செவ்வாய், 29 ஜூன், 2010
இவங்களுக்கு வேற வேலையில்ல!
நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?
அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் சொல்லியிருப்பார்கள்!
யாருங்க அந்த நாலு பேரு?
எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?
○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று சொல்லுகிறார்கள்.
○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் நாமும் அடக்கம் தான்..
ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?
ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..
தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….
நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.
சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?
ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.
சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?
ஒருவன் - நிச்சயமாக இருக்காது.
சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?
என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.
அடுத்தவரைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?
நமக்கென்ன வேறு வேலையே இல்லையா?
என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.
எங்க ஊருல நான் சிறுவனாக இருந்தபோது,
குடிநீர்க்குழாயில இருபெண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதோ பேசியதாக சண்டை வந்து ஒருவர் காதை இன்னொருவர் கடித்துவிட்டார்…
இன்று நினைத்துப்பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.
இன்றைய ஊடகங்கள்,
நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டுவீரர்கள்….
இன்னும் யார்யாரைப்பற்றியோ பேசிப்பேசியே அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிவிடுகின்றன..
இவர்களைவிட சிறந்த நடிப்புத்திறனுடையவரோ, மக்களை ஆளும் தன்மைகொண்டவரோ,விளையாட்டுத்திறனுடையவரோ மண்ணில் இல்லையா?
சரி,
சங்க காலத்துக்குச் செல்வோம்….
நற்றிணைப் பாடலொன்று,
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
5 அலந்தனென் வாழி தோழி கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே.
நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை.
திணை : நெய்தல்.
துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது.
துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.
தலைமக்களின் காதல் வாழ்வியலைப் பற்றிப் பேசுவதற்கு அலர் என்றும் அம்பல் என்றும் பெயராகும்.
(அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.
அலர் - பலரறிந்த பழிச்சொல்.)
துறைவிளக்கம்.
1.தலைமக்களின் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றினர். அதனை எண்ணி வருந்திய அன்னை சினம் கொண்டாள். அதனால் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். தலைவனுடனேயெ செல்வாயாக என்றாள் தோழி.
அதற்கு அஞ்சிய தலைவியிடம் நீ தலைவனுடன் சென்றபிறகு இந்த ஊர் என்ன செய்துவிடும்?
மிஞ்சி மிஞ்சிப் போனால் அலர் தூற்றும அவளவுதானே!
என்கிறாள் தோழி இதனை - துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது என்னும் துறை விளக்குகிறது.
2.தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அவனை அறியாதவள் போலத் தோழி அவனுக்குச் சொல்ல நினைக்கும் கருத்தை இவ்விதம் சொல்கிறாள்.
தலைவி உங்கள் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றுகின்றனர்.அதையெண்ணி அன்னையும் வருத்தம் கொண்டாள். இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ சென்றுவிடுவதுதான்.
ஊரைப் பற்றிக் கவலைப்படாதே..
எப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் இதனையே - துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம். என்னும் அகத்துறை விளக்குகிறது.
◊ தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…
தோழீ! வாழி!
நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,
தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.
ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!
( தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சிக் கடைக்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல்.
இரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு உடன்படுத்தல்.)
பாடல் வழி புலப்படும் கருத்துக்கள்.
○ தலைவியைத் தோழி உடன்போக்குக்குத் தூண்டியது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தோழி தூண்டியது என்னும் இரு அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.
○ தலைமக்களின் காதல் பற்றிப் பேசும் ஊராரின் மெய்பாடுகளை,
கடைக்கண் நோக்கல்,
தம் மூக்கின் நுனியில்விரல் வைத்து வியப்புடன் பேசுதல்.
என நுட்பமாகக் கூறிய பாங்கு இப்போது நினைத்தாலும் சங்ககாலக் காட்சியைக் கண்ணில் விரியச் செய்வதாகவுள்ளது.
○ வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் இவ்வுலம். அதனால் ஊரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாதே உன் வாழ்க்கைதான் இப்போது சிந்திக்க வேண்டியது. உன்மகிழ்வு தலைவனுடன் சேர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அதனால் உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிடு என்று சொல்லும் தோழியின் கூற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது.
○ பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்க..
அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அட போடவைக்கும் அலசல் .. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு@கே.ஆர்.பி.செந்தில் தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி செந்தில்.
பதிலளிநீக்கு//.. அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ..//
பதிலளிநீக்குஆனால் அன்றைய காதல் நிலையானதாக, உறுதியானதாக எதிர்பார்ப்பில்லாமல் இருந்ததுங்களே..??!!
நாலு பேருக்கு நன்றி,
பதிலளிநீக்குஅந்த நாலு பேருக்கு நன்றி!!
அருமை முனைவரே..! பாராட்டுகள் தொடர்ந்து அசத்துங்க..!
பதிலளிநீக்குநான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.
பதிலளிநீக்குசாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?
ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.
சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?
ஒருவன் - நிச்சயமாக இருக்காது.
சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?
...... நெத்தியடி!
எல்லாமே அருமை. நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.
அடுத்தவர்களைப் பற்றிப் பேசாவிட்டால் சிலருக்குத்
பதிலளிநீக்குதூக்கமே வராதாம் !
சிந்திக்க வைக்கிறீர்கள் பதிவுகளோடு.
@திருஞானசம்பத்.மா. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
பதிலளிநீக்குஎன அன்றும் இதே நிலையிருந்தது நண்பா..
@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கருத்துரைக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு@பிரவின்குமார் வருகைக்கு நன்றிபிரவின்.
பதிலளிநீக்கு@Chitra தங்கள் கருத்துரைக்கு நன்றி சித்ரா..
பதிலளிநீக்கு@திருஞானசம்பத்.மா. நண்பா தங்கள் கேள்விக்குத் தக்க சான்றாகக் கீழ்வரும் குறுந்தொகைப் பாடல்..
பதிலளிநீக்குயாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
5
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
எப்பா எவ்வளவு பெரிய பதிவு, நிறைய சிரமம் எடுத்து எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நல்லா இருக்கு நண்பரே. அனைத்து காலத்திலயும் தேவையில்லாததை பேச தேவையில்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க
பதிலளிநீக்கு//.. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. ..//
பதிலளிநீக்குஇவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸ்.. :-))
குறுந்தொகைப் பாடலை கொஞ்சம் விளக்கவேண்டும் நண்பரே..
அருமையான தகவல்கள் ஐயா.
பதிலளிநீக்குதெளிவான விளக்கவுரை நண்பரே
பதிலளிநீக்கு@திருஞானசம்பத்.மா. மீள் வருகைக்கு நன்றி நண்பா..
பதிலளிநீக்குஇதோ சங்ககாலத்திலும் இதே நிலைதான் என்பதை உணர்த்தும் குறுந்தொகைப்பாடலும் விளக்கமும்..
http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_30.html
@வந்தியத்தேவன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு@பாலமுருகன் நன்றி பாலமுருகன்..
பதிலளிநீக்கு@சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.
பதிலளிநீக்குஇந்தப் பாடல் என்னவோ தன்மையில் தலைவி மொழியாகவே இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. தோழியின் கூற்று என்று உரையாசிரியர்கள் சொல்லும் பல பாடல்களும் தலைவி வாய்மொழியாகவே எனக்குத் தோன்றுகின்றன. உங்களுக்கு அப்படி தோன்றியதுண்டா?
பதிலளிநீக்குஆம் நண்பரே..
பதிலளிநீக்குஇவை போன்ற மயக்க நிலைகள் நிறைய சங்கஇலக்கியப்பரப்பில் உண்டு.
எனக்கும் சிலநேரங்களில் அப்படித் தோன்றியதுண்டு.
இவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.
பதிலளிநீக்குகவனமாக சிந்திக்கவேண்டிய பகிர்வுகள்..
புரிதலுக்கு நன்றி இராஜேஸ்வரி
பதிலளிநீக்கு