சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.
அகவாழ்க்கையை அகத்திணைகள் உணர்த்துகின்றன.
அகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)
என இரு கூறுகளைக் கொண்டது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.
பண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.
சங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.
தொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் - கரு - உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.
முதல் என்பது நிலம் - பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்
கரு என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது
உரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
கூடல்
ஊடல்
பிரிதல்
இருத்தல்
இரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,
இந்த அட்டவணைகள் விளக்கும்.
குறிஞ்சியின் கருப்பொருட்கள்:
கடவுள்: முருகக்கடவுள்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்
புள்: கிளி, மயில்
விலங்கு: புலி, கரடி, யானை
ஊர்: சிறுகுடி
நீர்: அருவி நீர், சுனை நீர்
பூ: வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்: ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு: மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை: தொண்டகப்பறை
யாழ்: குறிஞ்சி யாழ்
பண்: குறிஞ்சிப்பண்
தொழில்: வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"
-oOo-
முல்லையின் கருப்பொருட்கள்:
கடவுள்: மாயோன் (திருமால்)
மக்கள்: குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள்: காட்டுக்கோழி
விலங்கு: மான், முயல்
ஊர்: பாடி, சேரி, பள்ளி
நீர்: குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ: குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம்: கொன்றை, காயா, குருந்தம்
உணவு: வரகு, சாமை, முதிரை
பறை: ஏறுகோட்பறை
யாழ்: முல்லை யாழ்
பண்: முல்லைப்பண்
தொழில்: சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.
-oOo-
மருதத்தின் கருப்பொருட்கள்:
கடவுள்: வேந்தன் (இந்திரன்)
மக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு: எருமை, நீர்நாய்
ஊர்: பேரூர், மூதூர்
நீர்:ஆற்று நீர், கிணற்று நீர்
பூ: தாமரை, கழுனீர்
மரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை: நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்: மருத யாழ்
பண்: மருதப்பண்
தொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
-oOo-
நெய்தலின் கருப்பொருட்கள்:
கடவுள்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு: சுறா, உமண் பகடு
ஊர்: பாக்கம், பட்டினம்
நீர்:உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம்: கண்டல், புன்னை, ஞாழல்
உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ்: விளரி யாழ்
பண்: செவ்வ்வழிப்பண்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்
-oOo-
பாலையின் கருப்பொருட்கள்:
கடவுள்: கொற்றவை (துர்க்கை)
மக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள்: புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர்: குறும்பு
நீர்: நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ: குரா, மரா, பாதிரி
மரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை: துடி
யாழ்: பாலை யாழ்
பண்: பாலைப்பண்
தொழில்: போர் செய்தல், வழிப்பறி
இவ்வாறு அகவாழ்வியலில் திணைப்பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தனர்.
இந்த அடையாளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் இந்த நிலம் சார்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டான். இவையெல்லாம் தமிழனின் வாழ்வியல் அடையாளங்கள்..
இன்றைய தமிழனுக்கு தமிழன் என்பதற்கான அடையாளங்கள் இப்படி ஏதாவது காணமுடிகிறதா..?
(படங்கள் யாவும் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலரிலிருந்து எடுக்கப்பட்டவை.நன்றி!)
-oOo- -oOo-
-oOo-
வியாழன், 31 டிசம்பர், 2009
புதன், 30 டிசம்பர், 2009
வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்)
எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மொழிகள் உலகில் பல இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் கூறிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியாகும்.
சங்கப்பாடல்கள் அகம், புறம் என்னும் பாகுபாடுடையன. அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் சொல்லப்பட்டுள்ளது.
அகம் என்பது… (களவு, கற்பு)
சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாத மக்களின் அகவாழ்வியலைப்பற்றியது.
கைக்கிளை, குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழும் அகத்திணைகளாகும்..
இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர்கூட்டம், பாங்கியர்கூட்டம், அறத்தொடுநிற்றல், வரைவுகடாவுதல், நொதுமல்வரைவு போன்ற பலவும அகத்துறைகளாகும்..
அகத்திணைகள் ஏழுக்குமான புறத்திணைகள் ஏழை வகுத்தனர் நம்முன்னோர்.பின் புறத்திணைகள் ஏழு என்பது பன்னிரண்டாக வளர்ந்தது.
புறம் என்பது வீரம் கொடை சார்ந்தது.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி. தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை,பெருந்திணை ஆகியன புறத்திணைகளாகும்.
இயன்மொழி,பாணாற்றுப்படை,செவியறிவுறுஉ போன்றன புறத்துறைகளாகும்.
புறத்துறைகள்.
1.வெட்சி. (குறிஞ்சி என்னும் அகத்துறைக்கு புறனானது)
இரு மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்தனர்.
நாங்கள் இவ்விடத்தில் போர் தொடங்கவுள்ளோம் அதனால் ஆவும், ஆவைப்போன்ற பார்ப்பனர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும்,குழந்தைகளும், இவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுங்கள் என்று அவ்வறிவிப்பு இருக்கும்.இந்த அறிவிப்பை ஆநிரைகள் அறியாது ஆதலாலும், ஆநிரைகள் செல்வமாகக் கருதப்பட்டதாலும் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்துவருவர். அப்போது அவர்கள் வெட்சி பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை வெட்சியானது.
2.கரந்தை.
நிரை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்களிடமிருந்து தம் நிரைகளை மீட்பது கரந்தையாகும். ஆநிரை மீட்கப் போர்புரியும் வீரர்கள் கரந்தைப் பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை கரந்தையானது.
3.வஞ்சி.(முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகை நாட்டை விரும்பிப் போர் தொடுத்தல் வஞ்சியாகும். இப்போரின் முதன்மை நோக்கம் பகைநாட்டு மன்னனின் மண்ணைக் கவர்தலாகும்.
4.உழிஞை. (மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகைவருடைய மதிலை வளைத்தல் உழிஞையாகும். இவ்வீரர்கள் உழிஞைப் பூச்சூடுவர்.
5.நொச்சி.
உழிஞை வீரர்கள் மதிலைக் கைப்பற்றாதவகையில் மதிலைக் காத்தல் நொச்சியாகும். இவ்வீரர்கள் நொச்சிப்பூச்சூடியிருப்பர்.
6.தும்பை (நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
இரு மன்னர்களும் போர்க்களத்தில் எதிர் எதிரே நின்று போர்செய்தல் தும்பையாகும். இருநாட்டு வீரர்களும் தும்பைப் பூச்சூடியிருப்பர்.
7.வாகை (பாலை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
வெற்றிபெற்ற மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடுதல் வாகையாகும். இங்கு வாகைப்பூச் சூடப்படும்.
சங்கப்பாடல்கள் அகம், புறம் என்னும் பாகுபாடுடையன. அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் சொல்லப்பட்டுள்ளது.
அகம் என்பது… (களவு, கற்பு)
சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாத மக்களின் அகவாழ்வியலைப்பற்றியது.
கைக்கிளை, குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழும் அகத்திணைகளாகும்..
இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர்கூட்டம், பாங்கியர்கூட்டம், அறத்தொடுநிற்றல், வரைவுகடாவுதல், நொதுமல்வரைவு போன்ற பலவும அகத்துறைகளாகும்..
அகத்திணைகள் ஏழுக்குமான புறத்திணைகள் ஏழை வகுத்தனர் நம்முன்னோர்.பின் புறத்திணைகள் ஏழு என்பது பன்னிரண்டாக வளர்ந்தது.
புறம் என்பது வீரம் கொடை சார்ந்தது.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி. தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை,பெருந்திணை ஆகியன புறத்திணைகளாகும்.
இயன்மொழி,பாணாற்றுப்படை,செவியறிவுறுஉ போன்றன புறத்துறைகளாகும்.
புறத்துறைகள்.
1.வெட்சி. (குறிஞ்சி என்னும் அகத்துறைக்கு புறனானது)
இரு மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்தனர்.
நாங்கள் இவ்விடத்தில் போர் தொடங்கவுள்ளோம் அதனால் ஆவும், ஆவைப்போன்ற பார்ப்பனர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும்,குழந்தைகளும், இவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுங்கள் என்று அவ்வறிவிப்பு இருக்கும்.இந்த அறிவிப்பை ஆநிரைகள் அறியாது ஆதலாலும், ஆநிரைகள் செல்வமாகக் கருதப்பட்டதாலும் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்துவருவர். அப்போது அவர்கள் வெட்சி பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை வெட்சியானது.
2.கரந்தை.
நிரை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்களிடமிருந்து தம் நிரைகளை மீட்பது கரந்தையாகும். ஆநிரை மீட்கப் போர்புரியும் வீரர்கள் கரந்தைப் பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை கரந்தையானது.
3.வஞ்சி.(முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகை நாட்டை விரும்பிப் போர் தொடுத்தல் வஞ்சியாகும். இப்போரின் முதன்மை நோக்கம் பகைநாட்டு மன்னனின் மண்ணைக் கவர்தலாகும்.
4.உழிஞை. (மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
பகைவருடைய மதிலை வளைத்தல் உழிஞையாகும். இவ்வீரர்கள் உழிஞைப் பூச்சூடுவர்.
5.நொச்சி.
உழிஞை வீரர்கள் மதிலைக் கைப்பற்றாதவகையில் மதிலைக் காத்தல் நொச்சியாகும். இவ்வீரர்கள் நொச்சிப்பூச்சூடியிருப்பர்.
6.தும்பை (நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனானது)
இரு மன்னர்களும் போர்க்களத்தில் எதிர் எதிரே நின்று போர்செய்தல் தும்பையாகும். இருநாட்டு வீரர்களும் தும்பைப் பூச்சூடியிருப்பர்.
7.வாகை (பாலை என்னும் அகத்திணைக்குப் புறனானது)
வெற்றிபெற்ற மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடுதல் வாகையாகும். இங்கு வாகைப்பூச் சூடப்படும்.
செவ்வாய், 29 டிசம்பர், 2009
மூங்கில் இலைமேலே........
கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை,
ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..
மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....
என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தினாராம்...
அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..
மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே!
என்று வியந்து போனாராம் கம்பர்..
இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழிப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும்..
ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் இதுபோன்ற ஏட்டிலில்லா இலக்கியங்களின் வழிவந்தவையே..
செவ்வாய், 22 டிசம்பர், 2009
தும்பிசேர்கீரனார்.
“தும்பிசேர்கீரனார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தைக் குறுந்தொகைப்பாடல் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.
392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் து¡ங்கு மலைகிழ்வோற்கே!
392 - குறுந்தொகை-
தும்பிசேர் கீரனார்.
(வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகச்சொல்லியது.)
தலைமக்களின் காதலை தலைவியின் பெற்றோர் அறிந்ததால் தலைவி வீட்டில் வைத்துக் காவல் காக்கப்பட்டாள்.(இற்செறித்தல்)வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டாள்.
தலைவனோ அதைப்பற்றிக் கவலைப்படுபவனாகத் தெரியவில்லை. தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி இருக்கிறான் ( வரைவு நீட்டிக்கிறான் )
இந்நிலையில் தலைவியைக் காண எண்ணிவந்த தலைவன் அருகில் இருக்க, தோழியோ தும்பியிடம் பேசுவது போல தலைவனுக்கு இவ்வாறு சொல்கிறாள்..
நீலமணிபோன்ற அகத்தே சிறகுகளைக் கொண்ட தும்பியே!
கேட்பாயாக…
நல்ல கருத்துக்களை ஒருவரிடம் சொல்வதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை.!
தலைவருடைய நெடிய மலைப்பகுதிக்கு நீ சென்றால் தேனடைகள் தொங்குகின்ற மலைகளை உரிமையாகக் கொண்ட அவரிடம் நீ சொல்….
“தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்று…!
தினைகளுக்கிடையே வளர்ந்த களைகளை புழுதி எழுமாறு நீக்கும் தன்மைகொண்ட தலைவியின் உடன்பிறந்தோர் (தமையன்மார்கள்) அவளைக் காத்தனர்.
(தினைகளுக்கிடையே தோன்றும் களைகளைக் நீக்கும் தமையன்மார்கள் தலைவியின் வாழ்வில் வந்த களையாக காதலையும் நீக்கிவிடுவர் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது)
காவல் மறவர்கள் கிடுகுப்படை என்னும் பாதுகாப்பு வளைத்துக்குள் வைத்து அரசனைக் காத்துச்செல்வர் அதுபோல தலைவியும் தமையன்மார்களின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்று கூறுவாயாக.
(அரசரைக் காக்கும் கிடுகுப்படை - தலைவியைக் காக்கும் தமையன்மார்களுக்கு உவமையானது)
அவள் நினைத்தாலும் அங்கிருந்து வெளியே வரமுடியாது என்று கூறுவாயா?
என்று தும்பியிடம் பேசுகிறாள் தலைவி.
அருகிலிருந்து கேட்கும் தலைவன் தலைவியின் நிலையை உணர்ந்து விரைவில் உடன்போக்கிலோ அல்லது தலைவியின் வீட்டில் கேட்டோ அவளைத் திருமணம் செய்து கொள்ள முயல்வான்.
இந்தப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் கிடைக்காத சூழலில் தும்பியோடு பேசிய இந்த உரையாடலே இப்புலவர் தும்பிசேர்கீரனார் என்று பெயர் பெறக்காரணமானது.
இப்பாடல் வழியாக இப்புலவரின் பெயருக்கான காரணம் விளக்கம் பெற்றதோடு, இற்செறித்தல்,
வரைவு நீட்டித்தல் என்னும் இரு அகத்துறைகளும் விளக்கம் பெறுகின்றன...
திங்கள், 21 டிசம்பர், 2009
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு நினைவுத்துளிகள்.
ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 20.12.09 அன்று மாலை 3 மணி அளவில் தொடங்கி 7 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வலைபப்பதிவர்கள் கூடினர்.இந்த சந்திப்பில் நானும் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
○ தமிழ்மணம் காசி ஐயா, பழமைபேசி, வானம்பாடிகள்,புலவர்.காசி, பரிசல்காரன், கேபிள் சங்கர், சுமஜ்லா, ரம்யா,வசந்தகுமார், செந்தில், நாகா, வெயிலான், சிவா(நிகழ்காலத்தில்) கார்த்திகைப்பாண்டியன் (பொன்னியின் செல்வன்), ஸ்ரீ உள்ளிட்ட வலைப்பதிவர்களும் கலந்துகொண்டனர்.
○ ஈரோடு வலைப்பதிவர்களான,
கதிர், ஆருரன், பாலாசி, நந்தா, வால்பையன்,அகல்விளக்கு, எஸ்ரா, உள்ளிட்டவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெற துணைபுரிந்தனர்.
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட செய்திகளின் சாரம்….
○ தமிழ்த்தாய் வாழ்த்தோடு 3.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கதிர் அனைவரையும் வரவேற்றமர்ந்தார்.
○ ஆரூரன் அவர்கள் பதிவின் அவசியத்தை எடுத்தியம்பினார். “கலிங்கராயன் என்ற சொல் காலிங்கராயன், காளிங்கராயன், காளிங்கரையான் என மாறி வழக்கத்தை எடுத்தியம்பி பதிவிடுவது அவசியம் என்று கூறினார்.
○ வலைச்சரம் சீனா அவர்கள் வலைப்பதிவர்களின் நிலையையும், வலைப்பதிவின் நிலையையும் அழகாக எடுத்தியம்பினார்.
○ தமிழ்மணம் காசி அவர்கள் பேசியபோது வலைப்பதிவின் தற்கால நிலையைக் கூறி அரசு நிறுவனங்கள் கூட தற்போது வலைப்பதிவிடுதலைத் தொடங்கியுள்ளன என்றார். மேலும் கணினிப் பயிற்சிப்பட்டறைகளின் தேவையையும் சொன்னார்.
○ பழமைபேசி அவர்கள் தமிழர்களை இணைக்கும் கட்டமைப்பு வலைப்பதிவால் உருவாகியுள்ளது. வலைப்பதிவர்களுக்கு சமூக அவலங்களை எடுத்துச்சொல்லவேண்டிய கடமை இருக்கிறது என்றார். கடமையோடு சிந்தித்துசெயல்பட வேண்டிய சூழலில் அச்சப்படத் தேவையில்லை என்றியம்பினார்.
○ அமீரகத்திலிருந்து வருகை தந்திருந்த செந்தில் வேலவன் கணினிப் பயிற்சிப்பட்டறைகள் பற்றிப் பேசினார். “ பின்லாந்து என்னும் நாட்டில் ஐம்பது லட்சம்பேர் தான் உள்ளார்கள் இந்த எண்ணிக்கை நம் சென்னை வாழ்மக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு அவர்கள் பேசும் பின்னிசு மொழிக்கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் ஏழு லட்சம் கட்டுரைகள் உள்ளன. ஆனால் ஏழுகோடிபேர்களைக் கொண்ட நம் தமிழ்மொழியில் இருபதாயிரம் கட்டுரைகளையே இப்போது தான் தொட்டுள்ளோம் என்று நிகழ்கால நிலையை இயம்பினார்.
○ பட்டர்பிளை சூர்யா அவர்கள் உலக சினிமாவைப் பற்றிப்பேசினார், வசந்த் அவர்கள் சிறுகதை உருவாக்கம் குறித்துப் பேசினார், சுமஜ்லா அவர்கள் கணினித் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார்.ரம்யா அவர்களும் கலந்து கொண்டு தம் அனுபவங்களை உரைத்தார்.முனைவர்.புலவர். இராசு ஐயா அவர்கள் ஈரோட்டின் மரபுகளையும், தமிழ்மரபுகளையும், கணினியின் முக்கியத்துவத்தையும் கூறியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
○ வானம்பாடிகள், பரிசல்காரன் உள்ளிட்ட வலைப்பதிவர்களும் இணைந்து ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தை அறிமுகம் செய்துவைத்தனர்.
○ பின் விவாதம் தொடங்கியது…..
சுயவிவரமில்லா கருத்துரையாளர்கள்
சுயவிவரமின்றி கருத்துரையிடுவது சரியா? தவறா?
எந்த சூழலில் இவர்கள் இவ்வாறு கருத்துரையிடுகிறார்கள்.
இவர்களின் கருத்துரையை வெளியிடுவது சரியா? தவறா?
என பலவாறு சென்ற விவாதத்தில்.
“படைப்பைப் பொதுவில் வைத்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்கலாமா? அனானி என்று பார்க்காமல் விமர்சனம் என்று பார்ப்பதே சரி என்றார் இளையகவி, லதானந்த் உள்ளிட்டோர் தன்பெயரைக் கூடச் சொல்ல முடியாத அந்த கருத்துரையாளரைப் புறக்கணிப்பதே முறை என்றும் உரையாடினார்கள்.“
நீண்ட நேரம் சென்ற இந்த விவாதத்தில் வலைப்பதிவில் இடம்பெறும் கருத்துக்களுக்கு அந்த வலைப்பதிவரே பொறுப்பு அதனால் கட்டுப்பாடோடு கருத்துரையிடுவதும், இடப்பட்ட கருத்துரைகளை தெரிவு செய்து வெளியிடுவதும் வலைப்பதிவர்களின் கடமை என்று முடிவுக்கு வந்தனர்.மேலும் வலைப்பதிவர்கள் சட்ட விதிகளை அறிந்து கொள்வதன் அவசியத்தையும் பற்றிப் பேசினார்கள்.
○ தமிழ்மணத்தில் இடப்படும் ஓட்டுக்களைப் பற்றியும், சிறிது நேரம் விவாதம் நடந்தது.
○ உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வலைப்பதிவர்களின் இருத்தல் உணர்த்தப்பட வேண்டும் என்றும் உரையாடினார்கள்.
○ வலைப்பதிவு வாயிலாக வருவாய்பெறுவது பற்றி பேசும் போது தமிழ்மணம் காசி ஐயா அகர்வால் அவர்களைக் குறிப்பிட்டு அவர் வலைப்பதில் வரும் வருவாயிலேயே தம் வாழ்நாளை நகர்த்துகிறார் என்றார். கேபிள் சங்கர் தமிழ்வலைப்பதிவுகளில் வருவாய் ஈட்டுபவர்களில் முன்னோடி ஆதலால் அவரும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
○ புலவர் இராசு ஐயா விவாதங்கள் நடைபெற்றபோது இணையத்தில் உள்ள வரலாற்றுப்பிழைகளை எவ்வாறு நீக்குவது என்ற வினவினார். விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களில் இடம்பெறும் இதுபோன்ற தவறுகளைத் தெரிந்த யாவரும் ஆதாரங்களுடன் திருத்திக்கொள்ள முடியும் என்று பதிலளித்தனர்.
○ எதிர்காலத்தில் இந்த வலைப்பதிவர் குழுமம் கணினிப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தலாம் என்ற எண்ணத்தை வெளியிட்டனர்.
○ நன்றி சொல்லிப்பேசிய கதிர் அவரகள் இந்த கூட்டத்துக்கு இருபது பேர் வருவார்கள் என எண்ணியிருந்தோர் நூற்றுக்கு மேலானவர்கள் வந்து இந்த விழாவைச் சிறப்பித்துள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். நா.கணேசன் (தமிழ்கொங்கு) ஐயா அவர்களின் ஊக்குவித்தலையும் தமிழ்மணம் திரட்டியின் ஒத்துழைப்பையும் எண்ணிப் பெருமிதம் கொண்டவராக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
○ ஈரோடு வலைப்பதிவர் குழுமம், தமிழ்மணம், சங்கமம் இணைந்து நடத்திய இந்த வலைப்பதிவர் சந்திப்பு முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.
○ வலைப்பதிவுகளில் நிழற்படத்தைமட்டுமே பார்த்து பழகிய சூழலில் ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் நேரில் கண்டு உரையாடியது புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
○ இந்த கூட்டத்துக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட வலைப்பதிவர்களிடையே நட்பு அதிகரிக்கும் என்பதும் வலைப்பதிவர்கள் தம் வலைப்பதிவை மேலும் செம்மைப்படுத்த இந்த சந்திப்பு துணைபுரியும் என எண்ணகிறேன்.
வெள்ளி, 18 டிசம்பர், 2009
தமிழ் வீரநிலைக்கவிதை
சங்க இலக்கியங்களை ஆய்வுசெய்வோரும், ஓப்பீட்டு முறை ஆய்வுசெய்வோரும் படிக்கவேண்டிய அரிய நூல் “தமிழ் வீரநிலைக்கவிதை“
பொருளடக்கம்
1.சான்றாதரங்களின் மதிப்பீடு
சங்கம் பற்றிய மரபுவழிக்கதை
பாண்பாட்டு
அகம், புறம் என்பவற்றின் ஒருமை
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகத்திணைப்பாடல்களின் தொகைகள்
பத்துப்பாட்டு
தொல்காப்பியம்
புறப்பொருள்வெண்பாமாலை
2.புலவரும் புரவலரும்
செய்யுளும் வருவதுரைத்தலும்
கிரேக்கச்சான்று
புலவர்களுக்குரிய செயல்கள்
நாணும் பழியும்
3.புலவர்களும் புலமை மரபுகளும்
பாணர்
பொருநர்
கூத்தர்
விறலியர்
கோடியர், வயிரியர், கண்ணுளர்
அகவுநர்
புலவர்
பாணர்களின் வகைமை
குடிவழிகள்
4.வாய்மொழிப் பாடலாக்க கலைநுட்பங்கள்
வாய்பாடுகள்
யாப்பு
வாய்பாடுகள்
ஆசுகவித்தன்மையும் பதிலுடு செய்தலும்
5.அடிக்கருத்துக்களும் சுழல் நிகழ்வுகளும்
தொடக்க காலக்கருத்துக்கள்
வெல்ஷ் மற்றும் ஐரிஸ் ஆதாரங்கள்
கிரேக்க ஆதாரம்
பாடுபொருளை உருப்படுத்தல்
6.வீரர் உலகம்
புகழ்விருப்பம்
போரில் துணிவு
வஞ்சினம்
குடிவழி
செல்வம்
வீரரும் வீரரல்லாதோரும்
நூலாசிரியர்
க.கைலாசபதி
மொழிபெயர்பாளர் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
வெளியீட்டாளர்- குமரன் புத்தக நிலையம்
கொழும்பு - சென்னை -2006
புதன், 16 டிசம்பர், 2009
இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)
இணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்பு..
Check out this SlideShare Presentation:
Check out this SlideShare Presentation:
Dr.R.Gunaseelan Inaiyamum Thamizhum
View more documents from aadippaavai.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.
நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.
உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை…………
செயற்கையாகவே வாழப்பழகிவிட்ட நமக்கு……….
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.
கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.
அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.
நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.
இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...
“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!“
நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.
கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.
காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.
பாடலின் விளக்கம் உரையாடலாக…….
தலைவி - வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..
தோழி - ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?
தலைவி - எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.
தலைவன் - வா தோழி நன்றாக இருக்கிறாயா..?
தோழி - நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?
தலைவன் - நான் நன்றாக இருக்கிறேன்..
தோழி - திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?
தலைவன் - மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..
தோழி - நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.
தலைவன் - நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?
தோழி - நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..
தலைவன் - உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.
தோழி - பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.
நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.
மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..
தலைவன் - நான் இவளை நீங்குவேனா…!!
தோழி - மகிழ்ச்சி!
உள்ளுறைப் பொருள் -
நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.
கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.
சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?
இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?
என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.
வெள்ளி, 11 டிசம்பர், 2009
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.
○ தமிழாய்வு, கல்விப்புலம் சார்ந்த நிலையிலும், கல்விப்புலம் சாராத நிலையிலும் செய்யப்பட்டுவருகிறது.
○ பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற புலங்களைச் சார்ந்தும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
○ எந்த தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது என்பது அந்த கல்விநிலையத்துக்கும் ஆய்வாளருக்கும் மட்டுமே தெரியும் நிலை உள்ளது.
○ இதுவரை செய்யப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களையும், செய்யப்பட்டுவரும் ஆய்வுத்தலைப்புகளையும் இணையத்தில் பதிவுசெய்வதால் ஒரே தலைப்புகளில் மீண்டு்ம் மீண்டும் ஆய்வு செய்யும் நிலை மாறும். தமிழாய்வு செம்மைப்படும்.
○ நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்தொடர்பான செய்திகளை இணையத்தில் காண்பதே அரிதாக இருந்தது.
○ இன்று வலைப்பதிவுகள் வந்தபின்னர் கருத்துச்சுதந்திரம் அதிகமாகியுள்ளது. தமிழ் சார்ந்த வலைப்பதிவுகள் பலவும் தமிழ் இணையத்துக்கு இணையாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.
○ இந்நிலையில் கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்வது தமிழாய்வின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணியாக அமையும்.
○ இணையம் என்பது தமிழுக்குத் தொடர்பில்லாதது என்ற நிலையிலேயே தமிழ்த்துறை சார்ந்தோர் தள்ளிநிற்கின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். “இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துபோகவில்லை, அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
○ இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
○ நிதி நல்கை பெற்று தொகுக்கப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டியது அந்த ஆய்வாளரின் அடிப்படைக்கடமையாகக் கொள்ளவேண்டும்.
ஆய்ந்தெடுத்த முத்துக்கள் ஆயிரம்….
முனைவர்.சே.செந்தமிழ்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு இந்தியா.
அவர்கள் எனது நெறியாளர் ஆவார். இவர் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புக்களைத் தொகுத்து ஒரு வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தலைப்புக்கள் …..
சங்க இலக்கியம்
நீதி இலக்கியம்
பக்தி இலக்கியம்
இக்கால இலக்கியம்
எனப் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும்,
ஆய்வுத்தலைப்பு
ஆய்வாளர்
ஆய்வின் உள்ளடக்கம் என்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த நிதிநல்கை உதவியும் இன்றி தொகுக்கப்பட்ட இந்த ஆய்வுத்தலைப்புகள் தமிழாய்வுக்கும், ஆய்வுத்தலைப்பு தேர்வு செய்வோருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழ்த்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை வந்தால் தமிழாய்வு எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலையை அடையும்.
ஆய்வுத்தலைப்பு அடங்கிய வலைப்பதிவின் முகவரி இதோ - “தமிழாய்வு“
புதன், 9 டிசம்பர், 2009
கூவன்மைந்தன்
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,
திருடனுக்குத் தேள்கொட்டியது போல
என்றெல்லாம் பேச்சுவழக்கில் நாம் வழங்கிவருகிறோம்.
திருடனுக்குத் தேள் கொட்டினால் அந்த வலியை அவன் வாய்விட்டு அழுது கூட வெளிப்படுத்த முடியாது.
யாரிடமும் சொல்லியும் ஆறுதலடைய முடியாது
வாழ்வில் சில நேரங்களில் இதுபோன்ற சூழல் நமக்கு ஏற்படுவதுண்டு அவ்வேளையி்ல் நம் மனதில் எண்ணுவதை யாரிடமும் சொல்ல இயலாது வருந்துவோம்.
தலைவனின் பிரிவால் வாடும் தலைவி!
தலைவியின் நிலை கண்டு வாடும் தோழி!
தோழியின் வருத்தம் கண்டு பெருந்துயர் கொள்ளும் தலைவி!
இவர்களின் இச்சூழலை அழகான உவமையால் எடுத்தியம்பும் சங்கப்பாடல் இதோ…
224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
புலவர் - கூவன் மைந்தன்
குறுந்தொகை.
(பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது)
தலைவனின் பிரிவினை தாங்க இயலாது தலைவி இறந்துவிடுவாளோ என்ற வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.
தனக்கு இனிய செந்நிறப் பசு ஒன்று இரவில் கிணற்றில் வீழ்ந்த துன்பத்தைப் பார்த்த உயர்குலத்து ஊமனைப் போலத் துயருரும் தோழியின் உள்ளத்தில் ஏற்பட்ட துன்பத்தினால் யான் உயிர் தாங்க இயலாதவளாயினேன். என்னை வெறுத்துச் சென்ற என் தலைவனால் என் மனதில் ஏற்பட்ட துன்பத்தைவிட எனக்காகத் தோழி படும் துன்பம் என்னை மேலும் வருத்துவதாக உள்ளது.
உயர்குலத்து ஊமன் ஆதலால் கிணற்றில் வீழ்ந்த பசுவை வெளியே எடுத்துக்காக்கும் வழி அறியான்.
அதுபோல தலைவியின் துன்பத்தை நீக்கும் வழி அறியாதவளாக தோழி உள்ளாள்.
கிணற்றி்ல் பசு வீழ்தமையை பிறர்க்கு உரைக்க இயலாதவானாக ஊமன் உள்ளான்.
அதுபோலத் தோழி தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தீர்க்க இயலாதவளாகவும், பிறர்க்கு உரைக்க இயலாத தன்மையது தலைவியின் துயர் என்பதால் உயர்குலத்து ஊமனைப் போல வருந்துவதன்றி வேறு வழியறியாதவளாக இருக்கிறாள்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தலைவனால் ஏற்பட்ட துயரைக் கூட ஒருவழியாகத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் எனக்காக இந்த தோழி படும் துயர் தாங்க இயலாததாகவுள்ளது என்று வருந்துகிறாள்.
பசு கிணற்றில் வீழ்ந்தது இரவு ஆதலால் யாரும் அறியாத சூழல்
தலைவியின் துன்பம் அகம் சார்ந்தது ஆதலால் தன் தாய்க்குக் கூட தெரியாத சூழல்.
இப்பாடல் வழியாக,
• தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயர் அழகாக இயம்பப்பட்டுள்ளது.
• தலைவிபடும் துன்பம் கண்டு வருந்தும் தோழியின் நட்பின் ஆழத்தைப் புலவர் உயர்திணை ஊமன் வாயிலாக சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.
• தனக்காகத் தோழிபடும் துன்பத்தைக் கண்டு வருந்தும் தலைவியன் வாயிலாக தலைவி தன் தோழியின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளாள் என்பதையும் நன்கு எடுத்தியம்பியுள்ளார்
• கூவல் என்ற சொல் கிணற்றைக் குறிக்கும் கிணற்றில் வீழ்ந்த பசு , அதைக் காக்க இயலாத உயர்திணை ஊமன் வாயிலாக அழகாக இப்பாடல் விளக்கம் பெற்றதால் பெயர் தெரியாத இப்புலவர் கூவன் மைந்தன் என்ற பெயர் பெற்றார்.
திங்கள், 7 டிசம்பர், 2009
மூளை என்னும் கணினியைக்காக்கும் எதிர்ப்பு நச்சுநிரல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -194
ஒவ்வொரு முறை புதிய கணினிகள் கண்டுபிடிக்கப்படும் போதும், அதன் நினைவுத்திறன், செயல்திறன் ஆகியவற்றின் சிறப்பினையே யாவரும் வியந்து பார்ப்பது வழக்கம். ஆனால் எனக்கு அந்தக் கணினியைக் கண்டறிந்த மனிதமூளையை எண்ணியே வியப்புத் தோன்றும்.
ஆம் மனித மூளையை அடிப்படையாகக் கொண்டே கணினிகள் வடிவமைக்கப்படுகின்றன. கணினியைப் போலவே மனித மூளை செயல்படுகிறது. கணினியை நச்சுநிரல்(வைரஸ்) தாக்கி அழிப்பது போலவே மனிதமூளையைப் பல நச்சுநிரல்கள் ( இன்பம், துன்பம், ) தாக்கி அழிக்கின்றன. கணினியைப் பாதுகாக்க நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்கள் (ஆன்டிவைரஸ்) தேவைப்படுவது போலவே மனித மூளை என்னும் கணினியைக் காக்கவும் நச்சுநிரல் எதிர்ப்புமென்பொருள்கள் தேவைப்படுகின்றன.
இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…
அளவுக்கதிகமான இன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
அளவுக்கதிகமான துன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …
நம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன.
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
துன்பம் வரும் போது சிரி என்றார் வள்ளுவர்..
துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர் என்கிறார் பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர்.
எதிர்மறை எண்ணங்கள் என்னும் நச்சுநிரல் மூளையைத் தாக்கும் போது நேர்மறை எண்ணங்கள் என்னும் எதிர்ப்பு நச்சுநிரலைப் பயன்படுத்தி மூளையை சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று இயம்புகின்றது இவர்தம் பாடல், பாடல் இதோ,
பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்
நிலையாமை உணர்த்துதல் பெருங்காஞ்சி எனப்படும். இன்னாதம்ம இவ்வுலகம், இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே எனக் கூறியதால் இப்பாடல் பெருங்காஞ்சித் துறையானது.
முழவின் பாணி!
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
புறநானூறு 194.
திணை - பொதுவியல்
பெருங்காஞ்சி
ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை
( சாவுக்கொட்டு மேளம்) ஒலிக்கிறது.
ஒரு வீட்டில் திருமணத்துக்கு இசைக்கும் முழவோசை முழங்குகிறது.
கணவரோடு கூடிய மகளிர் மலர் அணிந்து மகிழ்ச்சியோடு உள்ளனர். கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் வரக் கலங்குகின்றனர்.
இந்த உலகைப் படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் அவன் நல்ல பண்பில்லாதவனாகவே இருப்பான்.
ஏனென்றால் தாங்கிக்கொள்ள இயலாத துன்பங்களை இன்பங்களுக்கிடையே வைத்தானே !
என்பது இப்புலவரின் புலம்பலாகவுள்ளது.
இன்னாமை நிறைந்த இவ்வுலகில் இனிமை காணுவோர், உலகின் இயல்பை நன்குணர்தோராவர் என்னும் இப்பாடல்வழி,
உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது இனிமையானதுதான் என்கிறார் இப்புலவர்.
இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.
நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.
எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்
“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”
ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் … தன்னைத்தவிர!
“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”
ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.
ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.
நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்.
இன்பம், துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.
துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !
என்பதை கூறுவதே இப்பாடல்.
யாரும் தொலைக்கவில்லை !
ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..
நிம்மதியை..!
நம் மூளையை அழிவிழிருந்து காக்கும் ” நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்கள்” என்பவை நேர்மறை எண்ணங்களே!
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் இன்னாத உலகமும் இனியதாகும்..!
என்பது இப்புலவரின் புலம்பலாகவுள்ளது.
இன்னாமை நிறைந்த இவ்வுலகில் இனிமை காணுவோர், உலகின் இயல்பை நன்குணர்தோராவர் என்னும் இப்பாடல்வழி,
உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது இனிமையானதுதான் என்கிறார் இப்புலவர்.
இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.
நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.
எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்
“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”
ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் … தன்னைத்தவிர!
“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”
ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.
ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.
நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்.
இன்பம், துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.
துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !
என்பதை கூறுவதே இப்பாடல்.
யாரும் தொலைக்கவில்லை !
ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..
நிம்மதியை..!
நம் மூளையை அழிவிழிருந்து காக்கும் ” நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்கள்” என்பவை நேர்மறை எண்ணங்களே!
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் இன்னாத உலகமும் இனியதாகும்..!
புதன், 2 டிசம்பர், 2009
இம்மென்கீரனார்.
இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல்,
இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும்,
துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.
இன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை “அழுகை, புலம்பல்“ இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...
இவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்..
மன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.
இங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...
களவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.
(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)
அஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாள். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.
“பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….
எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!
இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.
கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?
நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!
உன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா?
அவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்?
நீயோ நெடுந்தொலைவு வந்துள்ளாய்!
நின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக!
ஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..!
இன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..?
என வினவுகிறாள்..
பாடல் இதோ…
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
படித்துப் பயன்பெறவும்.
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!
இம்மென்கீரனார் (அகநானூறு-398)
இப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..
1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்…
“நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று“
என்னும் அடியில் இடம்பெற்ற “இம்“ என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.
2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.
3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.
4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல் விடுக்கிறாள்.
வெள்ளி, 27 நவம்பர், 2009
நிலம்புடை பெயரினும் (150வது இடுகை)
உலகத்தின் அழிவை முன்மொழியும் படமாக இப்போது ருத்ரம் 2012 என்னும் படம் உலகெங்கும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் உலகத்தின் அழிவு என்பது எப்படியிருக்கும் என்ற சிந்தனை மையக் கருத்தாகவுள்ளது. பைபிள், திருக்குரான் போன்ற மறை நூல்களில் இந்த உலக அழிவு முன்பே கூறப்பட்டுள்ளது என்று கூறும் இப்படத்தில் “ நில அதிர்வு, கடல்கோள் (சுனாமி), எரிமலை, வெண்ணீர் ஊற்று என பலவிதங்களில் இயற்கையின் சீற்றம் அமையும் என்ற கருத்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது.
“இயற்கைச் சீற்றங்களால் உலகம் அழிவதில்லை,
மனிதர்களிடம் அன்பு குறையும் போது தான் உலகம் அழிந்து போகும்”
என்ற காட்சிக்கு திரையரங்கில் பலத்த கைதட்டல் ஒலிக்கிறது.
இந்தப் படத்தில் வரும் காட்சிகள் எதிர்கால சிந்தனை கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என்பதை அறிவுறுத்துபவை.
உலகம் அழியப் போகிறது என்ற செய்தியை மறைநூல்கள் (பைபிள், திருக்குரான்) முன்பே சொல்லியிருக்கின்றன என்று வாதம் செய்பவை.
மறைநூல்களில் மட்டுமல்ல சங்க இலக்கியங்களிலும் இயற்கைச் சீற்றங்கள் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன என்பதை எடுத்தியம்புவதாக இவ்விடுகை அமைகிறது. சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.
“ நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ- தோழி- நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிறல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூர்ப் பூநாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?'
குறுந்தொகை-373
மதுரைக் கொல்லன் புல்லன்
அலர்மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.
