கூடக் கடைபிடிக்காமல் பலர் கருத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனை நாம் அறியும் போது நமக்கு வருத்தமாக இருக்கும். நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற விபரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

ஓரிற்பிச்சையார்


ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது? என்றி
அக்கால் வருவர் எம் காதலோரே

(குறுந்தொகை-277)


தலைவன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவைத் தோழி அறிவரைக்கண்டு வினாவியது.

பிச்சைக்காரர்கள் என்றாலே பல வீடுகளில் பிச்சையெடுத்து வாழ்பவர்கள் என்றே யாவரும் அறிவர். ஆனால் இங்கு சங்கப் புலவர் ஒருவருக்கு ஓரிற்பிச்சையார் என்று ஒரு பெயர் உள்ளது. இப்பெயர் எவ்வாறு இவருக்கு வந்தது என்ற கேள்விக்கு இப்பாடல் விடையளிக்கிறது.

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றவிட்டான். அவன் வருகையை எண்ணித் தலைவி காத்திருக்கிறாள். இந்நிலையில் தலைவி படும் துன்பங்களைக் கண்டு தோழி வருந்துகிறாள். அதனால் தலைவனின் வருகையைத் தோழி அறிவரிடம் வினவுகிறாள்.
(அறிவர் என்பவர்கள் துறவுள்ளம் கொண்டு வாழ்பவர்களாவர். முக்காலமும் அறிந்தவர்களாக இவர்கள் இருந்தனர். தலைமக்களை நன்கு அறிந்தவர்களாகவும் அவர்களை நெறிப்படுத்துபவர்களாகவும் இவர்கள் இருந்தனர். பிறர் இல்லங்களில் இரந்து உணவு உண்ணுவது இவர்தம் வாழ்க்கை முறையாகும்)

தலைவனின் வருகையை வினவிய தோழிக்கு அறிவர், “வாடைக் காலத்தில் தலைவன் வருவான்“ என உரைத்தார்.
தலைவனின் இனிய வரவை உரைத்தமையால் மிகவும் மகிழ்ந்த தோழி, அறிவரிடம்,
பொய், களவு, கள், காமமாகிய, குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில், நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றோடு, வெண்ணெயும், பனிக் காலத்துக்கு ஏற்ற வெண்ணீரும் எட்டு வீடுகளில் பெறாமல் எம்முடைய ஒரே வீட்டில் பெற்று வாழ்வாயாக“ என்கிறாள்.
அறிவர் எட்டு இல்லங்களில் இரந்து உணவு பெற்றுத் துன்புறாமல் தம் ஒரே வீட்டிலேயே அவ்வுணவைப் பெற்றுக்கொள்ளுமாறு தோழி கூறியமையால் இப்புலவர் ஓரிற்பிச்சையார் எனப் பெயர்பெற்றார்

அறிவருக்கு பிச்சைபெற்று, உணவு உண்பது, உடல் வளர்ப்பது என்பது வாழ்க்கை நோக்கமல்ல முக்காலமும் அறிந்தவராதலின் தலைவனின் வரவை உரைத்தார். அதற்குத் தோழி தலைவியின் துன்பம் தீர்ந்துவிடும் என மகிழ்ந்தாள். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே அவ்வாறு அறிவரிடம் கூறினாள். அவள் அவ்வாறு கூறியதால் அறிவர் பெரிதும் மகிழ்ந்திருக்கவும் மாட்டார். இது இயற்கையான சங்ககால வாழ்வியல் நிகழ்வாகும்.இப்பாடலில் தோழியின் மகிழ்ச்சியையும் அதன் வெளிப்பாட்டையுமே காணமுடிகிறது. அறிவர் என்பவர்கள் இன்றைய பிச்சைக்காரர்களுடன் ஒப்பிடத்தக்கவர்களல்லர். அறிவர் என்பவர்கள் ஞானிகளாவர்.இன்பம், துன்பம் என்னும் நிலைகளைக் கடந்தவர்களையே அறிவர் எனச் சங்கப் பாடல்கள் இயம்புகின்றன.
இப்பாடலில் பிச்சை பற்றிய விளக்கம் புதுமையாகவும், பாடலுக்கு ஏற்பப் பொருத்தமாகவும் இருந்தமையால் இப்புலவர் ஓரிற்பிச்சையார் என்னும் பெயர் பெற்றார்

பாடல் வழியே.

வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ என்ற அடிகளில் சுட்டப்படும் சேமச் செப்பு இன்று சூடான தேநீரையோ, பாலையோ சூடாகவே வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம்போல (பிளாசுகு) இருப்பதன் வழி சங்ககால மக்களின் அறிவியல் அறிவு புலனாகிறது.

புதன், 1 ஏப்ரல், 2009

உயர்தனிச்செம்மொழி தமிழ்

ஞால முதல் மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான சிறந்த இலக்கியச் செல்வங்களைக் கொண்ட மொழி, இன்று வரை வழக்கில் உள்ள மொழி எனப் பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட மொழி தமிழ். இம்மொழிக்குச் “செம்மொழி” என்னும் தகுதி கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. எனினும் எந்த அடிப்படையில் அத்தகுதியைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதில் தான் சிக்கல் உள்ளது. தமிழ் 1500 ஆண்டு காலம் பழமையானது என்ற அறிவிப்பு தமிழர்களால் ஏற்றுக்கொள்ள இயலாததாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை இரு நிலைகளில் இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது.
1. இதுவரை நாம் வகுத்துள்ள செம்மொழிக்கான தகுதிகளோடு ஒப்பு நோக்கி தமிழின் தன்னிகரற்ற தன்மையைக் கூறி தமிழ்

“ உயர்தனிச் செம்மொழி “ என்பதை இயம்புதல்.
2. நம் செயல்பாடுகளால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்ட
(உயர்-தனி-செம்மொழி) மொழியாக ஆகும் நிலையை இயம்பி நாம் செய்யவேண்டிய பணிகளைக் கூறுதல்.

I செவ்வியல் – செம்மொழி விளக்கம்.
இவ்விரு சொற்களும் மொழியின் பழமை உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் குறிப்பதாகத் தமிழறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சொற்களில் எது சிறந்தது என நோக்கினால்

“ செம்மொழி “ என்ற சொல்லே முன்னிற்கிறது. செம்மையானது என்ற பொருளில் செம்மொழி பயின்று வருகிறது.
“ செம்மொழி எனும்போது ஏற்படும் பொருளாழம் செவ்வியல் எனும்போது ஏற்படுவதில்லை. கிளாசிக்கல் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருளாகச் செவ்வியல் காணப்பட்டது என்று குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது ஆங்கிலத்தை ஒட்டியே சிந்திக்கும் போக்கைக் காட்டுவதாகவுள்ளது. “1

செவ்வி என்பதற்கு காலம், சமயம், தருணம் போன்ற பொருள்களே உள்ளன. மொழி ஞாயிறு. தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட சான்றோர்கள் பலரும் செம்மொழி என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். செம்மொழி என்னும் போது தோன்றும் பொருளாழம் செவ்வியல் எனும்போது தோன்றுவதில்லை. எனவே செம்மொழி என அழைப்பதே சாலச் சிறந்ததாகும்.
செம்மொழியின் தகுதிகள்
இன்றுவரை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. செம்மொழிக்கான தகுதிகள் பலவாறாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மூன்றுவிதமான வகைப்பாடுகள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன.


1.வல்லுநர் குழு சொல்லும் தகுதிகள்.
செம்மொழி என்னும் தகுதி வழங்கும் வல்லுநர் குழுவினர், செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளின் தகுதிகளைத் தமிழ் மொழியோடு ஒப்புநோக்கி சில வரையறைகளைச் செய்துள்ளனர். அதனைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

அ.மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற
ஆ.அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய
இ.அம்மொழிக்கே உரியதாகவும் ,மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.

ஆகியன செம்மொழியின் தகுதிகள் என வல்லுநர் குழுவினர் வரையறை செய்துள்ளனர். இவ்வரையறைகளுக்கும் மேலாக சிறப்புகளைப் பெற்றுத் தன்னிகரற்று விளங்கும் தமிழ்மொழியை இவ்வரையறைகளுக்குள் அடக்குவதால் தமிழின் பழமையை முழுமையாக மதிப்பிட இயலாத நிலை ஏற்படுகிறது.

