வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

காதல் என்பது எதுவரை? (300வது இடுகை)



அன்பின் உறவுகளே..
இன்று என் வாழ்வின் பெருமிதத்திற்குரிய நாள்.
ஆம் தமிழ்த்துறை சார்ந்த நான் கணினியையும் இணையத்தையும் வியப்புடன் நோக்கிய காலம் உண்டு. இன்று நான் வைத்திருக்கும் மடிகணினி என்தாய்மொழி தமிழ்தான் பேசுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வலையுலகில் எழுதிவருகிறேன்.
300 இடுகைகள் (சங்கத்தமிழ், இணையதள நுட்பங்கள் )
51000க்கும் மேற்பட்ட பார்வையாள்கள்!!
104 நாடுகளிலிருந்து!!
344 பின்தொடர்வோர்.
122 மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுவோர்..

என இது ஒன்றும் பெரிய சாதனையல்ல..
என்றாலும் பழந்தமிழை மட்டுமே நாடிவரும் தமிழ்த்தேனிக்களான அன்பு நெஞ்சங்களே உங்களை எண்ணித்தான் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

............./\............../\............../\......................../\.........../\......................../\...........
சரி இன்றைய இடுகைக்குச் செல்லலாம்.



காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!
காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!

காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.

காதல் என்பது எதுவரை.....?
கல்யாண காலம் வரும்வரை! என்பது போல.....

காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...


காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை?
கழுத்தினில் தாலி விழும் வரை
பெண்ணுக்கு இளமை எது வரை?
பிள்ளைகள் பிறந்து வரும் வரை


என்று அனுபவித்துப் பாடுவார்.

கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது?
செல்வத்துள் சிறந்த செல்வம் எது?

என பல வினாக்களுக்கும் விடைதருவதாக அமையும் அழகான அகப்பாடல்..


பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன் தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினைவேறு புலத்து இலெனே நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே!


நற்றிணை-166
பாலை
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

தலைவன் தம்மை நீங்கிப் பொருளுக்காகப் பிரிந்துசென்றுவிடுவானோ என்று அஞ்சிய தலைவி வருந்தினாள். அதனை அறிந்த தலைவன்.

மடந்தையே வருந்தாதே...
அழகுமிக்க உன்னையும்...
செல்வத்திற் சிறந்த நம் புதல்வனையும் நீங்கி நான் எங்கு செல்லமுடியும்?
என்று சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.

பொன்னைப் போன்றது உன் உடம்பு!
மணியைப் போன்றது உன் மணம் வீசும் கூந்தல்!
குவளை மலரைப் போன்றது உன் மையுண்ட கண்கள்!
மூங்கிலைப் போன்றன உன் அழகுமிக்க தோள்கள்!


இவற்றைக் காணும் போதெல்லாம் நான் உள்ளம் மகிழ்ந்து அறத்தினால் நிலைபெற்றோர் பெறும் சிறப்பினை அடைந்தவனாகிறேன்.

அதைவிட.........

பொன்னாலாகிய தொடியணிந்த நம் புதல்வன் இப்போதுதான் விளையாடக் கற்றுக்கொண்டுள்ளான்.

உங்களைக் கண்டு மனம் மகிழ்வதன்றி வேறொன்றும் சிறந்தது இல்லை. எனவே வேறொரு இடம் சென்று நான் ஆற்றும் பெருஞ்செயலும் எதுவும் இல்லை.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் நாம் ஒருவரையொருவர் ஏன் பிரியப்போகிறோம். அதனால் நீ மனம் வேறுபட்டு வருந்தாதே என தலைவியிடம் சொல்கிறான் தலைவன். மேலும், தான் தலைவி மீது கொண்ட காதலானது கடலைவிடப் பெரியது என்றும் உரைக்கிறான்.


இப்பாடல் வழி,


• செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது என்னும் அகத்துறை (அகச்சூழல் விளக்கம் பெற்றது)
• அறத்தால் பெறும் பயன் மகிழ்ச்சியான வாழ்வில் கிடைக்கும் என்ற கருத்து வழி புலப்படுத்தப்படுகிறது.
• திருமணத்துக்குப் பின்னும் தலைவியைக் காதலிக்கும் தலைவன் தன் காதல் கடலை விடப் பெரியது என்றுரைக்கிறான்.
• குழந்தைச் செல்வத்தைவிட பெரிய செல்வம் எதுவும் இல்லை என்னும் கருத்து அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

47 கருத்துகள்:

  1. காதல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை சங்கப் பாடலின் வழி நின்று உரைத்தது அருமை...
    நீங்கள் கூறியது போல் இன்றளவும் ஒரு சில காதலர்கள் தங்களது இறுதிக் காலம் வரை காதலித்து வருகின்றனர்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே!
    சுவையாகவும், அர்த்தங்களோடும் உங்கள் வலைப்பக்கம் இருக்கிறது. தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் நண்ப்ரே 300 அல்ல இன்னும் பல நூறுகள் வெற்றியுடன் கடந்து செல்ல வாழ்த்துக்கள்..
    அதோடு உங்கள் கவி வரிகளும் அருமையா இருக்கு நண்பரே

    பதிலளிநீக்கு
  4. 300வது பதிவுக்கு வாழ்த்துகள் பேராசிரியரே...!!!

    பதிலளிநீக்கு
  5. நற்றிணை பாடல்களை எளிதாக விளக்கி கூறிய விதம் மிக அருமை அய்யா...!!! தொடரட்டும் தங்கள் சேவை மென்மேலும்....

    பதிலளிநீக்கு
  6. மிக சிறப்பாக இருக்கிறது உங்கள் வலைப்பூ.. இந்த இடுகை யும் சிறப்பாக இருக்கிறது. மென் மேலும் ஆவலுடன் எதிர் நோக்கும் வாசகன்.

    பதிலளிநீக்கு
  7. முன்னூறாவது இடுகைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அனைத்திற்கும் குணசீலன்..

    பதிலளிநீக்கு
  9. எப்பவும் போலவே உங்கள் வலைப்பக்கம் வந்தால் தமிழின் வாசனை.மனம் நிறைந்த வாழ்த்துகள் குணா !

    பதிலளிநீக்கு
  10. இன்னுமொரு அழகான பாடல் இருக்கிறதல்லவா அன்பரே!நற்றிணையின் 10 வது பாடல்.’அன்னாந்து ஏந்திய வனமுலை தளரினும்’... என்று ஆரம்பமாகும்.அது இதை விட அழகல்லவோ? உங்கள் அமுதத் தமிழில் அதையும் சொல்லி விடுங்களேன்.

    இந்தப் பொங்கலுக்கு முந்திரிப் பருப்புப் போல இருக்கும் அது.

    தமிழ் பசி எடுக்கும் தோறும் இங்கு வரலாம்.இந்தத் தமிழ் அன்னதான மடத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. @வைகறை தங்கராஜ் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தங்கராஜ்.

    பதிலளிநீக்கு
  12. @மாதவராஜ் வலைப்பதிவுலகின் முன்னோடியான தங்களின் கருத்துரை என் எழுத்துக்களை மேலும் வளப்படுத்திக்கொள்ள துணையாக இருக்கிறது நண்பரே.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. பதிவு அருமை 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. @பொன்னியின் செல்வன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா

    பதிலளிநீக்கு
  15. @மணிமேகலா அழகான ஒப்புமை, தொடர்புடைய பாடல் எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் தோழி..

    பதிலளிநீக்கு
  16. பதிவு அருமை.

    முன்னூறாவது இடுகைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
  17. 300வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. என் முதல் வருகை.இனித்தொடர்வேன்!
    என்ன ஒரு கருத்தாழம் மிக்க பாடல்!உங்கள் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  19. பழங்கால காதல் பாராட்டலாம் அது இன்றளவும் பேசப்படுவது . அனால் இன்று சீரழிவை நோக்கியல்லவா இந்த குமுகம் பயணிக்கிறது எதிர்காலம் மனித வாழ்வு வினாக்குரியாக அல்லவா மாறிவிடும் . இதை எப்படி சரி செய்ய போகிறோம் .

    பதிலளிநீக்கு
  20. @போளூர் தயாநிதி தனிமனித ஒழுக்கமே சமூக மாற்றத்துக்கான அடித்தளம் நண்பரே..

    பழந்தமிழரின் இதுபோன்ற அனுபவக் குறிப்புகள் எதிர்கால மாற்றத்துக்குத் துணையாக இருக்கும் என நம்புகிறேன் நான்.

    பதிலளிநீக்கு
  21. இந்த குமுகம் நோயை நாடி விரைந்தோடுகிறது அதை நல்வழிபடுத்த வேண்டிய அறிவுலகம் முடங்கி கடக்கிறது நோய்நீங்க நல்வழிபடுத்த அறிவுலகம் தேவை அதுவோ கூர்மழுங்கி போனதோ தெரியவில்லை . எல்லோரும் குறைகூறி கொண்டிருந்தால் இந்த போலி குமுகத்தை எப்படி வழிநடத்துவது ?

    பதிலளிநீக்கு
  22. 300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்,மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. @போளூர் தயாநிதி நாம் ஒவ்வொருவரும் தான் நண்பரே தனிமனித ஒழுக்கமே சமூக மாற்றத்துக்கான அடிப்படை.

    பதிலளிநீக்கு