பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 31 மார்ச், 2009

மனதில் நின்ற நினைவுகள்




தமிழரின் பெயர்கள் ஒரு காலத்தில் இனம்,மொழி,நாடு எனப் பல்வேறு கூறுகளையும் காட்டுவதாக இருந்தன. இன்றைய நிலையில் தமிழர்களின் பெயர்களைக் காணும் போது தமிழன் என்பதற்கான எவ்வித அடையாளமும் அதில் இருப்பதில்லை.தமிழ் என்னும் சொல்லையே ஆங்கிலத்தில்(Tamil)டமில் என்று எழுதும் அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.பாவம் தமிழ்(Thamizh)என ஆங்கிலத்தில் கூட எழுத இயலாத வெட்கக்கேடான நிலைதான் இன்றும் உள்ளது. ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு உயிரையும்,உடலையும் வளர்க்கும் தமிழனின் நிலையை எண்ணி மனம் வாடுகிறது. தமிழுணர்வாளர்கள் தமிழனின் இந்த அவல நிலையை எண்ணி காலந்தோறும் வருந்தி வந்திருக்கிறார்கள்.
தமிழர் தலைவர். ஆதித்தனார் இந்நிலையைக் கூறும் போது,
நான்கு தடவை உலகத்தைச் சுற்றியிருக்கிறேன்.தமிழ்நாட்டில் உள்ளதைப் போல ks.கண்ணன்,pv.முத்து என்று இரண்டு மொழிகளில் கையெழுத்துப் போடுகிறவன் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.” என மனம் வருந்திக் கூறியுள்ளார்.
தமிழனின் கோமாளித்தனத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆதித்தனார் அவர்களின் மனக்குமுறல் இன்றும் என் நினைவில் வந்துபோகிறது.

ஓரேருழவனார்




'ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோட்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே ; நெஞ்சே
ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போல 
பெருவிதுப்பு உற்றன்றால் நோகேயானே.'

ஓரேருழவனார் (குறுந்தொகை-131)


வினை முற்றிய தலைவன் பருவ வரவின்கண் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.

பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தூரம் வந்தான். பொருள் தேடி தலைவியைக் காண மனம் துடிக்கிறது. வீடோ மிகவும் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் தன் மன நிலையை,
ஒரு ஏர் மட்டும் வைத்திருக்கும் உழவன் பருவ காலத்தில் தம் நிலம் முழுவதும் உழுவதற்கு எவளவு ஆர்வமுடன் இருப்பானோ
அந்த மனநிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறான் தலைவன்.
இதனை,
அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகிய தோள்களையும், அழகிய கண்களையும் கொண்ட தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கு அரிய இடத்தில் உள்ளது. எனது நெஞ்சு மழை பெய்து ஈரமுடைமையால் உழுதற்கு ஏற்ப செவ்வியை உடைய பசிய கொல்லையின்கண் ஒரு ஏர் மட்டும் கொண்ட உழவனின் மனம் எவ்வளவு விரைவாக உழத் துடிக்குமோ அதே விரைவு மனநிலை தான் தனக்கு உள்ளது என்று தலைவன் தன் மனநிலையை எடுத்துரைக்கிறான். தன் நெஞ்சு விரைவிற்கு ஏற்ப தன்னால் விரைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறான்.
இப்பாடலில் ஓர் ஏர், அதனால் உழப்படும் நிலம், உழுதற்கு ஏற்ற செவ்வி, உழவனின் ஆர்வம் ஆகிய பண்புகளைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் ஓரேருழவனார் என்னும் பெயர் பெற்றார்.

தொடரால் பெயர்பெற்ற புலவர்களின் பெயர்களை நோக்கும் போது. அப்பெயர்கள் மிகவும் பொருத்தமுடையனவாக உள்ளன.அழகுணர்வுடையனவாகவும் உள்ளன. இப்புலவர்கள் தம் பாடலில் இடம் பெற்ற உவமைகள் வாயிலாகப் பெரும் பெயர் பெற்றுக் காலப்போக்கில் தம் இயற்பெயரைத் தொலைத்தனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

திங்கள், 30 மார்ச், 2009

செம்புலப்பெயல்நீரார்.



யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)


இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.
என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்? நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்? செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.
இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.
சங்க இலக்கியத்துள் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாடல்களுள் குறிப்பிடத்தக்கது இப்பாடல். இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகள் இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன.

வியாழன், 26 மார்ச், 2009

மனதில் நின்ற நினைவுகள்



நம் வாழ்வில் நம்மைச் சுற்றி நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.நூல்கள் வாயிலாகவும்,ஊடகங்கள் வாயிலாகவும் பல கருத்துக்கள் நம்மை வந்தடைகின்றன.என்றாலும் சில கருத்துக்கள் மட்டுமே நம் மனதில் நங்கூரமிட்டுப் பதிந்துவிடுகின்றன.அந்த அடிப்படையில் என்னில் பதிந்த சில பதிவுகளை இனி இலக்கிய,இணையப்பதிவுகளுக்கு இடையே தரவுள்ளேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழுலகம் நன்கறிந்த பாடலாசிரியர் ஆவார்.அவர் திரைப்படப் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்த போது மிகுந்த வறுமை நிலையில் இருந்தாராம்.சில தயாரிப்பாளர்கள் தரும் சிறு தொகையை ஊதியமாகப் பெற்று தம் வாழ்க்கையை ஓட்டி வந்தாராம். இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் பாடல் எழுதிக்கொடுத்தாராம்.அந்தப் பாடலாசிரியர் அதற்கான ஊதியத்தை உடனே தராமல் நாளை, நாளை என நாட்களைக் கடத்தி வந்தாராம்.பசியோடு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாதபோது, அந்தத் தயாரிப்பாளரைப் பார்த்து பணம் பெறச் சென்றாறாம்.இவர் வருவதைப் பார்த்த தயாரிப்பாளர் தம் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு கவிஞரைக் காத்திருக்கச் சொல்லி தன் உதவியாளரிடம் கூறி அனுப்பினாராம். பட்டுக்கோட்டையார் ஒரு சிறு காகிதத்தில் ,ஒன்றை எழுதி மேசையின் மீது வைத்துவிட்டுச் சென்றாறாம்.அதனைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் சற்றும் தாமதிக்காது,விரைந்து சென்று கவிஞரைப் பார்த்து பணத்தைக் கொடுத்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டாராம்.அந்த அளவுக்கு அவர் என்ன எழுதினார் தெரியுமா?


"தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை
நடுதெருவில் சந்தித்தேன்
நீ யாரடா என்னை நில்லென்று சொல்வதற்கு"


என எழுதியிருந்தாராம்.இதைப்படித்த தயாரிப்பாளர்.இந்த வறுமை நிலையிலும் இவரிடம் இருக்கும் மனவலிமையும்,தமிழ்ச்செறுக்கும் கண்டு வியந்து போனார்...........என்ற கருத்து ஏனோ என் மனதை விட்டு அகல மறுக்கிறது. பணமே வாழ்க்கை என வாழும் மாக்கள் மத்தியில் இது போன்ற மனித எடுத்துக்காட்டுகள் நம்மை செம்மையாக வாழத் தூண்டுபவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

புதன், 25 மார்ச், 2009

பாராட்டுவிழா




சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டம்
முடித்தமைக்காக நான் படித்த கல்லூரியில் (இராமசாமித் தமிழ்க் கல்லூரி-காரைக்குடி)பாராட்டுவிழா நடத்தினார்கள்.அங்கு சென்று எனது விரிவுரையாளர்களைக் கண்டு பேசி உரையாடி மகிழ்ந்தேன்.

