வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

உள்ளத்தனையது உயர்வு

 


வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.

சோம்பலின் இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின் பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும் பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.

ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில் ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும் தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது

ஊக்கத்தை மனதின் எழுச்சி, புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..

ஊக்கத்தை உள் ஊக்கம், புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.

உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..

புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும் சூழல்களாலும் தோன்றுகிறது.

ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.

ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

இதுவும் கடந்துபோகும் - வானொலி உரை

 


இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். இன்பம் சிரிப்பையும், துன்பம் அழுகையையும் வரவழைக்கிறது. உண்மையான நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இரண்டு மடங்காகிறது. துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறைகிறது. நமக்குப் பிடித்த செயல்களில் உள்ள துன்பங்களை மனம் கண்டுகொள்வதில்லை. நமக்குப் பிடிக்காத செயல்களில் உள்ள சிறு துன்பங்களையும்,  மனம் ஏற்றுக்கொள்வதுமில்லை, சகித்துக்கொள்வதுமில்லை. பக்குவமுடையவர்கள் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகவே பார்ப்பார்கள். பக்குவத்தின் முதிர்ந்த நிலை துன்பத்திலும் சிரிப்பது.

 திருக்குறளில் (63) இடுக்கண் அழியாமை என்றொரு அதிகாரம் உண்டு

 இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரிஅதுதான் துன்பத்தை வெல்லும் வழி  என்றார் திருவள்ளுவர். துன்பத்தில் சிரிக்கமுடியுமா? அப்படிச் சிரித்தால் அவர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும். இவருக்கு மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்றுதானே பார்க்கும்.  மருத்துவர் ஊசி போடும் போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம். ஆனால் பெரியவர்கள் அழுவதில்லை. இது எப்படி சாத்தியமானது? இருவருக்கும் வலி பொதுவானதுதானே.. இருந்தாலும் வலியை ஏற்றுக்கொள்ள மனம் துணிந்துவிட்டால் துன்பங்கள் தெரிவதில்லை..

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

நூல் பல கல்..

 

அறிவை வளர்க்கும் வாயில்களுள் நூல்கள் குறிப்பிடத்தக்கன.

கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் என பதிவுசெய்யப்பட்ட மனித சமூகத்தின் அனுபவங்கள் அச்சுவடிவில் புத்தகங்களாப் பதிப்பிக்கப்பட்டன.

புத்தகங்களைப் பணம்கொடுத்து வாங்குகிறோம்..

ஆனால் அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆம்..

புத்தகங்களுக்குக் கொடுக்கும் பணம் என்பது அச்சாக்கத்துக்குப் பயன்படுத்திய மை மற்றும் காகிதங்களுக்கான பணம் தானே தவிர அறிவுக்கானது அல்ல..

அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது.

அச்சுப் புத்தகங்களை வாசித்த காலம் மாறி இன்று மின் புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் தொழில்நுட்ப மாற்றத்தால் பல வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன.

உயிர்களுக்கு சுவாசித்தல் எவ்வளவு முதன்மையானதோ அதுபோல மனிதர்களுக்கு வாசிப்பு மிகவும் தேவையானது.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் - SEO




Search Engine Optimization for Tamil e-Contents

குறிச்சொற்கள்

          தமிழ் மின் உள்ளடக்கங்கள்தேடுபொறி உகப்பாக்கம்தேடுபொறி மேம்படுத்தல்வலைப்பதிவுமின்னூல்வலையொளி, Tamil E-Contents, SEO, Search Engine Optimization, Blog, E-Book, Youtube


 கட்டுரைச் சுருக்கம்

          அறிவைப் பெறும் வாயில்களுள் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்களுக்கு இணையாக இன்று இணையதளங்கள் வளர்ந்துள்ளன. இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் செய்திகளுள் பயனர்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறத் தேடுபொறிகள் உதவுகின்றன. தேடுபொறிகளால் மனிதர்களின் அறிவுப் பரப்பு விரிவடைந்துள்ளது. மொழி எல்லைகளைக் கடந்து அவரவர் தாய்மொழியில் பல நுட்பங்களையும் அறிந்துகொள்ளத் தேடுபொறிகள் உதவுகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்களைப் பலரும் உருவாக்கினாலும், தேடுபொறிகளுக்கு இணையத்தில் உள்ள பல்வேறு தமிழ் வளங்கள் தெரியவில்லை. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் குறித்து நுட்பமாக எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

தேடுபொறி

          தேடுபொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில்  உள்ள தரவுகளிலிருந்து பயனர்கள் தேடும் தரவுகளைத்  திரட்டி வழங்குகிறது. இத்தரவுகளின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, விரைந்து வழங்குதல் ஆகிய நிலைகளில் தேடுபொறிகளின் தரநிலை மாறுபடுகிறது. “ஆர்ச்சி (Archie) தேடுபொறி[1]  1990 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து யாகூ, கூகுள், பிங், பைடு என பல தேடுபொறிகள் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.