2.செம்மைப் பண்பு- 11 .

செம்மொழி்க்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளாக 11 பண்புகள் வரையறை செய்யப்படுகின்றன.இப்பண்புகளையே மொழிகளுக்குப் புகுத்திப் பார்த்து மொழியின் செம்மைப் பண்புகளை அறிந்து வருகிறோம்.அவை,

1.தொன்மை
2.தனித்தன்மை
3.பொதுமைப் பண்பு
4.நடுவுநிலைமை
5.தாய்மைப் பண்பு
6.பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
7.பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
8.இலக்கிய வளம்
9.உயர் சிந்தனை
10.கலை இலக்கியத் தனித்தன்மை
11.மொழிக் கோட்பாடு.
ஆகியன செம்மொழியின் பண்புகளாகும். இப்பண்புகள், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம், சீனம், ஸ்பானியம், அரபி, வடமொழி ஆகிய செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளின் பண்புகளாகும். மேற்காணும் மொழிகளில் பல வழக்கொழிந்து காணப்படுகின்றன.இம்மொழிகளின் தகுதிகளை தமிழோடு பொருத்திப் பார்ப்பது என்பது சரியான மதி்ப்பீடாக இருக்காது. இதனை,

“தொல்காப்பியம் காலத்தில் – மெசபடோமியவில் அரபி பாறை எழுத்துகளாக இருந்தது. சீனமொழியில் அப்பொழுது தான் சிஜிங் கவிதைத் தொகுதி இயற்றப்பட்டது. பிரஞ்சு மொழியான கெல்டிக் மொழி வெறும் பேச்சு மொழியாக இருந்தது. இலத்தீன் மொழியில் ஒடிசி மொழி பெயர்க்கப்படுகிறது. ஸ்பானியம் பேச்சு மொழியாக இருந்தது. ஜெர்மன் மொழி அப்போது இல்லை. இதுவே பன்னாட்டு அளவில் மொழி வழக்கிலிருந்த செயல்பாடுகளாகும்.“2 என்பார் கே.எஸ்.இராதாகிருட்டிணன். இக்கருத்து தமிழின் தன்னிகரற்ற தன்மையை எடுத்துரைப்பதாகவுள்ளது. தொல்காப்பியத்தை நன்கு நோக்கும் போது அதில் நம் தமிழரின் பல்லாண்டு கால அனுபவத்தைக் காணமுடிகிறது. தமிழுக்குப் பின் தோன்றி இன்று வழக்கொழிந்த நிலையிலும் இன்று சில மொழிகள் செம்மொழிகள் பட்டியலில் உள்ளன. அம்மொழிகளோடு தமிழை ஒப்புநோக்கும்போது தமிழின் தனித்தன்மை விளங்குகிறது.இதனை,

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவேயில்லை
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாக லிபிகள் இல்லை
ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல் விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்“3

என உரைக்கிறார் கவிஞர்.வைரமுத்து. இவ்வாறு தனித்தன்மை கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது.
3.பாவாணர் சுட்டும் 16 செம்மைப் பண்புகள்.

மொழி ஞாயிறு பாவாணர் தம் வாழ்நாளில் பல மொழிகளையும் கற்றறிந்து தமிழ் மொழியின் சிறப்பை வேர்ச்சொல் ஆய்வு வாயிலாக எடுத்தியம்பியவர்.தமிழின் செம்மைப் பண்புகளாக,
“1.தொன்மை.
2.முன்மை.
3.எண்மை(எளிமை).
4.ஒண்மை.(ஒளிமை).
5.இளமை
6.வளமை.
7.தாய்மை.
8.தூய்மை.
9.செம்மை.
10.மும்மை.
11.இனிமை.
12.தனிமை.
13.பெருமை.
14.திருமை.
15.இயன்மை.
16.வியன்மை. “4
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.மேலும் இச்சிறப்புக்களை ஒருங்கே உடையது தமிழே ஆகும் என உரைக்கிறார்.
உயர்தனிச் செம்மைப் பண்பு

ஞாலத்தில் தோன்றிய மாந்தர்கள் முதலில் பேசிய மொழி தமிழ் . இதனை,

வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக்
கையினா லுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலைக் கொண்டு பணிகுவாம்

என உரைக்கிறார் தஞ்சைப் பெரும்புலவர்.நீ. கந்தசாமி அவர்கள்.

பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தனிச் சிறப்புடன் உயர்ந்த பண்புகளைக் கொண்டு விளங்குகிறது. இதனைப் பல சான்றுகள் வாயிலாகக் கூறலாம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியன நம் பழமைக்கும் பெருமைக்கும் மிகப் பெரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.இதனை,

“இந்தியாவின் இரண்டு செம்மொழிகளில் தமிழ் மட்டுமே செம்மொழித் தரம் சேர் பழமையோடு துண்டிக்கப்படாத தொடர்புடையது.“5 என்பர் ஏ.கே.இராமானுசம் அவர்கள்.(Tamil, one of the two classical Languages a of India , is the only Language Of contemporary India which is recongnizable continous whith Classical past )

கமில் சுவலபில் தமிழின் தனிச்சிறப்பினை,“முதலாவதாக சங்க இலக்கியம், தமிழர்களாலும் வரலாற்று ஆசிரியர்களாலும் திறனாய்வாளர்களாலும் மற்றும் அறிவு ஜீவிகளான வாசகர்களாலும் செந்தமிழ் தரம் சேர்ந்ததாக நம் தேசிய இலக்கியங்களுக்கு ஒத்த தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.“6 (first Of all , the so called cangam poetry is regarded by the professional historigraphers and critics , as well as by intellectual readers , as classical in the sense in which we regard some parts of our national literatures as classical)

இக்கருத்துக்கள் யாவும் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்த மொழி, “உயர்தனிச் செம்மொழி” என்பதை இயம்புவனவாகவே உள்ளன.

உயர் – தனி – செம்மொழி

தமிழ் உயர்ந்த மொழி , செம்மையான மொழி ஆயினும் தனிப்பட்ட மொழியாக தமிழகத்தில், தமிழர்களிடம் கூட வழங்கப்படுவது வெட்கக் கேடாகவுள்ளது. நம் மொழியை நாமே தனிமைப்படுத்துவது ஒரு நிலை, பிற மொழி சார்ந்தோர் தனிமைப்படுத்துவது இன்னொரு நிலை. என இரு நிலைகளில் நம் மொழி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை,
“ தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள தமிழர்கள் இரண்டு கத்தி வைத்திருக்கிறார்கள்.

தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது, அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.

தமிழில் என்ன இருக்கிறது ....... விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தமிழென்னும் தள்ளு வண்டியால் யாது பயன் என்று சலித்துக் கொள்கிறவர்களின் கையில் சாணை பிடித்த கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்படவேண்டியவை.7 என்கிறார் கவிஞர்.வைரமுத்து.
இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துவிட்டது என்போரும், அறிவியல் தமிழ் மட்டும் தான் காலத்தின் தேவை என்போரும் தமிழைத் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

காலத்தின் தேவையை உணரவேண்டும். வளர்ந்த மொழிகள் யாவும் அறிவியல்த் துறைகளைத் தம் தாய்மொழியிலேயே பயிலும் நிலை உள்ளது. ஆனால் நாம் இப்போது தான் அதன் தேவையையே உணர்ந்துள்ளோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம கலைச் சொற்களைத் தொகுத்துள்ளது. மருத்துவம், பொறியியல், கணினி உள்ளிட்ட அறிவியல்த் துறைகளைத் தமிழில் படிக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.எனினும் அறிவியல்த் துறைகளைத் தாய்மொழியில் படிப்பதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் நம் பழமை மரபுகளைக் கருத்தில் கொண்டு அறிவியல்த் தமிழின் தேவையையும் உணரவேண்டும். இதனை,

“ ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும்.இது தவிர்க்கமுடியாதது“.8 என்பர் வ.செ.குழந்தைசாமி. எனவே உலக மொழிகள் யாவற்றைவிடவும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட நம் தமிழ்மொழி தனிமைப்படவோ, தனிமைப்படுத்தப்படவோ நாம் காரணமாக இருக்கக் கூடாது.