(அலர் என்பது தலைமக்களின் காதலை ஊர்ப்பெண்டிர் புறம்பேசுதல்)
தலைவன் மீது தலைவி கொண்ட காதல் உறுதி வாய்ந்தது. அதனை வெவ்வாய்ப் பெண்டிரின் அலர் மொழியால் அழித்துவிடமுடியாது என்று கலங்கிய தலைவியிடம் கூறினாள் தோழி.
“நிலம் கீழ்மேலாகப் பெயர்ந்தாலும்
நீரின் தட்பம் நெருப்பிற்கும்
நெருப்பின் வெப்பம் நீருக்குமாக மாறினும்
பெரிய கடல் வற்றி எல்லை தோன்றினாலும், அலர் பேசும் பெண்டிரின் அலர்மொழியால் உன் காதல் அழிந்துபோகாது.
கடிய பற்களையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஊகம் என்னும் குரங்கு பலாப்பழத்தைத் தோண்டுதலால் காந்தள் மணம் வீசும் ஊரெங்கும் பலாப்பழத்தின் மணம் வீசும். அத்தகைய நாடனானான தலைவனோடு நீ கொண்ட நட்பு வெவ்வாய்ப் பெண்டிர் பேசும் அலர் மொழியால் அழியாது கவலைப்படாதே!
என்று தேற்றுகிறாள் தோழி.
அகச்செய்திகள்.
1.தலைவன் மீது தலைவி கொண்ட காதலை ஊரார் அறிந்து தூற்றுவதால் கலங்கிய தலைவியிடம் தோழி இயற்கை, தன்னிலை மாறினாலும் நீ தலைவன் மீது கொண்ட காதல் அழியாது என்று காதலின் ஆழத்தை உணர்த்துகிறாள்
2.குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால் மணம் ஊரெங்கும் வீசியது என்ற குறிப்பால் தலைமக்களின் காதலை ஊரார் அறிந்தமையும் அதனால் தலைவியின் பெற்றோர் அறிந்தமையும் உணரமுடிகிறது.
3.கருங்குரங்கு பலாவினைத் தொடுதல் கண்டு அதனைக் காப்போர் குரங்கினை விரட்ட முற்படுவர். அதுபோல தலைவனிடமிருந்து தலைவியைக் காக்க எண்ணிய பெற்றோர் தலைவியை இற்செறிக்க முற்படுவர். அதனால் தலைவி அஞ்சினாள்.
அறிவியல்ச் செய்திகள்
1. நிலம் கீழ்மேலாகப் பெயரும் என்ற உண்மையை சங்கத்தமிழர்கள் அறிந்திருந்தனர். நிலநடுக்கம் குறித்த அறிவு அவர்களுக்கு இருந்ததை இச்செய்தி புலப்படுத்துகிறது.
2. நீரும் நெருப்பும் தன்னிலை மாறும் என்பதன் வாயிலாக கடல்கோள்(சுனாமி), எரிமலை பற்றியும் பண்டைத்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிலாம்.
3. எல்லை காணமுடியாத கடலும் இயற்கையின் சீற்றத்தால் மாற்றத்தால் எல்லை காணும் நிலை வரும் என்ற சிந்தனையும் எண்ணி வியப்பெய்தத் தக்கதாகவுள்ளது.
வியாழன், 26 நவம்பர், 2009
தொடித்தலை விழுத்தண்டினார்.
வாழ்க்கை எவ்வளவு தூரம்…?
கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!
இந்த வாழ்க்கை ஆற்றுநீர்போன்றது சில நொடிகளுக்கு முன் இருந்த நீர் அடுத்த நொடி அங்கு நில்லாது ஓடும் அது போல இளமை நிலையில்லாதது.
இளமைக்காலத்தில் யாருடைய அறிவுரையையும் கேட்பதில்லை மனது.
இளமைக்காலத்தில் செய்வதெல்லாம் சரியென்றே சொல்லும் மனது எதற்கும் அஞ்சுவதில்லை.
வயது முதிர்ந்தபோது இளமைக்கால நிகழ்வுகளெல்லாம் வந்து வந்து போகும்.
மாடு அசைபோடுவது போல இங்கு ஒரு முதியவர் தன் இளமைக்கால அனுபவங்களை அசைபோட்டுப்பார்க்கிறார்.
பாடல் இதோ..
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
பாடலின் பொருள்.
செறிந்த மணலில் செய்த வண்டற்பாவைக்குப் பூவைப்பறித்துச் சூடுவர் இளமகளிர். அந்த மகளிருடன் கைகோத்து அவர்களுடன் தழுவியவழி தழுவியும், அசைந்தவழி அசைந்தும் ஒளிவு மறைவு அறியா இளமைந்தரும் விளையாடுகின்றனர்.
அத்தகைய மைந்தருடன் உயர்ந்த மருத மரம் விளங்கும் நீர்த்துறையில் தாழ்ந்து நீருக்கு மிக அருகில் படிந்த கொம்புகளில் ஏறி கரையிலுள்ளோர் திகைப்பெய்த நீர்த்திவலைகள் சிதற திடும் எனக் குதிக்கின்றனர்.
மூச்சடக்கி நீரின் அடியில் சென்று மணலெடுத்து வருகின்றனர்.
எதையுமே ஆராய்ந்து பார்க்காத இளமைப் பருவம் இரங்கத்தக்கது.
அத்தகைய இளமைப்பருவம் இன்று எங்கு சென்றதோ..?
பூண் செறிந்த பெரிய தடியை ஊன்றியவராயும், நடுக்கமுறுபவராயும், இருமல்களுக்கிடையே
சில சொற்களைப் பேசுகின்ற முதுமையுடையவர்களாகிய எங்களுக்கு அவ்விளமை எங்கிருக்கிறதோ.?
அது இரங்கத்தக்கது.
இப்பாடல் வாயிலாக அறியப்படும் உண்மைகள்.
1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெற்ற “தொடித்தலை விழுத்தண்டு என்னும் தொடரின் சிறப்புக் கருதி இப்புலவர் “தொடித்தலை விழுத்தண்டினார் என்றே அழைக்கப்படலானார்
3. செறிந்த மணலில் செய்த வண்டற்பாவைக்குப் பூவைப்பறித்து சூடி இளமகளிர் விளையாடும் பாவை விளையாட்டு பற்றி அறியமுடிகிறது.
3. கையற்றுப் புலம்புவது கையறுநிலையாகும். இப்பாடலில் இளமை கடந்து போனதால் இம்முதியவர் கையற்றுப் புலம்புகிறார். கையறுநிலை என்னும் துறையும் விளக்குதாகவும் இப்பாடல் விளங்குகிறது.
செவ்வாய், 24 நவம்பர், 2009
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..
காதலித்துப் பார்
நிமிசங்கள் வருசமென்பாய்
வருசங்கள் நிமிசமென்பாய்!
என்பார் வைரமுத்து.
நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீயென்னை நீங்கிச்சென்றாலே..!
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீயென்தன் பக்கம் நின்றாலே…!
என்று காதல் தேசம் என்னும் படத்தில் அன்பே அன்பே என்றபாடலில் வரிகள் இடம்பெறும்.
இந்த சிந்தனையை இன்றைய பல திரைப்படப்பாடல்களிலும் பலவாறு கேட்கமுடிகிறது.இந்த சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்த குறுந்தொகைப்பாடல் இதோ...
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“
குறுந்தொகை-57 சிறைக்குடி ஆந்தையார்
(தலைவியின் காதலை அவள்தம் பெற்றோர் அறிந்ததால் இற்செறித்தனர். அந்த காவல் மிகுதியில் தலைவனைச் சந்திக்க இயலாத ஆற்றாமையில் வருந்திய தலைவி தன் துன்பத்தைத் தோழியிடம் இவ்வாறு தெரிவிக்கிறாள்.)
நீர்வாழ்ப்பறவை அன்றில். ஆணும் பெண்ணுமாக ஒன்றையொன்று பிரியாமல் வாழ்வன.
தமக்கிடையே பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலஅளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன. அந்தப் பறவைகள் போல ஓருயிர் இரு உடல்களாக நானும் தலைவனும் வாழ்கிறோம்.
தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓருடலில் வாழும் இழிவு ஏற்படும்.
அதற்குத் தலைவன் பிரிந்தவுடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.
இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.
அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..
இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.
அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..
இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
சொற்பொருள் விளக்கம்
இருவேம் - இருவரும் சேர்ந்தே தோன்றுவோம்
காமம் - மெய்யுறு புணர்ச்சி, அன்பின் மிகுதி
தண்டாக்காமம் - அடங்காத காமம்
திங்கள், 23 நவம்பர், 2009
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..
பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?
பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…
ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.
(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)
“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“
(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)
சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.
· பாம்பு தோற்றத்தால் அழகிய கோடுகளை உடையதாயினும் செயலால் மிகவும் கொடியது.
· பெண் அழகிய தோற்றம் உடையவளாயினும் உயிரைக் கொல்லும் உணர்வுகளைத் தூண்டக்கூடியவள்.
· பாம்பு தன் பற்களில் கொண்ட விசத்தன்மையால் அடுத்தவரைத் துன்புறுத்தும்.
· பெண் சிரிப்பு என்னும் முறுவல் குறிப்பால் காண்போர் நெஞ்சை வருத்தும் இயல்பினள்.
· பாம்பின் குட்டி தீண்டினால் உடலெங்கும் விசம் பரவும்.
· பெண்னைப் பார்த்தல், அவள் உடல் தீண்டுதல் ஆகியவற்றால் ஆணின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதனால் பெண்வழிச் சேரலில் ஆண் தன் வாழ்க்கையைத் தொலைக் நேரிடும்.
இவ்வாறு பாம்புக்கும், பெண்ணுக்கும் பல ஒற்றுமைகளைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் இருக்கும் ஈர்ப்பே மனித இனம் வளர்ச்சி பெறக் காரணமாகிறது.
இந்த ஈர்ப்பு மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.
காதல் - அன்பு - ஈர்ப்பு ஆகியவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாகும்.
இந்த வேதியியல் மாற்றங்களால் ஆணும் பெண்ணும் தன் வாழ்வியல் நெறிகளில் பிறழ்ந்துவிடக்கூடாது என்று பல வழிகளில் நம்முன்னோர் அறிவுறுத்தினர்.
அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே..
சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே
என்று அறிறுத்தினர்.
சீறும் பாம்பு யாரைப் பார்த்துச் சீறினாலும்
தன்னைப் பார்த்துச் சீறுவதாகவே நம்ப வேண்டும்!
சிரிக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரித்தாலும்
ஒரு நொடிப் பொழுது யோசிக்க வேண்டும்……
ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!
பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!
புதன், 18 நவம்பர், 2009
இரும்பிடர்த்தலையார்
தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்துறையையும் விளக்குவதாக இவ்விடுகை அமைகிறது.
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடிய புறநானூற்றுப்பாடலில் எடுத்தாளப் பெற்ற “இரும்பிடர் தலையிருந்து“ என்னும் தொடரால் “ இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார்.
நிலம் பிறழ்ந்து பெயர நேர்ந்தாலும் உன் ஆணையாகிய சொல்லில் மாறாதே என்று மன்னனுக்குப் புலவர் அறிவுறுத்தியதால் இப்பாடலின் துறை “செவியறிவுறூஉ“ ஆயிற்று.
பாடல் இதோ,
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
பாடலின் பொருள்.
முழு மதியின் வடிவத்தைப் போல விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை!
அது நிலைத்த கடற்பரப்பை எல்லையாக உடைய நிலத்தை, நிழல் செய்யவும் காவலாக அமைத்த முரசு, இழும் என்னும் ஓசையுடன் முழங்கவும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தியவர் பாண்டியர்!
அருளுடைய நெஞ்சமும் குறையாத ஈகையும் கொண்டவர். அத்தகைய பாண்டிய மரபிலே வந்தவனே!
குற்றமற்ற கற்பினையுடைய சேயிழையின் (மனைவி, பெண்) கணவனே!
பொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளியையுடைய நெற்றியையும் நெருங்க முடியாத வலிமையையும் மணம் வீசும் மதநீரையும், கயிற்றால் கட்டிய கவிழ்ந்த மணிகள் பொருந்திய பக்கங்களையும் பெரிய துதிக்கையையும் கொண்டது உனது யானை!
அது தன் தந்தங்களையே போர்க்கருவியாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தும்!
அத்தகைய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து கூற்றுவனைப் போல, பகைவர் மீள வழியின்றி வீழ்த்தும், ஒளி வீசும் வாளைக் கையில் கொண்டவனே!
பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த காலும், பூசப்பட்டு உலர்ந்த சந்தனத்துடன் குறுக்கே அகன்ற மார்பையும் கொண்டவனே!
நீரில்லாத அரிய நில வழிகளில் மறவர்களின் அம்புக்கு இலக்காகி இறந்தவர்களின் அடையாளமாக அங்கு கற்குவியல்கள் காணப்படும். அதன் மீது திருந்திய சிறகினையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து அமர்ந்து வருந்தும்.
உன்ன மரங்கள் வளர்ந்து பிரிந்து செல்லும் வழிகள் விளங்கும்.
இத்தகைய வழிகளைக் கடந்து உன்னிடம் பொருள் பெறும் எண்ணத்துடன் இரவலர் வருவார்கள். அவர்களின் மனக்குறிப்பை முகக்குறிப்பாலேயே உணரும் திறன்கொண்டவன் நீ என்பதால் உன்னை இரந்து வேண்டுவர்.
அதனால் நிலமே பெயர்வதாயினும் உன் ஆனையாகிய சொல் மாறக்கூடாது. என்று மன்னனிடம் இந்தப் புலவர் அறிவுறுத்துகிறார்.
இப்பாடலின் வழி அறியாலுகும் உண்மைகள்
1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத நிலையில் இப்பாடலில் இடம்பெறும், “இரும்பிடர்த் தலையிருந்து“ என்னும் தொடரால் இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து புலப்படுகிறது.
2.எமனிடமிருந்து உயிர்கள் பிழைப்பது அரிது என மக்கள் எண்ணுவர். அது போல பாண்டியனிடமிருந்து பகைவர் பிழைத்தல் அரிது. என்ற கருத்தின் வழியாக பாண்டியனின் வீரம் உணர்த்தப்படுகிறது.
3.யானையின் வீரத்தையும், அதன் மீது அமர்ந்து போர்செய்யும் பாண்டியனின் வலிமையையும் கூறுவதால், பாண்டியனின் படைச்சிறப்பும், அதை வழிநடத்தும் ஆற்றலும் சுட்டப்படுகிறது.
4.நீரில்லாத பாலை வழியே வரும் மக்களை அம்பெய்து கொல்லும் ஆறலைக்கள்வர்கள் இறந்த உடல்களின் மீது கற்களைக் குவியல்களாகப் போடுவர். வழிச்செல்வோர் “வம்பலர்“ என்றழைக்கப்படுவர். அவர்கள் மீது இடப்பட்ட கற்க்குவியல் ஆதலால் அதை “வம்பப் பதுக்கை“ என்று அழைத்தமையும் அறியமுடிகிறது.
5.“முன்னம் முகத்தின் உணர்ந்து“ என்னும் தொடர் வழியாக,உன்னம் என்ற மரம் தழைத்தலும், கரிந்து நிற்றலும் சகுனங்களாகும் என்ற சங்க கால நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளலாம்.
6.பாலை நிலத்தின் கொடுமையும், ஆறலைக்கள்வர்களின் கொடுமையும், அந்நில வழியே பல துன்பங்களைக் கடந்து பாண்டியனை நம்பி வரும் இரவலர்களின் வறுமையும் குறிப்பிடும் புலவர், இரவலர்களின் மனக்குறிப்பை அவர்களின் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டு கொடையளிக்கும் தன்மையுடையவன் பாண்டியன் என்று கூறுவதால் பாண்டியனின் கொடைத்திறனும் சுட்டப்பட்டது.
7.நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்..
