வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 22 மே, 2011

காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.


“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

நோயுற்றபோது மருத்துவமனைக்குச் செல்ல நேரம் பார்க்காத மனிதன்..

சாலையைக் கடக்கும்போது தன் இராசிக்கு ஏற்ற திசையைப் பார்க்காத மனிதன்..

வேலைக்குச் செல்ல நல்ல காலம் பார்க்காத மனிதன்..

கீழே கிடக்கும் பணத்தை எடுக்க சகுனம் பார்க்காத மனிதன்.


ஏனோ இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான் சாதகம், சோசியம், சகுனம் என்று...

அதனால் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இன்னும்..

கூண்டில் வாழும் கிளிகளும், எலிகளும்...

மூடநம்பிக்கையை வளர்க்கும் ஊடகங்களும்!

இதில் என்ன கொடுமையென்றால்..

ஒரு தொலைக்காட்சி சொல்லும் சோசியத்தை

இன்னொரு தொலைக்காட்சி ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் நினைத்தா இந்த பூமிக்கு வந்தோம்..?
நாம் நினைத்த போதா இங்கிருந்து செல்லப்போகிறோம்?

செல்லும் நேரம் வந்தால் எல்லோரும் செல்லவேண்டியதுதானே..
இதில் ஏன் இந்த மூட நம்பிக்கைகள்..?

நல்ல சகுனங்கள்:-

1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
2. பிணம் எதிரே வருதல்.
3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
4. தாயும் பிள்ளையும் வருதல்.
5. கோயில் மணியடித்தல்.
6. சுமங்கலிகள் வருதல்.
7. கருடனைக் காண்பது.
8. திருவிழாவைக் காணல்.
9. எருக் கூடையைக் காணல்.
10. யானையைக் காண்பது.
11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
15. கழுதை கத்துதல்.
16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
17. அணில் வீட்டிற்குள் வருதல்.

கெட்ட சகுனங்கள்:-

1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.
3. விதவையைக் காணல்.
4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.
5. விறகுடன் வருபவரைக்காணல்.
6. மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.
7. தும்மல் ஒலி கேட்டல்.
8. ஆந்தை அலறல்.
9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.
10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.
11. நாய் குறுக்கே செல்லுதல்.
12. போர் வீரனைக் காணுதல்.
13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.
14. அம்பட்டனைக் காணல்.
15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.
16. பாய் விற்பவரைக் காணல்.
17. அரப்பு விற்பவரைக் காணல்
18. சிமாறு (விலக்குமாறு) விற்பவரைக் காணல்.
19. முக்காடிட்டவரைக் காணல்.
20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.



பல்லி சகுனம்:-

சிரசில் - மரணம்
மூக்கில் - நோய்
வயிற்றில் - குழந்தை
முழங்காலில் - கலகம்
பாதத்தில் - பிணி
இடக்கையில் - மரணம்
வலக்கையில் - பெரிய சாவு
உடம்பு – தீர்க்காயம்

அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்மைதான்.

அறிவியல் வளர்ச்சி குறைவான, நம்பிக்கைகள் நிறைவான சங்ககாலத்திலேயே சகுனங்களைப் புறந்தள்ளிய சோழமன்னனைப் பற்றிய புறப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

பாடல் இதோ..




புறநானூறு 41

திணை – வஞ்சி

துறை – கொற்றவள்ளை

பாடியவர் கோவூர்கிழார்

பாடப்பட்டவன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.



பகைவரை எதிர்த்துப் போர்மேல் செல்லும் வஞ்சித்திணையின் ஒரு துறையே கொற்றவள்ளை ஆகும்.

இது பகைவர் நாட்டின் அழிவுதனைக் கூறி மன்னனின் புகழை எடுத்துரைக்கும் தன்மையுடையது.

இப்பாட்டில் “எரிதிகழ்ந்தன்ன செலவுடைய வளவன்“ என்று மன்னனைப் புகழ்ந்தும் உன் பகைவர் நாடு பெருங்கலக்கம் அடைந்தது என்று இரங்கிப் பாடியமையாலும் கொற்றவள்ளையானது.