நிறைவுரை

செம்மொழி என்பதற்கான தகுதிகளே இன்றுவரை முழுமையாக வரையறை செய்யப்படவில்லை. எனினும், இதுவரை செய்யப்பட்ட தகுதிகள் முழுவதும் பொருந்தி, அதற்கு மேலும் தகுதிகளைக் கொண்ட ஒரே மொழி தமிழ் ஆகும்.அதனால் தமிழை “உயர்தனிச் செம்மொழி“ என அழைப்பதே சாலச் சிறந்ததாகும்.
பிற செம்மொழிகளை விட தமிழ்மொழிக்கு உள்ள சிறப்பான தகுதிகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு செம்மைத் தகுதிகளை வரையறை செய்யவேண்டும்.
தமிழின் செம்மைப் பண்பையே செம்மொழித் தகுதிக்கான அளவீடாகக் கொள்ளவேண்டும். பிற செம்மொழிகளின் தகுதிகளைத் தமிழுக்குப் பொருத்திப் பார்ப்பது சரியாக மதிப்பிட இயலாத சூழலை உருவாக்கும்.
தாய்மொழிக் கல்வியின் தேவையை நாம் உணரவேண்டும். தாய்மொழி வழியே எல்லா அறிவியல்த் துறைகளையும் படிக்கும் நிலை வரவேண்டும்.
பல்வேறு மொழித்தாக்கங்களைக் கடந்து செம்மாந்து நிற்பது நம் தமிழ் மொழி.இம்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கவல்லது என்பதையும் நாம் உணரவேண்டும்.
நம் மொழியை நாமே தள்ளிவைத்தால் கால வெள்ளத்தில் வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெறும் நிலை ஏற்படும்.அப்போது தமிழ் “உயர்- தனி-செம்மொழி“ என அழைக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை யாவரும் அறியவேண்டும்.

சான்றெண் விளக்கம்.
1.மலையமான்- செவ்வியல் மொழி தமிழ் – ப -4.

2.தினமணி – தலையங்கம் – ( 15.12.2007)

3.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப- 31

4.ஞா.தேவநேயப் பாவாணர்- தமிழ் வரலாறு – முகவுரை

5.ak.Ramanujan – the interior landscape (1967)p-11

6.k.zuvelebil , the smil of murugan – p -49.

7.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப -29

8.வா.செ.குழந்தைசாமி- அறிவியல்தமிழ்- ப- 72

கல்பொரு சிறுநுரையார்


காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ? அமை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமோடு பெருநீர்க்
கல்பொரு சிறு நுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே“

(குறுந்தொகை- 290)


வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி அழிவுற்றுச் சொல்லியது.

தலைவி தலைவனின் பிரிவால் ஆற்றாமை மேலிட்டு தவிக்கிறாள்.தோழி வந்து நின் காமநோயைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்கிறாள். அதற்குத் தலைவி, அறிவுரை சொல்பவர்கள் காமத்தின் தன்மையையோ, அதனைப் பொறுத்துக்கொள்ளும் வலிமையும் உடையவரோ? என வினவுகிறாள்.

தன் நிலையைக் கல்லில் மோதி காணாமல்ப் போகும் கடலின் சிறுநுரையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள் தலைவி. கடலின் அலையில் தோன்றும் சிறு நுரை எவ்வாறு காணாமல்ப் போகுமோ அதுபோல தன் உயிரும் அழிந்துபடும் எனத் தன்னிலையை உரைக்கிறாள்.
இப்பாடலில் வெள்ளம் காமமாகவும், கல் பிரிவாகவும், சிறுநுரை தலைவியின் உயிராகவும். உவமம் கொள்ளப்பட்டதுஇவ்வுவமையின் சிறப்புக்கருதி இப்புலவர்
கல்பொரு சிறுநுரையார் என்னும் பெயர் பெற்றார்.