என்று பாண்டியனின் செவிகளில் புலவர் அறிவுறுத்துகிறார். இதன் வழி இரவலர் உன் மீது கொண்ட நம்பிக்கையும்,உன் செங்கோலும் வழுவாது ஆடசி செய்தல் வேண்டும் என்ற அறிவுத்தல் புலனாகிறது....
மேலும் நிலம் பெயரும் (நிலநடுக்கம் ஏற்படும்) என்ற சங்க கால மக்களின் எண்ணத்தையும்,
அவ்வாறு நிலம் பெயர்ந்தாலும் தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற சங்ககாலமக்களின் ஆழ்ந்த கொள்கையையும் எண்ணிப்பெருமிதம் கொள்வதாக இப்பாடல் அமைகிறது.
செவ்வாய், 17 நவம்பர், 2009
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
எமன் என்னும் கற்பனை மக்களிடம் நீண்ட நெடிய காலமாகவே இருந்து வருகிறது. எமன் என்பவன் மக்களின் உயிரை வாங்கும் தெய்வம். எருமை வாகனத்தில் வருவான். இவனுக்கு காலன், கூற்றுவன் என வேறு பெயர்களும் உண்டு. சங்க இலக்கியத்தில் எமனைப் பற்றி பல பாடல்கள் பலவிதமாகப் பாடப்பட்டுள்ளன. புறநானூற்றில் எமனின் இரங்கத்தக்க நிலையை நப்பசைலையார் சுவைபடக் கூறியுள்ளார்.
பாடல் இதோ,
“செற்றன்று அயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும் - பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே“.
புறநானூறு.226
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கி்ள்ளி வளவனை மாறோகத்து நப்பசலையார் பாடியது
கூற்று என்னும் கால இறுதி பயக்கும் தெய்வம், எல்லா உயிர்களின் உயிரையும் எளிதில் எடுத்துவிடலாம்.
ஆனால் கிள்ளிவளவனின் உயிரைமட்டும் எளிதில் எடுத்துவிடமுடியாது.
கிள்ளி வளவன் மீது பகை கொண்டாலும்
சினம் கொண்டாலும்
அவனிடமிருந்து பிழைத்தல் அரிது.
பாடுநர் போல வந்து தொழுது அவனிடம் கொடைப் பொருளாக வேண்டுமானல் அவன் உயிரைப் பெறலாம். அதனால் பொன்னால் செய்த மாலையையும், போரில் எதிர் நின்று வெல்லும் படையினையும், நல்ல தேரையும் கொண்ட சோழனின் உயிரை வவ்வ வேறு வழியே இல்லை.
இப்பாடலில் கூற்றுவன் என்னும் எமன் சோழனின் உயிரை செற்றோ ( பகை கொண்டோ) செயிற்றோ ( சினம் - கோபம் - வெகுளி கொண்டோ) பெற முடியாது மாறாக., பாடுநர் போல வணங்கி உன் உயிரைத் தா என்று கேட்டால், கொடை என்று மனமகிழ்ச்சியோடு ஈந்துவிடுவான் என்கிறார் புலவர்.
இப்பாடலில் கிள்ளிவளவனின் வீரமும், கொடைத்திறமும் சிறப்பித்துப் பேசப்படுகிறது.
எமனே நெருங்க அஞ்சும் வீரமுடையவன் சோழன் என்றும்,
பாடுநர் போல வணங்கிக் கேட்டால் தன் உயிரைக் கூடத் தந்து விடுவான் என்பதால் அவன் கொடைத்திறமும் உணர்த்தப்பட்டது.
எமன் என்னும் கடவுள் குறித்த நம்பிக்கை சங்ககாலத்திலிருந்து இன்று வரை இருக்கிறது.
நம்பிக்கை மட்டுமே இருக்கிறது
இப்பாடலில் வளவனின் வீரத்தையும், கொடையையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதே புலவரின் நோக்கம். அதற்கு மக்கள் அஞ்சும் உயர் குறியீடாகவுள்ள கூற்றுவனை எடுத்துக்கொணடார்.
திங்கள், 16 நவம்பர், 2009
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்
பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற்கான எந்த அடையாளமும் இன்றியே உள்ளன. இன்றைய குழந்தைகள் பெயரால்
டமிலனின் குழந்தைகளாக, மணிப்பிரவாளக் குழந்தைகளாக உள்ளன.
தமிழில் இல்லாத பெயர்களா..?
சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் 473 பேர் ஆவர்.
இவர்களின் பெயர் அகர வரிசையில் பெற இங்கு அழுத்தவும்.
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -1
குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -2
தமிழகம்
தமிழ்மக்கட்பெயர்
களஞ்சியம்
அழகுத்தமிழ்ப் பெயர்கள்
தமிழ்ப் பெயர்கள். ( பெண் )
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது தமிழ் மரபின், பண்பாட்டின் நீட்சி.......
சனி, 14 நவம்பர், 2009
கூகைக்கோழியார்
இலக்கை இயம்புவதே இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையுமே இலக்காக இயம்பியுள்ளன.
அறவழியே பொருளைத் தேடி அதை இன்பத்துக்குச் செலவழித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக உள்ளது.
அறவழியே தேடுவதே பொருள்
அந்தப் பொருளை இன்பத்திற்கே செலவழிக்க வேண்டும்.
அப்போது வீடுபேறு தானே கிடைக்கும்.
இன்பம், வீடுபேறு (சொர்க்கம்)
சிற்றின்பம், பேரின்பம் என இன்பம் இருவகைப்படும்.
நமக்குத் தோன்றும் சுயநல ஆசைகள் யாவும் சிற்றின்பங்களே.
வீடு பேறு அடைய எண்ணுவதே பேரின்பம்.
சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.
நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…
சொர்க்கம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு குறியீடு.
நரகம் என்பது மக்களை அச்சுறுத்தி நல்வழிப்படுத்தும் முயற்சி.
இன்பம் என்பது யாது?
கொடுத்து மகிழ்தலே இன்பம்.
அடுத்தவருக்குக் கொடுத்து அவரின் முகமலர்ச்சி காண்தலே இன்பம்.
இறந்த பின்பு சொர்க்கம் சென்று அங்கு கொடுத்து மகிழமுடியாது என்று அறிவுறுத்துகிறது இப்பாடல்,
'வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே
364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
(புறநானூறு)
பாடலின் பொருள்
வாடாத பொன்மாலையை பாடினி அணியவும்,
நீர்நிலையில் பூக்காத எரிபோலும் பொற்றாமைரை மலரை பாணன் பெற்று மகிழவும்,
கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்தி அதன் ஊனை தீயிலிட்டுச்சுட்டு, அந்த சுவையான ஊன் உணவை கள்ளோடு இரவலர்க்கு இட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்வோம் அதுவே இன்பம் வா..
என்று அரசனைப் புலவர் அழைப்பதாக இப்பாடல் அமைகிறது.
(அரசன் பாடினிக்குப் பொன்மாலையும், பாணனுக்கு பொற்றாமரையும் பரிசில் தந்து கள்ளும் ஊன் உணவும் கொடுதது மகிழ்விப்பது மரபாகும்)
(ஈத்துவக்கும்) கொடுத்து மகிழும் இன்பத்தின் இன்றியமையாமையை,
மறப்போரைச் செய்பவனே, முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து கேட்போர் அஞ்சத்தக்க குரலில் கூகை என்னும் பேராந்தை கூவ,
பிணங்களை இட்டுவைக்கும் ஈமத்தாழிகள் நிறைந்த சுடுகாடு சென்றபின்னர் கொடுத்து மகிழும் இவ்வின்பம் கிடைக்குமா..?
அதனால் உயிரோடு இருக்கும் இல்வாழ்க்கையிலேயே கொடுத்து அடுத்தவர் மகிழ்வதைப் பார்த்து இன்பம் காண் என்கிறார் புலவர்.
வாழ்க்கை நிலையில்லாதது!
கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!
என்ற கருத்தை எடுத்தியம்பிய இப் புலவரின் பெயர் கிடைக்கவில்லை.அதனால் இப்பாடலில் சிறந்த தொடராக அமைந்த கூகைக் கோழி என்பதே இவருக்கு கூகைக்கோழியார் என்று பெயர் தோன்ற காரணமானது…
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)