ஒருவரின் உயிரைப் பற்றிக்கொள்ள காலனான எமன் கூட தக்க நேரம் பார்த்துக் காத்திருப்பான். ஆனால் உரிய காலம் எதுவும் பார்காமல் வேல்செறிந்த பகைவர்களை நீ நினைத்த நேரத்தில் அழிக்கும் தன்மை கொண்டவன்.

வேந்தே!!

எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து வீழும்!

பெரிய மரத்தின் இலையில்லாத பெரிய கிளை உலர்ந்துபோகும்!

வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு பல இடங்களில் செறிந்து தோன்றும்!

மேலும் அச்சம் தரும் பறவைகளும் சேர்ந்து ஒலி எழுப்பும்!

இவ்வாறு நனவில் பல தீய குறிகளைக் கண்டாய்!!



பல் நிலத்தில் விழுந்தது போலவும்,

எண்ணையினைத் தலையில் தடவியது போலவும்,

ஆண் பன்றி மீது ஏறுவது போலவும்,

ஆடைகளைக் களைந்தது போலவும்,

படைக்கருவிகளிருந்த கட்டில் கீழே கவிழ்வது போலவும்,

தாங்க முடியாத அரிய பல தீய குறிகளைக் கனவில் கண்டாய்...

அதனாலென்ன...

தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...

போர்க்களத்தில் காற்றும் நெருப்பும் கலந்து சுழல்வதுபோல இயங்கும் பேராற்றல் உடைய வளவனே!!



நீ போருக்குக் கிளம்பியதை அறிந்து நின் பகைவர்கள் தம் புதல்வருடைய மலரைப் போன்ற கண்களை முத்தமிடுவர். அதன் வாயிலாக மனைவியருக்குத் தன் துன்பத்தை மறைப்பர்.

இத்தகைய துன்புறும் வீரருடன் உன்னை சினமடையச் செய்தவர்களின் நாடு மிகுந்த கலக்கத்தை அடைந்தது.

பாடல் வழியே..

1. சங்ககால மக்களின் சகுனம் பற்றிய நம்பிக்கைகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

2. சகுனத்தைப் புறந்தள்ளிச் செல்லும் இயல்புகொண்ட பகுத்தறிவுச் சிந்தனையையும் உற்றுநோக்கமுடிகிறது.

3. கொற்றவள்ளை என்னும் புறத்துறையும் விளக்கம்பெறுகிறது.

10 கருத்துகள்:

  1. அந்த‌க் கால‌ப் பெரியோர் சொன்ன‌ அனைத்துக்கும் வேறு உட்பொருள் ஒன்றிருக்கும். விள‌க்காம‌ல், விள‌ங்காம‌ல் க‌ண்ணை மூடிக் கொண்டு க‌டைபிடிப்ப‌தெல்லாம் மூட‌ ந‌ம்பிக்கைக‌ளாகி விடுகின்ற‌ன‌.
    ஒற்றை பிராம‌ண‌ன் வ‌ருகை கெட்ட‌ ச‌குன‌மாயின், இர‌ட்டை பிராம‌ண‌ர்க‌ள் வ‌ருகை ம‌ட்டும் எப்ப‌டி ந‌ல்ல‌ ச‌குன‌மாகி விடும்? ம‌னு சாஸ்திர‌ம் போன்ற‌வ‌ற்றால் ம‌க்க‌ளை த‌ம் ஆளுமையில் வைத்திருக்கும் அந்த‌ண‌ர்க‌ள், த‌ம் ந‌ன்மைக்கே ப‌ல‌ சாத்திர‌ விதிக‌ளை புகுத்தி விட்ட‌ன‌ர். எதிரில் வ‌ருப‌வ‌ரால் ஒற்றையாய் செல்லும் த‌ம‌க்கு ஏதும் இடையூறு நேராம‌லிருக்க‌ கெட்ட‌ ச‌குன‌மென‌க் கூறிய‌தாய் திராவிட‌ சிந்த‌னையுள்ளோர் கூற‌க் கேட்டு விய‌ந்திருக்கிறேன்.
    வித‌வை எதிர்ப்ப‌டுவ‌தும் இப்ப‌டியே பொருத்திப் பார்க்க‌லாம். அக்கால‌த்தில் மிக‌ச்சிறு வ‌ய‌தில் திரும‌ண‌மாகி ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் இள‌ம்வித‌வைக‌ளான‌வ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்கே(ஒழுக்க‌க் க‌ட்டுப்பாட்டிற்கும்) அப்ப‌டியான‌ விதிமுறைக‌ள் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.
    அழுக்குத் துணியோடு போகும் வ‌ண்ணான் துவைக்கும் அவ‌ச‌ர‌த்திலிருப்பான். வெளுத்து வீடு திரும்பும் போது எதிர்ப்ப‌டும் ப‌ய‌ண‌ம் கிள‌ம்பிய‌வ‌ரிட‌ம் செல‌வுக்குப் ப‌ண‌ம் கேட்க‌ வாய்ப்புண்டு. (கிராம‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளுக்கு வ‌ருட‌ ச‌ம்ப‌ள‌மாக‌ அறுவ‌டை ச‌ம‌ய‌ம் தானிய‌ங்க‌ள் த‌ர‌ப்ப‌டும். ம‌ற்ற‌ப‌டி அப்போதைக்க‌ப்போது கேட்டுப் பெறுவ‌தே ஐந்தும் ப‌த்துமாய் இருக்கும்) இது என‌து யூக‌ம்.
    இப்ப‌டியே சொல்லிக் கொண்டு போக‌லாம். எத்த‌னை பெரியாரையும் ஏப்ப‌ம் விடும் வ‌ல்ல‌மை நிறைந்துள்ள‌வ‌ர்க‌ள் ந‌ம்மைச் சுற்றி அதிக‌ம்.
    உங்க‌ த‌ய‌வில் புற‌நானூற்றுச் செய்யுள் ஒன்று இப்ப‌டியான‌ பாடுபொருளில் உள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து. ஏவ‌ல், பில்லி சூனிய‌ம் ப‌ற்றி ஏதாவ‌து உண்டா?

    பதிலளிநீக்கு
  2. //தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...//
    அவனே மன்னன்!
    புறநானூற்றிலிருந்து அருமையான மேற்கோள்!

    பதிலளிநீக்கு
  3. விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இதில் அதிக நகைச்சுவை என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் வந்து இருந்துகொண்டும் சகுனம்,சங்கடம்,சாதி சமயம்,திசை.தீட்டு எல்லாமே பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள் நம்மவர்கள் !

    நிலாமதியின் விளக்கம் அருமை.புதிதாக அறிந்துகொண்டேன் !

    பதிலளிநீக்கு
  5. @நிலாமகள் நீண்ண்ண்ண்ண்டதொரு கருத்துரையளித்த நிலாமகளுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நம்பிக்கைகள் தான் மக்களின் அடையாளம்.

    காரணம் தெரியாமல்..
    கண்மூடித்தனமான நம்பிக்கைகளே மூடநம்பிக்கைகள் என்ற பெயர்பெறுகின்றன என்பதை கருத்துரை வழியே எடுத்துரைத்து இவ்விடுகைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறீர்கள்..

    நன்றி மலர்களைத் தூவுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. @ஹேமா உண்மைதான் நம்மாளுங்க சந்திரமண்டலத்துக்கே போனாலும் கூட இந்த நம்பிக்கைகளை விட்டுப்போக மாட்டார்கள்..

    இதுதானே..

    நமது அசுர பலம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ..

    பதிலளிநீக்கு
  8. @ஸ்ரீ.கிருஷ்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கிருஷ்ணா.

    பதிலளிநீக்கு