ஒலியை மட்டும் பிரித்தெடுக்க



பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் பல பாடல்களை இணையத்தில் தேடி பதிவிறக்கிப் பயன்படுத்துவது வழக்கம்.ஒரு பாடல் எனக்கு எம்பி3 வடிவில் கிடைக்கவில்லை.வீடியோவாக மட்டுமே அந்தப் பாடல் கிடைத்தது.இதனை மாற்றி எம்பி3 வடிவில் ஏதாவது இணையதளம் வழங்குகிறதா எனத் தேடிப்பார்த்த போது அறிந்து கொண்ட தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
யுடியுப் (http://youtube.com//" )யாவரும் அறிந்த இணையதளம்.இங்கு வீடியோ எனப்படும் ஒலி,ஒளிக் கோப்புகள் காணக்கிடைக்கின்றன.யாவரும் தம் கோப்புகளை எளிதில் பதிவேற்றவும்,பதிவிறக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் உள்ள ஒளி,ஒலிக் கோப்பு(வீடியோ)களிலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 வடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் பயன்படுகிறது.(http://listentoyoutube.com//")இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அளித்து சொடுக்கினால் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் எனத் தோன்றும்.அதனைப் பதிவிறக்கும் போது அக்கோப்பு எம்பி3 வடிவில் கிடைக்கிறது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.



செவ்வாய், 24 மார்ச், 2009

ஊட்டியார்



(இப்பாடலின் வழி ஊட்டியார் என்னும் புலவரின் பெயருக்கான காரணம் புலப்படுதப்படுகிறது)

தலைவன் இரவுக்குறிக்கண் வந்தமையை அறிந்த தோழி தலைவிக்குச் சொல்லியது என, தோழி பேசுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.
தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்து நின்றான்.இதனைத் தோழி அறி்ந்தாள்.அதனைத் தலைவியிடம் உணர்த்த விரும்பினாள்.அதற்குத் தடையாகத் தலைவியின் அன்னை தலைவியின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
அன்னை துயில்கிறாளா?என்பதை ஆய்ந்தறிந்த தோழி பின் செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள்.
இதுவே பாடலின் களம்.
முதலில் அன்னையிடம், அன்னையே வாழ்வாயாக.... நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!
நம் தோட்டத்தில் உள்ள கூதாளம் செடியின் தழைகளிடத்தே அவற்றின் செவ்வி குறையுமாறு இனிய ஓசையோடு வீழும் அருவியின் ஓசையைச் சிறிதேனும் கேட்டனையோ.... என வினவினாள்.அதற்கு அன்னை பதிலளிக்கவில்லை.
அன்னையே நீ வாழ்வாயாக! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!
“நம் தோட்டத்தில் உள்ள சாதிலிங்கம் ஊட்டப்பட்டது “ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தினது ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்டிருந்த ஊசல்க் கயிற்றினை பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடிவிழுந்தது... அதனையும் நீ கேட்டனையோ! என வினாவினாள்.
அன்னையின் துயில் நிலையை அறிதற் பொருட்டே முதலில் மெல்லிய அருவியோசையை கேட்டனையோ? என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ? என்றும் வினவினாள்.எதற்கும் அன்னை பதிலளிக்காமை கண்டு “அன்னை கடுந்துயில்“ மடிந்தனள் என்று தோழி உறுதிப்படுத்திக் கொண்டாள்.அந்நேரம் ஏனைய உயிர்களும் துயில் கொண்டன என்பதை அறிந்து பின் தலைவியிடம் தான் கூறவந்த தலைவனின் வரவை உரைத்தாள்.
இதனை,
அகநானூறு 68. குறிஞ்சி

'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.
-ஊட்டியார்
இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
இப்பாடலில் சாதிலிங்கம் “ஊட்டப்பட்டது“ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட ஊசல்க் கயிற்றைப் பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடி விழுந்தது எனத் தோழி கூறுகிறாள்.இதில் ஊட்டப்பட்டது என்ற சொல்லே இவ்வாசிரியரின் பெயராகிறது. குற்றமற்ற உள்ளத்தோடு தலைவியைக் காணவந்த தலைவனின் வருகை குறித்து உள்ளுறையாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறாள் தோழி.
வானிடத்தே மேகக் கூட்டங்கள் இடிஇடித்து மழையாகப் பொழிந்தன.வெள்ளம் பெருகி ஓடியது.கடும் சுழியினையுடைய அவ்வெள்ளம் , யானைக் கன்றுகளின் கால்களை இழுத்து அக்கன்றுகளை அடித்துச் சென்றது.அதனைக் கண்ட பெண் யானைகளும், ஆண்யானைகளும் ஆரவாரம் செய்தன.தம் கன்றுகளைக் காப்பாற்றும் எண்ணத்தோடு இழுக்கும் வெள்ளத்தில் தம் தும்பிக் கைகளை விட்டு துழாவின.இத்தகைய கொடிய வழியில் தலைவன் வந்துள்ளான். இவ்வழியில் பகலில் கூட யாரும் வருவதற்கு அஞ்சுவர்.என்றாலும் தலைவன் உன்னைக் காணும் ஆவலில் அவ்வழியே வந்துள்ளான் என உரைத்தாள் தோழி.
உள்ளுறை
களிற்று யானைகளும் கன்று காரணமாகப் பிடிகள் வருந்தித் துன்புற்ற பிறகே குரல் கொடுக்க முயன்றன.அது போலத் தலைவனும் அலரானும் வழியது அருமையானும் யாமும் எம் நலனும் அழிந்த பிறகே மறைக்க முயல்வாறல்லது முன்பே முயலவி்ல்லை. என்பதே உள்ளுறையாக உள்ளது.

இப்பாடலை உற்று நோக்கும் போது சங்க கால மக்களின் அக வாழ்வியல் நன்கு விளங்குகிறது.தாயின் உறக்கத்தை அறிந்து கொள்ள தோழி கையாளும் உத்தி ,உள்ளுறை வாயிலாக தலைவனின் செயலைத் தோழி கூறும் பாங்கு ஆகியன அக்கால வாழ்வியலை இயம்புவனவாக உள்ளன.

திங்கள், 23 மார்ச், 2009

மனநிலை


(யானை சிறிதாக இருக்கும் போது பாகன் அதன் கால்களில் வலிமையான சங்கிலியைக் கட்டிவிடுவானாம்.யானை அதனை இழுத்து பார்க்குமாம்.அதனால் அதிலிருந்து விடுபட முடியாது.மீண்டும் மீண்டும் இழுத்துப் பார்த்தும் அதனால் விடுபடஇயலாது. அந்நிலையில் இனி நம்மால் விடுபடவே முடியாது என தன் மனதில் முடிவு செய்து கொள்ளுமாம்.பின் அந்த யானை வளர்ந்த பிறகு சாதாரணமான கயிற்றை அதன் கால்களில் பாகன் கட்டிவிட்டாலும யானை அதனை அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.ஏனென்றால் தன்னால் இச்சங்கிலியை அறுத்துக் கொண்டுசெல்ல இயலாது என அந்த யானை மனதில் முடிவு செய்துவிடுவது தான் காரணம்.இதுவே விலங்கு மனநிலை.)

ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவு அதுவே அவற்றொடு மனமே.......

(தொல்-பொருள்571–மரபியல்-27) என்பர் தொல்காப்பியர்.
இது உயிர்களின் படிநிலை வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆறறிவுயிர் என உயர்ந்த நிலையில் மனிதன் போற்றப்படுகிறான்.ஏனென்றால் அவனுக்கு மனம் எனும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் உள்ளது. மனத்தன் என்பது மனிதன் என்றானது. மனிதர்களுள்ளும் விலங்குப் பண்பு உண்டு.

ஒரு கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார்.அவர் ஊர் நடுவே இருந்து கொண்டு அவரைக் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்து
இதோ பார் நாய் போகிறது.........
இதோ பார் மாடு போகிறது........
இதோ பார் கழுதை போகிறது.......
என கூறுவாறாம் அதற்காகவே அஞ்சிக் கொண்டு அவ்வழியே மக்கள் செல்வதில்லையாம். ஒரு முறை அந்த ஊருக்கு இராமலிங்க வள்ளலார் வந்தாராம். அந்த ஞானி இருந்த தெருவைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது . வள்ளலாருடன் வந்தவர்களும், ஊராரும் வள்ளலாரிடம் அவ்வழியே செல்லவேண்டாம் அந்த ஞானி எல்லோரையும் விலங்குகளின் பெயர் சொல்லித் திட்டுகிறார் வேறு வழியே செல்லலாம் என்றார்கள்.
ஆனால் வள்ளலாரோ சற்றும் சிந்திக்காது அவ்வழியே சென்றார்.அந்த ஞானியைக் கடக்கும் போது அந்த ஞானி வள்ளலாரைப் பார்த்து இதோ பார் மனிதன் செல்கிறான் என்றாறாம். ஊர்மக்கள் எல்லோரும் வியந்து போனார்களாம்.இந்த ஞானி இதுவரை யாரையும் மனிதன் என அழைத்ததே இல்லையே இவரை மட்டும் ஏன் மனிதன் என்று அழைக்கிறார் என சிந்தித்தார்களாம்.

இது வள்ளலார் பற்றி வழக்கிலிருக்கும் கதை இக்கதை உணர்த்தும் நீதி மனிதர்களாகப் பிறந்துவிட்டால் மட்டும் அவர்கள் மனிதர்களாக ஆகிவிட முடியாது.மனிதத்தன்மையோடு வாழ்ந்தால் மட்டுமே மனிதர்கள் என மதிக்கப்படுவார்கள்............

எல்லா மனிதர்களுக்குள்ளும் விலங்குத்தன்மை இருக்கும் அதனை அறிந்து கொள்வதும்.அத்தன்மையிலிருந்து விடுதலை அடைவதுமே நம்மை மனிதர்களாக வாழச்செய்யும் பண்பாகும்.

திங்கள், 9 மார்ச், 2009

பயிலரங்கம்

எங்கள் கல்லூரியில் நடைபெறவிருக்கும் இணையம் குறித்த பயிலரங்க அழைப்பிதழைக் கீழே காணலாம்


திங்கள், 2 மார்ச், 2009

அணிலாடு முன்றிலார்





தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலை கண்டு தோழி வருந்துகிறாள். இந்நிலையில் தலைவி தன் மனநிலையை எடுத்துரைக்கிறாள்.

தோழி, தலைவன் என் அருகில் உள்ளபோது, மிகவும் மகிழ்ந்து விழாநடக்கும் பேரூர் போல உள்ளேன். ஆனால் அவர் என்னை நீங்கிய போது பாலை நிலத்தில் காணப்படும் குடிகளில் உள்ள சீறூர்களில் உரைவோர் யாவரும் நீங்கிய பின்னர் “அணில் விளையாடும் முற்றத்தைப் போல“ தனிமை கொண்டவளாக பொலிவிழந்து வருந்துகிறேன் என உரைக்கிறாள். இதனை,

“காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி – அவர் அகன்ற ஞான்றே.
குறுந்தொகை-41
எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

காதலன் தன்னுடன் உள்ளபோது சீறூரில் வாழ்ந்தாலும், அதனையே விழா நடைபெறும் பேரூராக எண்ணிக்கொள்ளகிறாள் தலைவி. அதே நேரம் அவன் தன்னைப் பிரிந்தபோது மக்கள் நீங்கிய அணில் விளையாடும் தனியான முற்றத்தைப் போலப் பொலிவிழந்து காணப்படுகிறேன் என உரைக்கிறாள்.
இப்பாடலில் தலைவியின் மனநிலையை “அணிலாடு முன்றில்“ என்னும் சொல் நயமுறக் காட்டுகிறது. இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியாத நிலையில் இத்தொடரையே அவர்தம் பெயராக “அணிலாடு முன்றிலார்“ என இட்டு மகிழ்ந்து வருகிறோம்.