பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 19 ஜனவரி, 2009

புறநானூறு.. (வீரம்)

பாடல்.9
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை :
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,
இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.

“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின். என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!“


இப்பாடலில் சங்க கால மக்களின் போர் மரபு கூறப்படுகிறது.பசுவும் பசுவின் இயல்புடைய பார்ப்பனரும்,பெண்களும்,நோயுற்றவர்களும்,இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்கு சடங்கு செய்யும் புதல்வர்களைப் பெறாதவர்களும் எனப் பலரும் கேட்பீராக....
யாம் அம்புகளை விரைவுபடச் செலுத்திப் போரிட உள்ளோம்.நீவிர் யாவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள் என்று அறநெறியைக் கூறும் மனஉறுதி கொண்டவனாக முதுகுடுமிப் பெருவழுதி இருந்தான் என இப்பாடல் குறிப்பிடுகிறது.

மாற்றரசர் ஆயினும் முன்னறிவிப்புச் செய்து போரால் அவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என எண்ணினான்.இவ்வியல்பு முதுகுடுமிப் பெருவழுதியின் “அறத்தாறு நுவலும் பண்பை இயம்புவதாக உள்ளது.
சங்க காலத்தமிழர்களின் வீரத்திலும் ஒரு மனிதாபிமானத்தைக் காணமுடிகிறது.
இன்றோ மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிகிறார்கள்.இவர்களைக் காணும் போது இவர்கள் மக்களா?மாக்களா?என்னும் ஐயம் தான் எழுகிறது.
“மாவும் மாக்களும் ஐயறிவினவே “
(தொல்-1531) என்பர் தொல்காப்பியர் .அதாவது விலங்கினங்கள் அனைத்தும் விலங்கியல்போடு உள்ளோரும் ஐந்தறிவுடையன என்கிறார்.

மனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் காணும்போது நாம் "மாக்களோடு"தான் வாழ்கிறோம் என்பது புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக